தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ يَقُومُ يَوْمَ الجُمُعَةِ إِلَى شَجَرَةٍ أَوْ نَخْلَةٍ، فَقَالَتِ امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ، أَوْ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَلاَ نَجْعَلُ لَكَ مِنْبَرًا؟ قَالَ: «إِنْ شِئْتُمْ»، فَجَعَلُوا لَهُ مِنْبَرًا، فَلَمَّا كَانَ يَوْمَ الجُمُعَةِ دُفِعَ إِلَى المِنْبَرِ، فَصَاحَتِ النَّخْلَةُ صِيَاحَ الصَّبِيِّ، ثُمَّ نَزَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضَمَّهُ إِلَيْهِ، تَئِنُّ أَنِينَ الصَّبِيِّ الَّذِي يُسَكَّنُ. قَالَ: «كَانَتْ تَبْكِي عَلَى مَا كَانَتْ تَسْمَعُ مِنَ الذِّكْرِ عِنْدَهَا»
நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் வெள்ளிக் கிழமை ஓர் ஈத்தமரத்தில் சாய்ந்தவர்களாக பிரசங்கம் செய்வார்கள். ஒரு நாள் அவர்களிடம் உங்களுக்காக “மின்பர்” பிரசங்க மேடை ஒழுங்கு செய்யவா? என்று கேட்கப்பட்ட போது, உங்கள் விருப்பம் என்று கூறினார்கள். பிரசங்க மேடை தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டது. பெருமானார் அவர்கள் வழமைபோல் பேரீத்த மரத்தடி செல்லாமல் புதிதாகச் செய்யப்பட்ட பிரசங்க மேடைக்குச் சென்றார்கள். அவ்வேளை அவர்கள் வழமையாகச் சாய்ந்து கொண்டு பிரசங்கம் நிகழ்த்திய ஈத்த மரம் சிறு பிள்ளை அழுவது போல் அழுதது. நபீ பெருமானார் உடனே அதனளவில் இறங்கி வந்து அழும் சிறுவனை நெஞ்சோடு கட்டியணைத்து ஆதரிப்பது போன்று ஆதரித்தார்கள்.
ஆதாரம்: ஸஹீஹுல் புகாரீ – 3584, அலாமதுன் நுபுவ்வதி – 25,
அல்பிதாயா வன்னிஹாயா 04-612
மேலே கூறிய நபீ மொழி மூலம் பல பாடங்கள் எமக்கு கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று – பேரீத்தம் குத்தி அல்லது மரம் சிறிய பிள்ளை அழுவது போல் அழுததாகும்.
நபீ பெருமானார் அவர்கள் நீண்ட காலமாக ஒரு பேரீத்த மரத்தில் சாய்ந்து கொண்டே வெள்ளிக் கிழமை ஜும்ஆவுக்கான “குத்பா” பிரசங்கம் நிகழ்த்தி வந்தார்கள். ஒரு சமயம் நபீகளாரிடம் தோழர்களிற் சிலர், ஒரு பிரசங்க மேடை அமைத்துத் தரவா? என்று கேட்டதற்கு அது உங்கள் விருப்பம் என்றார்களேயன்றி ஆம், நல்லது செய்து தாருங்கள் என்று சொல்லவில்லை. ஏன் அவ்வாறு சொல்லவில்லை என்பதற்கான காரணம் தெளிவாகவோ, ஜாடையாகவோ ஹதீதில் கூறப்படவில்லை.
ஆயினும் நான் விளங்கிய ஒரு குறிப்பை இங்கு எழுதுகிறேன். நபீகள் நாயகம் அவர்கள் காபிர்கள் உள்ளிட்ட எவர் மனதையும் வேதனை செய்யாமல் வாழ்பவர்களாவர். அவர்களுக்காக உயிரையே பணயம் வைத்த தோழர்களில் ஒரு சிலர் தவிர ஏனையோர் அனைவரும் வறுமையின் பிடியிலேயே இருந்தார்கள். ஒரு நாள் சாப்பிடுவார்கள். மறுநாள் பட்டினியுடனும், பசியுடனுமே இருப்பார்கள்.
ஒரு “மின்பர்” செய்வதாயின் அதற்கென்று சிறிய அளவிலேனும் பண வசதி தேவைப்படும். அதற்கென்று தொழில் செய்யும் நேரத்தை ஒதுக்க வேண்டும். இவற்றை அறிந்திருந்த நபீகளார் அவர்களிடம் செய்து தாருங்கள் என்று சொன்னால் அவர்கள் அதைக் கடமையென நினைத்து பல இன்னல்களை அனுபவிக்க நேரிடலாம் என்பதைக் கருத்திற் கொண்டதினால்தான் அவர்களிடம், إِنْ شِئْتُمْ நீங்கள் விரும்பினால் மின்பர் செய்து தாருங்கள் என்று கூறியிருக்கலாம் என்று நான் ஊகிக்கிறேன். அல்லாஹ் மிக அறிந்தவன்.
ஈத்த மரம் மனிதன் போல் ஆறு அறிவுள்ள ஒரு படைப்பல்ல. ஆறாம் அறிவில்லாத ஒரு படைப்பே நபீகளார் மீது இத்தனை “மஹப்பத்” அன்புள்ளதாயிருந்ததால் ஆறாம் அறிவு வழங்கப்பட்ட ஒரு மனிதன் – ஒரு விசுவாசி எந்த அளவு நபீகளார் மீது “மஹப்பத்” வைக்க வேண்டும் என்ற தத்துவத்தை இவ்வரலாறு உணர்த்துகிறது. இவ்வரலாறு உலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும். அமைவது மட்டுமன்றி அவ்வாறு அவர்கள் செயல்படவும் வேண்டும்.
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மீது அன்பு – காதல் கொண்ட பலர் அவர்களின் பெயர் மொழிந்த நாவால் வேறெவரின் பெயரையும் மொழியக் கூடாதென்பதற்காக தம்மை மறந்து தமது நாவை அறுத்துக் கொண்டவர்களும், கனவில் அவர்களைக் கண்ட பலர் அதே கண்களால் வேறு எவரையும் காணக் கூடாதென்பதற்காக தம்மை மறந்து தமது கண்களைக் குத்திக் கெடுத்தவர்களும் உள்ளனர்.
இங்கு ஒரு கேள்விக்கு இடமுண்டு. அதாவது ஒருவர் தனது உடலை அடித்தோ, அறுத்தோ, வெட்டியோ, எரித்தோ வேதனை செய்வது “ஷரீஆ”வின் பார்வையில் தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஆயினும் “ஷரீஆ”வின் சட்டங்களை கரைத்துக் குடித்த இறை காதலர்களான ஆஷிகீன்கள், மற்றும் பெருமானார் மீது அளவற்ற காதல் கொண்ட ஆஷிகீன்கள் போன்றோர் சிலரின் வரலாறுகளில் அவர்கள் “ஷரீஆ”வுக்கு முரணான சில காரியங்கள் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் வாழ்ந்து மறைந்த, “ஸீறாப் புராணம்” எனும் நூலை எழுதியவரும், பின்வரும் பாடல்களுக்குரிய கவிஞரும், புலவருமான உமறுப் புலவர் அவர்கள் ஒரு முறை பெருமானார் கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை நேரில் தரிசித்த பின் அவர்களைக் கண்ட கண்களால் வேறெவரையும் பார்க்கக் கூடாதென்று விரும்பி தங்களின் இரு விரல்களால் அவர்களின் இரு கண்களையும் குத்திக் கெடுத்ததாக ஒரு வரலாறு உண்டு.
இதனால் அவர்கள் “ஷரீஆ”வுக்கு மாறு செய்தார்கள் என்று முடிவு செய்து அவர்களை கெட்டவர் என்றோ, காபிர் என்டிறோ, முர்தத் என்றோ எவரும் “பத்வா” கொடுத்திவிட முடியாது. அவ்வாறு கொடுத்தாலும் கொடுத்தவரே பாவியாவார். அல்லது காபிர் ஆகிவிடுவார். உமறுப் புலவர் அவ்வாறு என்ன நிலையில் இருந்து செய்தார்கள் என்பதை விளங்கியறிந்த பின்னே அவருக்குத் தீர்ப்புக் கூற வேண்டும். கண்ணைக் குத்திப் பிடுங்கியதால் மட்டும் எந்த வகையிலும் அவரைக் “காபிர்” என்று சொல்ல முடியாது.
அவரின் பாடல்கள்:
திருவினுந் திருவாய்ப் பொரிளினும் பொருளாய்த்
தெளிவினுந் தெளிவாய்ச் சிறந்த
மருவினு மருவாயணுவினுக்கணுவாய்
மதித்திடாப் பேரொளியனைத்தும்
பெருவினும் பெருவா வடிவினும் வடிவாய்ப்
பூதலத் துறைந்த பல்லுயிரின்
கருவினுங் கருவாய்ப் பெருந்தலம் புரந்த
கருத்தனைப் பொருந்துதல் கருத்தே!
கலை மறை முஹம்மதெனும்
காரணம் இல்லையாகில்
உலகுவிண் இரவி திங்கள்
ஒளிர் உடுக்கணம் சுவர்க்கம்
மலை கடல் நதி பாதாளம்
வானவர் முதலாயும்மை
நிலையுறப்படப்பதில்லை
என இறை நிகழ்த்தினானே!
உமறுப் புலவர் செய்தது போல் இறை காதலர்களிற் பலரும், நபீ காதலர்களிற் பலரும், வலீமார் காதலர்களிற் பலரும் செய்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
இறை காதலர்களான “மஜ்தூப்”களும், நபீ காதலர்களான “ஆஷிகீன்”களும் தமது சுய உணர்விழந்த நிலையில் செய்கின்ற செயல்களுக்கும், பேசுகின்ற பேச்சுக்களுக்கும் தண்டனை இல்லை. இவர்கள் மன்னிக்கப்பட்டவர்களாவர்.
கண்மணி நாயகம் அவர்களில் “பனா” ஆன அபூ பக்ர் சிஷிப்லீ றஹிமஹுல்லாஹ் அவர்கள், தன்னை மறந்து, தானே இல்லையென்ற நிலையில், தன்னை றசூலாக உணர்ந்து لَا إلهَ إِلَّا اللهُ شِبْلِيْ رَسُوْلُ اللهِ “அல்லாஹ் அல்லாத வேறொனிறுமில்லை, ஷிப்லீதான் அல்லாஹ்வின் றசூல்” என்று சொல்லிவிட்டார்கள். இதனால் அக்காலத்தில் வாழ்ந்த “ஸூபிஸம்” தெரியாத உலமாஉகள் அவரை “சிந்தீக்” என்று பட்டம் கொடுத்து முஸ்லிம் சமூகத்திலிருந்து ஓதுக்கி வைத்தார்கள். ஆயினும் ஆன்மிகம் கற்ற ஆரிபீன்களும், ஸூபீ மகான்களும் அவரை “குத்புஸ்ஸமான்” காலத்தின் “குத்பு” என்று ஏற்றுக் கொண்டார்கள்.
அவர்கள் ஒரு சமயம் இறை பக்திப் பரவச நிலையால் ஆட்கொள்ளப்பட்ட போது பலர் சேர்ந்தும் கூட பிடுங்கியெறிய முடியாத மரமொன்றை தங்களின் கையால் மட்டும் பிடுங்கி அதை தங்களின் தோளில் சுமந்து கொண்டு “கஃபா”வை எரிக்கப் போகிறேன் என்று சொன்னார்கள். அவர்களின் “ஜத்பு” நிலையறிந்தவர்கள் அவர்களை மடக்கிப் பிடித்து ஏன் எரிக்கப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, “எதைக் கொண்டும் கட்டுப்படுத்த முடியாத مُطْلَقْ – கட்டுப்பாடற்ற அல்லாஹ்வை – “கஃபா” என்ற ஒரு திசையில் மட்டும் கட்டுப்படுத்துவது கூடாதென்பதற்காகவே அதை எரிக்கச் சென்றேன்” என்று கூறினார்கள்.
இந்த மகான் இறாக் நாட்டின் தலை நகரான “பக்தாத்” இல் அடக்கம் பெற்றுள்ளார்கள். رحمه الله رحمة واسعة
இவர்கள் இவ்வாறெல்லாம் செய்தது “பனா” நிலையில்தான். இந்நிலை ஏற்பட்டவர்களால் செய்யப்படும் செயல்களுக்கும், பேசப்படும் பேச்சுக்களுக்கும் “ஷரீஆ”வில் சட்டமில்லை. இவர்கள் அல்லாஹ்வில் مَجْنُوْنْ பைத்தியம் பிடித்தவர்களாவர். இந்நிலை ஏற்படாதவர்கள் இவ்வாறு செய்தால் அவர்களுக்கு “ஷரீஆ”வின் சட்டம் உண்டு.
قَالَ الْعَارِفُوْنَ: إِنَّ اللهَ لَا يَأْخُذُ مَا صَدَرَ مِنَ الْعُشَّاقِ
“இறை காதலாலோ, நபீ காதலாலோ சுய உணர்வு இழந்தவர்களால் ஏற்படும் சொற், செயல் கொண்டு அல்லாஹ் அவர்களைக் குற்றம் பிடிக்கமாட்டான்” என்று இறைஞானிகள் கூறியுள்ளார்கள்.
ஆயினும் சுய உணர்வு இழக்காமல், நடிப்புக்காக “ஷரீஆ”வுக்கு முரணான விடயங்கள் செய்பவர்களுக்கு தண்டனையுண்டு.
சிற்றின்பக் காதலில் தோல்வி கண்டவர்கள் தமது கைகளை வெட்டிக் கொள்வதும், தற்கொலை செய்வதும் தண்டனைக்குரிய குற்றங்களாகும். இதேபோல் தொழிலில் – வியாபாரத்தில் நட்டமடைந்தோர் நஞ்சு குடிப்பதும், வேறு வகையில் தற்கொலை செய்வதும் “ஷரீஆ”வுக்கு முரணான செயல்களாகும்.
இவ்வாறுதான் ஏதோ ஒரு காரணத்திற்கு உடலில் சூடு வைத்துக் கொள்வதும் “ஷரீஆ”வுக்கு முரணானதேயாகும். இவ்வாறுதான் நினைத்த திருமணம் நடக்காத ஆணோ, பெண்ணோ “பிலேட்”டால் கையை வெட்டிக் கொள்வதும் பாவமான காரியமேயாகும். இவ்வாறுதான் குற்றம் செய்த பிள்ளைகளை பெற்றோர் கட்டி வைத்து அடிப்பதும், தீயால் சுடுவதுமாகும்.
இமாம் ஜலாலுத்தீன் ஸுயூதீ அவர்களின் குறிப்பு ஒன்றை எழுதுகிறேன்.
يقول الشّيخ عبد الوهّاب الشّعراني: أخبرني الشّيخ عطيّة الأبناسي والشّيخ قاسم المغربي المُقيم فى تُربة الإمام الشافعيّ رضي الله تعالى عنهم، والقاضي الشّافعي أنّهم سمِعُوا الشّيخ جلال الدّين السيوطي رحمه الله يقول: رأيت رسول الله صلّى الله عليه وسلّم فى اليقظة بضعا وسبعين مرّة، وقلتُ له فى مرّةٍ منها: هل أنا من أهل الجنّة؟ فقال نعم، فقلت مِنْ غَيْرِ عَذَابٍ يَسْبِقُ؟ فقال لك ذلك، قال الشّيخ عطيّة: وسألت الشّيخ جلال الدين مرّةً أن يَجتمِعَ بالسّلطان الغَوْرِي فى ضرورةٍ وقعتْ لي، فقال لي يا عطية! أنا أجتمع بالتنّبي صلّى الله عليه وسلّم يقظَةً، وأخشى إن اجتمعتُ بالغوريّ أن يَحْتَجِبَ صلّى الله عليه وسلّم عنِّيْ، ثمّ قال إنّ فلانا من الصجابة كانت الملائكة تُسلِّمُ عليه، فاكتوَى فى جسدِه لضرورةٍ، فلم يرَ الملائكةَ بعد ذلك عُقُوبَةً له على اكتِوائِهِ،
பின்வரும் தகவலை இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
(அஷ்ஷெய்கு அதிய்யா அப்னாஸீ, அஷ்ஷெய்குஸ் ஸாலிஹ் காஸிம் அல் மக்ரிபீ, அல்காழீ சகரிய்யா அஷ்ஷாபிஈ றழியல்லாஹு அன்ஹும் ஆகியோர், இமாம் ஜலாலுத்தீன் ஸுயூதீ அவர்கள் சொல்லக் கேட்டதாக என்னிடம் பின்வருமாறு கூறினார்கள்)
நான், பெருமானார் அலைஹிஸ்ஸலாம் அவர்களை எழுபதிற்கு மேற்பட்ட தடவைகள் விழிப்பில் கண்டுள்ளேன். அவற்றில் ஒரு சந்திப்பின் போது, நான் சுவர்க்கவாதியா? அல்லாஹ்வின் றசூலே! என்று கேட்டேன். அதற்கவர்கள், ஆம் என்றார்கள். வேதனையின்றியா? என்று கேட்டேன். அதற்கும் ஆம் என்றார்கள்.
அப்போது அதிய்யதுல் அப்னாஸீ அவர்கள் அஷ்ஷெய்கு ஜலாலுத்தீன் ஸுயூதீ அவர்களிடம் எனது வேலை – தேவை ஒன்றுக்காக அரசன் கவ்ரீ என்பவரை நான் சந்திக்க நீங்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கு இமாம் சுயூதீ அவர்கள், அதிய்யா அவர்களே! எனது விழிப்பில் பெருமானார் அவர்களைக் காண்கிறேன். நான் அரசர் கவ்ரீ அவர்களைச் சந்திப்பதால் என்னை விட்டும் மறைந்துவிடுவார்களோ என்று நான் பயப்படுகிறேன் என்று சொல்லிவிட்டு, நபீ தோழர் ஒருவரிடம் மலக்குகள் வந்து ஸலாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த தோழர் ஒரு சமயம் தனது தேவைக்காக தனது உடலை தீயால் சுட்டுக் கொண்டார். அதன் பிறகு அவரிடம் மலக்குகள் வருவதை நிறுத்திக் கொண்டார்கள். இதனால் அவருக்கு நடந்தது போல் எனக்கும் நடக்குமோ? றசூலுல்லாஹ் அவர்கள் என்னை விட்டும் மறைந்து விடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன்) என்றார்கள் இமாம் ஸுயூதீ அவர்கள்.
நபீ தோழரிடம் வந்து ஸலாம் சொன்ன மலக்குகள் அவரிடம் தொடர்ந்து வருவதை நிறுத்தியதற்கான காரணம் அவர் தனக்குத் தானே தீயால் சுட்டுக் கொண்டதாகும். இதேபோல் எனக்கும் நடந்துவிடுமோ என்று நான் பயப்படுவதால் அரசன் கவ்ரீயிடம் நான் வர விரும்பவில்லை என்று கூறினார்கள்.
இதன் மூலம் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில் உடலில் சூடு வைத்துக் கொள்வது மார்க்கத்திற்கு முரணான செயல் என்பதும், அச் செயலைச் செய்தவரை மலக்குகள் சந்திக்கமாட்டார்கள் என்பதுமாகும்.
அரசன் கவ்ரீ அவர்களைச் சந்திப்பதற்கும், யாரோ ஒரு நபீ தோழர் தனது உடலில் சூடு வைத்துக் கொண்டதற்கும் என்ன தொடர்பு என்று நாம் சிந்தித்தால் அரசர் கவ்ரீயும் அந்த நபீ தோழர் போல் தனது தேவைக்காக தனது உடலில் தீயால் சூடு வைப்பவராயிருந்தார் என்பதும், அத்தகைய ஒருவரைச் சந்திப்பதால் இமாம் ஸுயூதீ அவர்களுக்கு கிடைத்த திரு நபியின் திருக் காட்சி இல்லாமல் போய் விடும் என்பதுமேயாகும்.
சுருக்கம் என்னவெனில் பாவம் செய்யும் ஒருவரைச் சந்திப்பது கூட பொருத்தமற்ற, பேணுதலற்ற விடயம் என்பதாகும்.
உதாரணமாக வட்டிக் காரன், விபச்சாரி, குடி காரன், ஐஸ் பாவிப்பவன், ஹெறோயின் பாவிப்பவன் போன்றொருடன் நட்பாயிருப்பது நல்லவனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
முற்றும்.
சொற்கள் விபரம்: “ஜுமுஆ” வெள்ளிக்கிழமை பகல் தொழுகையையே குறிக்கும். “ஜுமுஆ” என்பதே சரி. “ஜும்ஆ” என்பது பிழை. “ஷஜறத்” மரம், “நக்லத்” பேரீத்த மரம். “மின்பர்” பேச்சு மேடை. “ஸாஹ” சத்தமிட்டான். “ஸியாஹ்” சத்தமிடுதல், “ஸபீ” சிறுவன், “அன்ன” அனுங்கினான். “அனீன்” அனுக்கம். “ஸக்கன” அமைதிப் படுத்தினான்.