தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
திருக்குர்ஆன் வசனங்கள் அல்லாஹ்வின் வசனங்களேயன்றி அண்ணல் பெருமானாரின் வசனங்கள் அல்ல. வசனங்களுக்கும், அவற்றுக்கான கருத்துக்களுக்கும் உரியவன் அல்லாஹ்வேயன்றி அண்ணலெம் பெருமான் அல்ல. திருக்குர்ஆன் வசனங்களில் பிழையுண்டு என்று உளறுவோர் அல்லாஹ்வுக்கு மொழியிலக்கணமும், சொல்லிலக்கணமும் தெரியாதென்று உளறுகிறார்கள். திருக்குர்ஆனில் பிழையுண்டு என்போர் யஹூதீ, நஸாறாக்களை விடக் கொடியவர்களாவர். இவ்வாறு இரகசியமாகக் கூறும் வழிகேடர்கள் இதைப் பகிரங்கமாகக் கூறும் காலம் வெகு தொலைவில் இல்லை.
وَإِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِنْ مِثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ
(நமது அடியார் மீது நாம் இறக்கி வைத்த இவ் வேதத்தில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் அல்லாஹ் தவிர உங்கள் உதவியாளர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு – அவர்களின் உதவியுடன் நீங்கள் உங்கள் கூற்றில் உண்மையாளர்களாயிருந்தால் – நீங்கள் சொல்வது சரியாக இருந்தால் அவர் போன்றவரில் நின்றும் ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்) (திருக்குர்ஆன் 02-23)
மேற்கண்ட இவ்வசனத்திற்கு ஸஊதியிலிருந்து வெளியான القرآن الكريم وترجمة معانيه إلى اللّغة التامليّة என்ற நூலின் 05ம் பக்கத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பதில் தவறுண்டு என்பதை உலமாஉகளான மார்க்க அறிஞர்களின் கவனத்திற்கு தருகிறேன். இவ்வாறு தமிழாக்கம் செய்தவர்கள் ஸஊதியின் கொள்கைக்கு ஆதரவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இதற்கு விளக்கம் கூற வேண்டும்.
மேற்கண்ட திரு வசனத்தில் வந்துள்ள مِثْلِهِ என்ற சொல்லில் உள்ள “ஹி” என்ற “ழமீர்” பிரதிப் பெயர் பெருமானாரையே குறிக்கும். “ஸூறத்” அத்தியாயம் என்பதைக் குறிக்காது.
மேலும் குறித்த ஸஊதியின் மொழியாக்கத்தில் 03ம் பக்கத்தில் ذَلِكَ الْكِتَابُ என்ற வசனத்திற்கு “இது வேதமாகும்” என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பது பிழையாகும்.
ஏனெனில் வசனத்தில் வந்துள்ள ذَلِكَ என்ற சொல் اِسْمُ إِشَارَةٍ لِلْبَعِيْدْ தொலைவில் – தூரத்தில் உள்ள வசனத்தைச் சுட்டிக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு சொல்லாகும். இதற்கு “அந்த வேதம்” என்றுதான் மொழியாக்கம் வருமேயன்றி “இது வேதமாகும்” என்று மொழியாக்கம் வராது.
“இது” என்று மொழியாக்கம் செய்வதாயின் ذَا الْكِتَابُ என்று வசனம் வந்திருக்க வேண்டும். ஏனெனில் சமீபத்தில் உள்ள ஒன்றைச் சுட்டிக் காட்டுவதற்கு ذا என்ற சொல்லே பயன்படுத்தப்படும். ذَلِكَ என்ற சொல் பயன்படுத்தப்படுவதில்லை. இதுவே மொழியிலக்கணம். இவ்வசனத்தில் ذَلِكَ என்று வந்துள்ளதால் “அந்த வேதம்” என்றே மொழியாக்கம் செய்ய வேண்டும்.
உலமாஉகளே! மொழியாக்கம் செய்தவர்களே! நான் கூறும் விளக்கம் சரியெனில் ஏற்றுக் கொண்டு பொது மக்களுக்கு அறிவியுங்கள். பிழையெனில் என்னை விசாரிக்காமல் “பத்வா” வழங்கி முஸ்லிம்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தியது போல் இவ்விடயத்திலும் பிளவை உண்டு பண்ணாமல் பிழையை எனக்குச் சொல்லித் தாருங்கள்.
திருக்குர்ஆனில் பிழையுண்டு என்று உளறுவோர் புதிதாக ஒன்றைக் கண்டு பிடித்து இரகசியமாக வைத்துள்ளார்கள். இதையும் இன்னும் சில மாதங்களில் அல்லது வருடங்களில் வெளிப்படுத்துவார்கள். அதற்கு முன்னர் அதை நானே சொல்லிவிடுகிறேன்.
திருக்குர்ஆன் 24 – 31ம் வசனத்தில் أَوِ الطِّفْلُ الَّذِيْنَ என்று வந்துள்ளது. இது நீண்ட வசனத்தின் ஒரு பகுதியாகும். இதில் الطِّفْلُ என்று ஒரு சொல் வந்துள்ளது. இதற்குப் பின்னால் اَلَّذِيْنَ என்று ஒரு சொல் வந்துள்ளது. திருக்குர்ஆனில் பிழையுண்டு என்று உளறுவோர் الّذين என்று வந்திருப்பது பிழையென்றும், اَلَّذِيْ என்று வந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இவர்கள் கூறும் காரணம் என்னவெனில் اَلطِّفْلُ என்றால் சிறுவன் என்று பொருள். இது ஒருமைச் சொல். ஆகையால் இதற்குப் பின்னால் வந்துள்ள சொல்லும் اَلَّذِيْ என்று ஒருமையாக வந்திருக்க வேண்டும். ஆகையால் இது பிழை என்கிறார்கள்.
இது எந்த வகையிலும் பிழையல்ல. ஏனெனில் اَلطِّفْلُ என்ற சொல்லுக்கு أَطْفَالْ என்று பன்மைச் சொல் இருந்தாலும் கூட اَلطِّفْلُ என்ற இச் சொல் தோற்றத்தில் ஒருமையாயிருந்தாலும் இது பன்மைக்குப் பயன்படுத்துகின்ற சொல்லாகும்.
وقد يكون الطِّفْلُ واحدا وجمعا، لأنّه اسمُ جنسٍ
“அத்திப்ல்” என்ற சொல் அறபு மொழியில் ஒருமைக்கும், பன்மைக்கும் பாவிக்கப்படுகின்ற சொல்லாகும். இது மொழியிலக்கணத்தில் “இஸ்மு ஜின்ஸ்” اسم جنس என்று சொல்லப்படும். ஆகையால் “திப்ல்” என்ற சொல்லுக்குப் பின்னால் الّذين என்று பன்மைச் சொல் வந்திருப்பது மொழியிலக்கண விதிப்படி சரியானதே!
நாள் செல்லச் செல்ல வழிகேடுகளும் புற்றீசல் போல் பெருகப் பெருக பிழை காண்பவர்களும் பெருகிவிடுவார்கள். திருக்குர்ஆனில் பிழையுண்டு என்போர் அல்லாஹ்வைப் பிழை காண்பவர்களாவர். அல்லாஹ்வைப் பிழை காண்போர் திருக்கலிமா சொன்னவர்களாயினும் அவர்கள் யஹூதிகளை விடக் கொடியவர்களே.
அல்லாஹ் خَالِقْ படைப்பவன் ஆவான். பிழை காணும் மனிதன் مَخْلُوْقْ படைப்பாவான். படைப்பு என்பது எந்த வகையிலும், எப்போதும் படைத்தவனை மிகைக்க முடியாது. முடியுமென்றால் தத்துவம் பிழையாகிவிடும். வானத்திலிருந்து இறங்கும் மழை சூடாயிருக்க வேண்டும். பகல் கருப்பு நிறமாக வேண்டும். واللهُ غَالِبٌ عَلَى أَمْرِهِ அல்லாஹ் தன் விடயத்தில் அனைத்தையும் மிகைத்தவன்.
அல்லாஹ்வைப் பார்க்கத்தான் முடியும். ஆனால் அவனைப் பார்வையால் சூழ்ந்து கொள்ளவே முடியாது. அவனைப் பார்வையால் சூழ்ந்து கொள்ள முடியுமென்பது பிழை. ஏனெனில் அது சரியென்றால் சிருட்டியின் பார்வையால் அவன் சூழப்பட்டவனாகிவிடுவான். அவனோ مُطْلَقٌ கட்டுப்பாடற்றவன். அவனை மறைப்பதற்கு திரையுமில்லை. அவனைச் சூழ்ந்து கொள்ள கண்ணுமில்லை. இதனால்தான் அவனை எந்த ஒரு குறித்த உருவத்திலும் கட்டுப்படுத்த முடியாதென்று இஸ்லாமிய “அகீதா” கொள்கை கூறுகிறது. இதனால்தான் இஸ்லாம் உருவ வழிபாட்டை, சிலை வணக்கத்தை, சிருஷ்டி வணக்கத்தை கடுமையாகத் தண்டிக்கிறது.
لَا يَحْجِبُهُ شَيْءٌ، وَلَا يَسْتُرُهُ شَيْءٌ، وَلَا يَغْلِبُهُ شَيْءٌ، وَكَيْفَ يَحْجِبُهُ شَيْئٌ وَهُوَ عَيْنُهُ؟ وَكَيْفَ يَسْتُرُهُ شَيْءٌ وَهُوَ عَيْنُهُ؟ وَكَيْفَ يَغْلِبُهُ شَيْءٌ وَهُوَ عَيْنُهُ؟
அவனை எந்த வஸ்தும் திரையிடாது. அவனை எந்த வஸ்தும் மறைக்காது. அவனை எந்த வஸ்தும் மிகைக்காது. ஒரு வஸ்து அவன் தானாயிருக்கும் நிலையில் அது அவனை எவ்வாறு திரையிடும்? ஒரு வஸ்து அவன் தானாயிருக்கும் நிலையில் அது அவனை எவ்வாறு மறைக்கும்? ஒரு வஸ்து அவன் தானாயிருக்கும் நிலையில் அது அவனை எவ்வாறு மிகைக்கும்? திரையிடுவதற்கும், மறைப்பதற்கும், மிகைப்பதற்கும் இரு வஸ்துக்கள் வேண்டாமா? ஒரு வஸ்து தன்னைத் திரையிடுவது எங்கனம்? ஒரு வஸ்து தன்னை மறைப்பது எங்கனம்? ஒரு வஸ்து தன்னை மிகைப்பது எங்கனம்? திரையிடுவதற்கும், மறைப்பதற்கும், மிகைப்பதற்கும் குறைந்தபட்சம் இரண்டு வஸ்துக்கள் இருக்க வேண்டுமென்பதுதானே நியதி?
எது எதைத் திரையிடுகிறதோ அது திரையிடப்பட்டதை விட சக்தி மிக்கதாகிவிடும். எது எதை மறைக்கிறதோ அது மறைக்கப்பட்டதை விட சக்தி மிக்கதாகிவிடும். எது எதை மிகைக்கிறதோ அது மிகைக்கப்பட்டதை விட சக்தி மிக்கதாகிவிடும். இதன்படி அல்லாஹ் مَحْجُوْبْ – திரையிடப்பட்டவனாகவும், مَسْتُوْرْ மறைக்கப்பட்டவனாகவும், مَغْلُوْبْ மிகைக்கப்பட்டவனாகவும் ஆகிவிடுகிறான்.
இது இறை நம்பிக்கையில் ஓர் ஓட்டையை ஏற்படுத்திவிடும்.
எனவே, எக்காரணம் கொண்டும் அல்லாஹ்வின் பேச்சிலோ, செயலிலோ, படைப்பிலோ எவரும் எக்குறையும் காண முடியவே முடியாது. அல்லாஹ்வின் திரு வசனத்தில் பிழை காண்பதும் இவ்வாறுதான். இது அசாத்தியமே!
முற்றும்.
குறிப்பு: ஸஊதியில் அச்சிடப்பட்டு வெளியான திருக்குர்ஆன் தமிழாக்க நூலில் பல இடங்களில் பிழைகள் உண்டு. அவற்றைக் கட்டம் கட்டமாக நாங்கள் சுட்டிக் காட்டுவோம்.