தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَامَ رَمَضَانَ، إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ، ومَنْ قامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ، وَمَنْ قَامَ لَيْلَةَ القَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»، (رواه البخاري ومسلم)
“றமழான் மாதம் நம்பிக்கையுடனும், நன்மை கருதியும் நோன்பு நோற்பவனின் முந்தின பாவம் மன்னிக்கப்படும், றமழான் மாதம் நம்பிக்கையுடனும், நன்மை கருதியும் வணக்கம் செய்பவனின் முந்தின பாவம் மன்னிக்கப்படும். “லைலதுல் கத்ர்” இரவில் நம்பிக்கையுடனும், நன்மை கருதியும் வணக்கம் செய்பவனின் முந்தின பாவம் மன்னிக்கப்படும்” என்று பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
(ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்)
மேற்கண்ட நபீ மொழி மூலம் மூன்று விடயங்கள் தெளிவாகின்றன. ஒன்று – றமழான் மாதம் நோன்பு நோற்றவனின் முந்தின பாவம் மன்னிக்கப்படும் என்பதாகும்.
மேற்கண்ட நபீ மொழியில் பெருமானார் அவர்கள் صَامَ நோன்பு நோற்றான் என்று மட்டும்தான் கூறியுள்ளார்களேயன்றி விளக்கமாக ஒன்றும் சொல்லவில்லை. இதோ நான் சிறிய விளக்கம் ஒன்று சொல்கிறேன்.
நோன்பு நோற்றவன் என்றால் “ஷரீஆ”வின் சட்டங்களைப் பேணி நோன்பு நோற்றவன் என்று விளக்கம் கொள்ள வேண்டும். ஏனெனில் “ஷரீஆ”வைப் பேணி செய்தால் மட்டுமே நோன்பு நிறைவேறும்.
இதன் கருத்து என்னவெனில் நோன்பை முறிக்கும் காரியங்களைச் செய்யாமலும், “ஷரீஆ”வில் பாவம் என்று சொல்லப்பட்டுள்ள புறம் பேசுதல், கோள் சொல்லுதல், பொய் சொல்லுதல், பொய்ச் சத்தியம் செய்தல், பொய்ச் சாட்சி சொல்லுதல் போன்ற அனைத்துப் பாவங்களை விட்டும் நோன்பு நோற்றவன் தவிர்ந்து கொள்ளுதல் என்று விளக்கம் கொள்ள வேண்டும்.
இவற்றையெல்லாம் முற்றாக விட்ட நிலையில் நோன்பு நோற்றவனின் முந்தின பாவங்கள் மன்னிக்கப்படும் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
இதற்கு மாறாக நோன்பை முறிக்கும் காரியங்களைச் செய்வது கொண்டும், “ஷரீஆ”வில் பாவம் என்று கூறப்பட்டுள்ள புறம் பேசுதல், பொய் சொல்லுதல் போன்ற மேலே சொல்லப்பட்ட பாவங்களைச் செய்து கொண்டும் நோன்பு நோற்றவனின் எந்த ஒரு பாவமும் மன்னிக்கப்படாதென்றும் விளங்கிக் கொள்ள வேண்டும். இது குறித்தே நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்
وَرُبَّ صَائِمٍ لَيْسَ لَهُ مِنْ صِيَامِهِ إِلَّا الْجُوعُ وَالْعَطَشُ،
“எத்தனையோ பேர் நோன்பு நோற்கிறார்கள். அவர்களின் நோன்பில் அவர்கள் பசித்திருந்ததும், தாகித்திருந்ததும் தவிர வேறொரு பயனுமில்லை” என்று கூறினார்கள். இத்தகையோர் யாரெனில் நான் மேலே சொன்னது போல் “ஷரீஆ”வைப் பேணாமலும், அனைத்துப் பாவங்களை செய்தும் நோற்றவர்களேயாவர்.
இக்காலத்தில் இவ்வாறு நோற்பவர்களே அதிகமாக உள்ளனர். நோன்பை முறிக்கும் காரியங்களை விட்டு நடந்தாலும் கூட புறம் பேசுதல், பொய் சொல்லுதல், கோள் சொல்லுதல் போன்ற மேலே நான் எழுதிய பாவங்கள் செய்பவர்களே அதிகம் உள்ளனர்.
ஒருவன் ஒரு வணக்கம் செய்தால் அந்த வணக்கத்தால் அவனுக்குப் பயன் கிடைக்க வேண்டும். அது இல்லையென்றால் அவன் செய்தது வணக்கமில்லாமற் போய்விடும்.
ஒருவன் ஏதாவது ஓர் அமல் செய்தால் அந்த அமல் மூலம் அவனுக்கு “தவாப்” கூலி கிடைக்க வேண்டும். பிரயோசனம் கிடைக்க வேண்டும்.
வேலை செய்த ஒருவனுக்கு அவனின் வியர்வை சிந்துமுன் அவன் செய்த வேலைக்குரிய கூலி வழங்கப்பட வேண்டும் என்ற நபீ மொழியின் படி முறைப்படி நோன்பு நோற்றவனுக்கு அவன் செய்த முந்தின பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது மறுமையில் அவனுக்கு கிடைக்கின்ற பலனாகும். பிரயோசனமாகும். ஆயினும் வேலை செய்தவனின் வியர்வை வற்றுமுன் அவனுக்குரிய கூலி வழங்கப்பட வேண்டும் என்ற பெருமானாரின் அருள் வாக்கின் படி இவனுக்குரிய கூலி எது என்ற கேள்விக்கு பின்னால் விடை எழுதுகிறேன்.
ஓர் அடியான் நோன்பு மட்டுமன்றி என்ன வணக்கம் செய்தாலும் அவனின் வியர்வை வற்றுமுன் அல்லாஹ் அவனுக்கு வழங்குகின்ற நற்கூலி அவனின் “கல்பு” உள்ளத்தைப் பிரகாசப்படுத்தி வைப்பதாகும். அவன் செய்த வணக்கத்திற்காக அவனின் வியர்வை வற்றுமுன் அல்லாஹ் அவனுக்கு வழங்குகின்ற நற்கூலி இதுவேயாகும்.
இரண்டு – றமழான் மாதம் நின்று வணங்கினவனின் முந்தின பாவம் மன்னிக்கப்படும் என்பதாகும்.
மேற்கண்ட நபீ மொழியில் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் مَنْ قَامَ رَمَضَانَ என்ற வசனத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள். இவ்வசனத்திற்கு “றமழான் மாதம் நின்று வணங்கினவனின் முந்தின பாவம் மன்னிக்கப்படும்” என்று நமது கண்ணித்திற்குரிய உலமாஉகள் பொருள் விரிக்கின்றார்கள். இவ்வாறு பொருள் கூறும் உலமாஉகளிடம் مَنْ جَلَسَ رَمَضَانَ، مَنْ قَعَدَ رَمَضَانَ றமழான் மாதம் இருந்து வணங்கினவனின் நிலைமை என்ன? என்று நான் கேட்க விரும்புகிறேன். இவனின் பாவம் மன்னிக்கப்படமாட்டாதா?
மேற்கண்ட வசனத்தில் நின்றான் என்ற பொருளுக்குரிய قَامَ “காம” என்ற சொல் வந்துள்ளதால் அதற்கு “நின்றான்” என்று தவறாகப் பொருள் கூறிவிட்டார்கள், கூறுகிறார்கள் நமது உலமாஉகள். قَامَ என்ற சொல் “கியாம்” எனும் நிலையைக் குறிக்கவில்லை. இது பொதுவாக ஒரு காரியத்தை விடாமல் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்ற ஒரு சொல் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக ஒருவன் இன்னொருவனிடம் ஒரு வேலையை பொறுப்புக் கொடுத்து قُمْ بِهَذَا الْعَمَلِ “இவ் வேலையைக் கொண்டு நில்” என்றால் அவன் நின்ற நிலையில் அந்த வேலையைச் செய்ய வேண்டும் என்பது கருத்தல்ல. இருந்தோ, நின்றோ, எப்படியோ விடாமல் அந்த வேலையைச் செய்ய வேண்டும் என்பதுதான் கருத்தேயன்றி நின்ற நிலையில்தான் செய்ய வேண்டும் என்பது கருத்தல்ல. மேற்கண்ட வசனத்தின் மூலம் நாம் விளங்க வேண்டிய கருத்து றமழான் மாதம் நின்ற நிலையிலோ, இருந்த நிலையிலோ, சாய்ந்த நிலையிலோ வணக்கம் செய்ய வேண்டுமென்பதேயன்றி நின்ற நிலையில்தான் செய்ய வேண்டும் என்பதல்ல. றமழான் மாதம் நின்ற நிலையில் வணக்கம் செய்தவனும், சாய்ந்த நிலையில் வணக்கம் செய்தவனும், நடந்து நடந்து வணக்கம் செய்தவனும் مَنْ قَامَ رَمَضَانَ றமழான் மாதம் வணங்கிய கூட்டத்தில் சேர்ந்து கொள்வான்.
மேற்கண்ட வசனத்திற்கு உலமாஉகள் சொல்வது போல் றமழானில் நின்ற நிலையில் வணங்கினவன் மட்டும்தான் முந்தின பாவம் மன்னிக்கப்பட்டவனாவான் என்று வைத்துக் கொண்டால் நிற்காமல் வேறு வகையில் வணக்கம் செய்தவன் குற்றம் மன்னிக்கப்பட்டவனாக மாட்டான் என்று கருத்து வந்து விடும். இதற்கு உலமாஉகள் என்ன விளக்கம் சொல்வார்களோ?
மூன்று – நோன்பு மாதம் பிந்தின பகுதியில் ஒற்றையான இரவுகளில் ஓர் இரவு “லைலதுல் கத்ர்” இருப்பது நிச்சயமான விடயம்தான். அன்றிரவு எப்படியோ வணக்கம் செய்தவனின் பாவம் மன்னிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‘ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ يُضَاعَفُ، الْحَسَنَةُ عَشْرُ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ، قَالَ اللَّهُ تَعَالَى: إِلَّا الصَّوْمَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، يَدَعُ طَعَامَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي، لِلصَّائِمِ فَرْحَتَانِ: فَرْحَةٌ عِنْدَ إِفْطَارِهِ، وَفَرْحَةٌ عِنْدَ لِقَاءِ رَبِّهِ، وَلَخلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ تَعَالَى مِنْ رَائِحَةِ الْمِسْكِ، الصَّوْمُ جُنَّةٌ الصَّوْمُ جُنَّةٌ ‘ وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلاَ يَرْفُثْ وَلاَ يَصْخَبْ، فَإِنْ سَابَّهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ، فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ ‘
\(ஆதமின் மகன் – மனிதன் செய்கின்ற எந்த “அமல்” வணக்கமாயினும் அதாவது ஒரு நல்ல காரியத்திற்கு பத்து முதல் எழுபது வரையான நன்மை வழங்கப்படும். நோன்பு தவிர என்று அல்லாஹ் சொன்னான். அது எனக்குரியது. அதற்கு நானே கூலியாவேன். நோன்பு நோற்றவன் எனக்காகவே தனது ஆசையையும், சாப்பாட்டையும் விடுகிறான். நோன்பாளிக்கு இரு சந்தோஷங்கள் உள்ளன. ஒரு சந்தோஷம் நோன்பு திறக்கும் நேரமும், இன்னொரு சந்தோஷம் அல்லாஹ்வைத் தரிசிக்கும் நேரமும் உள்ளன. நோன்பாளியின் வாய் மணம் அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தை விடச் சிறந்ததாகும். நோன்பு ஒரு கேடயம். உங்களில் ஒருவனின் நோன்புடைய நாளில் அவன் பாவம் செய்ய வேண்டாம். எவனாவது அவரை ஏசினால் அல்லது சண்டையிட்டால் நான் நோன்பாளி என்று அவனுக்கு அவர் கூற வேண்டும்) என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள். (புகாரீ, முஸ்லிம்)
மேற்கண்ட நபீ மொழியில் பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் ஒவ்வொன்றையும் சற்று விளக்கமாக எழுதுகிறேன்.
ஓர் அடியான் நல்ல காரியம், நன்மையான காரியம் எது செய்தாலும் குறைந்தது அவனுக்கு பத்து நன்மைகள் நிச்சமயாகக் கிடைக்கும். இதில் குறையாது. إِنِّيْ لَا أُضِيْعُ أَجْرَ مَنْ أَحْسَنَ عَمَلًا நல்ல காரியம் செய்த எவரின் கூலியையும் நான் வீணாக்கமாட்டேன் என்பது திருமறை மூலம் அடியார்களுக்கு அல்லாஹ் வழங்கிய ஆணையாகும்.
உதாரணமாக ஒருவன் “ஸுப்ஹானல்லாஹ்” என்று சொன்னால் மிகக் குறைந்தது அவனுக்கு பத்து நன்மைகள் கிடைக்கவே செய்யும். அவன் பக்தியுடன் சொன்னாலும், பக்தியில்லாமல் சொன்னாலும், பொருள் விளங்கிச் சொன்னாலும், விளங்காமல் சொன்னாலும் சரியே!
ஆயினும் “ஸுப்ஹானல்லாஹ்” என்று சொன்னவனின் மனத்தூய்மையையும், ஆழமான அறிவையும், இறைஞானத்தையும் பொறுத்து பத்து நன்மை எழுநூறு வரை உயரச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
உதாரணமாக எம்பெருமானார் அவர்கள் “ஸுப்ஹானல்லாஹ்” என்று ஒரு தரம் சொல்வதற்கும், முதலாவது கலீபா அபூ பக்ர் நாயகம் அவர்கள் ஒரு தரம் சொல்வதற்கும், குத்பு நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை ஒரு தரம் சொல்வதற்கும், காத்தான்குடி அப்துர் றஊப் ஒரு தரம் சொல்வதந்கும் நன்மையில் வித்தியாசம் உண்டு.
நபீ மொழியில் சொல்லப்பட்டுள்ள நன்மையின் வீத விபரம் திருக்குர்ஆனிலும் சொல்லப்பட்டுள்ளது.
مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنْبُلَةٍ مِائَةُ حَبَّةٍ وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
அல்லாஹ்வின் பாதையில் தங்களின் செல்வங்களைச் செலவு செய்கின்றவர்களே அத்தகையோரின் உதாரணம், ஒரு வித்தின் உதாரணத்தைப் போன்றதாகும். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்தது. ஒவ்வொரு கதிரிலும் நூறு வித்துக்கள் உள்ளன. இன்னும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு இதை மேலும் இரு மடங்காக்குவான். அல்லாஹ் மிக்க மேலானவன். யாவற்றையும் அறிந்தவன்.
அத்தியாயம்: 02, வசனம் 261
இத்திரு வசனத்தின் மூலம் ஒன்றுக்கு எழுநூறு நன்மை வரை கிடைக்கும் என்றும், அல்லாஹ் நாடியவர்களுக்கு இதைவிட அதிகமாகவும் கொடுப்பான் என்றும் தெளிவாகிறது.
மேற்கண்ட நபீ மொழி மூலம் எல்லா நற் செயலுக்கும் அல்லாஹ்தான் கூலி கொடுக்கிறான் என்பது தெளிவாகிறது. எனினும் நோன்பைத் தவிர. அதற்கு நானே கூலி கொடுப்பேன் என்றும், அதற்கு நானே கூலி என்றும் சொல்லியுள்ளான் என்பதும் தெளிவாகிறது.
اَلصَّوْمُ لِيْ، وَأَنَا أَجْزِيْ بِهِ
என்ற நபீ மொழி வசனத்தில் வந்துள்ள أَجْزِيْ என்ற சொல்லை أَجْزِيْ என்றும், أُجْزَى என்றும் வாசிக்க முடியும். இரண்டு விதமாக வாசிப்பதற்கும் சட்டத்தில் இடமுண்டு. أَجْزِىْ என்று வாசித்தால் “நான் கூலி கொடுப்பேன்” என்றும், أُجْزَى என்று வாசித்தால் நான் என்னையே கூலியாக ஆக்குவேன் என்றும் கருத்து வரும். முந்தினது சாதாரண மக்களுக்கான கருத்தாகும். பிந்தினது ஆன்மீகவாதிகளுக்கான கருத்தாகும்.
இது எது போன்றதென்றால் ஒருவனிடம் ஒரு வேலையைக் கொடுத்து இதை நீ செய்து தந்தால் கூலி தருவேன் என்று சொல்வது போன்றும், என்னையே உனக்கு கூலியாகத் தருவேன் என்று சொல்வது போன்றுமாகும்.
தொடரும்…