Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“பறாஅத்” இரவின் மகிமை

“பறாஅத்” இரவின் மகிமை

“பறாஅத்” இரவின் மகிமை காலை 06.20 மணி வரை நீடித்திருக்கும்.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

“பறாஅத்” இரவு நல்லமல்கள் செய்வதன் மூலம் கண்ணியப்படுத்தப்பட வேண்டிய இரவாகும். மனக் கண்ணும், தலைக் கண்ணும் குருடான இரு கண் குருடர்களுக்கு இவ்விரவின் மகிமை தெரியாமற் போனது அவர்கள் நற் பாக்கியம் இழந்தவர்கள் என்பதற்கு ஓர் ஆதாரமாகும். نَبْحُ الْكِلَابِ لَا يَضُرُّ السَّحَابَ நாய்கள் குரைப்பது மேகத்திற்கு எந்த ஒரு தீமையும் செய்யாது.

மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்தால் ஆமைகளுக்கும், தேரைகளுக்கும், தவளைகளுக்கும் கொண்டாட்டம். இரு கண்களும் தெரியாத அந்தகர்களுக்கு திண்டாட்டம். அவற்றின் குரல் கொண்டாட்டக் குரல். இவர்களின் குரல் திண்டாட்டக் குரல்.

நமது முன்னோர்களான வலீமார்களும், மார்க்க அறிஞர்களான உலமாஉகளும், நல்லடியார்களும், ஸூபீகளும், ஞானிகளும் “பறாஅத்” இரவைக் கொண்டாடி வந்துள்ளார்கள். பள்ளிவாயல்களிலும், தைக்காக்களிலும், சாவியாக்களிலும் நிகழ்வுகளை நடாத்தி அன்றிரவை நல்லமல்கள் செய்து கண்ணியப்படுத்தி வந்துள்ளார்கள். ஒரு வீடு கூட பாக்கியின்றி அனைத்து வீடுகளிலும் அரிசி மா ரொட்டி சுட்டு பள்ளிவாயல்களுக்கு அனுப்பி வைப்பார்கள். 10 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் “பறாஅத்” ரொட்டி தாருங்கள் என்று வான் முட்டக் குரலெழுப்பி வீதிகளில் வலம் வருவார்கள். பள்ளிவாயல்கள், வீதிகளை மின் குமிழ்களால் அலங்கரிப்பார்கள். பொது மக்கள் இவ்வாறு சந்தோஷத்தை வெளிப்படுத்தி வந்த கால கட்டத்தில் இமாம் நவவீ, இமாம் புகாரீ போன்ற அறிவு மலைகள் பலர் இருந்தும் கூட அவர்களில் எவரும் இது “பித்அத்” என்றோ, “ழலாலத்” என்றோ சொன்னதில்லை. ஆயினும் பொது மக்களுடன் அறிஞர்களும் சேர்ந்தே கொண்டாடினார்கள்.

அன்புள்ள ஸுன்னீகளே!

நீங்கள் பாக்கிசாலிகளே! இன்றிரவைக் கொண்டாடுங்கள். “திக்ர்” செய்யுங்கள், திருக்குர்ஆன் ஓதுங்கள். “துஆ” கேளுங்கள். நாட்டில் ஏற்பட்டுள்ள பஞ்சம், பசி, பட்டினி நீங்கி இந்நாட்டில் செல்வம் பெருக “துஆ” கேளுங்கள். அழுது சலித்து கண்ணீர் மல்க இறைவனிடம் கையேந்துங்கள். பாவ மன்னிப்புக் கேட்கும் போது நீங்கள் வடிக்கும் கண்ணீர் வீணாவதில்லை. அல்லாஹ் அதைப் பாதுகாத்து வைக்கிறான்.

قال النبي صلى الله عليه وسلّم: دَمْعَةُ الْعَاصِيْ تُطْفِئُ غَضَبَ الْجَبَّارِ
“ஒரு பாவி தன் பாவத்தை நினைத்து வடிக்கும் கண்ணீர் “ஜப்பார்” அடக்கியாளும் வல்ல அல்லாஹ்வின் கோபத்தை அணைக்கிறது” என்று எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளியுள்ளார்கள்.

ஓர் அடியான் தான் செய்த பாவங்களை நினைத்து மனமுருகி வடிக்கும் கண்ணீரை ஒரு “மலக்” அமரர் மூலம் அல்லாஹ் ஒரு போத்தலில் எடுத்து அதை “அர்ஷ்” எனும் இடத்தில் கண்ணீர் வடித்த பாவியின் முழுப் பெயருடன் தொங்க விடுகிறான். மறுமையில் இப்பாவியை நெருப்புக் குன்டொன்று துரத்திச் செல்கையில் அவன் அதற்குப் பொறுப்பான “மலக்” அமரரை அழைத்து அந்த போத்தலில் உள்ள நீரால் அவனைத் துரத்திச் செல்லும் குண்டை அணைத்துவிடுகிறான். அப்போது அந்த அடியான் அந்த “மலக்” அமரரிடம் இது என்ன நீர் என்று கேட்பான். அதற்கு அந்த “மலக்” இது நீ வடித்த கண்ணீர்தான் என்று விளக்கம் கூறுவார்.

பாவத்தை நினைத்து பாவி வடிக்கும் கண்ணீர் அவனின் பார்வையிலும், பிறரின் பார்வையிலும் தரையில் விழுவது போல் தோற்றினாலும் அது அவ்வாறு விழுவதில்லை. அல்லாஹ் அடியான் மீது இரங்கி அதைப் பக்குவப்படுத்தி வைத்து பின்னர் அது கொண்டு அவனுக்கே அருள் செய்கிறான். அல்ஹம்து லில்லாஹ்!

எனவே, அன்புள்ள ஸுன்னீகளே! இன்றிரவை வீணாக்கி விடாமல் காலை வரை கண்ணீர் வடித்துக் கையேந்துங்கள். கைமேல் பயன் கிட்டும். எனக்காகவும் ஒரு நிமிடம் ஒதுக்கி இறைவனிடம் கேளுங்கள். அவன் இல்லையென்று சொல்வதில்லை.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments