தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அல்லாஹ்வின் படைப்புகள் எண்ணற்றவை. எவராலும் எண்ணி முடிக்க முடியாதவை. அல்லாஹ் மலக்குகள் – அமரர்கள் பற்றிக் கூறுகையில் وَمَا يَعْلَمُ جُنُوْدَ رَبِّكَ إِلَّا هُوْ “உங்களின் றப்பு – இரட்சகனின் படைகள் எத்தனை பேர் என்பதை அவன் மட்டுமே அறிவான்” என்று கூறியுள்ளான்.
விஞ்ஞான அறிவு இன்னும் விரிந்து புதிய கண்டு பிடிப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட அவற்றாலும் அல்லாஹ்வின் படைப்புக்களை எவராலும், எந்தக் கண்டுபிடிப்பாலும் அளந்து, நிறுத்து, எண்ணிவிட முடியாது.
உயிருள்ள படைப்புக்கள், உயிரில்லாத படைப்புக்கள் என்று இருவகை படைப்புக்கள் உள்ளன. இவற்றில் எந்த வகையையும் எவராலும் கட்டுப்படுத்தவோ, மட்டுப்படுத்தவோ, எண்ணிக் கடக்கெடுக்கவோ முடியாது.
அல்லாஹ் படைப்புக்களை படைத்தான் என்று ஸூபீகள் அல்லாதவர்கள் சொல்வார்கள். ஸூபீ மகான்களோ “அல்லாஹ்தான் படைப்புக்களாக வெளியானான்” என்று சொல்வார்கள்.
மனிதர்களுக்கு மனித படைப்புக்கள் பற்றி நன்றாகத் தெரியும். ஆயினும் அவர்களுக்கு ஏனைய படைப்புகள் பற்றித் தெளிவாகத் தெரிவதில்லை. மனிதர்கள் மனிதர்களோடு மட்டுமே நெருங்கிப் பழகுவார்கள். ஏனைய உயிரினங்களோடு அவ்வாறு பழக மாட்டார்கள். இதனால் அவர்களுக்கு மனிதர்களைப் பற்றிய அறிவு உண்டு. ஏனைய உயிரினங்கள் பற்றிய அறிவு இல்லை. இருந்தாலும் கூட எல்லோருக்கும் எல்லா உயிரினங்கள் பற்றிய அறிவும் இருக்காது.
உயிரினங்களில் எந்த உயிரினத்தை எடுத்துக் கொண்டாலும் அது தொடர்பாக நாம் ஆய்வு செய்யும் போதுதான் அல்லாஹ்வின் வல்லமையை ஓரளவாவது புரிந்து கொள்ள முடியும்.
எனவே, மனிதர்கள் அல்லாஹ்வின் வல்லமைகளை அறிந்து கொள்ள வேண்டுமென்பதை கருத்திற் கொண்ட நான் ஸூபிஸ தத்துவத்தைப் பேசுவதோடு மட்டும் நின்று கொள்ளாமல் ஏனைய உயிரினங்களில் பாம்பு தொடர்பான விளக்கத்தை முதலில் எழுதலாமென்று முடிவு செய்து எழுதுகிறேன்.
மனித உருவத்தில் சில பாம்புகள்!
இவை சீறும் பாம்புகள்தான். கடிக்காது. கடித்தாலும் கூட விஷம் தாக்காது. அவற்றுக்கு விஷப் பற்களே இல்லை. வெறும் பற்கள்தான் உள்ளன. இவ்வகைப் பாம்புகள் மனிதர்கள் எல்லோரையும் கடிக்காது. ஸூபீகளும், ஸுன்னீகளுமே அவற்றின் குறிக்கோளாகும். சற்று சிந்தனையை விரித்து வாசிக்கவும்.
01. பாம்பில் பல வகை உண்டு. சுமார் 200 வகைகள் இருப்பதாக பாம்பு பற்றிய ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
وَالْحَيَّةُ أَنْوَاعٌ، مِنْهَا الرَّقْشَاءُ، وهي التي فيها نُقَطٌ سُوْدٌ وَبِيْضٌ، ويقال اَلرَّقْطَاءُ، وهو من أخبث الأفاعي،
பாம்புகளில் பல வகை உண்டு. அவற்றில் “றக்ஷாஉ” என்று ஒரு வகை உண்டு. இது “றக்தாஉ” என்றும் அழைக்கப்படும். இதுவே பாம்புகளில் மிகவும் கொடியதென்று சொல்லப்படுகிறது. பாம்புகளில் முடியுள்ள பாம்புகளும், கொம்புள்ள பாம்புகளும் உள்ளன. இவ்விரண்டும் இலங்கை நாட்டில் இல்லை. இருந்தாலும் அரிதிலும் அரிது.
“அர்பத்” عَرْبَدْ என்று ஒரு வகைப் பாம்பு உண்டு. இது எல்லா வகைப் பாம்புகளையும் சாப்பிட்டு விடும். “அஸ்ஸல்த்” என்றும் ஒரு வகைப் பாம்பு உண்டு. இது உருவத்தில் பெரியதாயிருக்கும். இதற்கு மனித முகம் போன்ற முகம் உண்டு. இது பல்லாயிரம் வருடங்கள் கடந்தாலும் உடலமைப்பில் எந்தவொரு மாற்றமும் இன்றியே இருக்கும். இதிலுள்ள அதி விஷேடம் என்னவெனில் மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் யாவையும் தன் பார்வையால் கொன்றுவிடும்.
பாம்பில் இன்னுமொரு வகையுண்டு. அது எப்பொருள் மீது நகர்கிறதோ, அல்லது ஓடுகிறதோ அப்பொருள் அக்கணமே எரிந்து சாம்பலாகிவிடும். இதற்கு “அஸ்ஸல்லு” என்று அறபியில் சொல்லப்படும். இது தங்கியிருக்கும் சூழலில் எந்த ஒரு வஸ்தும் முளைக்காது. புல், பூண்டு, செடி, மரம் போன்ற எதுவும் முளைக்காது. அந்தப் பாம்பு வசிக்குமிடத்திற்கு மேலால் பறவைகள் பறந்தால் அவை பறக்க முடியாமல் விழுந்துவிடும். எந்த ஓர் உயிரினமாவது அதன் அருகே சென்றால் அது எந்த உயிரினத்தைப் பார்க்கின்றதோ அவ் உயிரினம் உடனே செத்துவிடும். அது எதைத் தீண்டுகிறதோ அதுவும் செத்துவிடும். ஒருவன் குதிரையிலிருந்து கொண்டு அந்தப் பாம்புக்கு அம்பால் எய்தால் அவனும் செத்துவடுவான். குதிரையும் செத்துவிடும்.
இவ் வகைப் பாம்பு துருக்கி நாட்டிலுள்ள காடுகளிலேயே வசிக்கின்றது. “அஸ்ஸல்லு” என்று மேலே நான் குறிப்பிட்ட பாம்பின் தன்மைகள் கொண்ட மனிதப் பாம்பொன்று சில நேரங்களில் என்னை அவதானிப்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
கண்ணியத்திற்குரிய மர்ஹூம் அஷ்ஷெய்கு அப்துர் றஷீத் கோயா தங்கள் மௌலானா வாப்பா அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெரிய மனிதனைக் கடித்த பாம்பு அக்கணமே செத்துப் போயிற்று என்றும், அந்த மனிதருக்கு ஒரு தாக்கமும் ஏற்படவில்லை என்றும் மௌலானா வாப்பா என்னிடம் கூறியுள்ளார்கள். لُحُوْمُ الْأَوْلِيَاءِ مَسْمُوْمَةٌ “வலீமாரின் உடல்கள் நஞ்சூட்டப்பட்டவையாகும்” என்று ஓர் அருள் மொழி உண்டு. வலீமாரைக் கீழ்த்தரமாகப் பேசிய எவனும் உலகில் நிம்மதியாக வாழ்ந்ததுமில்லை. அவ்லியாஉகளும், ஸூபீ மகான்களும் தமது எதிரிகளுக்கு விஷப் பாம்புகளாவார்கள் என்பதை அவர்கள் புரிந்து திருந்த வேண்டும்.
ومنها الناظر، متى وقع نظرُه على إنسان مات الإنسان من ساعته، ومنها نوع آخر إذا سمع الإنسان صوتَه مات،
பாம்பில் இன்னொரு வகையுண்டு. அது மனிதனைப் பார்த்தால் போதும். அக்கணமே அவன் மரணித்து விடுவான். அதில் இன்னுமொரு வகை உண்டு. அதன் சத்தத்தை மனிதன் கேட்டால் அவன் அக்கணமே மரணித்து விடுவான்.
وقال كعب الأحبار: أهبط الله تعالى الحية بأصبهان، وإبليس بجدة، وحوّاء بعرفة، وآدم بجبل سرنديب وهو بأرض الصين في بحر الهند، عال يراه البحريون من مسافة أيام، وفيه أثر قدم آدم عليه الصلاة والسلام مغموسة في الحجر. ويرى على هذا الأثر كل ليلة كهيئة البرق من غير سحاب، ولا بد له في كل يوم من مطر يغسل موضع قدم آدم عليه الصلاة والسلام. ويقال: إن الياقوت الأحمر يوجد على هذا الجبل، ويوجد به الماس أيضا، وبه يوجد العُود، (قاله الغزويني رحمه الله)
அஷ்ஷெய்கு கஃபுல் அஹ்பார் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(அல்லாஹ் “இஸ்பஹான்” என்ற ஊரில் பாம்பை இறக்கினான். இப்லீஸ் என்பவனை “ஜித்தா”வில் இறக்கினான். அன்னை ஹவ்வா அலைஹஸ்ஸலாம் அவர்களை “அறபா” என்ற இடத்தில் இறக்கினான். நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை “ஸீன்” நாட்டில் இந்தியக் கடலில் இறக்கி வைத்தான். இது இலங்கையில் உள்ள உயரமான மலையில் உள்ளது. கடலுக்குச் செல்லும் மீனவர்கள் பல நாட்கள் தொலைவிலிருக்கும் போதே இம் மலையைக் காண்பார்கள். இந்த மலையிலேயே நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காற் பாதச் சுவடு கல்லில் பதிந்துள்ளது. இக்கல் உள்ள இடத்தில் இரவு நேரங்களில் மேகம் இன்றியே மின்னல் போல் தோற்றும். ஆதம் நபீ அவர்களின் காற் பாதம் பதிந்துள்ள கல்லை தினமும் கழுவுவதற்காக மழை பெய்யும். இந்த மலையில் சிவப்பு நிற மாணிக்கம், மற்றும் “அல் மாஸ்” “ஊத்” போன்றவை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த மலையில் வருடத்தில் ஒரு முறை விஷேட நிகழ்வுகள் இடம் பெறும். அக்கால கட்டத்தில் மத பேதமின்றி பௌதர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் அனைவரும் சென்று மத வழிபாடுகளில் ஈடுபடுவர். இந்துக்கள், முஸ்லிம்களை விட பௌத மக்களே அதிகம் செல்வர்.
கல்லில் பதிந்தள்ள காலடிப் பாதம் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காற் பாதச் சுவடு என்று முஸ்லிம்கள் சொல்வர். சிவ பெருமானின் காற்பாதச் சுவடு என்று இந்துக்களும், புத்த பெருமானின் காற் பாதச் சுவடு என்று பௌதர்களும் சொல்வர்.
இவ்வாறு அந்தச் சுவடு தொடர்பாக பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. யார் எவ்வாறு சொன்னாலும் உலகிலுள்ள வரலாறு தெரிந்தவர்களின் கருத்து அது நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பாதச் சுவடு என்பதேயாகும். முதல் நபீயின் காற் பாதம் இலங்கைத் திரு நாட்டில் பதிந்திருப்பது இந்நாடும், இந்நாட்டு மக்களும் பெற்ற பெரும் பாக்கியமேயாகும்.
تَزْعُمُ الْعَرَبُ أَنَّ الْأَفَاعِيْ صُمٌّ،
கிராமங்களில் வாழும் அறபீகள் பாம்புகள் எல்லாம் காது கேட்காதவை என்று கூறுகிறார்கள். பாம்புகள் யாவும் செவிப் புலன் இழந்தவை என்று நான் பல நூல்களில் வாசித்திருக்கிறேன்.
நபீ யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவர்களின் சகோதரர்கள் பாழடைந்த கிணறு ஒன்றில் எறியும் வரை பாம்புகள் செவிப்புலன் உள்ளவையாகவே இருந்தன. நபீ யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சகோதரர்கள் கிணற்றில் எறிந்த வேளை அங்கு கூடியிருந்த பாம்புகள் யாவும் செவிப் புலன்களை இழந்து விட்டன. அன்று முதல் உலகிலுள்ள பாம்புகள் யாவும் செவிப் புலன்களை இழந்தன என்று ஒரு தகவல் உண்டு. இதை ஏதோ ஒரு “தப்ஸீர்” திருக்குர்ஆன் விரிவுரை நூலில் வாசித்திருக்கிறேன். நூலின் பெயர் தற்போது என் நினைவில் இல்லை. நினைவு வந்தால் எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்! பாம்பு வைத்தியர்கள் இதை அறிந்திருப்பார்கள்.
பாம்புக்கு அறபு மொழியில் இருபது பெயர்கள் உள்ளன. இதேபோல் பதினான்கு புனைப் பெயர்களும் உள்ளன. அவை அவசியமில்லை என்பதால் எழுதவில்லை.
பாம்பில் உள்ள விஷேட அம்சங்களில் சிலதை இங்கு குறப்பிடுகிறேன்.
وزعم أهل الكلام فى طبائع الحيوان أنّ الحيّة تعيش ألف سنة، وهي فى كلّ سنة تسلخ جِلدَها، وتبيض ثلاثين بيضة،
மிருக ஆய்வாளர்களின் அறிக்கையின் படி பாம்புகள் ஆயிரம் வருடங்கள் வரை வாழும். அது ஒரு வருடத்திற்கு ஒரு முறை தனது சட்டையை கழற்றி விடும். அது முட்டையிடுவதாயின் முப்பது முட்டைகள் இடும். பாம்புக்கு நாக்கு ஒன்றுதான். ஆயினும் அது இரண்டாகப் பிழக்கப்பட்டுள்ளதால் இரு நாக்குகள் போல் தோற்றும். பாம்பு அதிகமாக உணவுகளைச் சப்பிச் சாப்பிட மாட்டாது. எந்த உணவாயினும் அதை விழுங்கியே சாப்பிடும். கபறக் கோயான், முதலை போன்றவையும் எதையும் சப்பி – சுவைத்துச் சாப்பிட மாட்டாது. விழுங்கியே சாப்பிடும். பாம்பு எலும்புள்ள ஓர் உயிர்ப் பிராணியை விழுங்கிவிடுமாயின் அதன் முள்ளை உடைத்து நொருக்கிச் சாப்பிடுவதற்காக ஒரு மரத்தைச் சுற்றி உடைத்துக் கொள்ளும். பாம்புக்கு உணவு கிடைக்காத போது அது காற்றை சுவாசித்து அதை உணவாக்கிக் கொள்ளும். பாம்பு உயிருள்ள ஒன்றைச் சாப்பிடுமேயன்றி செத்துப் போன எதையும் சாப்பிட மாட்டாது. எந்தப் பாம்பாயினும் அதற்கு கோழி முட்டை உணவாகக் கிடைப்பது அதற்கு விஷேட உணவாக இருக்கும். பாம்பு நீண்ட காலம் வாழ்ந்து வயது முதிர்ந்து விட்டால் சாப்பிடுவதை நிறுத்தி காற்றையே சுவாசித்து அதை உணவாகக் கொள்ளும். பாம்பு வயதாகிவிட்டால் அதன் உடல் சிறியதாகிவிடும். பாம்பு அதிகமாக நீர் அருந்தாது. அருந்தினாலும் அதிகமாக அருந்தும். சில வேளை அந்த நீரே அதன் மரணத்திற்கு வழியாகியும் விடும். பாம்பின் கண் மனிதனின் கண் போன்றதல்ல. அதன் கண் ஓர் இடத்தில் ஆணி அடித்து பதிக்கப்பட்டது போன்றே இருக்கும். இதனால் தலையைத் திருப்பாமல் அதனால் பல பக்கங்களிலும் பார்க்க முடியாது.
பாம்பின் கண்ணிலுள்ள விஷேடங்களில் ஒன்று அதன் கண்ணைக் கழட்டி எடுத்தால் மீண்டும் அதற்கு கண் முளைத்து விடும். இவ்வாறுதான் அதன் விஷப் பல்லுமாகும். அதைக் கழற்றி எடுத்தால் மூன்று நாட்களின் பின் மீண்டும் முளைத்து விடும்.
பாம்புக்கு நாம் ஏதாவது செய்தால்தான் அது நம்மைக் கடிக்கும். இன்றேல் அது நமக்கு ஒரு தீமையும் செய்யாது. ஆனால் மனிதனோ அவனுக்கு நாம் எத்தீமை செய்யாது போனாலும் கூட அவன் நமக்குத் தீமை செய்யும் சுவாபம் உள்ளவனேயாவான்.
மனித பாம்புகள் என்று நான் மேலே குறிப்பிட்டது விஷமுள்ள மனிதனையே குறிக்கும்.
தொடரும்…