தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
قُلْ سِيرُوا فِي الْأَرْضِ ثُمَّ انْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ
நீங்கள் பூமியில் பயணித்து அல்லாஹ்வைப் பொய்யாக்கியவர்களின் இறுதி முடிவு எப்படியாயிற்று என்று பாருங்கள் என்று கூறுவீர்களாக! (06-11)
செத்த கடல் – சாக்கடல்:
இக்கடல் “ஜோர்தான்” நாட்டில் உள்ளது. இது சாக்கடல் – செத்த கடல் என்று தமிழிலும், dead sea என்று ஆங்கிலத்திலும், اَلْبَحْرُ الْمَيِّتْ என்று அறபு மொழியிலும் அழைக்கப்படுகிறது.
நானும் எனது அன்பிற்குரிய அல்ஹாஜ் MCM ஹுஸைன் அவர்களும், அல்ஹாஜ் நஸார் அவர்களும் 2000ம் ஆண்டு இறை நேசர்களின் தரிசனத்தைக் குறிக்கோளாகக் கொண்டும், மேற்கண்ட திரு வசனத்தைக் கருத்திற் கொண்டும் இந்தியா, இறாக், ஈரான், ஜோர்தான், சிரியா முதலான நாடுகளுக்குச் சென்றிருந்தோம்.
இந்தியாவில் தமிழ் மானிலம், கேரள மானிலம், மற்றும் சில மானிலங்களும் சென்று இறைஞான மேதைகளின் தரிசனங்களை முடித்துக் கொண்டு “ஜோர்தான்” சென்று அங்கு அடக்கம் பெற்றுள்ள நபீ தோழர்கள், மற்றும் வலீமாரின் தரிசனங்களையும், சில நபீமாரின் அடக்கத்தலங்கள் சென்று அவர்களின் தரிசனங்களையும் முடித்துக் கொண்டு ஜோர்தானில் இஸ்லாமிய வரலாற்றோடு தொடர்புள்ள இடங்களையும், மற்றும் சின்னங்களையும் கண்டு களித்தோம்.
ஜோர்தானிலுள்ள விஷேடங்களில் “செத்த கடல்” என்று வரலாற்றுடன் தொடர்புள்ள ஓர் இடம் உண்டு.
இக்கடல் பற்றிய விபரம் பின்னால் எழுதப்படும்.
இன்று கடலாக உள்ள இவ்விடம் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் பெரும் நகராக இருந்தது. இங்கு வாழ்ந்த மக்களுக்கு நபீயாக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் நபீ “லூத்” அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களாவர். இங்கு வாழ்ந்த மக்கள் தன்னினச் சேர்க்கை, மதுபானம் அருந்துதல், விபச்சாரம், கொலை, கொள்ளை போன்ற பாவங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். நபீ “லூத்” அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இராப் பகலாக, காலை மாலையாக அவர்களை நல் வழிக்கு அழைத்தும் அவர்கள் நபீ லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அழைப்புக்கு செவி சாய்க்கவில்லை. அவர்களின் அட்டூழியமும், அட்டகாசமும் வரம்பைக் கடந்து சென்றன.
இவர்கள் மீது கோபம் கொண்ட அல்லாஹ் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அட்டூழியம் செய்யும் மக்கள் வாழும் இவ் ஊரை தலை கீழாய்ப் புரட்டுவீராக என்று கட்டளையிட்டான். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவ்வாறே செய்தார்கள். அன்று முதல் அவ் ஊரிலிருந்த கட்டிடங்கள், வீடுகள் எல்லாம் அழிந்து தவிடு பொடியாயின. அங்கு வாழ்ந்த மக்களும் கொல்லப்பட்டனர். இறுதியில் அவ் இடம் இன்று காணப்படுவது போல் கடல் போலாயிற்று.
நாங்கள் மூவரும் ஜோர்தான் சென்ற போது இக்கடலைப் பார்ப்பதற்காக வாகனத்தில் அங்கு சென்றோம். வாகனத்தில் ஏறும் போதே நீங்கள் சாபத்திற்குள்ளான இடத்திற்குச் செல்கிறீர்கள். அங்கு நீண்ட நேரம் தாமதியாமல் வந்து விட வேண்டும் என்று வாகன சாரதி எச்சரித்தார். நாங்கள் சென்ற வேளை அக்கடல் ஆறுபோல் அலையில்லாமல் இருந்தது. அங்கு நின்று பார்த்த போது பலஸ்தீனில் உள்ள மலை எங்களுக்குத் தெரிந்தது. நாங்கள் அக்கடலில் இறங்கி சுமார் மூன்று மீற்றர் அளவு சென்ற போது கார் சாரதி தூரம் செல்ல வேண்டாம். இவ்விடத்தில் தாமதிக்கவும் வேண்டாம் என்று எச்சரித்தார். நான் மட்டும் ஒரு பிடி நீரைக் கையால் எடுத்து வாயில் வைத்து சுவைத்துப் பார்த்தேன். உப்பு நீரை விடக் கசப்பாக அந்த நீர் இருந்தது. சாரதி அவசரப்படுத்தியதால் தாமதிக்காமல் வந்து விட்டோம்.
வரும் வழியில் நபீ ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அடக்கத்தலம் ஒரு மலையில் இருந்தது. அங்கும் சென்று அவர்களைத் தரிசித்து “துஆ”வும் செய்துவிட்டு வந்தோம்.
ஜோர்தான் சிற்றியிலிருந்து சற்றுத் தூரத்தில் – மலைப் பிரதேசத்தில் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் “ஸஹாபீ” தோழர் ஒருவரின் அடக்கத்தலம் உண்டு. அங்கு அடக்கம் பெற்றுள்ள நபீ தோழர் “ஜஃபர் இப்னு அபீதாலிப்” அவர்கள்தான். தங்களின் இரு கரங்களையும் இழந்து ஆகாயத்தில் பறந்து யுத்தம் செய்து “ஷஹீத்” ஆன நபீ தோழராவார்கள். அவர்களின் உடல் அங்குள்ள ஒரு சிறிய பள்ளிவாயலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் கை பள்ளிவாயலுக்கு வெளியே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவ்விடம் கடுமையான குளிர் பிரதேசம். இங்குதான் “மூதா” யுத்தம் நடைபெற்றது. இவ் யுத்தம் நடந்த நேரம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் உயிரோடு இருந்தார்களாயினும் அவர்கள் இப்போரில் கலந்து கொள்ளவில்லை. திரு மதீனா நகரில் இருந்து கொண்டே கையை இழந்த தோழருக்காக “துஆ” செய்தார்கள். இவ்விடத்துக்கு நாங்கள் சென்ற சமயம் கடும் குளிர் காலமாயிருந்ததால் கூதல் தாங்க முடியாமல் சிறிது நேரம் மரணத்தின் வாடையை நுகர்ந்தவர்களாக ஓர் இடத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டோம்.
ஜோர்தானிலுள்ள ஒரு பிரதேசத்தில்தான் “அஸ்ஹாபுல் கஹ்ப்” குகைவாசிகள் ஒரு நொடி நேரம் கூட விழிக்காமல் தொடராக 309 வருடங்கள் உறங்கிய குகை உண்டு. நாங்கள் மூவரும் குகைக்குள் சென்றோம். குகை வாசிகள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் பாவித்த சில பொருட்களும், அவர்கள் சாப்பிட்டு மிஞ்சிய ரொட்டித் துண்டு ஒன்றும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு எமது நாட்டங்களை பெற்றுக் கொண்டு இன்னும் பல வரலாற்றோடு தொடர்புள்ள இடங்களுக்கும் சென்ற பின் இறாக் நாட்டுக்குச் சென்றோம்.
ஜோர்தானுக்கும், இறாக் நாட்டுக்குமிடையில் கல் மழை பெய்த இடம் ஒன்று உண்டு. இஸ்லாமிய வரலாற்றில் வரம்பை மீறி அநீதி, அட்டூழியம் செய்த ஒரு கூட்டம் கல் மழையால் அழிக்கப்பட்டார்கள். அவ் இடம் ஜோர்தானுக்கும், இறாக்கிற்கும் இடையில் உள்ளது. அவ்விடத்தில் நாங்கள் இறங்கி மழையாகப் பொழியப்பட்ட கற்களின் மேல் ஏறி நின்றோம். இதைக் கண்ட வாகனச் சாரதி எவரும் இங்கு இறங்கி தாமதிப்பதுமில்லை, கல்லின் மீது ஏறுவதுமில்லை. இது இறை சாபம் இறங்கிய இடம். அவசரமாக வெளியேற வேண்டும் என்று கூறினார்.
நான் அவ்விடத்திற்குச் செல்லுமுன் அங்கு மழையாகப் பொழியப்பட்ட கற்கள் பேரீத்தம் பழக் கொட்டைகள் போன்று சிறியதாக இருக்குமென்றே நினைத்திருந்தேன். ஆனால் அங்கு சென்று நேரில் கண்ட பிறகுதான் “ஸுப்ஹானல்லாஹ்!” என்று நான் நினைக்காமலேயே என் நாவு சொல்லத் தொடங்கியது. சில கற்கள் சுமார் 50 அல்லது 100 கிலோ பாரமுள்ளது போலும், இன்னும் சில கற்கள் 1000 கிலோ பாரமுள்ளது போலும் இருந்தன. அவற்றில் ஒரு சிறு கல்லைத் தூக்கிய போது வாகன ஓட்டுநர் என்னைத் தடுத்து இது சாபத்திற்குரிய இடம் தாமதிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
அன்றிரவு சுமார் 10 மணியளவில் இறாக் நாட்டின் தலை நகரான “பக்தாத்” நகரை அடைந்து ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தோம். அது மூன்று நட்சத்திர ஹோட்டல். “குர்திஷ்”களுக்கு சொந்தமானது. குத்பு நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் “தர்ஹா ஷரீப்” அடக்கவிடத்திற்கும், இதற்கும் சுமார் 30 மீற்றர் தூரம் மட்டுமே இருக்கும்.
தினமும் “ஸுப்ஹ்” தொழுகைக்காக முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களின் பள்ளிவாயலில் தொழுது விட்டு அவர்களின் தரிசனத்திற்காக அவர்கள் துயிலும் அறைக்குள் சென்றால் சுமார் 09 மணி வரை அங்கிருந்து எம்மால் முடிந்த வணக்க வழிபாடுகள் செய்வோம். மாலை 05 மணிக்கு மீண்டும் அங்கு சென்றால் இரவு 09 மணி வரை அங்கேயே இருப்போம். ஓதுவோம். தொழுவோம். அவர்களிடம் நேரில் உதவிகள் கேட்போம். இவ்வாறு சுமார் 20 நாட்கள் அங்கு தங்கியிருந்தோம். எங்களின் “இறாக் வீஸா” முடிந்து விட்டது.
“சிரியா” செல்வதற்கு “வீசா” தாமதமானதால் மீண்டும் சில நாட்கள் அங்கு தங்கியிருந்து “சிரியா”வின் தலைநகரான “டமஸ்கஸ்” சென்றோம். அங்கு மூன்று நாட்கள் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்து சிரியாவிலுள்ள நபீமார், வலீமார், மற்றும் நபீ தோழர்கள், அவர்களின் மனைவியர், மற்றும் அங்குள்ள இஸ்லாமிய வரலாற்றோடு தொடர்புள்ள இடங்கள் அனைத்தையும் பார்வையிட்டோம்.
அல்லாஹ் ஒரு “திமஷ்கீ” அல்லது ஒரு “ஷாமீ”யின் தோற்றத்தில் “தஜல்லீ” வெளியாகி எங்களின் வழிகாட்டியாகப் பணிபுரிந்தான். அவர் ஒரு சிரியா வாசி. ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ நாயகம் அவர்களின் தர்ஹாவில் அறிமுகமானார். முன்பின் அறிமுகமில்லாத ஓர் அறபீயைக் கவர்ந்தது நான் அறபியில் ஓதிய “துஆ” என்றே நினைக்கிறேன்.
“துஆ” ஓதி முடிந்ததும் அந்த அறபீ என்னுடன் பேசினார். அவர் அங்குள்ள பல்கலைக் கழக மாணவர். தலை நகரைச் சேர்ந்தவர். அவர் வலீமாரின் பக்தராகவும், வஹ்ஹாபிஸத்ததிற்கு மறுப்பானவராகவும் இருந்தாலும் “தஸவ்வுப்” ஸூபிஸ ஞானம் – “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை மண்ணளவும் தெரியாதவராயிருந்தார். இதனால் அவர் தொடர்ந்து மூன்று நாட்கள் எங்களுடனேயே இருந்தார்.
சாக்கடல் பற்றிய விபரம்:
சாக்கடல் அல்லது இறந்த கடல் (dead sea, எபிரேயம்: உப்புக் கடல்) அரபு: البحر الميت) என்னும் நீர்நிலையானது மேற்குக் கரை, இஸ்ரேல், ஜோர்தான் ஆகியவற்றின் எல்லையில், பெரும் பிளவுப் பள்ளத்தாக்கின் ஜோர்தானியப் பகுதியில் அமைந்துள்ளது. இக் கடலில் உயிரினங்கள் வாழ முடியாமையினாலேயே இது சாக்கடல் அல்லது இறந்த கடல் என அழைக்கப்படுகிறது.
முழுவதுமாக நிலத்தால் சூழப்பட்ட இக்கடல் ஓர் உவர் நீரேரி ஆகும். 377 மீட்டர் (1237 அடி) ஆழமுடைய சாக்கடல், பொதுவான கடல் நீரிலுள்ள உப்புத்தன்மையை விட 8.6 மடங்கு அதிகளவு உவர்ப்புடைய நீரைக் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து தற்போது 423 மீட்டர் (1388 அடி) கீழே அமைந்திருக்கிற சாக்கடல் தொடர்ந்தும் கீழிறங்குகிறது. இவ்விறக்கம் பூமியின் மேல் ஓடுகளின் விரிசலினால் ஏற்படுகிறது.
உப்புத் தன்மை மிகுந்திருப்பதால் இந்த ஏரியில் உயிரினங்கள் வாழ்வது அரிது. எனவே சாக்கடல் என்னும் பெயர் எழுந்தது. சாக்கடலின் நீளம் 67 கி.மீ (42 மைல்) மிகுதியான அகலம் 18 கி.மீ (11 மைல்). இதற்கு ஜோர்தான் ஆற்றிலிருந்தே பெருமளவில் நீர் கிடைக்கிறது. சாக்கடலுக்கு அடியிலும் அதைச் சுற்றியும் உள்ள நீரூற்றுகளிலிருந்தும் நீர் கிடைக்கிறது. இதனால் இந்த ஏரியைச் சுற்றி சிறிய நீர்த்தேக்கங்களும் புதைமணல் பகுதிகளும் உருவாகியுள்ளன.
உயிரினங்கள்:
அதிகளவு உவர்ப்புத் தன்மையுடைய நீரில் மீன்களோ தாவரங்களோ வாழ முடியா விட்டாலும் மிகச் சிறியளவில் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. மழைக் காலத்தில் உப்புத் தன்மை சற்றுக் குறைவதால் குறுகிய காலத்திற்கு சாக்கடலில் உயிரிகள் வாழும். 1980ம் ஆண்டில் மழைக்காலத்தின் பின் (வழமையாக கடும்நீல நிறத்தில் காணப்படும்) சாக்கடல் செந்நிறமாக மாறியது குறிப்பிடத்தக்கது. பெருமளவில் காணப்பட்ட டுனலியெல்லா என்கிற ஒரு வகைப்பாசியை உண்ட சிவப்பு நிறமிகளைக் கொண்ட நுண்ணுயிரிகளே செந்நிறத்திற்குக் காரணம் என அறிவியலாளர் கண்டறிந்தனர்.
சாக்கடல் பகுதியில் பல்லினப் பறவைகளும் ஒட்டகம், முயல், நரி, சிறுத்தை போன்ற விலங்குகளும் வாழ்கின்றன. இஸ்ரேல், ஜோர்டான் நாடுகள் இயற்கைப் புகலிடங்களை (சரணாலயங்களை) இப்பகுதியில் அமைத்துள்ளன.
ஒரு காலத்தில் பப்பைரஸ் மற்றும் தென்னை மர இனத் தாவரங்கள் பெருமளவில் காணப்பட்டன.
மனித வரலாறு:
உலகிலேயே மிக நீண்ட காலமாக மக்கள் தொடர்ந்து வசித்து வருமிடமாக சாக்கடலுக்கு அண்மையிலுள்ள ஜெரிக்கோ (எரிக்கோ) நகரம் நம்பப்படுகிறது. விவிலியத்தில் குறிப்பிடப்படும் சோதோம், கொமொரா நகரங்கள் சாக்கடலின் தென்கீழ்க் கரைக்கண்மையில் அமைந்துள்ளன என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். வேதாகமம் விவிலியத்தில் பழைய ஏற்பாட்டின்படி சோதோம், கொமோரா ஆகிய இந்நகரங்கள் ஆபிரகாம் காலத்திலே கடவுளால் அழிக்கப்பட்டது தொடக்க நூல் 19:1-9). சவுல் அரசன் தாவீதை கொலை செய்யத் தேடியபோது தாவீது மறைந்திருந்த குகை சாக்கடலுக்கண்மையில் உள்ள எய்ன் கெடியில் அமைந்துள்ளது.
எகிப்திய அரசி கிளியோபட்ரா சாக்கடலின் கரையோரத்தில் கிடைத்த கனிமங்களைக் கொண்டு அழகு சாதனப் பொருட்கள், மற்றும் மருந்து வகைகள் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவ, உரிமம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அடைவதற்குக் கடினமான இடமாக இருந்தமையால் கிரேக்க மரபுவழி திருச்சபை சாதுக்களை பைசன்டைன் காலம் முதல் இவ்விடம் ஈர்த்தது. ‘வாடி கெல்ட்’ல் உள்ள ‘புனித ஜோர்ஜ்’ மற்றும் யூதேயப் பாலைவனத்திலுள்ள ‘மர் சாபா’ ஆகிய தங்குமிடங்கள் இப்போது யாத்திரைத் தலங்களாக விளங்குகின்றன.
தொடரும்…