ஆக்கம் – சங்கைக்குரிய மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்
ஒடுக்கத்துப் புதன் என்பது ஸபர் மாதத்தில் இறுதியாக வரக்கூடிய புதன்கிழமையை குறிக்கும். ஒடுக்கத்து என்றால் இறுதியானது. கடைசியானது என்பது அதன்பொருள். இதனால்தான் ஸபர் மாதத்தின் கடைசிப் புதன் கிழமைக்கு “ஒடுக்கத்துப் புதன்” என்று சொல்லப்படுகிறது. இந்த நாளுக்கு அறபுமொழியில் يوم النحس நஹ்ஸூடைய நாள் என்று சொல்லப்படுகின்றது. “நஹ்ஸூன்” என்றால் பலாஉன்-சோதனை, ழுர்றுன்-தீமை என்பது அதன் பொருள். அதாவது يوم النحس என்றால் சோனைக்குரிய நாள் , தீமைக்குரிய நாள் என்பது அதன் கருத்தாகும்.
இவ்வாறு يوم النحس என்று ஒரு நாள் உண்டா? இல்லையா? என்பதை நாம் ஆராய்ந்து பார்த்தால் அவ்வாறு ஒரு நாள் உண்டு என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
அல்லாஹூத்தஆலா அல் குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.
انا ارسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر
நிச்சயமாக நாம் அவர்கள் மீது என்றும் நிலையான துர்ப்பாக்கியமுடைய நாளில் மிகவும் கடுமையான காற்றை அனுப்பி வைத்தோம்.
ஸூறதுல் கமர்-19
மேற்கூறப்பட்ட திருமறை வசனத்தில் முன் வாழ்ந்த சமுதாயத்தினரை அல்லாஹூத்தஆலா நஹ்ஸூடைய நாளில் கடுங்காற்றை அனுப்பி சோதித்ததாக அல்லாஹூத்தஆலா கூறுகின்றான்.
இவ்வசனத்தின் மூலம் நஹ்ஸூடைய நாள் ஒன்று உண்டு என்பது தெளிவாகின்றது.
இவ்வசனத்துக்கு விரிவுரை எழுதிய முபஸ்ஸிரீன்கள் அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் يوم النحس என்ற இந்த நாள் எது, என்பது பற்றி தெளிவாகக் கூறியிருக்கின்றார்கள்.
அல்குர்ஆனுக்கு விரிவுரை எழுதிய இமாம்களில் இமாம் ஜலாலுத்தீன் அப்துர் றஹ்மான் அஸ்ஸூயூதி றழி அவர்களும் ஒருவர். இவர்கள் சுமார் 600க்கும் மேற்பட்ட கிரந்தங்களை எழுதியிருக்கின்றார்கள். இவர்கள் தங்களின் الدر المنثور அத்துர்றுல் மன்தூர் என்ற தப்ஸூர் கிரந்தத்தில் பின்வரும் விபரங்களைக் கூறுகின்றார்கள். ஹதீஸ் கலை மேதைகளானஇப்னுல் முன்திர் இப்னு முர்துவைகி போன்றோர் நஹ்ஸூடைய நாள் என்பது புதன்கிழமையாகும் என்று கூறுகின்றார்கள்.
பின்வரும் ஹதீதை அனஸ் றழி அவர்கள் அறிவிப்பதாக இப்னு முர்துவைகி அவர்கள் கூறுகின்றார்கள்.
நபீ(ஸல்) அவர்களிடம் நாட்களைப் பற்றி கேட்கப்பட்டது. அப்பொழுது புதன் கிழமை பற்றியும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபீ(ஸல்) அவர்கள் நஹ்ஸூடைய நாள் சோதனைக்குரிய நாள் என்று கூறினார்கள். அப்பொழுது நபீ(ஸல்) அவர்களின் சபையில் வீற்றிருந்த ஸஹாபாக்கள், யாறஸூலல்லாஹ் ஏன்? அவ்வாறு என்று கேட்டார்கள். அதற்கு நபீ(ஸல்) அவர்கள் அந்த நாளில் தான் அல்லாஹூத்தஆலா பிர்அவ்னையும், அவனின் கூட்டத்தினரையும் கடலில் மூழ்கச்செய்தான். இன்னும் ஆது, தமூது கூட்டத்தினரையும் இந்த நாளில் தான் அழித்தார்கள் என்றும் கூறினார்கள்.
இந்த ஹதீதின் மூலமும் புதன்கிழமை சோதனைக்குரிய நாள் என்பது தெளிவாகின்றது.
அல்குறர் என்ற கிரந்தத்தில் இமாம் வகீஉ அவர்கள் ஒரு ஹதீதை சுட்டிக் காட்டுகின்றார்கள். இந்த ஹதீதை இப்னு அப்பாஸ் றழி அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அதாவது மாதத்தின் இறுதியில் வரக்கூடிய புதன்கிழமை நிலையான நஹ்ஸூடைய நாள். சோதனைக்குரிய நாள் என்று நபி(ஸல்) அவர்கள கூறினார்கள். இந்த ஹதீதின் மூலம் பொதுவாக ஒவ்வொறு மாதத்தின் இறுதியிலும் வரக்கூடிய புதன்கிழமை நஹ்ஸூடைய நாள். சோதனைக்குரிய நாள் என்பது தெளிவாகிறது.
மேற்கூறப்பட்ட திருமறை வசனத்தின் மூலமும், நபீ(ஸல்) அவர்களின் பொன்மொழி மூலமும் நஹ்ஸூடைய நாள் ஒன்று உள்ளது என்து தெளிவாகின்றது. பொதுவாக புதன்கிழமை என்பது நஹ்ஸூடைய நாளாக இருந்தாலும் ஸபர் மாதத்தின் இருதியில் வரக்கூடிய புதன்கிழமையை இமாம்கள், ஆரிபீன்கள் அதிகம் சோதனை இறங்கக் கூடியநாள், தீமைக்குரிய நாள் என்று கூறுகின்றார்கள்.
றூஹூல் பயான் என்ற தப்ஸீர் கிரந்தத்தில் “ஆது, தமூது கூட்டத்தினரை அல்லாஹூத்தஆலா 8 தினங்கள் அவர்கள் மீது தொடர்ந்து வேதனையை இறக்கி அழித்தான் என்றும், ஒரு புதன்கிழமையில் ஆரம்பித்து ஸபர் மாதத்தின் இறுதிப் புதன்கிழமையில் அந்த வேதனை முடிந்ததாகவும் ஸபர் மாதத்தின் இறுதிப் புதன்கிழமையிலேயே அவர்களை முழுமையாக அழித்தான்” என்றும் கூறப்படுகின்றது.
எனவே தான், ஸபர் மாதத்தின் இறுதிப் புதன்கிழமையில் இறைவனின் சோதனை இப்பூவுலகில் இறங்குகின்றது என்பது தெளிவாகின்றது.
அது மாத்திரமல்ல, ஸபர் மாதத்தின் இறுதிப் புதன்கிழமை தான் நபீ(ஸல்) அவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு, தொடர்ந்து 12 தினங்கள் அதே நோயில் இருந்த நபீ(ஸல்) அவர்கள் றபீஉனில் அவ்வல் பிறை 12இல் வபாத்தானார்கள். இதன் காரணத்தினாலும் ஸபர் மாதத்தின் இறுதிப் புதன்கிழமை முஸீபத் நிறைந்த நாளாக சோதனை நிறைந்த நாளாக கருதப்படுகின்றது.
எனவே தான், இந்த நாளின் தீங்கிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக முன்னோர்களான இமாம்கள். ஆரிபீன்கள், மஷாயிகுமார்கள் சில வழிமுறைகளை கூறியிருக்கின்றார்கள். அவற்றில் ஒன்றுதான் “ஒடுக்கத்துப்புதன் அன்று காலையில் குறிப்பிட்ட அல்குர்ஆன் வசனங்களை எழுதி அவற்றைக் கரைத்துக் குடிப்பதன் மூலம் அந்த நாளின் தீமையிலிருந்து விடுபடுவதாகும்.”
இவ்வாறான ஒரு நடைமுறை பன்னெடுங்காலமாக எமதூரிலும், ஸூன்னத் வல் ஜமாஅத் அடிப்டையில் வாழக்கூடிய முஸ்லிம்கள் வாழுகிற ஊர்களிலும் பின்பற்றப்பட்டு வருகின்றது.
இவ்வாறு செய்வது இஸ்லாம் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றேயன்றி தடுக்கப்பட்டதல்ல. இவ்வாறு செய்வதில் மார்க்க முரண் ஒன்றும் கிடையாது. அல்குர்ஆன் வசனங்களை வாழையிலையில் அல்லது பீங்கானில் எழுதி கரைத்துக் குடிப்பதன் மூலம் ஒடுக்கத்துப் புதன் அன்று இறங்கக்கூடிய சோதனையிலிருந்து விடுபடத் தேடுவது ஒரு நல்ல காரியமேயன்றி கெட்டகாரியமல்ல.
அது மாத்திரமல்ல, ஒடுக்கத்துப் புதனன்று ஏழை மக்களுக்கு ஸதகா கொடுப்பது, சுன்னத்தான நோன்பு நோற்பது மற்றும் பல நல்ல காரியங்களைச் செய்வதன் மூலம் அந்த நாளின் தீங்கிலிருந்து நாம் தப்பிக் கொள்ளலாம்.
எனவேதான், சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் வாழுகின்ற நாம் ஒடுக்கத்துப் புதனன்று இறங்கக் கூடிய சோதனையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, நமது முன்னோர்களான இமாம்கள், ஆரிபீன்கள் கூறியது போன்று, அன்று காலையில் குறிப்பிட்ட குர்ஆன் வசனங்களை பீங்கானில் அல்லது வாழையிலையில் எழுதி, அதனைக்குடிப்பதன் மூலம் அன்றைய முஸீபத்திலிருந்து தப்பிக் கொள்வதற்கு இறைவன் அருள் புரிவானாக!
எழுதிக் குடிக்கும் வசனங்கள்
سلام قولا من رب رحيم
سلام على نوح فى العالمين
سلام على إبراهيم
سلام على موسى وهارون
سلام على إلياسين
سلام عليكم طبتم فادخلوها خالدين
سلام هي حتى مطلع الفجر
வஹ்ஹாபிகளின் வலையில் சிக்காமல் ஸூன்னிகளின் கொள்கை அடிப்படையில் வாழ்ந்து மரணிக்க இறைவனிடம் பிராத்திக்கின்றேன்.