தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
عَنْ عَائِشَةَ، قَالَتْ: أَوَّلُ مَا بُدِئَ بِهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الوَحي الرُّؤْيَا الصَّالِحَةُ ثُمَّ حُبِّبَ إِلَيْهِ الْخَلَاءُ، فَكَانَ يَأْتِيْ حِرَاءَ فَيَتَحَنَّثُ فِيْهِ، أَيْ: يَتَعَبَّدُ اللَّيَالِيَ ذَوَاتِ الْعَدَدِ وَيَتَزَوَّدُ لِذَلِكَ، ثُمَّ يَرْجِعُ إِلَى خَدِيْجَةَ فَيَتَزَوَّدُ لِمِثْلِهَا، حَتَّى فَجَأَهُ الْحَقُّ وَهُوَ فِيْ غَارِ حِرَاء، فَجَاءَهُ الْمَلَكُ فقال: اِقْرَأْ، قال: ‘فَقُلْتُ: مَا أَنَا بِقَارِئٍ فَأَخَذَنِيْ فَغَطَّنِيْ حَتَّى بَلَغَ مِنِّيَ الْجَهْدَ، ثُمَّ أَرْسَلَنِيْ، فقال: اِقْرَأْ، فَقُلْتُ: مَا أَنَا بِقَارِئٍ، فَأَخَذَنِيَ الثَّانِيَةَ فَغَطَّنِيْ حَتَّى بَلَغَ مِنِّيَ الْجَهْدَ، ثُمَّ أَرْسَلَنِيْ، فقال: اِقْرَأْ، فقلتُ: مَا أَنَا بِقَارِئٍ. فَأَخَذَنِيْ فَغَطَّنِيَ الثَّالِثَةَ حَتَّى بَلَغَ مِنِّيَ الْجَهْدَ، ثُمَّ أَرْسَلَنِيْ فقال: {اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ} ‘. حتى بلغ إلى قوله: {مَا لَمْ يَعْلَمْ} ஜالعلق: 1-5ஸ ، قَالَتْ: فَرَجَعَ بِهَا تَرْجُفُ بَوَادِرُهُ حَتَّى دَخَلَ عَلَى خَدِيْجَةَ فَقَالَ: ‘زَمِّلُوْنِي’، فَزَمَّلُوْهُ حَتَّى ذَهَبَ عنه الرَّوْعُ فقال: ‘يا خديجةُ مَا لِيْ! ‘. وَأَخْبَرَهَا الخَبَرَ وَقَالَ: ‘قَدْ خَشِيْتُ ஜعَلَى نَفْسِيஸ ‘. فَقَالَتْ لَهُ: كَلاَّ أَبْشِرْ فَوَ اللهِ لاَ يُخْزِيْكَ اللهُ إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ وَتَصْدُقُ الحَدِيْثَ، وَتَحْمِلُ الكَلَّ، وَتُعِيْنُ عَلَى نَوَائِبِ الْحَقِّ، ثُمَّ انْطَلَقَتْ بِهِ خَدِيْجَةُ إِلَى ابْنِ عَمِّهَا وَرقَةَ بنِ نَوْفَلِ بنِ أَسَدِ بنِ عَبْدِ الْعُزَّى، وَكَانَ امْرَأً تَنَصَّرَ فِي الجَاهِلِيَّةِ، وَكَانَ يَكْتُبُ الْخَطَّ الْعَرَبِيَّ، فَكَتَبَ بِالعَرَبِيَّةِ مِنَ الإِنْجِيْلِ مَا شَاءَ اللهُ أَنْ يَكْتُبَ، وَكَانَ شَيْخاً قَدْ عَمِيَ. فَقَالَتْ: اِسْمَعْ مِنْ اِبْنِ أَخِيْكَ. فقال: يَابْنَ أَخِيْ مَا تَرَى؟ فَأَخْبَرَهُ، فقال ورقةُ: هَذَا النَّامُوْسُ الَّذِيْ أُنْزِلَ عَلَى مُوْسَى، يَا لَيْتَنِيْ فِيْهَا جَذَعًا حِيْنَ يُخْرِجُكَ قَوْمُكَ، قال: ‘أَوَمُخْرِجِيَّ هُمْ’؟. قال: نَعَمْ، إِنَّهُ لَمْ يَأْتِ أَحَدٌ بِمَا جِئْتَ بِهِ إِلَّا عُوْدِيَ وَأُوْذِيَ، وَإِنْ يُدْرِكُنِيْ يَوْمُكَ أَنْصُرْكَ نَصْرًا مُؤَزَّرًا. ثُمَّ لَمْ يَنْشَبْ ورقةُ أَنْ تُوُفِّيَ،
விளக்கம்:
நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு முதலில் நல்ல கனவுகள் மூலமே “வஹீ” அறிவிப்புக்கள் ஆரம்பமாகின. பின்னர் தனிமையாக இருப்பது அவர்களுக்கு விருப்பமாக்கப்பட்டது. அதன் பிறகு “ஹிறா” மலை வந்து தனிமையில் வணங்கலானார்கள். குறிப்பிட்ட சில நாட்களுக்குப் போதுமான உணவுகளையும் எடுத்துக் கொள்வார்கள். பிறகு மனைவி கதீஜா நாயகியிடம் வருவார்கள். சில நாட்கள் தங்கிய பின் மீண்டும் தேவைக்கேற்ப உணவுகள் எடுத்துக் கொண்டு மீண்டும் “ஹிறா” மலை வந்து சில நாட்கள் தங்கி தியானத்தில் இருப்பார்கள். இவ்வாறு பல நாட்கள் நகர்ந்தன. சத்தியம் வரும் வரை அவ்வாறே இருந்தார்கள்.
ஒரு நாள் “மலக்” ஜிப்ரீல் அவர்களிடம் வந்து “ஓதுங்கள்” என்றார்கள். அப்போது நபீ பெருமான் “நான் ஓதுவதற்கு ஆயித்தமானவன் அல்ல – எனக்கு ஓதத் தெரியாது” என்றார்கள். அப்போது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் சிறிது நேரம் நபீ பெருமானை மிக இறுக்கமாகக் கட்டியணைத்து விட்டு இப்போது ஓதுங்கள் என்றார்கள். அப்போதும் நபீ அவர்கள் முதலில் சொன்னது போன்றே சொன்னார்கள். இரண்டாம் முறையாகவும் கட்டியணைத்து விட்டு இப்போது ஓதுங்கள் என்றார்கள். அப்போதும் நபீ அவர்கள் முதலில் சொன்னது போன்றே சொன்னார்கள்.. ஜிப்ரீல் மூன்றாம் முறையாகவும் கட்டியணைத்து விட்டு اِقْرَأْ بِسْمِ رَبِّكَ الَّذِيْ خَلَقَ “படைத்த இரட்சகனின் திருப் பெயர் சொல்லி ஓதுங்கள்” என்றார்கள். அதன் பிறகுதான் ஓதத் தொடங்கினார்கள் நபீ பெருமானார் அவர்கள்.
ஜிப்ரீல் அவர்கள் “அலக்” அத்தியாயமான اِقْرَأْ என்று தொடங்கும் அத்தியாயத்தின் مَا لَمْ يَعْلَمْ வரை ஐந்து வசனங்கள் மட்டுமே சொல்லிக் கொடுக்க நபீ பெருமான் ஓதி முடித்தார்கள்.
இங்கு சற்று நுட்பமாக ஆய்வு செய்ய வேண்டிய ஓர் அம்சம் உண்டு. அதை இறுதியில் எழுதுகிறேன். ஆயினும் அறிந்து கொள்ள வேண்டிய அம்சம்தான்.
இந்த “ஹிறா” குகை நிகழ்வின் பின் நபீ பெருமானை ஒருவகைக் குளிர் தொட்டது. சொல்ல முடியாத நிலை ஆட் கொண்டது. ஒரு வகை உடல் நடுக்கமும் தொட்டது.
பெருமானார் அவர்கள் “ஹிறா” குகையிலிருந்து இல்லம் வந்து மனைவி கதீஜா நாயகியிடம் زَمِّلُوْنِيْ – زَمِّلُوْنِيْ என்னைப் போர்த்துங்கள் – போர்த்துங்கள் என்று பதற்றத்தோடு கூறினார்கள். இருந்தவர்கள் போர்த்தினார்கள். சிறிது நேரத்தில் சாதாரண நிலைக்கு திரும்பினார்கள் பெருமானார் அவர்கள். அன்பு மனைவி கதீஜாவின் சோக நிலை கொண்ட முகம் பார்த்து يا خديجةُ مَا لِيْ கதீஜாவே! எனக்கு என்ன நடக்கிறது? என்று கேள்வி எழுப்பிவிட்டு மலையில் நடந்த வரலாறை துல்லியமாகச் சொல்லத் தொடங்கினார்கள் பெருமானார் அவர்கள். எனக்கு என்ன நடக்குமோ என்ற அச்சம் என்னை ஆட் கொண்டுள்ளது என்றும் கூறினார்கள்.
வரலாறை செவிமடுத்துக் கொண்ட மனைவி கதீஜா நாயகி كَلَّا அப்படியொன்றுமில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் உங்களை இழிவு படுத்தமாட்டான். நீங்கள் குடும்பத்தைச் சேர்ந்து நடக்கின்றீர்கள். உண்மை பேசுகிறீர்கள். துன்பத்தைச் சுமந்து பொறுமை செய்கிறீர்கள். இன்னும் பல நல்லவை செய்கிறீர்கள். இந்நிலையில் உங்களை அல்லாஹ் கைவிட மாட்டான் என்று பெருமானாரின் மனதை ஆற்றினார்கள்.
பின்பு கதீஜா நாயகி தங்களின் சாச்சா மகன் “வறகதுப்னு நவ்பல்” என்பவரிடம் அழைத்துச் சென்று இதோ உங்கள் சகோதரனின் மகனிடம் நடந்ததைக் கேளுங்கள் என்றார்கள். அவர் கேட்கத் தொடங்கினார். விபரமாகக் கூறினார்கள் பெருமானார் அவர்கள்.
சாச்சா மகன் வறகதுப்னு நவ்பல் என்பவர் வயது முதிர்ந்த அந்தகராக இருந்தார். ஜாஹிலிய்யா – மௌட்டீக காலத்தில் “நஸாறா”க்களில் ஒருவராயிருந்தார். அறபு மொழி எழுத, வாசிக்கத் தெரிந்தவராயும் இருந்தார். இன்ஜீல் வேதத்தை அறபு மொழியில் எழுதினார்.
இவரின் தகவல்கள் யாவையும் செவியேற்ற பின் هذا الناموس இவர் ஒரு “மலக்” ஜிப்ரீல். இறைவனின் அந்தரங்கச் செயலர். இவர் முன்னர் வாழ்ந்த நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் அந்தரங்கச் செயலராக இருந்தவர் இவர்தான் என்று கூறிவிட்டு, நபீ பெருமானாரை நோக்கி (உங்களை உங்களின் கூட்டத்தவர்கள் ஊரை விட்டும் வெளியேற்றும் வேளை நான் உயிருடன் இருக்க வேண்டுமே! இருந்தால் உங்களுக்கு கை கொடுப்பேன்) என்றும் சொன்னார்கள். அப்போது பெருமானார் அவர்கள் “என்னை எனது கூட்டத்தார் ஊரை விட்டும் வெளியேற்றுவார்களா?” என்று அவரிடம் கேட்ட போது نَعَمْ ஆம், வெளியேற்றுவார்கள். காரணம் தெரியுமா? இதோ
إِنَّهُ لَمْ يَأْتِ أَحَدٌ بِمَا جِئْتَ بِهِ إِلَّا عُوْدِيَ وَأُوْذِيَ، وَإِنْ يُدْرِكُنِيْ يَوْمُكَ أَنْصُرْكَ نَصْرًا مُؤَزَّرًا.
“நீங்கள் கொண்டு வந்துள்ள ஒன்றை எவர் கொண்டு வந்தாலும் அவர் நிச்சயமாக பகைக்கப்பட்டும், துன்புறுத்தப்பட்டுமே இருப்பார். அந்தக் காலத்தில் நான் உயிருடன் இருந்தால் உங்களுக்குப் பலமாக நிற்பேன்” என்று வீரம் தொனிக்க முழங்கினார்கள். ஆயினும் அதற்கு முன் அவர் மரணித்து விட்டார்.
நபீ பெருமானாருக்கு “வஹீ” இறை அறிவிப்பு எவ்வாறு ஆரம்பமானது? என்ற விபரம் இதோடு ஓரளவு விளங்கியிருக்கும்.
இந்த வரலாறு தொடர்பாக ஆய்வுக்கு எடுக்க வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அவற்றில் மிகப் பிரதான கருத்து தொடர்பாக அலசிப் பார்ப்போம்.
பெருமானாரின் மனத் துணிவு:
நபீகளாரின் காலத்தில் “ஹிறா” குகை உள்ள பிரதேசம் மனித சஞ்சாரமற்ற பிரதேசமாகவே இருந்திருக்க வேண்டும். இப்போதுள்ள சூழ்நிலையைப் பார்க்கும் போது அப்போதுள்ள சூழ்நிலை எமது கற்பனைக்கு வராமற் போகாது. இருள் சூழ்ந்த, அச்சமூட்டும், மலைச் சாரலான, விஷஜந்துக்கள் வாழும் பிரதேசமாகவே இருந்திருக்க வேண்டும். கடினமான, கரடு முரடான கற்கள் நிறைந்த பகுதியாகவே இருந்திருக்க வேண்டும். இணைதுணை யாருமின்றி அக்குகையில் சாதாரண எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தன்னந் தனியாக இராப் பகலாய் இருப்பதானது கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத ஒன்றாகும்.
இருண்ட பிரதேசங்களில் ஷெய்தான்களினதும், ஜின்களினதும் நடமாட்டம் உண்டு என்பது உண்மை. இதை இங்கு நிறுவிக் கொண்டிருந்தால் குறிக்கோள் நிறைவேறாது.
இவற்றையெல்லாம் தாண்டி, அல்லாஹ் தவிர அனைத்தையும் மறந்து துணிவுடன் செயல்பட்ட செம்மல் நபீயின் துணிவையும், மன வலிமையையும் யாரால் மட்டிட்டுக் கூற முடியும்?
ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சொந்தமான ஓர் உடலமைப்பு உண்டு. அது தொடர்பான வர்ணனைகள் அதிகம். சுருக்கமாகச் சொல்வதாயின், அவரின் உடலமைப்பு மிக வலுப்பமானது. அதை வலுப்பமானதென்றுதான் வர்ணிக்கலாம். பயங்கரமானதென்று சொல்ல முடியாது. வலுப்பமான இரு இறக்கைகள் உள்ளவர். அவர் ஆகாயத்தில் நின்று ஓர் இறக்கையை மட்டும் விரித்தாராயின் பரந்த பூமியின் பாதிப் பகுதிக்கு சூரிய வெளிச்சம் இருக்காது. இரண்டையும் விரித்தாராயின் பூமியே இருண்டு விடும்.
இத்தகைய வலுப்பமிகு தோற்றமுள்ள ஜிப்ரீல் நபீகளாரிடம் “ஹிறா” குகையில் முதன் முதலாக வந்த பொழுது எவ்வாறு வந்தார்கள் என்பதை என்னால் அறிய முடியவில்லை. அறியக் கூடிய நூல்களும் என்னிடமில்லை. அறிந்தவர்களும் அதைச் சொல்வதாகத் தெரியவில்லை.
பெருமானார் அவர்கள் நபீகட்கரசராக இருந்தும் கூட “ஜிப்ரீல்” என்ற “மலக்”கை அவரின் இயற்கையான உருவத்தில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் மட்டுமே நேரில் கண்டதாக சில நூல்கள் கூறுகின்றன. இத்தகு வலுப்பமிகு ஒரு படைப்புடன் அந்த மலையில், அந்தச் சூழலில் பெருமானார் இருந்துள்ளார்கள் என்பது நம்ப முடியாத உண்மைகளில் ஒன்றாகும். எங்கள் ஏந்தல் எதையும் தாங்கும் இறை வெளிப்பாடு என்பதில் என்ன சந்தேகம்?!
“அல்ஹக் – அர்றூஹ்”
இந்த நபீ மொழியில் حَتَّى فَجَأَهُ الْحَقُّ என்று ஒரு வசனம் வந்தள்ளது. “அல் ஹக்” என்பது அல்லாஹ்வின் திரு நாமங்களில் ஒன்று என்பது இங்கு குறிப்பிட வேண்டியதாகும்.
இதற்கு வெளிப்பார்வையில் பின்னால் வந்துள்ள فَجَاءَهُ الْمَلَكُ என்ற வசனம் முன்னால் வந்த வசனம் போல் அமைந்துள்ளது. முன்னால் வந்த வசனமும், பின்னால் வந்துள்ள வசனமும் எழுத்திலும், மொழித்தலிலும் ஒன்று போல் இருப்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.
ஆயினும் இரண்டு வசனங்களும் வேறு வேறானதாகும். ஒரே பொருளுக்குரிய வசனம் அல்ல. முதல் வசனம் فَجَأَهُ الْحَقُّ என்று வந்துள்ளது. இரண்டாவது வசனம் فَجَاءَهُ الْمَلَكُ என்று வந்துள்ளது. இவ்விரு வசனங்களும் நபீ பெருமானார் அவர்கள் குகையில் இருந்த நேரம் நடந்ததையே சுட்டிக் காட்டுகின்றன.
முதல் வசனத்திலுள்ள فَجَأَ என்ற சொல்லுக்கு திடீரென்று வந்தான் – எதிர்பாராமல் வந்தான் என்றும், فَجَاءَ என்ற சொல்லுக்கு வந்தான் என்றும் பொருள் வரும். முந்தின சொல்லில் உள்ள “பேF” என்ற எழுத்தும், இரண்டாவது சொல்லிலுள்ள “பேF” என்ற ஒன்றல்ல. அது வேறு. இது வேறு.
திடீரென்று வந்தான் என்ற பொருளுக்குரிய فَجَأَ என்ற சொல்லுக்குப் பின்னால் “அல்ஹக்” என்ற சொல்லும், فَجَاءَ என்ற சொல்லுக்குப் பின்னால் “அல் மலக்” என்ற சொல்லும் வந்திருப்பது மிக நுணுக்கமாக ஆராய்ந்தறிய வேண்டிய ஒன்றாகும். இதன் இரகசியத்தை நான் எழுதினால் பூமிக்குள் இருக்கும் ஆமைகளும், தேரைகளும், தவளைகளும் வெளியே வந்து சத்தமிட்டு ஊரில் இரைச்சலையும், இடி முழக்கத்தையும் ஏற்படுத்திவிடும் என்பதற்காக அதை தொடவில்லை. ஆறாம் அறிவுள்ளவர்கள் விளங்கட்டும்.
மேற்கண்ட வரலாற்றிலிருந்து இன்னும் விபரிக்க வேண்டிய அம்சங்கள் உள்ளன. அவற்றை அடுத்த தொடரில் எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்!
العاقل بالإشارة، والجاهل بالحجارة،
தொடரும்…