தொடர் – 1
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“நிய்யத்” என்றால் என்ன?
ஒருவன் ஒரு வணக்கத்தை தொடருமுன் அந்த வணக்கத்திற்கு “ஷரீஆ”வில் கூறப்பட்ட முறைப்படி மனதில் நினைத்துக் கொள்ளுதல் அதற்கான “நிய்யத்” எனப்படும்.
உதாரணமாக றமழான் மாதம் நோன்பு நோற்பதாயின் “இந்த வருடத்து றமழான் மாதத்தின் “பர்ழ்” கடமையான நோன்பை “அதா”வாக நாளைக்குப் பிடிக்க “நிய்யத்” வைக்கிறேன்” என்று மனதில் நினைத்துக் கொள்வது போன்றும், தொழுவதாயின் உதாரணமாக “ளுஹ்ர் உடைய “பர்ழ்” ஐ தொழுகிறேன்” என்றும் மனதில் நினைத்துக் கொள்வது போன்றுமாகும். இதுவே “நிய்யத்” எனப்படும்.
எந்த ஒரு வணக்கமாயினும் அதற்கு “ஷரீஆ”வில் கூறப்பட்ட முறைப்படியே “நிய்யத்” வைத்துக் கொள்ள வேண்டும். நமது விருப்பத்தின்படி செய்ய முடியாது. விபரம் தெரியாதவர்கள் “ஸுன்னத் ஜமாஅத்” கொள்கையுள்ள உலமாஉகளிடம் கேட்டறிந்து கொள்ள வேண்டும்.
“நோன்பின் நிய்யத்”
றமழான் மாதக் கடமையான நோன்பு நோற்பதாயின் அறபு மொழியில் நினைப்பவர்கள்
نَوَيْتُ صَوْمَ غَدٍ عَنْ أَدَاءِ فَرْضِ رَمَضَانِ هَذِهِ السَّنَةِ للهِ تَعَالَى
என்று நினைக்க வேண்டும்.
இதன் பொருள்: “இந்த வருடத்து றமழான் மாதத்தின் “பர்ழ்” ஆன நோன்பை உரிய காலத்தில் – நாளை நோற்பதற்கு “நிய்யத்” வைக்கிறேன்” என்பதாகும். அறபு மொழி தெரியாதவர்கள் தமிழில் இவ்வாறு நினைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மனதால் நினைப்பதுதான் கடமையேயன்றி வாயால் மொழிவது கடமையல்ல. எனினும் மனதால் நினைப்பதோடு வாயால் மொழிவது சிறந்ததே. வாயால் மொழியாது போனாலும் “நிய்யத்” பிழையாகாது. நோன்பு நிறைவேறும்.
ஒரு வணக்கத்திற்குரிய காலத்திலும், நேரத்திலும் அவ்வணக்கம் செய்யப்படுமாயின் அதற்கு “நிய்யத்” வைக்கும் போது “அதா” என்றும், கால நேரம் தவறிச் செய்யப்படும் வணக்கத்திற்கு “கழா” என்றும் நினைத்துக் கொள்ள வேண்டும். அல்லது மொழிந்து கொள்ள வேண்டும்.
நோன்புக்குரிய “நிய்யத்” வைப்பதற்கான நேரம்.
“மக்ரிப்” தொழுகைக்கான நேரத்திற்கும், “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரத்திற்கும் இடைப்பட்ட நேரமாகும். இந்நேரம் “ஷரீஆ”வின் கண்ணோட்டத்தில் இரவு நேரமே. நோன்பு என்பது பகல் நேரத்துக்குரியதேயன்றி இரவு நேரத்திற்குரியதல்ல.
மேற்கண்ட நேரத்தில் எந்நேரத்திலும் நோன்பிற்கான “நிய்யத்” செய்யலாம். செய்த பின்னும் “ஸுப்ஹ்” நேரம் வரை சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும் அனுமதியுண்டு. நிய்யத் முறிந்து விடாது. எனினும் தொன்று தொட்டு நோற்பவர்கள் “ஸஹர்” நேரம் சாப்பிட்ட பின் “ஸுப்ஹ்” நேரத்திற்குள் “நிய்யத்” செய்வதையே வழக்கமாக்கி கொண்டனர். இதனால் இந்நேரத்தில் மட்டுமே “நிய்யத்” வைக்க வேண்டும் என்று அநேகமானவர்கள் நம்பியுள்ளனர்.
நமது இலங்கைத் திரு நாட்டில் பள்ளிவாயல்களில் “தறாவீஹ்” தொழுகை முடிந்த பின் நோன்பிற்கான “நிய்யத்” சொல்லிக் கொடுக்கப்படுகின்றது. அனைவரும் சொல்கிறார்கள். வீடு வந்ததும் “ஸுப்ஹ்” நேரம் வரை பல்வேறு உணவுகளை உட்கொள்கிறார்கள். மனைவியுடன் உடலுறவும் கொள்கிறார்கள். இதனால் பள்ளிவாயலில் வைத்த “நிய்யத்” முறிந்துவிடவும் மாட்டாது. மீண்டும் “ஸஹர்” நேரம் “நிய்யத்” வைக்கத் தேவையுமில்லை. இவ்விடயம் தெளிவாக விளங்காதவர்கள் “ஸுன்னத் ஜமாஅத்” கொள்கையுள்ள உலமாஉகளிடம் விபரமாக கேட்டறிந்து செயல்பட வேண்டும்.
உதாரணமாக ஒருவன் “மக்ரிப்” நேரம் நோன்பு திறந்த பின் மறு நாள் நோன்பிற்காக “நிய்யத்” வைக்க முடியும். இவ்வாறு “நிய்யத்” வைத்த ஒருவன் “ஸுப்ஹ்” நேரம் வரை உண்ணவும், பருகவும், உடலுறவு கொள்ளவும் முடியும். வைத்த “நிய்யத்” முறிந்து விடவும் மாட்டாது. “ஸஹர்” நேரம் மீண்டும் “நிய்யத்” வைக்கத் தேவையுமில்லை. இரவில் “நிய்யத்” வைத்து நோன்பு நோற்ற ஒருவன் பகலில் அதே “நிய்யத்”தைச் சொல்வதால் நோன்பு முறிந்து விடும் என்ற சிலரின் கருத்து அர்த்தமற்றதாகும்.
எந்த நோன்பாயினும் அது பகல் நேரத்தில் மட்டும் விதியாக்கப்பட்டதேன்?
இது தொடர்பாக சிறிய ஆய்வொன்று செய்து பார்ப்போம். اَلدِّيْنُ يُسْرٌ لَا عُسْرَ فِيْهِ மார்க்கம் மிக இலகுவானது. அதில் எந்த ஒரு கஷ்டமும், சிரமமும் இல்லை என்ற நபீ மொழியின் படியும், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், எளிய மார்க்கம் என்ற பொதுத் தத்துவத்தின் படியும் இரவில்தான் நோன்பு நோற்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லியிருக்க வேண்டும்.
ஏனெனில் وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا இரவை உடையாகவும் – உறக்கத்திற்குரியதாகவும், பகலை உழைப்பிற்குரியதாகவும் நாங்கள் ஆக்கியுள்ளோம் என்ற திருமறை வசனத்தின்படி நோன்பு என்பது இரவு நேரத்திற்குரியதென்று சொல்லப்படிருந்தால் “தறாவீஹ்” தொழுத பின் நோன்பிற்கான “நிய்யத்” வைத்துக் கொண்டு “ஸுப்ஹ்” நேரம் வரை உறங்குவதற்கு வாய்ப்புண்டு. இது மனிதனுக்கு கஷ்டமில்லாத ஒன்றாயிருக்கும்.
பகல் நேரம் என்பது மேற்கண்ட அல்லாஹ்வின் ஆணைப்படி உழைப்பிற்குரிய நேரமாகும். எனவே, பகல் நேரத்தில் உண்ணாமலும், பருகாமலும் உழைப்பதானது உடலுக்கு அசதியையும், சோர்வையும் ஏற்படுத்திவிடும். இந்நிலையில் “மார்க்கம் இலேசானது. அதில் சிரமம் இல்லை” என்ற நபீ பெருமானின் அருள் மொழியும், இஸ்லாம் ஓர் இனிய, எளிய மார்க்கம் என்ற பொதுத் தத்துவமும் அர்த்தமற்றதாகிவிடுகிறது. இதற்கான சரியான விளக்கம் பின்வருமாறு.
விளக்கம்:
மார்க்கத்தில் ஒருவனுக்கு எந்த வணக்கம் கடமையாவதாயினும் அவன் مُكَلَّفْ “முகல்லப்” ஆக இருப்பது பிரதான நிபந்தனையாகும். இச் சொல் كَلَّفَ என்ற சொல்லடியில் உள்ளதாகும். இதற்கு كَلَّفَ بِمَا يَشُقُّ عَلَيْهِ கஷ்டப்படுத்தினான், ஒருவனுக்கு கஷ்டமான ஒன்றைக் கொண்டு ஏவினான் என்று பொருள். “முகல்லப்” என்றால் கஷ்டப்படுத்தப்பட்டவன் என்று பொருள். இச் சொல்லுக்கு “ஷரீஆ”வில் عَاقِلْ بَالِغْ “சித்த சுவாதீனமான, வயது வந்தவன்” என்று விளக்கம் சொல்லப்பட்டுள்ளது.
இதன் விபரம் என்னவெனில் ஒருவனுக்கு எந்த ஒரு வணக்கமாயினும் அது கடமையாவதாயின் அவனில் இரு அம்சங்கள் இருக்க வேண்டும். ஒன்று. அவன் சித்த சுவாதீனமானவனாயிருத்தல். இதன் எதிர்ச்சொல் مَجْنُوْنْ பைத்தியக்காரன் என்பதாகும். عَاقِلْ என்றால் அதி விவேகமுள்ளவனாயிருக்க வேண்டும் என்பதில்லை. புத்தியுள்ளவனாயிருந்தால் போதும். இரண்டு. வயது வந்தவனாயிருத்தல் வேண்டும். வயது வந்தவன் என்று ஒருவனைக் கணிப்பதற்கு இரண்டு வழியுண்டு. ஒன்று – அவன் 15 வயதையடைந்தவனாயிருத்தல். இரண்டு – அவனுக்கு இந்திரியம் வெளியாதல்.
மேற்கண்ட இவ்விரு நிபந்தனைகளும் உள்ளவன் மட்டுமே “முகல்லப்” என்று “ஷரீஆ”வில் சொல்லப்படுவான். எனவே, இவ்விரு நிபந்தனைகளும் உள்ளவன் “முகல்லப்” கஷ்டப்படுத்தப்பட்டவன் ஆவான். இவனுக்கே ஏவல், விலக்கல் கடமையாகும். இவன் கஷ்டப்படுத்தப்பட்டவன்தான். ஏனெனில் அவன் விரும்பியதைச் செய்ய முடியாது. அவன் விரும்பியதைப் பேசவும் முடியாது. இவன் “ஷரீஆ”வின் விதி விலக்கிற்கு உட்பட்டு விடுகிறான்.
ஒருவன் ஒரு வணக்கத்தைச் செய்யும் போது எந்த அளவு கஷ்டத்தை அனுபவித்து அதைச் செய்கிறானோ அந்த அளவு அவனுக்கு நற்கூலி உண்டு. ஒரு வணக்கத்தின் கஷ்டத்தைப் பொறுத்தே அதற்கு நன்மை கூடவும், குறையவுமிருக்கும்.
வணக்கங்களில் உடலை வருத்திச் செய்கின்ற வணக்கத்திற்கே அதிக நன்மை கிடைக்கும். தொழுகை, நோன்பு, சகாத், ஹஜ் முதலான வணக்கங்களில் உடலை அதிகம் வருத்திச் செய்கின்ற வணக்கம் “ஹஜ்” வணக்கமாகும். இதனால்தான் எம்பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்
مَنْ حَجَّ وَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ خَرَجَ كَيَوْمٍ وَلَدَتْهُ أُمُّهُ،
“ஒருவன் எந்த ஒரு பாவமும், தவறும் செய்யாமல் “ஹஜ்” வணக்கத்தை நிறைவேற்றுவானாயின் அவன் தனது தாயின் வயிற்றிலிருந்து அன்று பிறந்த பாலகன் போலாகிவிடுகிறான்” என்று அருளினார்கள்.
“ஹஜ்” வணக்கத்தை முறைப்படி நிறைவேற்றியவருக்கு மட்டுமே இப்படியொரு பாக்கியம் கிடைப்பதாக எம் பிரான் அவர்கள் அருளினார்களேயன்றி வேறு எந்த வணக்கம் செய்தவனுக்கும் இப்படியொரு பாக்கியம் கிடைப்பதாக அவர்கள் அருளியதற்கு நான் எந்த ஓர் ஆதாரத்தையும் காணவில்லை.
இதற்கான காரணம் “ஹஜ்” வணக்கம் என்பது ஒருவன் தனது உடலை வருத்தி, அதைத் கசக்கிப் பிழிந்து செய்கின்ற கஷ்டமான வணக்கம் என்பதேயாகும். இவ்வாறுதான் நோன்பும். சுமார் 13 மணி நேரங்கள் உண்ணாமலும், பருகாமலும் இருப்பதுடன் வெயில் வெக்கையையும், அதன் உஷ்னத்தையும் அனுபவித்து பொறுமை செய்வதுடன் தொழில் செய்வதிலும் கவனம் செலுத்துவதாலும், உண்ணாமலும், பருகாமலும், மனவாசையை அடக்கியும், “நப்ஸ்” எனும் மனவெழுச்சிக்கு மாறு செய்தும் செய்கின்ற ஒரு வணக்கமாகும்.
இவ்வாறான கஷ்டங்களை அனுபவித்து வணக்கம் செய்வதாயின் பகல் நேரத்திலேயே நோன்பு நோற்க வேண்டும். இரவு நேரத்தில் நோன்பு நோற்றால் நிம்மதியாக உறக்கத்திலேயே காலம் கழியுமேயன்றி கஷ்டத்தை அனுபவிக்க வாய்ப்பு இல்லாமற் போய்விடும். “முகல்லப்” கஷ்டப்படுத்தப்பட்டவன் என்ற சொல்லுக்கே அர்த்தம் இல்லாமற் போய் விடும். இதனால்தான் நோன்பை பகல் நேரத்தில் அல்லாஹ் கடமையாக்கினான் என்ற தத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நோன்பு நோற்கும் போதே மனிதன் “நப்ஸ்” எனும் எதிரியுடன் போர் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு மனிதன் நரகத்திற்குச் செல்வதற்கு பிரதான காரணம் “நப்ஸ்” என்ற எதிரிதான். இதனால்தான் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்
أَعْدَى عَدُوِّكَ نَفْسُكَ الَّتِيْ بَيْنَ جَنْبَيْكَ
“உனது விரோதிகளில் மிகவும் கடுமையான விரோதி உனது இரு விலாக்களுக்கும் இடையிலுள்ள “நப்ஸ்” ஆகும்” என்று அருளினார்கள்.
எனவே, “நப்ஸ்” எனும் எதிரியை, துரோகியை, விஷப் பாம்பை, சதிகாரனை அடக்கி ஒடுக்குவதற்கு அரிய சந்தர்ப்பம் நோன்பு நோற்பதேயாகும்.
நோன்பை அதற்குரிய முறைப்படி நோற்றால் “நப்ஸ்” அடங்குவது மட்டுமன்றி ஷாத்தானும் அடங்குவான். இப்லீசும் அடங்குவான். ஆயினும் இக்காலத்தவர்கள் நோன்பு நோற்பது போல் நோன்பு நோற்றால் ஷாத்தானின் பேரர்களான குட்டிச் சாத்தான்கள், இப்லீஸின் பேரர்களான குட்டி இப்லீஸ்கள் கூட அடங்கமாட்டார்கள். ஏனெனில் இக்காலத்தில் நோன்பு நோற்கின்ற வயது முதிர்ந்த, பக்தியுள்ள சில பாட்டிகள் தவிர, இன்னும் சில வயோதிபர்களான நல்லடியார்கள் தவிர மற்றவர்கள் நோற்கும் நோன்பு வீணானதேயாகும். இது குறித்தே பெருமான் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு அருளினார்கள்.
وَرُبَّ صَائِمٍ لَيْسَ لَهُ مِنْ صِيَامِهِ إِلَّا الْجُوْعُ وَالْعَطَشُ
எத்தனையோ நோன்பாளிகள் உள்ளனர். அவர்களின் நோன்பில் பசித்திருந்ததும், தாகித்திருந்ததும் தவிர வேறொன்றும் இல்லை என்று நபீகள் திலகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
யார் இவர்கள்? “நிய்யத்” வைக்காமல் நோன்பு நோற்றவர்களா? இல்லை. “நிய்யத்” வைத்து நோன்பு நோற்றவர்கள்தான். அளவிற்கு அதிகமாக சாப்பிட்டு நோற்றவர்களா? இல்லை. ஆயினும் முறையாக நோற்றிருந்தாலும் பின்வரும் காரியங்கள் செய்தவர்களாவர்.
தொடரும்… (2ம் பக்கம் பார்க்க)