தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
الجنّةُ للمُطيع ولو كان عبدا حبشيا، والنارُ للعاصي ولو كان عبدا قرشيا،
சுவர்க்கம் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடப்பவனுக்கே. அவன் கறுப்பு நிற அடிமையாயினும் சரியே!
நரகம் அல்லாஹ்வுக்கு மாறு செய்பவனுக்கே. அவன் குறைஷிக்குல அடிமையாயினும் சரியே!
وَلَوْ سَرَقَتْ فَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ لَقَطَعْتُ يَدَهَا،
முஹம்மத் உடைய மகள் பாதிமா திருடினாலும் அவர் கையை நான் தறிப்பேன். (நபீ மொழி)
நீதி என்பது அரசனுக்கும் ஒன்றுதான். ஆண்டிக்கும் ஒன்றுதான். பணக்காரனுக்கு ஒரு நீதியும், ஏழைக்கு இன்னொரு நீதியும் இஸ்லாமில் இல்லை. திருமணம் செய்த மனைவியுடன் வாழ்பவன் விபச்சாரம் செய்தால் அவன் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டியவனே. அவன் ஒரு நாட்டின் அரசனாயினும் சரியே! இதேபோல் திருமணம் செய்து கணவனுடன் வாழ்பவள் விபச்சாரம் செய்தால் அவளும் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டியவளே! இது இஸ்லாமிய சட்டம். இஸ்லாமிய நாடுகளில் இதை அமுல் செய்ய முடியும்.
வெள்ளைக் காரர்களின் நாடுகளில் நீதி செழித்து வளர்கிறது. எமது இலங்கைத் திரு நாட்டில் நீதி மரணப்படுக்கையில் கிடக்கிறது.
ஒரு நாட்டின் அரசன், அல்லது ஜனாதிபதி நீதியானவனாயும், கொள்கைவாதியாகவும், பார பட்சம் காட்டாத ஒருவனாகவும் இருந்தால் மட்டுமே அந்த நாடு இறையருள் பெற்ற நாடாக ஒளிரும்.
ஒரு நாட்டின் உலமா சபைத் தலைவராயிருப்பவரும் மேற்கண்டவாறே இருக்க வேண்டும். நமது நாட்டின் ஜனாதிபதி அவர்களும், உலமா சபைத் தலைவர் அவர்களும் எப்படியானவர்கள் என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.
நான் ஓர் அரசியல்வாதியல்ல. ஆகையால் இந் நாட்டு ஜனாதிபதி பற்றியோ, அரசாங்கம் பற்றியோ என்னால் ஒன்றும் சொல்ல முடியாது.
ஆயினும் நான் ஒரு மார்க்கவாதி – ஓர் ஆலிம் என்ற வகையில் மார்க்கத்துடன் தொடர்புடைய குறை நிறைகளை என்னால் ஓரளவு சொல்ல முடியும்.
நமது நாட்டிலுள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் தம்பி ரிஸ்வி முப்தி அவர்கள் மும்மொழிகள் தெரிந்தவர் என்பதும், ஆளுமை உள்ளவர் என்பதும் மறுக்க முடியாத உண்மைகளாகும். ஆயினுமிவர் நீதி நியாயம் தெரியாத, மனச்சாட்சி இல்லாத, இஸ்லாமிய சட்டங்கள் சரியாகத் தெரியாத, ஸூபிஸ வாடையைக் கூட நுகராத, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் இருந்ததால் எல்லா முயல்களுக்கும் மூன்று கால்கள்தான் என்று வாதிடக் கூடிய ஒருவர் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
ளாஹிரும் தெரியாத, பாதினும் தெரியாத, ஸூபிஸமும் தெரியாத, ஸுன்னிஸமும் தெரியாத, இஸ்லாமிய கொள்கை விளக்கமும் தெரியாத 1979ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த உலமா சபையால் கண்களை மூடிக் கொண்டு வழங்கப்பட்ட “முர்தத்” பத்வாவை பரிசீலனை செய்யாமல் அதே பத்வாவை இன்று அமுல்படுத்திக் கொண்டிருப்பவர்தான் தற்போதுள்ள தலைவர் தம்பி ரிஸ்வி முப்தீ ஆவார். இவர்தான் அவர்களால் வழங்கப்பட்ட பத்வாவை இன்று வரை அமுல் செய்து இன்ப வெள்ளத்தில் நீச்சலடித்து மகிழும் ரிஸ்வி முப்தீ ஆவார்.
இவர் மார்க்க சட்டப்படி உலமா சபைக்குத் தலைவராயிருப்பதற்கு பொருத்தமற்றவராவார்.
இவர்தான் சில வருடங்களுக்கு முன் பௌத மக்களின் விஷேட தினமான வெசக் தினம் கையில் வெசக் விளக்கேந்தி மரியாதை செய்து நின்ற உலமா சபைத் தலைவரும், முப்தீயுமாவார்.
இவரை உலமா சபைத் தலைவர் என்றோ, குறைந்தபட்சம் ஒரு முஸ்லிம் என்று சொல்வதற்கோ வெட்கமாயுள்ளது. முஸ்லிம் பெயரிலுள்ள ஒரு குடிகாரன், அல்லது காடையன், அல்லது மார்க்கம் தெரயாதவர் இவர் செய்த அதே வேலையைச் செய்திருந்தால் அது எடுபடாது. ஆனால் இவரோ ஓர் ஆலிம். இது மட்டுமல்ல. உலமா சபையின் தலைவர். இது மட்டுமல்ல ஒரு முப்தீயுமாவார். இவரே இப்படியான மார்க்கத்திற்கு முரணான, கீழ்த்தரமான, ஒரு முஸ்லிம் நினைத்துக் கூடப் பார்க்காத செயலைச் செய்தது முஸ்லிம் சமூகம் கிளர்ந்தெழுந்து எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய ஒரு விடயமாகும்.
தனக்கு முன்னிருந்த அறிவிலிகளால் வழங்கப்பட்ட போலி “பத்வா”வை அமுல் படுத்துவதில் வரிந்து கட்டிக் கொண்டு செயல்படும் இவருக்கு “பத்வா” என்ன?
உலமா சபையின் “பத்வா” குழுவே!
நீங்கள் ஆளுக்கு “பத்வா” கொடுக்கிறீர்களா? அல்லது அவனால் ஏற்படுகின்ற சொற் செயல்களுக்கு பத்வா கொடுக்கிறீர்களா? ஒருவனால் ஏற்படுகின்ற சொற் செயல்களுக்கே பத்வா கொடுக்கிறோம் என்று நீங்கள் சொல்வீர்களாயின் சில வருடங்களுக்கு முன் பௌத மக்களின் விஷேட தினமான வெசக் தினத்தில் ரிஸ்வி முப்தி அவர்களும், இன்னுமிருவரும் தொப்பியும் போட்டுக் கொண்டு பௌத மதப் பொது மக்கள் போல் கையில் வெசக் விளக்கேந்தி பக்திப் பரவசத்துடன் போட்டோவுக்கு “போஸ்” கொடுத்து நின்றார்களே!
இவர்களுக்கு நீங்கள் “பத்வா” கொடுத்தீர்களா? எப்போது கொடுத்தீர்கள்? எவ்வாறு கொடுத்தீர்கள்? பகிரங்கமாகச் சொல்லுங்கள். உங்கள் பத்வாவை நாங்களும் பரிசீலிக்க வேண்டும்.
எனக்கு வழங்கிய பத்வாவில் எத்தனையோ தில்லு முல்லுகளும், இருட்டடிப்புக்களும் செய்துள்ளீர்கள். அவற்றைச் சுட்டிக்காட்டிப் பல முறை உங்களிடம் விளக்கம் கேட்டும் கூட நீங்கள் ஒரு விளக்கமும் தரவில்லை.
மார்க்க சட்டம் உங்களுடைய வீட்டுச் சொத்தல்ல. நீங்கள் விரும்பியவாறு அதில் கையாள முடியாது. அதற்கு உங்களுக்கு அதிகாரமும் இல்லை. அனுமதியுமில்லை.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ»
எவன் காபிர்களின் எந்தக் கூட்டத்திற்கு ஒப்பாகிறானோ அவன் அக்கூட்டத்தைச் சேர்ந்தவனே! என்று நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
(ஸுனன் அபீ தாவூத், முஸ்னதுல் பஸ்ஸார், அல் முஃஜமுல் அவ்ஸத்)
தம்பி ரிஸ்வி முப்தி அவர்கள் வெசக் தினம் “ரித்தத்” மத மாற்றத்தை ஏற்படுத்தும் செயலைப் பகிரங்கமாகச் செய்தும் கூட அவருக்கு “ஷரீஆ”வின் சட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமலிருப்பதற்கு என்ன காரணம்? அவர் “முகல்லப்” இல்லையென்றா? உலமா சபை முப்தீகளின் நடவடிக்கை பாரபட்சமாக இருப்பது வேதனைக்குரியதும், முஸ்லிம்களால் தட்டிக் கேட்கப்பட வேண்டிய விடயமுமாகும்.
முல்லாக்களே! நான் பேசியது மார்க்கத்திற்கு முரணானதென்று நீங்கள் கருதியதினால்தான்தானே எனக்கு “முர்தத்” பத்வா வழங்கினீர்கள். அவ்வாறாயின் தம்பி ரிஸ்வி முப்தி அவர்களின் செயல் மார்க்கத்திற்கு முரணானதென்று நீங்கள் கருதவில்லையா? அப்படியானால் சொல்லுங்கள். இன ஒற்றுமை கருதி வெசக் தினத்தில் முஸ்லிம்களையும் வெசக் விளக்கேந்தி இன ஒற்றுமைக்கு வழி செய்யலாம். அதேபோல் இந்து மதக் கோவில்களில் இடம்பெறும் தேர் இழுக்கும் வைபவத்தில் கலந்து கொள்ளச் செய்தும் இன ஒற்றுமைக்கு வழி செய்யலாம்.
திருக்குர்ஆனும், நபீ மொழிகளும், மற்றும் இமாம்களும், மகான்களும், வலீமார்களும் கூறிய “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை கூறிய எனக்கும், நான் கூறிய கருத்தைச் சரி கண்ட பல்லாயிரம் மக்களுக்கும் “முர்தத்” பத்வா வழங்கப்பட்டதென்றால் ஒரு நாட்டின் உலமா சபைத் தலைவரே பகிரங்கமாக மார்க்கத்திற்கு முரணான செயலைச் செய்கிறார் என்றால் குறைந்த பட்சம் அவரை விசாரித்திருக்கவும் வேண்டும். அவரை எச்சரித்து “தஃஸீர்” செய்தும் இருக்க வேண்டும். நீங்கள் அவருக்கு என்ன செய்தீர்கள்? இதுதான் உங்களின் மார்க்கமா? இதுதான் உங்களின் நியாயமா?
“பத்வா” எனும் இவ் அநீதியை எதிர்த்து எனது இறுதி மூச்சு வரை நியாயம் கேட்டுக் கொண்டே இருப்பேன்.