விஷேட அறிவித்தல்.
இலங்கைத் திரு நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கும், மற்றும் இந்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழ்கின்ற குறிப்பாக கல்முனை நகர் வாழ்கின்ற என்னிடம் “பைஅத்” இறைஞான ஒப்பந்தம் செய்து கொண்ட எனதன்பிற்குரிய முரீதீன்கள், முரீதாத்துகள் அனைவருக்கும்,
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.
அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து, உலகில் தோன்றிய நபீமார், றசூல்மார், மற்றும் அவ்லியாஉகள் அனைவரையும் சாட்சிகளாக ஆக்கியவனாக பின்வரும் தகவலைத் தருகிறேன்.
மௌலவீ MAC முஹ்யித்தீன் “மன்பயீ” என்ற பெயரையுடைய இவர் பல வருடங்களுக்கு முன் என்னுடன் தொடர்பானார். இவர் ஏறாவூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். காத்தான்குடிக்கு வந்து பல முறை என்னைச் சந்தித்துள்ளார். இவர் ஒரு மௌலவீ என்ற வகையிலும், அடிக்கடி என்னைத் தேடி வந்து சந்திப்பவர் என்ற வகையிலும் நானும் இவருடன் அன்பாகவும், பண்போடும் பழகி வந்தேன்.
என்னைப் பலமுறை சந்தித்த பின் தனக்கு “பைஅத்” ஞானதீட்சை வழங்குமாறு கேட்டார். இன்ஷா அல்லாஹ் தருகிறேன் சற்று பொறுத்திருங்கள் என்று கூறினேன். இவர் கல்முனையில் உள்ள ஸுன்னத் வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றிய அமைப்பின் அங்கத்தவர்களான எனது சிஷ்யர்களுடன் காத்தான்குடி வந்து எமது பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்று வருகின்ற விஷேட நிகழ்வுகளிலும் கலந்து கொள்வார்.
ஒரு நாள் தனக்கு “பைஅத்” ஞான தீட்சை அவசியம் வழங்க வேண்டுமென்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டதற்கிணங்க நான் விருப்பம் தெரிவித்து என்னிடம் “பைஅத்” செய்பவர்கள் எவராயினும் ஒரு விண்ணப்பப் படிவம் நிரப்பித் தருவது நிபந்தனையாதலால் நீங்களும் நிரப்பித் தர வேண்டுமென்று கூறி எனது “கலீபா” மௌலவீ அப்துல் மஜீத் றப்பானீ அவர்களிடம் அனுப்பி வைத்தேன். மௌலவீ முஹ்யித்தீன் அவர்கள் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி ஒப்படைத்த பின் 2016ம் ஆண்டு இவருக்கு “பைஅத்” வழங்கி எனது ஞானவழி முரீதாக – சிஷ்யனாக ஆக்கிக் கொண்டேன். இவர் தனது கையால் நிரப்பி கையெழுத்திட்ட விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இவர் கல்முனையில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து எனக்கும், என்னுடனுள்ள சிலருக்கும் அழைப்புத் தந்தார். அவரை கௌரவித்து அவருடைய வீட்டுக்கு திருமணத்திற்குப் போகும் முறையோடு நாங்கள் சென்றிருந்தோம். அங்கு சென்ற பிறகுதான் அவரின் மனைவியின் குடும்பத்தவர்கள் இறைஞான வழி நடக்கின்ற, எனக்கு ஆதரவான குடும்பம் என்பது தெரிய வந்தது. மௌலவீ அவர்களும், அவரின் மனைவியின் குடும்பத்தவர்களும் என்னையும், என்னுடன் வந்தவர்களையும் கௌரவித்து உபசரித்து அனுப்பி வைத்தார்கள்.
சில வருடங்களின் பின் மௌலவீ முஹ்யித்தீன் அவர்களுக்கும், அவரின் மனைவி குடும்பத்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் காரணமாக பல நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கி மௌலவீ அவர்களின் கல்முனை வீட்டுக்கு நான் சென்று குடும்பத்தவர்கள் அனைவருடனும் பேசி சமாதானமும் செய்து வைத்தேன்.
பின்னர் மௌலவீ முஹ்யித்தீன் அவர்கள் காத்தான்குடியில் எனது தலைமையில் இயங்கி வருகின்ற பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலில் மாதாந்தம் நடைபெற்று வருகின்ற “றாதிப் மஜ்லிஸ்” நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கல்முனையில் இருந்து வருவார். ஏனைய சிஷ்யர்கள் போல் என்னைக் கட்டியணைத்து “முஆனகா” செய்வார். கைகளையும் முத்தமிடுவார். பின்னர் மௌலவீ அவர்களின் வருகை குறைந்து விட்டது. தொடர்ந்து சில மாதங்கள் அவர் “றாதிப்” நிகழ்வில் கலந்து கொள்ள வரவில்லை.
சில மாதங்களின் பின் “றாதிப்” சபைக்கு வந்தவர் என்னைத் தனிமையாகச் சந்தித்து, “எனக்கு இங்கு தொடர்ந்து வருவதற்கு வாய்ப்பு இல்லாமலுள்ளது, அதே நேரம் நான் பலருடனும் சேர்ந்து பழகுவதால் சில சிக்கல்களும் எனக்கு ஏற்படுகின்றன. ஆனால் நான் என்றும் உங்களின் “முரீது” சிஷ்யன்தான். உங்கள் கொள்கை சரியென்று ஏற்றுக் கொண்டவன்தான். அதில் ஒரு மாற்றமும் இல்லை” என்று முறையிட்டார். அவரின் இந்த முறையீட்டின் மூலம் அவர் “துன்யா”வின் சிக்கல்களுக்காக இவ்வாறு நடந்து கொண்டார், நடந்து கொள்கிறார் போலும் என்று நான் மனதில் நினைத்துக் கொண்டேன். அவரை ஏசவோ, சபிக்கவோ, தப்பாக எவரிடமும் பேசவோ இல்லை.
எனினும் இற்றைக்கு ஒரு வாரத்தின் முன் மௌலவீ முஹ்யித்தீன் அவர்களின் “வொய்ஸ் றெகோர்ட்” ஒன்றைக் கேட்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவர் அதில், “மௌலவீ அப்துர் றஊபின் கொள்கை “ழலாலத்” என்றும், அவருக்கும், எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும், நான் கல்முனை ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையுடன் சேர்ந்து அவரின் கொள்கை வழிகேடு என்று முடிவு செய்து விட்டேன்” என்றும் பேசியிருந்தார். இதைக் கேட்ட பிறகுதான் நான் இவர் பற்றிக் கேள்விப்பட்ட செய்தியெல்லாம் உண்மை என்று நம்பினேன்.
இவர் தனது “வொய்ஸ் றெகோர்ட்” இல் நான் கூறும் கொள்கை “ழலாலத்” வழிகேடு என்று பேசிய போது கொழும்பில் இருக்கும் மௌலவீ இர்ஷாத் றப்பானீ அவர்கள் இவருடன் தொடர்பு கொண்டு இவரிடம் விளக்கம் கேட்ட போது, இவர் “மௌலவீ அவர்களின் கொள்கை “ழலாலத்” வழிகேடென்று நான் சொல்லவில்லை, நான் இப்போதும் மௌலவீயின் கொள்கையில்தான் உள்ளேன்” என்று சொன்ன “வொய்ஸ் றெகோர்ட்” உம் எம்மிடம் உண்டு. தேவையானோருக்கு அனுப்பி வைக்க முடியும்.
மௌலவீ முஹ்யித்தீன் அவர்கள் இன்னொரு “வொய்ஸ் றெகோர்ட்” இல் “நான் “பைஅத்” எடுத்ததும், எனது கொள்கையைச் சரி கண்டதும் அறியாமைக் காலத்தில்” என்று பேசியுள்ளதாக அறிந்தேன். இதுவரை அந்த “வொய்ஸ் றெகோர்ட்” எனக்கு கிடைக்கவில்லை. இவர் என்னிடம் “பைஅத்” பெற்ற காலம் 05.10.2016 ஆகும். அப்போது அவரின் வயது 28 என்பது குறிப்பிடத்தக்கது.
அன்பிற்குரிய மௌலவீ முஹ்யித்தீன் அவர்களே! நான் கூறியுள்ள கொள்கை “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையாகும். இது எனது கொள்கையல்ல. அல்லாஹ் திருக்குர்ஆனிலும், எம் பெருமானார் அவர்கள் தங்களின் அருள் மொழிகளிலும், இமாம்கள், அவ்லியாஉகள், ஆரிபீன்களான இறைஞானிகள் தமது நூல்களிலும் எழுதிய கொள்கையாகும். இதை “ழலாலத்” வழிகேடு என்பது “குப்ர்” நிராகரிப்பாகும். நீங்கள் அறியாமை காரணமாக இவ்வாறு சொல்லியிருந்தால் அல்லாஹ்விடம் “தவ்பா” செய்து நல்வழிக்கு வாருங்கள். பணத்திற்காகவும், பதவிக்காகவும், நாடெல்லாம் உங்கள் புகழ் பரவ வேண்டுமென்ற நோக்கத்திற்காகவும் சொல்லியிருந்தால் அல்லாஹ்வின் தண்டனையை எதிர்பார்த்திருங்கள். நீங்கள் ஓதி வெளியாகிய அறபுக் கல்லூரியில் ஓதிப் பட்டம் பெற்ற ஒருவரின் பெயைரக் குறிப்பிட்டு “அவர் கொஞ்சம் பிரபல்யமானவர்” என்று கூறி நீங்கள் உங்களை அடையாளப்படுத்துவது உங்களை தாழ்த்துமேயன்றி உயர்த்தாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். காரணம் அவர் விபச்சாரக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு கடல் கடந்தவர் என்பதாகும். அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டுவானாக!
காதிமுல் கவ்மி,
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ.
09.05.2023