Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்إِحَاطَةْ - சூழ்தல் என்றால் என்ன? அது எவ்வாறு?

إِحَاطَةْ – சூழ்தல் என்றால் என்ன? அது எவ்வாறு?

தொடர் – 1

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

أَلَا إِنَّهُمْ فِي مِرْيَةٍ مِنْ لِقَاءِ رَبِّهِمْ أَلَا إِنَّهُ بِكُلِّ شَيْءٍ مُحِيطٌ

அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அவர்கள் – காபிர்கள் – தமது இரட்சகனை மறுமையில் சந்திப்பதில் சந்தேகமுள்ளவர்களாக உள்ளனர், அறிந்து கொள்ளுங்கள். நிச்சமயாக அவன் – இறைவன் சகல வஸ்துக்களையும் சூழ்ந்தவனாக உள்ளான். (திருக்குர்ஆன்: 41-54 ஹாமீம் ஸஜ்தா)

விசுவாசிகள் மறுமையில் அல்லாஹ்வை சந்திப்பார்கள் – காண்பார்கள் என்பது திருக்குர்ஆன் ஆதாரங்கள் மூலமும், “ஹதீது” நபீ மொழி ஆதாரங்கள் மூலமும் நிறுவப்பட்ட விடயமாகும். இதை எவராலும் மறுக்கவும் முடியாது. இவ்விடயத்தில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையுமில்லை. அவ் ஆதாரங்களை நான் கூறி இக் கட்டுரையை நீளமாக்க விரும்பவுமில்லை. அவை அவசியம் தேவையானோர் என்னுடன், அல்லது எனது பிரத்தியேக செயலாளருடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

இத்திரு வசனம் ஒரே வசனமாக இருந்தாலும் أَلَا إِنَّهُمْ فِى مِرْيَةٍ مِنْ لِقَاءِ رَبِّهِمْ என்ற அதன் முற்பகுதி ஒரு கேள்வி போலும், பிற்பகுதி அக்கேள்விக்குரிய விடை போலும் அமைந்திருப்பது கூரிய புத்தியுள்ளவர்களுக்கும், ஆய்வுத் திறமை உள்ளவர்களுக்கும் மறையாதென்று நான் கருதுகிறேன். இல்லை நம்புகிறேன்.

இதை ஓரளவு சுட்டிக் காட்டினால் ஆய்வு செய்பவர்களுக்கு அனுசரணையாக இருக்குமென்று கருதுகிறேன்.

திரு வசனத்தின் முந்திய பகுதி “காபிர்கள் அல்லாஹ்வைச் சந்திக்கும் விடயத்தில் சந்தேகமுள்ளவர்களாக உள்ளனர்” என்ற கருத்தை தருகிறது. இவ்வசனத்தின் பிற்பகுதி “அல்லாஹ் சகல வஸ்துகளையும் சூழ்ந்தவனாக உள்ளான்” என்ற கருத்தை தருகிறது. முற்பகுதி கூறும் கருத்துக்கும், பிற்பகுதி கூறும் கருத்துக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாதது போல் தெரிகிறது. அல்லாஹ்வின் பேச்சு ஒரு போதும் அவ்வாறு இருக்கமாட்டாது.

சாதாரண கண்ணோட்டத்தில் அல்லாஹ் எவ்வாறு சொல்லியிருக்க வேண்டுமெனில், காபிர்கள் மறுமையில் அல்லாஹ்வைச் சந்திப்பதில் சந்தேகம் உள்ளவர்களாக உள்ளனர். அவர்கள் சந்தேகப்படத் தேவையில்லை. அவர்கள் அவனை சந்திக்கமாட்டார்கள் அல்லது சந்திப்பார்கள் என்றுதான் சொல்லியிருக்க வேண்டுமேயன்றி أَلَا إِنَّهُ بِكُلِّ شَيْءٍ مُحِيْطْ அவன் சகல வஸ்த்துக்களையும் சூழ்ந்தவனாக உள்ளான் என்று சொல்லியிருப்பது பொருத்தமற்றது போல் தெரிகிறது. இது அல்லாஹ்வின் பேச்சாயிருப்பதால் பொருத்தமானதாக இருக்குமேயன்றி பொருத்தமற்றதாக இருக்க வழியே இல்லை.

எனவே, அவன் சகல வஸ்துக்களையும் சூழ்ந்தவனாக உள்ளான் என்ற வசனம் மூலம் அவனே எல்லா வஸ்துக்களாயும் உள்ளான் என்ற அடிப்படைத் தத்துவத்தை நாகரிகமான பாணியில் அல்லாஹ் சொல்லியுள்ளான் என்று விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு விளங்குவதாயின் முதலில் إِحَاطَةْ சூழ்தல் என்றால் என்ன? அது எவ்வாறு? என்ற விபரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இதன் விபரத்தை தெரிந்து கொண்டவன் அல்லாஹ்வின் கேள்வியும், பதிலும் சரியானவை என்பதையும், எல்லாமாயும் அவனே வெளியாகித் தோற்றுகிறான் என்பதையும் புரிந்து கொள்வான்.

சூழ்தல்:

இச் சொல் أَحَاطَ என்ற சொல்லடியில் உள்ளதாகும். இதற்கு சூழ்ந்து கொண்டான் என்று பொருள் வரும். நாம் நரம்பில்லா நாவால் சூழ்ந்து கொண்டான் என்று சொன்னாலும் நரம்புள்ள மூளையாலும், நரம்பில்லா உள்ளத்தாலும் அந்தச் சூழ்தல் எவ்வாறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

“இஹாதத்” சூழ்தலில் இரு வகையுண்டு. ஒன்று தங்க மாலையை தங்கம் சூழ்ந்திருத்தல் போன்று. இரண்டு ஒரு கடிதத்தை கடித உறை சூழ்ந்திருத்தல் போன்று. இவ்விரு வகைகளையும் தெளிவினுந் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். எல்லோரும் சூழ்ந்திருத்தல், சூழ்தல் என்று நாவால் சொன்னாலும் அது எவ்வாறான சூழ்தல் என்பதைப் பற்றி சிந்திப்பதுமில்லை. ஆய்வு செய்வதுமில்லை.

أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا

திருக்குர்ஆனை அவர்கள் ஆய்வு செய்ய வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் தாழிடப்பட்டுள்ளனவா? (47-24) என்று கண்டிக்கும் பாணியில் அல்லாஹ் சிந்திக்கத் தூண்டுகிறான்.

முதலாம் வகை சூழ்தல் பற்றி சற்று ஆய்வு செய்வோம். தங்க மாலையை தங்கம் சூழ்ந்திருத்தல் என்ற உதாரணத்தில் மாலை, தங்கம் என்று இரு பொருட்களின் பெயர்களை நாம் சொன்னாலும் எதார்த்தத்தில் இருப்பது ஒரு பொருள்தான். இரு பொருட்களல்ல. தங்கம்தான் மாலையாகத் தோற்றுகிறதேயன்றி மாலை என்று தங்கத்தை விட்டும் பிரிந்த தனியான ஒரு பொருள் இல்லை.

இதை இன்னும் தெளிவாகவும், சுருக்கமாகவும் சொல்வதாயின் மாலைக்கு “வுஜூத்” இருப்பு இல்லை. மாலை என்பது கண்ணுக்குத் தோற்றுகின்ற ஒரு தோற்றமேயன்றி அதற்கு “வுஜூதிய்யத்” இருப்பு என்பது இல்லவே இல்லை. மாலை என்பது எதார்த்தத்தில் “அதம்” عَدَمٌ இல்லாததேயாகும். தங்கத்திற்கேதான் இருப்பு உள்ளதேயன்றி மாலைக்கு இருப்பு இல்லை.

மாலையை தங்கம் சூழ்ந்துள்ளது என்றால் தங்கமே மாலையாக தோற்றுகிறது என்பதே இதன் பொருளாகும்.

இத்தகைய சூழ்தலுக்கு இரண்டு பொருட்கள் – வஸ்துக்கள் தேவையில்லை. தங்கம், மாலை என்று இரண்டு வஸ்துக்களின் பெயர்கள் சொல்லப்பட்டாலும் கூட இருப்பது ஒரேயொரு வஸ்துதான். இரண்டு வஸ்த்துகளுக்கு இடமே இல்லை.

இது ஒரு வகையான சூழ்தலாகும்.
இரண்டாம் வகையான சூழ்தல் ஒரு கடிதத்தை கடித உறை சூழ்ந்திருப்பது போன்றாகும். இவ் உதாரணத்தில் கடிதம், கடித உறை என்று இரண்டு வஸ்துக்கள் உள்ளன. இவ் இரண்டில் ஒவ்வொன்றுக்கும் தனித் தனியான “வுஜூத்” உள்ளன. கடிதத்துக்கு தனியான இருப்பும், கடித உறைக்குத் தனியான இருப்பும் உள்ளன.

இது இன்னொரு வகையான சூழ்தலாகும். இவ்விரு வகைகளும் விளக்கத்தில் ஒன்று மற்றதற்கு மாறு பட்டதாயினும் இரண்டும் சூழ்தல் என்ற பெயரில் அடங்கிவிடும்.

மேற்கண்ட இரு வகை சூழ்தல்களிலும் அல்லாஹ் சகல வஸ்துக்களையும் சூழ்ந்திருப்பது எந்த வகையைச் சேரும் என்று நாம் ஆய்வு செய்தல் அவசியம்.

ஸூபீ மகான்களினதும், தத்துவ ஞானிகளினதும் முடிவு என்னவெனில் அல்லாஹ் அனைத்து வஸ்துக்களையும் சூழ்ந்துள்ளான் என்பது முதலில் சொல்லப்பட்ட தங்கம் மாலையை சூழ்ந்துள்ளதென்ற வகையைச் சேர்ந்ததேயன்றி கடித உறை கடிதத்தை சூழ்ந்துள்ளதென்ற வகையைச் சேர்ந்ததல்ல.

அல்லாஹ் ஒரு வஸ்தை சூழ்ந்துள்ளான் என்பது அவன் தனது “தாத்”தைக் கொண்டும், தனது “ஸிபாத்” தன்மைகளைக் கொண்டும் சூழ்ந்துள்ளான் என்பதையே குறிக்கும். படைப்புக்கள் யாவும் அவனின் “தாத்” அல்லது “வுஜூத்” இன் வெளிப்பாடேயன்றி “ஸிபாத்” தன்மைகளின் வெளிப்பாடு மட்டுமல்ல. அவனின் படைப்புகள் அனைத்தும் அவனின் “தாத்”தின் வெளிப்பாடு என்று சொன்னால் அதில் “ஸிபாத்”தின் வெளிப்பாடுகளும் அடங்கிவிடும்.

ஏனெனில் அவன் “தாத்”தை விட்டும் அவனின் “ஸிபாத்” தன்மைகளில் எதையும் பிரிக்க முடியாதென்பது இமாம்கள் – ஆரிபீன்கள் சொன்ன கருத்து மட்டுமல்ல. இது பொதுவான ஒரு தத்துவமேயாகும்.

ஞானம் பேசும் சிலர் அல்லாஹ் “ஸிபாத்” எனும் தனது தன்மைகள் கொண்டு மட்டுமே வெளியாகியுள்ளானேயன்றி தனது “தாத்” கொண்டு வெளியாகவில்லை என்று சொல்கிறார்கள். இவர்கள் இறை ஞானம் பேசினாலும் தெளிவு காணாதவர்களாகவே உள்ளனர். யார் என்ன விளக்கம் சொன்னாலும் அல்லாஹ் தனது “தாத்”, “ஸிபாத்” அனைத்தைக் கொண்டுமே படைப்புகளாக வெளியாகியுள்ளான் என்பதே சரியான விளக்கமாகும்.

ஒரு சமயம் இறைஞானி என்று சொல்லப்பட்ட ஒருவரைச் சந்திப்பதற்காக அவரின் இல்லம் சென்றேன். என்னுடன் மௌலவீமார்களிற் சிலரும் வந்தனர். அந்த ஞானி தனது சிஷ்யர்களில் பலருடன் இருந்தார்.

நான் அவரிடம் பல கேள்விகள் கேட்டேன். அவர் ஒரு கேள்விக்கும் சரியான பதில் கூறவில்லை. இறுதியில் அல்லாஹ் தனது “தாத்” கொண்டு வெளியாகியுள்ளானா? அல்லது “ஸிபாத்” தன்மைகளைக் கொண்டு மட்டும் வெளியாகியுள்ளானா? என்று கேட்டேன். அதற்கவர் தனக்கு முன்னாலிருந்த சிறிய மேசை ஒன்றின் மீது தனது கையால் ஓங்கி அடித்தவராக அல்லாஹ்வின் மீது சத்தியமாக அல்லாஹ் “தாத்” கொண்டுதான் வெளியாகியுள்ளான், ஆயினும் இது “தாத்” அல்ல என்று கர்ஜித்தார். அவ்வாறாயின் இந்த மேசை என்னவென்று கேட்டேன். அதற்கவர் “ஸிபத்” அவனின் சக்தி என்றார். “தாத்”தை விட்டும் “ஸிபத்” பிரியுமா? என்று கேட்டேன். அவர் மௌனியானார். ஒன்றுமே சொல்லவில்லை. ஷெய்குல் அக்பர் நாயகம் اَلْخَلْقُ مَعْقُوْلٌ وَالْحَقُّ مَحْسُوْسٌ “படைப்பு என்பது புத்தியால் அறியப்படக் கூடியது, அல்லாஹ் என்பவன் ஐம்புலன்களாலும் அறியப்படக் கூடியவன்” என்று சொல்லியுள்ளார்களே! இதற்கு என்ன சொல்வீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர் சற்று சீறிப் பாய்ந்து “இப்னு அறபீ என்றால் யார்?” என்று கேட்டார். அதற்குச் சபையில் என்னுடன் வந்திருந்த மௌலவீ ஸுப்யான் பலாஹீ (பத்றுஸ்ஸமான்) அவர்கள் அவருக்கு எதிராக கருத்துக் கூற முன் வந்த போது அங்கு வீற்றிருந்த அவரின் சிஷ்யர்கள் சீறினார்கள். அதோடு நாங்கள் எழுந்து வந்து விட்டோம்.

“வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசுவோர்களில் இப்படியானவர்களும் உள்ளார்கள் என்பதை பொது மக்கள் இனங் கண்டு எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு ஞான குருவாயினும் அவருடன் தொடர்பு கொள்ளு முன் அவர் “ஷரீஆ”வின் அறிவில் எப்படியானவர், “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தில் எப்படியானவர் என்பதை தெளிவாக அறிந்து கொள்தல் அவசியமாகும்.

அல்லாஹ் தனது “தாத்” அல்லது “வுஜூத்” உள்ளமை கொண்டுதான் படைப்புக்களாக வெளியாகியுள்ளான் என்று சொன்னால் அவ் வசனம் அவன் தனது “ஸிபாத்” தன்மைகளைக் கொண்டும் வெளியாகியுள்ளான் என்பது அவ் வசனத்தில் உள் வாங்கப்பட்டு விடும். ஏனெனில் “ஸிபாத்” என்பன ஒருபோதும் தனித்து நிற்பவையல்ல. اَلصِّفَةُ لَا تُفَارِقُ الْمَوْصُوْفَ தன்மை என்பது எதை அண்டி நிற்கிறதோ அதை விட்டும் ஒருபோதும் பிரியாதென்பது பொதுத் தத்துவமாகும்.

உதாரணமமாக சீனியையும், அதன் தன்மையான இனிப்பையும், மிளகாயையும், அதன் தன்மையான உறைப்பையும், வேப்பிலையையும், அதன் தன்மையான கசப்பையும் போன்று. சீனி என்பது “தாத்” என்றும், இனிப்பு என்பது அதன் “ஸிபத்” தன்மை என்றும், மிளகாய் என்பது “தாத்” என்றும், உறைப்பு என்பது அதன் “ஸிபத்” தன்மை என்றும், வேப்பிலை என்பது “தாத்” என்றும், கசப்பு என்பது அதன் “ஸிபத்” தன்மை என்றும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு விளங்கும் நாம் இனிப்பு சீனியின்றி தனியே நிற்காதென்றும், உறைப்பு மிளகாயின்றி தனியே நிற்காதென்றும், கசப்பு வேப்பிலையின்றி தனியாக நிற்காதென்றும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதாவது சீனியின் “ஸிபத்” தன்மையான இனிப்பு என்பது அதன் “மவ்சூப்” ஆன – அதாவது அது எதில் தங்கி நிற்குமோ அந்த சீனியை விட்டும் ஒருபோதும் பிரியாதென்றும், அதைப் பிரித்தெடுக்கவும் முடியாதென்றும், அதேபோல் மிளகாயின் “ஸிபத்” தன்மையான உறைப்பு என்பது அதன் “மவ்சூப்” ஆன – அதாவது அது எதில் தங்கி நிற்குமோ அந்த மிளகாயை விட்டும் ஒரு போதும் பிரியாதென்றும், அதைப் பிரித்தெடுக்கவும் முடியாதென்றும், வேப்பிலையின் “ஸிபத்” தன்மையான கசப்பு என்பது அதன் “மவ்சூப்” ஆன – அதாவது அது எதில் தங்கி நிற்குமோ அந்த வேப்பிலையை விட்டும் ஒருபோதும் பிரியாதென்றும், அதைப் பிரித்தெடுக்கவும் முடியாதென்றும் நாம் தெரிந்து கொள்ளவும் வேண்டும். நம்பவும் வேண்டும்.

தங்கம் மாலையை சூழ்ந்திருப்பது போன்றும், பஞ்சு துணியை சூழ்ந்திருப்பது போன்றும், தோல் செருப்பை சூழ்ந்திருப்பது போன்றும், இரும்பு கம்பியை சூழ்ந்திருப்பது போன்றும் அல்லாஹ் தனது படைப்புக்களை சூழ்ந்துள்ளான் என்று நம்ப வேண்டுமேயன்றி கடித உறை கடிதத்தை சூழ்ந்திருப்பது போன்றும், தொப்பி தலையை சூழ்ந்திருப்பது போன்றும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. அவ்வாறு விளங்குதல் “ஷிர்க்” எனும் இணையை ஏற்படுத்தும். இதன் விளக்கம் தொடர் இரண்டில் இடம் பெறும்.

குறிப்பு: தலைப்பில் நான் எழுதியுள்ள திரு வசனத்தில் இரண்டு இடங்களில் “அலா” என்ற சொல்லைக் கூறியுள்ளான். இதன் பொருள் என்ன? ஏன் கூறினான் என்ற விபரம் தொடர் இரண்டில் தொடரும்.

தொடரும்… (2ம் பக்கம் பார்க்க…)

RELATED ARTICLES

Most Popular

Recent Comments