தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இஸ்லாமிய ஸூபிஸம் பேசிய என்னையும், நான் பேசிய கருத்தைச் சரி கண்ட இந்நாட்டு முஸ்லிம்களையும், வெளிநாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம்களையும் “முர்தத்” மதம் மாற்றி பிழையான “பத்வா” கொடுத்தது மட்டுமன்றி எங்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டுமென்றும் அந்த “பத்வா”வில் எழுதியுள்ள முல்லாக்களான முப்தீகளே!
எங்களைக் “காபிர்”கள் என்றும், “முர்தத்”கள் என்றும் “பத்வா” வழங்குவதற்கு நீங்கள் யார்? உங்களுக்கு அந்த அதிகாரம் தந்தது யார்?
“பத்வா” வழங்குவதற்கான தகுதி உங்களிடம் உண்டா? “பத்வா” வழங்கும் “முப்தீ”களிடம் இருக்க வேண்டிய தகுதிகளும், தராதரங்களும் உங்களிடம் உண்டா? நீங்கள் சொல்கிறீர்களா? அல்லது நான் சொல்லவா? நீங்கள் சொல்லத் தவறின் நான் சொல்வேன். எதிர்பாருங்கள்.
2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதிக்குள் நீங்கள் உங்களின் அநீதியான, பொய்யான, உருட்டுப் புரட்டு நிறைந்த “பத்வா” வை வாபஸ் பெற வேண்டும். தவறினால் “பத்வா” விவகாரம் ஐ.நா வரை செல்லும் என்பதை முன் கூட்டியே உங்களின் கவனத்திற்கு தருகிறேன்.
நான் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசியிருக்கும் நிலையில், “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை பிழையென்று “பத்வா” கொடுத்துவிட்டு அதில் என் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறீர்களே இது உங்களின் இருட்டடிப்பா? இல்லையா? அநீதியா? இல்லையா?
நீங்கள் வழங்கிய “பத்வா”வை உங்களாலேயே அமுல் செய்ய முடியாதிருப்பதையறிந்து உங்களுக்கு ரோஷம் வரவில்லையா? உங்கள் “பத்வா”வை பீக்குழியில் தூக்கியெறிந்துவிட்டு பல்லாயிரம் மக்கள் என்னுடன் இணைந்து செயல்படுவதை நீங்கள் காணவில்லையா? அல்லது காணாதவர்கள் போல் நடிக்கிறீர்களா?
உங்களின் “பத்வா”வை உங்களாலேயே அமுல் செய்ய முடியாதிருக்கிறதே! ஏன் “பத்வா” கொடுத்தீர்கள்? “பத்வா” கொடுப்பது மட்டுமா மார்க்கம்? அதை அமுல் செய்வது மார்க்கமில்லையா?
உங்களின் “பத்வா” 20ம் பக்கத்தில் மதம் மாறிய ஒருவன் இஸ்லாமிய சட்டப்படி கொலை செய்யப்பட வேண்டுமென்று எழுதியுள்ளீர்களே! உங்களின் “பத்வா”வின் படி எனது கருத்தைச் சரி கண்டவர்கள் இலங்கை நாடு முழுவதும் பரந்து வாழ்கிறார்களே! இவர்களை நீங்கள் ஏன் கொலை செய்யவில்லை? 43 ஆண்டுகளில் ஒருவரை மட்டும்தானே உங்களால் கொலை செய்ய முடிந்தது. ஏனையோரைக் கொலை செய்யாமலிருப்பதேனோ? பயமா? பயமுள்ள நீங்கள் ஏன் “பத்வா” கொடுத்தீர்கள்?
உங்களின் “பத்வா” 20ம் பக்கத்தில் ஒரு “முர்தத்” மரணித்தால் ஒரு முஸ்லிமின் ஜனாசாவுக்குச் செய்யப்பட வேண்டிய கடமைகள் செய்யத் தேவையில்லை என்று எழுதியுள்ளீர்களே!
இன்று இலங்கையில் உள்ள எனது கொள்கை ஆதரவாளர்கள் மரணித்தால் அவர்களுக்கு நான்கு கடமைகளும் செய்துதானே அடக்குகிறார்கள். இதைத் தடுப்பதற்கு முடியாமல்தானே உள்ளீர்கள்? பயமா? பயமுள்ள நீங்கள் ஏன் “பத்வா” கொடுத்தீர்கள்?
ஒருவன் மதம் மாறினால் அவனால் மார்க்கக் கடமைகள் செய்தால் அவை நிறைவேறாதென்று அதே பக்கத்தில் எழுதியுள்ளீர்களே! இலங்கையில் எனது ஆதரவாளர்களால் மார்க்கக் கடமைகள் செய்யப்படவில்லையா? இதை நீங்கள் ஏன் தடுக்கவில்லை? பயமா? பயமென்றால் ஏன் “பத்வா” கொடுத்தீர்கள்?
43 ஆண்டுகளிலும் எனது ஆதரவாளர்கள் ஐந்தாயிரத்துக்கும் அதிகமானோர் மரணித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் முஸ்லிம் மையவாடியிலேயே அடக்கப்பட்டுள்ளார்கள். உங்களின் “பத்வா”வின் படி இது “ஹறாம்” அல்லவா? ஏன் நீங்கள் தடுக்கவில்லை? பயமா? பயம் என்றால் ஏன் நீங்கள் “பத்வா” கொடுத்தீர்கள்? “ஜனாசா”வுக்குரிய கடமைகள் மதம் மாறியவர்களைக் கொண்டு செய்யப்பட்டிருந்தால் செல்லுபடியாகாதென்று உங்களின் பத்வாவில் எழுதியுள்ளீர்களே! அவ்வாறாயின் முழு நாட்டிலும் எனது கருத்தைச் சரிகண்ட, உங்களின் அட்டூழியத்தைப் பயந்து இலைமறைகாய் போல் வாழும் உலமாஉகளைக் கொண்டு “ஜனாசா” கடமைகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்ட பல்லாயிரக் கணக்கான ஜனாசாக்களை என்ன செய்வது? தோண்டியெடுப்பதா? அவ்வாறு தோண்டியெடுத்து அவர்களுக்கான கடமைகளைச் செய்வதற்கு எங்கே செல்வது? உலமா சபை அலுவலகத்திற்கே கொண்டு வர வேண்டும். சட்டத்தைச் செய்யுங்கள். உங்கள் “பத்வா”வின் படி என்னையும் கொல்ல வேண்டும். கொல்லுங்கள்.
மூளையில்லாத “முப்தீ”களே!
உங்களின் பத்வா 7ம் பக்கத்தில் “பிஸ்மில்லாஹ்” என்று எழுதிவிட்டு “ஏக இறைவனுக்கே எல்லாப் புகழும்” என்று எழுதியுள்ளீர்கள். ஏக இறைவன் என்றால் எவ்வாறு என்று உங்களால் விளங்கப்படுத்த முடியுமா? ஏக இறைவன் என்றால் என்ன? எல்லாம் அவனே என்றால் என்ன? பொது மக்களுக்குப் பகிரங்கமாக விளக்கி வைக்க உங்களால் முடியுமா? “எல்லாப் புகழும்” என்று எழுதியுள்ளீர்களே! புகழின் வகைகளைக் கூறி அவற்றை விளக்கி வைக்க முடியுமா? உங்களால் முடியாதென்றால் சொல்லுங்கள் நான் விளக்கி வைக்கிறேன்.
முல்லாக்களான முப்தீகளே! முப்தீகளான முல்லாக்களே!
உங்களுக்கு “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் மண்ணளவும் தெரியாது என்று நான் அடித்துச் சொல்வேன். நீங்கள் இதை மறுத்தால் – எங்களுக்குத் தெரியுமென்று சொல்வீர்களாயின் நீங்கள் சரி கண்ட இமாம்கள், இறைஞானிகள் மூவரின் “கிதாபு”களை நான் உங்கள் கையில் தருகிறேன். நீங்களே வாசித்து, நீங்களே விளக்கம் கூறுங்கள். முடியுமாயின் அறிவியுங்கள். எங்கே? எப்போது? யார் தலைமையில் செய்வதென்று நாம் ஒன்று சேர்ந்து முடிவு செய்வோம்.
முற்றும்.