Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்புலவர் சுல்தான் அப்துல் காதிர் ஆலிம் அவர்களின் மனக்குமுறல்.

புலவர் சுல்தான் அப்துல் காதிர் ஆலிம் அவர்களின் மனக்குமுறல்.

(கண்டனம்)
இராகம் – அடானா – சாப்பு தாளம்.
பல்லவி
மீசையுள்ளாண் பிள்ளைச் சிங்கங்களென் கூட
வெளியினில் வாருங்கள் காணும்
அனு பல்லவி
நாசி நிரம்பவுமயிர்தா – னிரண்டுகால்
நடுவினு மொரு கூடை மயிர்தான்
ரோசங்கெடுவார்களென்கடைமயிர்தான் – குணங்
குடி கொண்டாலென்னுயிர்க் குயிர்தான். (மீசை)
 

சரணங்கள்
படிக்கும் படி நடக்கப் படிக்காலோபிகள் மோஷப்
பதமற்றுப் போனாலும் போகட்டும் – அவர்
முடிக்கு முடிதரித்து முடிய முடிய வாழ்ந்து
முடிந்து முடி போனாலும் போகட்டும் – இன்னுங்
குடிக்கக் கஞ்சியுமற்றுக் குண்டிக்கும் துணியற்றுக்
குருடராய்ப் போனாலும் போகட்டும்
அடித்தாலு மெலும்பெலாமொடித்தாலுமவர்க்கஞ்சேன்
அடித்தாலடித்துக் கொண்டு போகட்டும்
கெடுவார்களென் கடைமயிர்தான் – குணங்
குடி கொண்டாலென்னுயிர்க்குயிர்தான். (மீசை)
மடையரெல்லாங் கூடிக் கூத்தாடிக் கூத்தாடி
வையாளி போட்டாலும் போடட்டும் – இன்னும்
விடிய விடியப் பரத்தையர் மடிகளில்
விளையாடினும் விளையாடட்டும் – கள்ளுக்
குடியரெல்லாம் கள்ளைக் குடித்துக் குடித்தவர்கள்
குடிகெட்டுப் போனாலும் போகட்டும் – ஞானம்
படியாரெல்லாம் என்னைப் பழித்துப் பழித்துக் கொண்டு
பகைத்தால் பகைத்துக் கொண்டு சாகட்டும் – அந்தக்
கெடுவார்களென் கடை மயிர்தான் – குணங்
குடி கொண்டாலென்னுயிர்க்குயிர்தான். (மீசை)
நெடுமரம் போலோங்கி வளர்ந்தும் அறிவற்றவர்
நெருப்புண்ணப் போனாலும் போகட்டும் – அவர்
இடுகுட்டிச் சுவரைப் போல் இருந்தென்ன இறந்தென்ன
எப்படிப் போனாலும் போகட்டும் – இன்னும்
கொடும்பு மிடும்பும் வம்புங் குடிகேடுங்குடி கொண்டு
கூத்தாடினாலுங் கூத்தாடட்டும் – என்னை
மடியிற்கை போட்டிழுத் தலகினாலடி போட்டு
மல்லாடினாலு மல்லாடட்டும் – அந்தக்
கெடுவார்களென் கடைமயிர்தான் – குணங்
குடி கொண்டாலென்னுயிர்க் குயிர்தான். (மீசை)
கடுநாய்க் குட்டிகளான படு சுட்டி கண் மாமாயைக்
கதவிடுக் கினிற்பட்டே சாகட்டும் – புலிக்
கடு நாய்க்குங் கொடிதான படுபோக்கிலிகள் சும்மா
கடு நரகில் விழுந்தே வேகட்டும் – சுற்றக்
கெடு பூண்டாக முளைத்த கொடுமாடு பிடுங்கிகள்
கெடுபூண்டு களாய்த்தானே போகட்டும் – இன்னும்
நெடுமரம் போற் கொத்த மடவேப்பாக்குடிக்கிகள்
நெடுமரம் போற்றானே யாகட்டும் – அந்தக்
கெடுவார்களென் கடைமயிர்தான் – குணங்
குடிகொண்டாலென்னுயிர்க்குயிர்தான். (மீசை)
மேற்கண்ட பாடல் சென்னை ராயபுரத்தில் அடக்கம் பெற்றுள்ள “குணங்குடி மஸ்தான்” என்று பிரசித்தி பெற்ற அதியற்புதம் நிகழ்த்தும் ஸுல்தான் அப்துல் காதிர் ஆலிம் புலவர் அவர்களின் உள்ளக் குமுறலாகும். இதைப் பதிவிட்ட எனது உள்ளக் குமுறல் அல்ல.
இவர்கள் தங்களின் திருமணத்தன்று எவருக்கும் தெரியாமல் ஒழித்தோடி மறைந்து இறைஞானமெனும் மதுவருந்தி இறை போதையில் காடுகளிலும், நாடுகளிலும் அலைந்து திரிந்த இறைஞானியாவார்கள்.
இவர்களின் வரலாற்றை அறிய விரும்புவோர் அறிஞர் அப்துர் றஹீம் அவர்களின் “வலீமார்கள் வரலாறு” எனும் நூலில் பார்க்கலாம்.
 
பதிவிட்டவர்,
 
காதிமுல் கவ்மி,
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
16.03.2023
RELATED ARTICLES

Most Popular

Recent Comments