Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.

அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.

قال الشيخ محي الدين ابن عربي رحمه الله ‘ ولقد رأيت وأنا بين النّائم واليقظان أنّي طائف بالكعبة مع قوم لا أعرفهم، فأنشدوني بيتين، حفظت أحدهما ونسيت الآخر
 
لَقَد طُفْنَا كما طُفْتُمْ سِنِيْنَا – بِهَذَا الْبَيْتِ طُرًّا اَجْمَعِيْنَا
 
وتكلّمت مع واحد منهم ، فقال لي أما تعرفني؟ فقلت لا، فقال أنا من أجدادك الأول، قلت كمْ لك مُنْذُ مُتَّ؟ فقال لي بضعٌ واربعون ألف سنة، فقلتُ له ليس لأبينا آدم عليه الصلاة والسلام هذا القدر من السنين ، فقال لي عن أيِّ آدم تقول؟ عن هذا الأقرب إليك أم عن غيره؟ فتذكَّرْتُ حديثا رواه ابن عبّاس عن رسول الله صلّى الله عليه وسلّم أنّه قال إنّ الله تعالى خلق مأتي ألف آدم، فقلتُ في نفسي قد يكون الجدّ الّذي نسبني ذلك الشخص إليه من أولئك، قال والتّاريخ فى ذلك مجهولٌ، مع حدوث العلم بلا شكّ عندنا،
(اليواقيت والجواهر، ص 36، ج أول)

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
 
(நான் விழிப்புக்கும், உறக்கத்திற்கும் இடையில் இருந்த நிலையில் எனக்கு அறிமுகமில்லாத ஒரு கூட்டத்தோடு புனித கஃபாவை தவாப் – வலம் வந்து கொண்டிருந்தேன். அவ்வேளை அவர்கள் இரண்டு பாடல்களை எனக்கு பாடிக் காட்டினார்கள். அவற்றில் ஒன்றை மறந்து விட்டேன். மற்றதை இங்கு சொல்கிறேன்.
“நீங்கள் இந்த “கஃபா”வை “தவாப்” செய்வதுபோல் நாங்களும் பல வருடங்கள் “தவாப்” செய்துள்ளோம்” என்பதாகும்.
 
நான் அவர்களில் ஒருவருடன் பேசினேன். அவர் என்னிடம் என்னைத் தெரியுமா என்று கேட்டார். இல்லை என்றேன். நான் உங்களின் முந்தின பாட்டன்மார்களில் ஒருவன் என்றார். நீங்கள் மரணித்து எத்தனையாண்டுகள்? என்று கேட்டேன். 40 ஆயிரம் வருடங்களுக்கு மேலாகிவிட்டது என்றார். அப்போது எங்களின் தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கே இத்தனையாண்டுகள் இல்லையே என்று நான் சொன்னேன். அப்போதவர், நீங்கள் எந்த ஆதம் பற்றிக் கூறுகிறீர்கள்? உங்களுக்கு அண்மித்த கடைசி ஆதம் பற்றியா? அல்லது வேறு ஆதம் பற்றியா? என்று கேட்டார். அவ்வேளை நபீ பெருமானார் சொன்னதாக இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவித்த “அல்லாஹ் இரண்டு இலட்சம் ஆதம்களைப் படைத்துள்ளான்” என்ற நபீ மொழி என் நினைவுக்கு வந்தது. அப்போது இறுதியாகப் படைக்கப்பட்ட ஆதம் அவர்களுக்கு முன் வாழ்ந்த ஆதம் அவர்களின் சந்ததியில் உள்ளவர்தான் என்னுடன் பேசிய அந்த மனிதன் என்று நான் எனக்குச் சொன்னேன். உலகம் புதிது புதிதாக உண்டாவதால் வரலாறு அறிய முடியாததாகிவிட்டது என்று கூறியுள்ளார்கள்.
ஆதாரம்: அல்யவாகீத், பக்கம்: 36, பாகம்: 01
ஆசிரியர்: அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ
 
மேற்கண்ட இந்த நிகழ்வு ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ நாயகம் அவர்கள் உறக்கத்திற்கும், விழிப்பிற்கும் இடையில் இருந்த வேளை நிகழ்ந்ததாகும். இந்நிகழ்வு முழுமையான உறக்கத்தின்போது நிகழ்ந்திருந்தால் இதைக் கனவு என்று சொல்ல முடியும். இப்னு அறபீ நாயகம் بَيْنَ النَّائِمِ وَالْيَقْظَانِ நான் உறக்கத்திற்கும், விழிப்பிற்கும் இடையில் இருந்த நேரம் என்று கூறியிருப்பதால் இந்த நிகழ்வை கனவென்று சொல்ல முடியாது. ஏனெனில் கனவென்பது عَالَمُ النَّوْمِ – உறக்க உலகில் ஏற்படுவதை மட்டுமே குறிக்கும். ஆகையால் இந்நிகழ்வு கனவல்ல என்பது தெளிவாகிறது.
 
இப்னு அறபீ நாயகம் அவர்கள் رَأَيْتُ فِى الْمَنَامِ கனவில் கண்டேன் என்று சொல்லியிருந்தால் ஒரு வகையில் அது நூறு வீதமும் உண்மையாயிருக்காதென்று விட்டு விடலாம். ஆனால் அவர்களோ உறக்கத்திற்கும், விழிப்புக்குமிடையில் என்று சொல்லியுள்ளதால் அந்த நிகழ்வு இல்ஹாம் – கஷ்பு என்ற அடிப்படையில் உள்ளதாயிருக்கும் என்று நாம் கொள்ள வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் அவர்கள் பொய் சொல்லியிருக்க முடியாது.
 
அவர்கள்,
اَلشَّيْخُ الْأَكْبَرْ، وَالْكِبْرِيْتُ الْأَحْمَرْ، وَالْمِسْكُ الْأَذْفَرْ، وَالْأَلْمَعِيُّ الْأَشْهَرْ، وَالنُّوْرُ الْأَبْهَرْ،
எனும் புகழ் மாலைகளால் புகழப்பட்டவர்களாவார்கள். அல்லாஹ் வசனம் சொல்ல தாங்கள் எழுதியதாகச் சொன்ன மேதையுமாவார்கள். இஸ்லாமிய வரலாறில் மேற்கண்டவாறு பெரும் குத்புகளாலேயே பட்டம் வழங்கப்பட்ட மகானுமாவார்கள்.
உறக்கத்துக்கும், விழிப்புக்கும் இடையிலுள்ள ஒரு நிலை எவருக்கும் உண்டு. இந்நிலை سِنَةْ என்றும், نُعَاسْ என்றும் அறபியில் சொல்லப்படும். இதற்கு مَبْدَأُ النَّوْمِ என்றும் சொல்லப்படும். அறபுக் கல்லூரிகளுக்கென்றே சில தமிழ்ச் சொற்கள் உள்ளன. அத்தகைய தமிழ்ச் சொற்களில் இதற்கு “ஒருத்தூக்கம்” என்பார்கள்.
 
இதை சற்று விபரமாகச் சொல்வதாயின் உறங்கிக் கொண்டிருக்கின்றவருக்கு பக்கத்தில் பேசிக் கொண்டிருப்பவர்களின் சத்தம் கேட்கும். ஆயினும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது தெளிவில்லாமல் இருக்கும். இது இலகுவான தூக்கம் என்றும் சொல்லப்படும். இலகுவான தூக்கம் என்பது தூக்கத்திற்கும், விழிப்பிற்கும் இடையே மனம் பயணப்படும் நேரம் எனலாம். இந்த வகை தூக்கத்தில் இருப்பவர்கள் சிறிய சத்தத்திற்குக் கூட திடுக்கிட்டு எழுந்து கொள்வார்கள்.
 
உண்மையான தூக்கம் نَوْمْ என்று சொல்லப்படும். இது இலகுவான தூக்கத்தின் அடுத்த நிலையில் வருவது. இந் நிலையில்தான் பெரும்பாலானவர்களின் தூக்கம் நிகழ்கிறது.
ஆழமான தூக்கம் இந்நிலையில் இதயம் – மூச்சு இரண்டும் மிகக் குறைந்த அளவிலேயே இயங்குகின்றன. இவ் உறக்கம் முழுமையானதாக இருக்கும். இவ் உறக்க நிலையில் உள்ளவர்களை எழுப்பினால் சில வினாடிகள் அல்லது நிமிடங்கள் கழித்து நிதானமாக, தெளிவாக விழித்துக் கொள்வார்கள்.
 
அல்லாஹ்வுக்கு نَوْمْ உறக்கமும் இல்லை. سِنَةْ ஒருத்தூக்கமுமில்லை. இதுவே உண்மை. இவ்வாறுதான் அவன் தனது “தன்ஸீஹ்” உடைய நிலையில் உள்ளான். ஆயினும் அவனுக்கு “தஷ்பீஹ்” உடைய நிலையில் எல்லாமே உண்டு. وَلَهُ كُلُّ شَيْءٍ அவனுக்கு எல்லாம் உண்டு.
இங்கு ஒரு நிகழ்வை எழுதுகிறேன்.
 
ஒரு சமயம் அதி சங்கைக்குரிய அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா றஹிமஹுல்லாஹ் அவர்கள் மஜீத் ஹாஜியார் என்பவரின் வீட்டில் சுகவீனமாக இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட நான் ஒரு மதிய நேரம் அவர்களைச் சந்திப்பதற்காக மஜீத் ஹாஜியாரின் வீட்டிற்குச் சென்றேன்.
 
அவர்கள் ஒரு “சாய்மானை”க் கதிரையில் சாய்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களைச் சூழ சில முரீதுகள் தரையில் அமர்ந்திருந்தார்கள். நானும் அவர்களுடன் தரையில் அமர்ந்தேன். மௌலானா வாப்பா அவர்கள் அவர்களில் ஒருவரிடம் மௌலவீக்கு ஒரு கதிரை கொடுங்கள் என்றார்கள். நான் அக்கதிரையில் அவர்களை நெருங்கிய நிலையில் அமர்ந்திருந்தேன். சுமார் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வாப்பா அவர்கள் உறங்கிவிட்டார்கள். இருந்தவர்கள் பேசாமல் அமைதியாகினர். திடீரென்று கண் விழித்த வாப்பா அவர்கள் எனக்கு மட்டும் கேட்குமளவு “அல்லாஹ் கொஞ்சம் உறங்கிவிட்டான்” என்றார்கள். இருந்த அவாம்களுக்கு – பொது மக்களுக்கு அவர்கள் என்ன சொன்னார்கள் என்பது புரியவில்லை. ஆயினும் நான் புரிந்து கொண்டேன்.
அல்லாஹ்வின் تَنْزِيْهْ நிலையில் அவனுக்கு எதெல்லாம் இல்லையென்று சொல்லப்பட்டதோ அதெல்லாம் تَشْبِيْهْ உடைய நிலையில் அவனுக்கு உண்டு என்று நம்ப வேண்டும்.
 
كُلُّ مَا نَفَيْتَهُ فِى التَّنْزِيْهْ فَقَدْ أَثْبَتَّهُ فِى التَّشْبِيْهِ
“தன்ஸீஹ்” நிலையில் அவனுக்கு எதெல்லாம் இல்லையென்று நீ சொன்னாயோ அதெல்லாம் “தஷ்பீஹ்” உடைய நிலையில் அவனுக்கு உண்டு என்று சொல். இது ஸூபிஸ தத்துவ மேதைகளின் பொது விதி. ஸூபிஸத்தின் ஆழமான தத்துவம் தெரியாத முப்தீகள், கலாநிதிகள் உள்ளிட்ட பலர் “தஷ்பீஹ்” என்பதை கடுமையாக மறுக்கின்றனர். இதற்குக் காரணம் அவர்கள் تَشْبِيْهْ என்ற சொல்லை شَبَّهَ “ஷப்பஹ” என்ற சொல்லின் “மஸ்தர்” ஆக விளங்கிக் கொண்டு “அல்லாஹ்வுக்கு இன்னொன்றை ஒப்பாக்குதல்” என்று பொருள் கொண்டதேயாகும். இவ்விரண்டையும் விளங்காதவரை இவர்கள் விசுவாசியாகவுமாட்டார்கள். ஸூபீ மகான்கள் கூறி வரும் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை சரி காணவுமாட்டார்கள்.
 
இதைக் கருத்திற் கொண்டே இறைஞானியொருவர் பின்வருமாறு எச்சரித்துப் பாடியுள்ளார்.
 
இருக்கு முதலெல்லாம்
கொடுத்திட்டாலும்
இரவு பகலெல்லாம்
வணங்கிட்டாலும்
வருட முழு நோன்பு
நோற்றிட்டாலும்
வரிசை ஹஜ்ஜதை
செய்திட்டாலும்
ஹறத்தில் கிதாபெல்லாம்
ஓதிட்டாலும்
கருத்தில் இது ரெண்டை
அறியாதவர்
கொடிய நரகிற்கு
இரையாவரே!
 
“கருத்தில் இது இரண்டை அறியாதவர்” என்று “தன்ஸீஹ் – தஷ்பீஹ்” இரண்டையுமே குறிப்பிட்டுள்ளார். உண்மையும் இதுதான். இவ்விரண்டையும் தெளிவாக விளங்காதவரை ஸூபிஸம் கூறும் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை அறியவே முடியாது.
 
அடுத்த தெடரில் இவ்விரு விடயங்களையும் விளக்கி வைப்போம்.
இன்ஷா அல்லாஹ்!
தொடரும்…
RELATED ARTICLES

Most Popular

Recent Comments