காத்தான்குடி வாழும் எனதன்புக்குரிய முரீதீன்களான சகோதரர்களே! சகோதரிகளே!
காத்தான்குடி வாழும் எனது உறவினர்களே! என்னை நேசிப்பவர்களே! மற்றும் என்னால் பயன் பெற்றவர்களே! பெற்றுக் கொண்டிருப்பவர்களே!
பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெறுகின்ற விஷேட நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.
1944ம் ஆண்டு காத்தான்குடியில் பிறந்த நான் இற்றை வரை காத்தான்குடியிலேயே வாழ்ந்து வருகிறேன். இடைப்பட்ட காலத்தில் மூன்றாண்டுகள் தொடர்ந்து இந்தியாவில் ஓதிக் கொண்டிருந்ததாலும், சுமார் ஒரு வருடம் திரு மதீனா முனவ்வறாவில் தங்கியிருந்ததாலும் இவ் ஊரையும், உங்களையும் பிரிந்து வாழ்ந்திருக்கிறேன். என்னால் முடிந்தவரை இவ் ஊருக்கும், உங்களுக்கும் உதவிதான் செய்துள்ளேனேயன்றி உபத்திரம் எதுவும் செய்ததாக என் நினைவில் இல்லை.
எனது 25வது வயது முதல் இற்றைவரை “தீன்” மார்க்கப் பணியிலேயே இருந்து வருகிறேன். எனது வாழ்வில் நான் பணம் சம்பாதித்ததை விட அதிகமாக மனிதர்களையே சம்பாதித்துள்ளேன். எனது 25வது வயதிலிருந்து ஏதோ ஒரு இஸ்தாபனம் மூலம் மாதச் சம்பளம் பெறுபவனாகவே இருந்து வருகிறேன். எனினும் என் தேவையை விட அதிகமாகவே அல்லாஹ் எனக்கு அருள் செய்து வருகிறான். அல்ஹம்து லில்லாஹ்!
இந் நாட்டில் வாழும் பௌத சகோதரர்களாலோ, தமிழ் சகோதரர்களாலோ, கிறித்துவ சகோதரர்களாலோ எந்த ஒரு தொல்லையும், எதிர்ப்பும் எனக்கு கிடையாது.
ஆயினும் உலமாஉகள் என்று சொல்லப்படுகின்ற, இஸ்லாமிய மத குருமார்களிற் சிலரும், வழி தவறிய கொள்கையுடையோரும் மட்டுமே என்னை எதிர்க்கின்றார்கள். அவர்களிலும் குறிப்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவைச் சேர்ந்த சிலரே என்னை எதிர்க்கிறார்கள்.
ஏன் எதிர்க்கிறார்கள்?
அவர்களிற் சிலர் விஷயம் புரியாமல் எதிர்க்கிறார்கள். இன்னும் சிலர் மற்றவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்காக எதிர்க்கிறார்கள். விஷயம் புரிந்தவர்கள் பலர் இருந்தாலும் கூட பிறர் தம்மை “முர்தத்” என்று “சீல்” குத்திவிடுவார்கள் என்று பயந்து எதிரிகள் போல் நடிக்கிறார்கள். மார்க்க விளக்கமில்லாத பொது மக்கள் சாய்ந்தால் சாய்கிற பக்கம் சாய்கிற செம்மறி ஆடுகள் போல் உள்ளனர். அவர்களின் நிலையை நினைத்து நான் மனமுருகி நிற்கிறேன்.
மூலகாரணம்:
இதற்கெல்லாம் மூல காரணம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா 1979ம் ஆண்டு எனக்கும், நான் பேசிய கருத்தை ஏற்றுக் கொண்ட பல்லாயிரம் முஸ்லிம்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” வழங்கியதேயாகும். அது மட்டுமன்றி எங்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டுமென்றும் எழுத்து மூலம் நாடெங்கும் பகிரங்கப்படுத்தி எங்களைக் கொலை செய்யத் தூண்டியதுமேயாகும். இவர்களின் “பத்வா”வின் பின்னணியிலேயே மௌலவீ MSM பாறூக் காதிரீ அவர்கள் தனது வீட்டிலிருந்த நேரம் இனந் தெரியாதவர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். தோண்டினால் புதையல் வெளியாகும்.
இதேபோல் இவர்களின் “பத்வா”வின் பின்னணியிலேயே காத்தான்குடியில் எனது ஆதரவாளர்களிற் பலரின் வீடுகள் உடைக்கப்பட்டதும், இன்னும் சில வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதும், இன்னும் பல பெண்கள் அடித்துத் தாக்கப்பட்டதும், முஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீப் தீக்கிரையாக்கப்பட்டதுமாகும். இவை மட்டுமல்ல. எமது இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் பேரவை அலுவலகம் பல தரம் தீக்கிரையாக்கப்பட்டதும், பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலின் முன்னாலிருந்த ஓலை மண்டபம் இருமுறை தீக்கிரையாக்கப்பட்டதும் “பத்வா”வின் பின்னணியேயாகும்.
மேற்கண்ட அநீதிகளுக்கும், அட்டூழியங்களுக்கும் பிரதான காரணம் முதுகெலும்பில்லாத முல்லாக்கள் வழங்கிய “முர்தத் பத்வா”வேயாகும்.
தலைப்பே தெரியாத தலையில்லா முப்தீகள்:
“பத்வா” வழங்கிய முல்லாக்களும், அதை அமுல் செய்து கொண்டிருக்கும் முப்தீகளும் பிரித்தறியத் தெரியாத பித்தலாட்டக் காரர்களாவர்.
நான் பேசிய தத்துவம் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவமாகும். “ஹுலூல் – இத்திஹாத்” எனும் வழிகெட்ட கொள்கையல்ல. எனக்கு “பத்வா” வழங்கிய முல்லாக்கள் தமது அறியாமையினாலோ என்னவோ “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை பிழையென்று “பத்வா” எழுதிவிட்டு அதன் முன் அட்டையில் “காத்தான்குடி றஊப் மௌலவீ போன்றோரின் மார்க்க விரோதக் கருத்துக்கள்” என்று எழுதியுள்ளார்கள். இவர்கள் இவ்வாறு செய்தது இவர்களின் அறியாமையாக இருக்கலாம். அல்லது என்னைப் பழிவாங்குவதற்காகச் செய்த சதியாக இருக்கலாம். சதி என்பதை விட அறியாமை என்பதே பொருத்தமானதாகும்.
ஏனெனில் “பத்வா” வழங்கிய 1979ம் ஆண்டு “பத்வா” வழங்கியவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” என்றால் என்னவென்று கூட அறிந்திருக்கவில்லை என்று என்னால் நிச்சயமாகக் கூற முடியும். இதற்கு ஆதாரம் அவர்களின் “பத்வா” நூலேயாகும். எந்த இடத்திலும் இதை என்னால் ஆதாரத்துடன் நிறுவ முடியும். எனினும் புத்தி ஜீவிகள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக சுருக்கமாகச் சுட்டிக் காட்டுகிறேன்.
முல்லாக்களின் அறபு “பத்வா” 37 பக்கங்களைக் கொண்டதாகும். அதன் தமிழாக்கம் 26 பக்கங்கள் கொண்டதாகும். (என்னிடமுள்ள அவர்களின் “பத்வா” நூலில் இவ்வாறுதான் உள்ளது)
37 பக்கங்கள் கொண்ட அறபு “பத்வா”விலோ, 26 பக்கங்கள் கொண்ட அதன் தமிழாக்கத்திலோ எந்த ஓர் இடத்திலாவது “வஹ்ததுல் வுஜூத்” என்ற சொல் கூறப்படவில்லை. நான் பேசிய தலைப்பு “வஹ்ததுல் வுஜூத்” என்ற தலைப்பாகும். எனது தலைப்பை மறுத்து அது பிழை என்று எழுதப்படுகின்ற ஒரு “பத்வா”வில் பல இடங்களில் “வஹ்ததுல் வுஜூத்” என்ற சொல் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதுவே நடைமுறை. ஆயினும் உலமாஉகள் எனது பேச்சுக்கு எதிராக வழங்கிய “பத்வா”வின் ஓர் இடத்திலேனும் கூட எனது தலைப்புக்குரிய சொல்லையோ, அல்லது அது பிழை என்பதற்கான ஆதாரத்தையோ கூறவில்லை.
“பத்வா” வழங்கியவர்கள் தமது “பத்வா”வின் ஆரம்பம் முதல் இறுதிவரை கூறியிருப்பது “ஹுலூல் – இத்திஹாத்” பிழை என்பதற்கான ஆதாரங்களேயன்றி நான் பேசிய “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பிழை என்பதற்கான ஆதாரங்கள் அல்ல.
சுருக்கம் என்னவெனில் நான் பேசிய “வஹ்ததுல் வுஜூத்” கருத்துக்கள் பிழையாயின் அவை பிழை என்பதற்கான ஆதாரங்கள் கூறி நான் கூறிய கருத்து பிழை என்று நிறுவியிருக்க வேண்டும். ஆனால் “பத்வா” வழங்கியவர்களோ நான் கூறாத, நான் நினைத்துக் கூடப் பார்க்காத, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை பிழையென்று தொண்டை கிழியப் பேசி வருகின்ற கொள்கையையே நான் பேசியுள்ளேன் என்று தவறாகப் புரிந்து கொண்டு அல்லது மன முரண்டாக எனக்கும், எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் மதம் மாறியவர்கள் என்று “பத்வா” வழங்கிவிட்டு தற்போது தாம் வழங்கியது சரிதான் என்று தமது கௌரவம் காப்பதற்காக சட்டத்தரணிகள், அரசியல்வாதிகள், அரசியல் செல்வாக்குள்ளவர்களை அடிக்கடி சந்திக்கின்றார்கள். இவர்கள் ஒரு தவறைச் செய்துவிட்டு அதை நியாயப்படுத்துவதற்காக, தமக்குச் சாதகமாக அமைத்துக் கொள்வதற்காக நரிக்குணம் கொள்கிறார்கள் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரம் தம்பி ரிஸ்வி அவர்கள் வட்டிலப்பம் எடுத்துச் சென்றதேயாகும். இன்றேல் விசாரணை செய்து தீர்ப்புக் கூற அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு வட்டிலப்பம் எதற்கு?
ஆனால் ஸூபிஸ சமூகத்தை வழி நடாத்தும் உலமாஉகளான நாங்களும், ஸூபிஸ வழி நடக்கும் சகோதர, சகோதரிகளும் எவரின் காலில் விழவும் மாட்டோம். எவருக்கும் வட்டிலப்பமோ, சட்டியப்பமோ கொடுக்கவும் மாட்டோம். எவராயினும் அவரிடம் நீதியையே கேட்டு நிற்போம்.
தற்போது நாங்கள் அல்லாஹ்வை நம்பி அரசிடமே நீதி கேட்டு நிற்கிறோம். அதன் நீதியான ஒரு முடிவை எதிர்பார்த்தும் இருக்கிறோம். அரசாங்கம் எங்களுக்கு நீதியான ஒரு தீர்வைத் தரவில்லையானால் பாதைகளில் இறங்கி பகிரங்கமாக நீதி கேட்க வேண்டிய சூழலும் வரலாம் இதிலும் எமக்கு நீதி கிடைக்கவில்லையானால் அல்லாஹ்விடம் எங்களின் விடுதலைக்கு வழி தேடுவோம். இன்ஷா அல்லாஹ்!
وهو أحكم الحاكمين
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ
01.06.2023