தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“ஸஹாபீ” என்பதற்கான வரைவிலக்கணம்:
الصَّحَابَةُ – بفتح الصاد، فى الأصل مصدر، والصّحابة بمعنى الأصحاب، واحدُه صاحبٌ، بمعنى الصّحابيّ، وهو مَن اجتمعَ مؤمنا بالنّبيّ صلّى الله عليه وسلّم ولو لحظةً وماتَ على الإيمان، وإن لم يَرَهُ، كابن أمِّ مكتوم، ولو لم يَرْوِ عنه، وسواءٌ كان مُمَيِّزًا أو غيرَ مميِّزٍ، كمحمّد بن الصّدّيق رضي الله عنهما وأمثالِه، (الفتوحات 1-24، الإصابة 1-10، الأذكار 30(
ஸஹாபீ – நபீ தோழர் என்றால் யார் என்பதற்கு மேலே நான் எழுதிக் காட்டியுள்ள வரைவிலக்கணம் என்னுடையதல்ல. இமாம் நவவீ அவர்களின் “அல் அத்கார்” எனும் நூலின் 30ம் பக்கத்திலிருந்து நான் பெற்றதாகும். இதன் சுருக்கத்தை இங்கு எழுதுகிறேன்.
ஒருவரை “ஸஹாபீ” என்று சொல்வதாயின் அவரில் இரண்டு நிபந்தனைகள் இருக்க வேண்டும். ஒன்று – அல்லாஹ்வையும், றஸூல் அவர்களையும் “ஈமான்” கொண்டவராக – நம்பினவராயிருக்கும் நிலையில் அவர்களின் சபையில் இருந்திருக்க வேண்டும். இரண்டு – அவர் தனது மரணத்திற்கிடையில் மதம் மாறிவிடாமல் “ஈமான்” விசுவாசத்துடன் மரணிக்க வேண்டும். இவ்விரு நிபந்தனைகளும் இருந்தால் மட்டுமே அவர் “ஸஹாபீ” நபீ தோழராவார். இவ்விரு நிபந்தனைகளில் ஒன்றேனும் இல்லையாயின் அவர் நபீ தோழராகமாட்டார்.
ஒருவர் விசுவாசியாயிருக்கும் நிலையில் நபீ பெருமானாரின் சபையில் இருந்தார். ஆயினும் அவர் தான் மரணிப்பதற்குள் “முர்தத்” மதம் மாறிவிடுவாராயின் அவரும், ஒரு விசுவாசி “ஈமான்” கொண்டவர் பெருமானாரின் சபையில் இருக்காத நிலையில் விசுவாசியாகவே இருந்து விடுவாராயின் அவரும் நபீ தோழர் ஆகமாட்டார்.
அல்லாஹ்வையும், றசூலையும் ஈமான் கொண்ட ஒருவர் நபீ பெருமான் வாழ்ந்து கொண்டிருந்த ஊரிலேயே வாழ்ந்து அல்லது வேறு ஊர்களில் அல்லது நாடுகளில் வாழ்ந்து அவர்களின் சபைகளில் கலந்து கொள்ளாமல் விசுவாசியாகவே இருந்து மரணித்தாற் கூட அவரும் நபீ தோழராகமாட்டார். ஆயினும் அவர் விசுவாசிதான்.
இவ்விவகாரத்தில் முக்கிய – மிகப் பிரதான அம்சம் என்னவெனில் பெருமானார் அவர்களின் சபையில் அவர் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்பதேயாகும்.
ஒரு விசுவாசி பெருமானார் அவர்களைக் கண்ணால் காணாது போனாலும் அவர் விசுவாசியாயிருக்கும் நிலையில் அவர்களின் சபையில் கலந்து கொண்டு மரணிக்கும் வரை விசுவாசியாகவே இருந்து மரணிப்பாராயின் அவர் நபீ தோழர்தான். நபீ அவர்களைக் கண்ணால் காணவில்லை என்பதால் அவர் நபீ தோழர் அல்ல என்று முடிவு செய்தல் கூடாது. ஏனெனில் நபீ தோழராவதற்கு அவர்களைக் கண்ணால் காண வேண்டுமென்பது அவசியமில்லை. காணாது போனாலும் – அவர்களின் சபையில் ஒரு நிமிடமாவது இருந்திருக்க வேண்டுமென்பது அவசியமே!
நபீ பெருமானாரின் சபையில் இருக்கும் ஒருவர் குருடு போன்ற காரணத்தால் அவர்களைக் கண்ணால் காணாது போனாலும் கூட அவரின் ஏனைய நிபந்தனைகள் சரியாக இருந்தால் அவர் நபீ தோழர்தான். அவர்களைக் கண்ணால் காண வேண்டுமென்பது கட்டாய நிபந்தனையல்ல. சபையில் இருந்தால் போதும்.
இங்கு நாம் சற்று சிந்தனை செய்து பார்க்க வேண்டும். ஒருவர் “முஃமின்” விசுவாசியாயிருக்கும் நிலையில் அவர்களைக் காணாது போனாலும் சற்று நேரம் அவர்களின் சபையில் இருப்பதால் மட்டும் அவர் நபீ தோழராகிறார் என்றால் அந்த நபீயின் ஆன்மிக சக்தியை என்னென்று சொல்வது?
ஒருவர் விசுவாசியாயிருக்கும் நிலையில் அவர்களின் சபையில் இருந்தார் என்றும், அவர்களைக் கண்ணால் கண்டார் என்றும் வைத்துக் கொள்வோம். இவர் மரணிக்கு முன் மதம் மாறிவிட்டாராயின் அவர் நபீ தோழராகமாட்டார்.
ஒருவர் நபீ தோழராவதற்கு வயதெல்லை கூறப்படவில்லை. “தம்யீஸ்” உடைய வயதை அடைந்தவராயினும், அடையாதவராயினும் மேற்கண்ட முக்கிய நிபந்தனைகள் இரண்டும் இருந்தால் அவர் நபீ தோழர்தான்.
முதலாவது “கலீபா” அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் முஹம்மத் “தம்யீஸ்” உடைய வயதுக்கு முன் மரணித்துவிட்டார். அவரும் நபீ தோழர்தான்.
“தம்யீஸ்” உடைய வயதென்றால் சுமார் ஏழு வயதென்று சொல்ல முடியும். ஏனெனில் تَمْيِيْزْ “தம்யீஸ்” என்ற சொல்லுக்கு பிரித்தறிதல் என்று பொருள் வரும். அதாவது நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்தறியும் வயதென்று சொல்வார்கள். இக்காலத்தைப் பொறுத்தவரை சுமார் ஏழு வயது என்று கணிக்கலாம்.
இதுவரை ஒருவரை “ஸஹாபீ” நபீ தோழர் என்று சொல்வதற்கான நிபந்தனைகள் தொடர்பாக எழுதினேன்.
ஒருவர் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை நேரில் – விழிப்பில் காணாது போனாலும் அவர்களின் சபையில் இருப்பது மட்டும் அவர் நபீ தோழராவதற்குப் போதும் என்ற கூற்றின்படி நபீ பெருமானாரின் சிறப்பும், அவர்களின் தராதரமும், அவர்களின் எதார்த்தமும் எவ்வாறானதென்பது விளங்க வருகின்றது.
ஏனெனில் நபீ தோழர் என்பவர் ஒரு தரமாவது அவர்களை நேரில் பார்த்திருக்க வேண்டுமென்று ஒரு விதி இருக்குமாயின் அந்த விதியை ஆதாரமாக எடுத்து அவர்களின் அருள் முகத்தை – ஒளி முகத்தை பார்த்த பாக்கியமென்று சொல்ல முடியும். பார்ப்பதே விதியில்லை என்று சொல்லப்பட்டிருப்பதால் அவர்களின் அந்தஸ்து எம்மாத்திரம் என்பதைப் புரிய முடிகிறது. அவர்களின் முகம் காணாமல் சபையில் இருந்தவரே இப்பாக்கியம் பெறுகிறாரெனில் பார்த்தவர் எத்தன்மை பெற்றவராயிருப்பார் என்று சொல்லவும் வேண்டுமா?
இதனால்தான் ஷரீஆவில் நபீமாரை அடுத்து ஆன்மிகப் படித்தரத்தில் சிறந்தவர்கள் நபீ பெருமானாரின் தோழர்கள்தான் என்று சொல்லப்பட்டுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற, தங்களின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அனைத்து வலீமாரின் பிடரிகளிலும் என் கால் உள்ளதென்று கர்ஜித்த குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் ஆண்டகை, ஒரே நேரத்தில் தங்களின் அற்புதத்தால் 90 இலட்சம் காபிர்களை இஸ்லாமியர்களாக்கிய அஜ்மீர் ஹாஜா முயீனுத்தீன் ஆண்டகை, பட்டுப் போய் ஒன்றுக்கும் உதவாமல் நின்ற மரத்தை தங்களின் கை சாடையால் பூத்துக் குலுங்கச் செய்து கனியுள்ள மரமாக்கிய காரணக்கடல் பாதுஷா நாயகம் ஆண்டகை முதலான மகான்களையும் விட ஆன்மிகப் பதவிகளில் உயர் பதவிகள் அடைந்தவர்கள் நபீ தோழர்கள் என்றால் இத் தோழர்களின் சிறப்பை என்னென்று சொல்வது?
நபீ பெருமானார் அவர்களைக் கண்ணால் காணாதவர் கூட அவர்களின் சபையில் இருப்பதன் மூலம் மட்டும் அவர் நபீ தோழராகி பெரும் பாக்கியம் பெறுகிறார் என்றால் அவர்கள் அவரைப் பார்த்ததினால்தான் என்று எனக்கு எண்ணத் தோணுகிறது. சரியோ, பிழையோ அல்லாஹ் மிக அறிந்தவன்.