Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“தன்ஸீஹ் – தஷ்பீஹ்” இப்னு அறபீ - அப்துல் கரீம் ஜீலீ

“தன்ஸீஹ் – தஷ்பீஹ்” இப்னு அறபீ – அப்துல் கரீம் ஜீலீ

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
இறைஞான மேதை அப்துல் கரீம் ஜீலீ அவர்கள் தங்களின் “அல் இன்ஸானுல் காமில்” எனும் நூலில் அல்லாஹ்வின் இரு நிலைகளான “தன்ஸீஹ் – தஷ்பீஹ்” தொடர்பாக தனித் தலைப்பில் விளக்கம் எழுதியுள்ளார்கள்.

அவற்றில் “தஷ்பீஹ்” நிலை குறித்து அவர்கள் கூறிய விளக்கத்தின் ஒரு பகுதியை மட்டும் கூட்டல், குறைத்தல் இன்றி அறபியில் எழுதி, பொது மக்களின் நன்மை கருதி அதை மொழியாக்கம் செய்யுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை நான் கேட்டிருந்தேன். பல நாட்கள் நகர்ந்தும் காரியம் நடக்காமற் போனதால் மீண்டும் அவர்களுக்கு ஒருவார கால அவகாசம் வழங்குகிறேன். நான் மொழியாக்கம் செய்யாமல் உலமா சபையைக் கேட்டுக் கொண்டதற்கான காரணம் “தஷ்பீஹ்” உண்டு என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்கேயாகும்.
 
சில மாதங்களுக்கு முன் நான் பதிவிட்ட கட்டுரையொன்றில் “தஷ்பீஹ்” நிலை தொடர்பாக ஜீலீ அவர்களின் கருத்தைக் கூறியிருந்தேன். அதை மறுத்துப் பேசிய மௌலவீ பத்தாஹீ அவர்கள் “ஜீலீ சொன்னதை ஒரு பக்கம் வைப்போம்” என்று கூறிவிட்டு அல்லாஹ்வுக்கு “தன்ஸீஹ்” நிலை மட்டுமே உண்டு என்றும், “தஷ்பீஹ்” என்று ஒரு நிலை கிடையாது என்றும் வலியுறுத்தினார். இது நான் என் காதால் கேட்ட செய்தியாகும்.
 
அவரின் இக்கருத்தை மறுத்து கட்டுரை ஒன்று எழுதிப் பதிவிட்டிருந்தேன். அதன் பிறகு அவரின் சத்தம் இல்லாமற் போயிற்று, அவர் மேல் எனக்குத் தனிப்பட்ட கோபமோ, பொறாமையோ கிடையாது. ஆயினும் திறமையுள்ள ஒரு மௌலவீ ஸூபீகளின் நூற்களை ஆய்வு செய்யாமலிருப்பது எனக்கு வேதனைதான். நக்குண்பதற்கும் “நஸீப்” வேண்டுமென்று முன்னோர் சொல்வார்கள்.
 
يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءُ وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ، والمراد بالحكمة هنا علمُ الحكمة المشارُ إليه بقوله تعالى ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ، لا الحيلةُ التي توجد عند الثعالب، كما يدلّ على ذلك تعريف علم الحكمة، وهو علم يُبحث فيه عن حقيقة كلّ شيء،
அல்லாஹ் தான் நாடியவர்களுக்கே “ஹிக்மத்” எனும் ஞானத்தைக் கொடுப்பான். எவருக்கு அந்த ஞானம் கொடுக்கப்படுகின்றதோ அவர் அதிக நன்மையை கொடுக்கப்பட்டவராவார். இதை “லுப்பு” உள்ளவர்கள் மட்டுமே உணர்வர். “லுப்பு” என்றால் قَلْبُ الْقَلْبِ உள்ளுள்ளம் என்று ஸூபீகள் சொல்வர்.
 
“இல்முல் ஹிக்மத்” என்று இங்கு கூறப்படுவது “நபீயே! உங்களின் இறை வழிக்கு “ஹிக்மத்” எனும் ஞானத்தின் மூலமும், அழகிய உபதேசத்தின் மூலமும் அழையுங்கள்” என்ற திரு வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்ட இறைஞானத்தைக் குறிக்குமேயன்றி நரிகளிடமுள்ள தந்திரம் என்பது கருத்தல்ல. ஏனெனில் “ஹிக்மத்” என்ற சொல்லுக்கு ஸூபீ மகான்கள் வரைவிலக்கணம் கூறும் போது “எந்த அறிவில் ஒவ்வொரு வஸ்தின் எதார்த்தம் பற்றி ஆராயப்படுகிறதோ அதுவே இறைஞானம்” என்று கூறியுள்ளனர்.
 
மௌலவீ பத்தாஹீ ஹஸ்றத் அவர்களிடம் பின்வருமாறு கேட்க விரும்புகிறேன். பகிரங்கமாக விடை கூறாது போனாலும் அவர் சரியென்று ஏற்றுக் கொண்டால் போதும்.
 
பொதுவாக அறிவிலும், குறிப்பாக இறைஞானத்திலும் நீங்கள் சிறந்தவரா? அல்லது ஜீலீ அவர்கள் சிறந்தவர்களா? நீங்கள்தான் சிறந்தவர் என்று சொல்வீர்களாயின் “அல் இன்ஸானுல் காமில்” பாகம் ஒன்று, பக்கம் 105, 11ம் பாடத்தில் “தஷ்பீஹ்” என்ற தலைப்பில் அவர்கள் அல்லாஹ்வுக்கு “தஷ்பீஹ்” நிலை உண்டு என்று எழுதியுள்ளதை ஆதாரத்தோடு மறுத்து உங்களால் ஒரு பதிவு அறபு மொழியில் வெளியிட முடியுமா?
அல்லது அவர்கள்தான் உங்களைவிடச் சிறந்தவர்கள் என்று நீங்கள் சொல்வீர்களாயின் அவர்களின் கூற்றை ஏற்றுக் கொள்வீர்களா?
 
ஜீலீ போன்று இறைஞான மகான்களிற் பலர் அல்லாஹ்வுக்கு “தஷ்பீஹ்” நிலை உண்டு என்று சொல்லியிருக்கும் நிலையில் அவர்களை மிஞ்சிய பாணியில் அவர்களின் கருத்தை மறுக்காமல் ஆய்வு செய்யுங்கள். நானோ, நீங்களோ நாம் கற்ற கல்வி கை மண்ணளவுதான். நாம் கற்காத கல்வி உலகளவு உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
 
உங்களின் “பத்வா” நூல் அறபுப் பகுதி 05ம் பக்கத்தில்
كما عليه الأئمّة الأربعة أبو حنيفة ومالكٌ والشّافعيُّ وأحمد ومن تبعهم، كأبي منصور الماتريدي وأبى الحسن الأشعري وأبي منصور البغدادي والغزالي والنّووي وابن عربي والشّعراني وابن حجر والسّيوطي وغيرُهم، ممّن جمع بين المنقول والمعقول وبين الشّريعة والطريقة والحقيقة والمعرفة رضي الله عنهم،
என்று எழுதியுள்ளீர்கள்.
இதன் சுருக்கத்தை மட்டும் எழுதுகிறேன்.
 
உங்களின் “பத்வா” சரியானதென்பதற்கு மத்ஹபுடைய நான்கு இமாம்களையும், இன்னும் பல இமாம்களையும் ஆதாரமாக குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் குறிப்பிட்ட இமாம்களை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம்.
அவர்களில் நான் பேசி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் எழுதியும், பேசியும் வந்த இமாம்களில் முஹ்யித்தீன் இப்னு அறபீ, இமாம் ஙஸ்ஸாலீ, இமாம் அப்துல் வஹ்ஹாப் ஷஃறானீ முதலானோர் அடங்குகின்றனர். இவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசியவர்களும், எழுதியவர்களும் என்பதற்கு ஆதாரங்கள் நிறைய உள்ளன. தேவையானோர் எம்முடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
 
இப்னு அறபீ நாயகம் அவர்களை ஏற்றுக் கொண்டுள்ள நீங்கள் இறைவனின் இரு நிலைகளில் ஒன்றான “தஷ்பீஹ்” நிலையை எவ்வாறு மறுக்க முடியும்? குறிப்பாக மௌலவீ பத்தாஹீ அவர்கள் “அதை ஒரு புறம் வைப்போம்” என்று எவ்வாறு சொல்ல முடியும்? நீங்கள் “தஷ்பீஹ்” நிலையை மறுப்பதாயின் இப்னு அறபீ அவர்களையும் மறுக்க வேண்டும். “தஷ்பீஹ்” பற்றிச் சொன்னவனுக்கு “முர்தத் பத்வா” கொடுப்பதாயின் அவர்களுக்கும் அவ்வாறு “பத்வா” கொடுக்க வேண்டும்.
 
இதோ இப்னு அறபீ அவர்கள் “தன்ஸீஹ் – தஷ்பீஹ்” பற்றிக் கூறுவதைப் பாருங்கள்.
فَإِنْ قُلْتَ بِالتَّنْزِيْهْ كُنْتَ مُقَيِّدًا – وَإِنْ قُلْتَ بِالتَّشْبِيْهِ كُنْتَ مُحَدِّدًا
فَإِنْ قُلْتَ بِالْأَمْرَيْنِ كُنْتَ مُسَدِّدًا – وَكُنْتَ إِمَامًا فِى الْمَعَارِفِ سَيِّدًا
فَمَنْ قَالَ بِالْإِشْفَاعِ قَدْ كَانَ مُشْرِكًا – وَمَنْ قَالَ بِالْإِفْرَادِ كَانَ مُوَحِّدًا
وَإِيَّاكَ وَالتَّشْبِيْهَ إِنْ كُنْتَ ثَانِيًا – وَإِيَّاكَ وَالتَّنْزِيْهَ إِنْ كُنْتَ مُفْرِدًا
இப்னு அறபீ நாயகம் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று புரிந்ததா? இதோ புரிய வைக்கிறேன்.
 
நீ “தன்ஸீஹ்” என்ற நிலையை மட்டும் நம்பினால் நீ அல்லாஹ்வை “கைத்” கட்டுப்படுத்தினவனாகி விடுவாய். அதாவது அவனுக்குரிய இரு நிலைகளில் முந்தின நிலையான “தன்ஹீஹ்” நிலையை மட்டும் நம்பினால் நீ அவனை அந்த நிலையில் மட்டும் கட்டுப்படுத்தினவனாகிவிட்டாய். அவனோ அனைத்துக் கட்டுப்பாடுகளையும் கடந்தவன். கட்டுப்பாடற்றவன். இத்தகைய ஒருவனை நீ “தன்ஸீஹ்” நிலையில் கட்டுப்படுத்தினால் مُطْلَقْ – “முத்லக்” கட்டுப்பாடற்றவனை ஒன்றில் மட்டும் கட்டுப்படுத்தி விட்டாய். وَهُوَ إِلهٌ مُطْلَقٌ لَا مُقَيَّدٌ அவன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவன்.
நீ “தஷ்பீஹ்” என்ற நிலையை மட்டும் நம்பினால் முந்தினவன் போல் நீயும் அல்லாஹ்வை “தஷ்பீஹ்” நிலையில் மட்டுப் படுத்தியவன்தான்.
\
நீ இரண்டையும் நம்பினால் நீ நேர்வழி பெற்றவனாகிவிடுவாய். அதோடு இறைஞானத்தின் தலைவராகவும் ஆகிவிடுவாய்.
எவன் “வுஜூத்” இரண்டு என்று சொன்னானோ அவன் “முஷ்ரிக்” இணை வைத்தவனாகிவிட்டான். எவன் அந்த உள்ளமை ஒன்று என்று சொன்னானோ அவன் “முவஹ்ஹித்” “தவ்ஹீத்” செய்தவனாகிவிட்டான்.
 
எனவே, உன்னையும், “தஷ்பீஹ்” ஐயும் நான் எச்சரிக்கிறேன். அதேபோல் உன்னையும் “தன்ஸீஹ்” ஐயும் நான் எச்சரிக்கிறேன். இரு நிலைகளில் ஒன்றை மட்டும் நீ நம்பி அவனை ஒரு நிலையில் கட்டுப்படுத்தி விடாமல் இரு நிலைகளையும் நம்பிக் கொள்.
“பத்வா” வழங்கிய மகான்களே! மௌலவீ பத்தாஹீ அவர்களே! உங்களின் “பத்வா” நூல் 05ம் பக்கத்தில் இப்னு அறபீ அவர்களை ஏற்றுக் கொள்வதாக எழுதிவிட்டு அவர்கள் கூறிய “தஷ்பீஹ்” எனும் தத்துவத்தை மறுக்கிறீர்கள். ஆளைப் புகழ்கிறீர்கள். கருத்தை மறுக்கிறீர்கள். இது வியப்பாகவும் உள்ளது. சிரிப்பாகவும் உள்ளது.
 
நீங்கள் ஏன் இவ்வாறு முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறீர்கள்? எதார்த்தம் புரியவில்லையா? அல்லது புரிந்தும் அதை ஏற்றுக் கொள்ள உங்களின் கௌரவமும், தன்மானமும் தடையாக இருக்கின்றனவா? கௌரவம் அல்லாஹ்விற்குரியது. அதை விடுவோம். எது நியாயமோ, எது சத்தியமோ அதை நாம் ஏற்றுக் கொள்வோம்.
உங்களின் “பத்வா” துறை தெரியாமல் தோணி தொடுத்த கதை போன்றதாகும். இதை நீங்கள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
 
நான் பேசியது “வஹ்ததுல் வுஜூத்” கருத்துக்களாகும். உங்களின் “பத்வா” “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை பிழை என்று நிறுவுவதற்கானதாகும். “வஹ்ததுல் வுஜூத்” கொள்கைக்கும், “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கைக்கும் மலைக்கும், மடுவுக்குமுள்ள வேறுபாடு உண்டு.
 
நீங்கள் “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்று “பத்வா” வழங்கிவிட்டு அதன் முன்பக்க அட்டையில் பின்வருமாறு கட்டம் போட்டு எழுதயுள்ளீர்கள்.
காத்தான்குடி றஊப் மௌலவீ போன்றோரின்
மார்க்க விரோதக் கருத்துகள் குறித்து
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கிய
மார்க்கத்தீர்ப்பு.
 
உங்களின் இவ்வேலை பட்டப் பகலில் முழுப் பூசனிக்காயை சோற்றுப் பீங்கானுள் மறைத்த கதை போன்றதாகும். இது அறியாமைக்கு மேல் அறியாமையாகும். சதிக்கு மேல் சதியாகும்.
 
நான் பேசாத “ஹுலூல் – இத்திஹாத்” கருத்தை பிழையென்று எழுதிவிட்டு “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசிய எனது பெயரை மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளீர்களே விபரம் தெரியாமல்தான் செய்தீர்களா? அல்லது தெரிந்திருந்தும் என்னையும், எனது ஆதரவாளர்களையும் கொலை செய்வதற்காக எழுதியுள்ளீர்களா?
“வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்திற்கும், “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கைக்கும் வேறுபாடு உங்களுக்குத் தெரியாமற் போனதால் நான் பேசிய கருத்துக்கள் “ஹுலூல் – இத்திஹாத்” கருத்தென்று நீங்களாக கற்பனை செய்து எனது பெயரை “பத்வா”வில் எழுதியுள்ளீர்கள். ஒரு தரமாவது என்னை விசாரித்திருந்தீர்களாயின் இப்படியொரு “பத்வா” வழங்கியிருக்கமாட்டீர்கள். தப்புச் செய்துவிட்டு இப்போது தப்பிக்கொள்வதற்காகவும், உங்களின் தன்மானம், கௌரவம் காப்பதற்காகவும் அலை மோதுகிறீர்கள். அரசியல்வாதிகளின் வாசற்படி ஏறி இறங்குகிறீர்கள். இது உங்களுக்குத் தேவைதானா?
 
சிந்தித்துச் செயலாற்றுங்கள்.
தூர நோக்குடன் முடிவெடுங்கள்.
 
முற்றும்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments