தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
قال مسلم بن إبراهيم: حدثنا عون بن عمرو القيسي قال: سمعت أبا مصعب المكي، قال: أدركت المغيرة بن شعبة وأنس بن مالك وزيد بن أرقم، فسمعتهم يتحدثون أن النبي صلى الله عليه وسلم ليلة الغار أمر الله بشجرة فنبتت في وجه النبي صلى الله عليه وسلم فسترته، وأمر الله العنكبوت فنسجت فسترته، وأمر الله حمامتين وحشيتين فوقعتا بفم الغار، وأقبل فتيان قريش بعصيهم وسيوفهم، فجاء رجل ثم رجع إلى الباقين فقال: رأيت حمامتين بفم الغار، فعلمت أنه ليس فيه أحد.
அபூ முஸ்அப் அல் மக்கீ அவர்கள் பின்வரும் செய்தியை சொல்ல நான் கேட்டேன். அதாவது முஙீறதுப்னு ஷுஃபா, அனஸ் இப்னு மாலிக், செய்த் இப்னு அர்கம் ஆகிய மூவரும் பின்வருமாறு பேசிக் கொண்டிருந்தார்கள்.
(“தவ்ர்” குகையில் நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் எதிரிகள் கண்டு கொள்ளாமல் ஒழிந்திருந்தார்கள். அவ்வேளை பெருமானார் அவர்களின் முகத்தை மறைக்குமாறு மரம் ஒன்றுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். அது மறைத்தது. சிலந்திக்கு – கொட்டுப் பூச்சி – குகை வாயலில் வலை இழுக்குமாறு கட்டளையிட்டான். அது வலை இழுத்தது. காட்டுப் புறா இரண்டுக்கு குகை வாயலில் சிலந்தி இழுத்த வலைப் பின்னலில் அமருமாறு கட்டளையிட்டான். அவை அவ்வாறே செய்தன. அவ்வேளை குறைஷ் காபிர்களில் இளைஞர் குழுவொன்று அவர்களின் கம்புகளுடனும், வாள்களுடனும் வந்து குவிந்தனர். அவர்களில் ஒருவன் மட்டும் குகையில் யாருமுண்டா? என்று அறிவதற்காக குகையருகில் வந்து நின்று நோட்டமிட்டான். ஒருவருமில்லை என்று அறிந்த அவன் திரும்பிச் சென்று தன்னுடன் வந்த படை பட்டாளங்களிடம் செய்தியைக் கூறிவிட்டு அங்கு செல்வதில் பயனில்லை என்று கூறினான்.
நடந்தது என்ன? அல்லாஹ் தனது ஹபீப் கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை மறைப்பதற்காக உடனடியாகக் குகையில் ஒரு மரத்தை முளைக்கச் செய்து நபீ பெருமானாரை மறைத்து விட்டான். சிலந்தியை அழைத்து அக்குகை வாயலில் வலை இழுக்குமாறு பணித்தான். அது வலை இழுத்தது. இரண்டு காட்டுப் புறாக்களை அந்த வலைக்கு மேல் அமர்ந்து கொள்ளுமாறு பணித்தான். அங்கு பார்க்க வந்த உளவாளி இவற்றைக் கண்டதும் அக்குகையில் எவரும் இருக்க முடியாதென்று முடிவு செய்து விட்டு தன்னுடன் வந்த படைகளை அழைத்துக் கொண்டு சென்றான். அல்லாஹ் தனது ஹபீபையும், ஹபீபுடைய ஹபீபையும் காப்பாற்றினான்.
பெருமானார் அவர்களும், தோழர் அபூ பக்ர் அவர்களும் எவருக்கும் தெரியாமல் பதுங்கிப் பதுங்கி வெளியேறி சிறிது தூரம் வரும் போது வெயில் கடுமையாக இருந்ததால் ஒரு மரத்தின் கீழ் நிழல் பெற விரும்பி எங்காவது மரம் உண்டா என்று தேடினார்கள். அவர்களுக்கு ஒரு மர நிழல் கிடைத்தது. நபீ தோழர் அபூ பக்ர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அந் நிழலில் ஒரு துணியை விரித்து இதில் உறங்குங்கள் யா றஸூலல்லாஹ்! என்று சொன்னார்கள். பெருமானார் சிறிது நேரம் ஓய்வு பெற்றார்கள். உறங்கினார்கள்.
நபீ தோழர் அபூ பக்ர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கழைத்து சோர்ந்து போன பெருமானார் அவர்களுக்கு ஆட்டுப் பால் ஒரு “கப்” கொடுத்தால் நல்லதென்று விரும்பி வெளியே சென்று ஆட்டுப்பால் தேடியலைந்தார்கள். எதிர்பாராமல் அங்கு ஓர் இடையன் வந்தான். அவனோடு உரையாடி விட்டு உனது ஆடுகளிலிருந்து பால் எடுக்க முடியுமா? என்று கேட்டார்கள். ஆம் என்றான் அவன். சற்று நேரத்தில் ஆட்டுப் பால் கறந்து கொடுத்தான். இந்த ஹதீதில் فَحَلَبَ لِيْ كُثْبَةً مِنْ لَبَنٍ என்று ஒரு வசனம் வந்துள்ளது. இதற்கு اَلْقَلِيْلُ مِثْلَ الْجُرْعَةِ تَبْقَى فِى الْإِنَاءِ என்று விளக்கம் எழுதப்பட்டுள்ளது. இதன் பொருள் – பாத்திரத்தில் எஞ்சிய, ஒரு முடல் அளவிலான சொற்ப பால் என்று விளக்கம் எழுதப்படடுள்ளது. அது சிறிய அளவிலான பாலாயிருந்தாலும் நபீ பெருமான் அவர்கள் திருப்தியாக குடித்தார்கள்.
இது நீண்ட ஹதீதாயிருப்பதால் ஹதீது வசனங்கள் முழுவதையும் எழுதாமல் குறித்த பகுதியை மட்டும் எழுதுகிறேன்.
ثم قلت: قد آن الرحيل. قال: فارتحلنا والقوم يطلبوننا، فلم يدركنا أحد منهم غير سراقة بن مالك بن جعشم على فرس له، فقلت: هذا الطلب قد لحقنا يا رسول الله. قال: {لا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا} التوبة: 40 ، فلما أَنْ دَنَا مِنَّا، وكان بيننا وبينه قيد رُمحين أو ثلاثةٍ، قلت: هذا الطلب قد لحقنا يا رسول الله. وبكيت، فقال: ‘ما يبكيك’؟ قلت: أما والله ما على نفسي أبكي، ولكني إنما أبكي عليك. فدعا عَلَيْهِ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ‘اللهم اكفناه بما شئت’. فساخت به فرسُه في الأرض إلى بطنها، فوثب عنها، ثم قال: يا محمد قد علمتُ أن هذا عملُك، فادع الله أن ينجيني مما أنا فيه، فوالله لأعمين على من ورائي من الطلب،
விளக்கம்: பின்னர் நான் பெருமானார் அவர்களிடம் நாம் போக வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என்று சொல்லிவிட்டு இருவரும் வெளிக்கிட்டோம். எங்களைத் தேடிக் கொண்டிருந்த எதிரிகள் தேடிக் கொண்டே இருந்தார்கள். ஆயினும் அவர்களில் எவரும் எம்மைக் காணவில்லை. பின்னர் குதிரையில் வந்த எதிரிகளில் ஒருவரான “சுறாகா” என்பவன் எங்களைக் கண்டு கொண்டான். அப்போது தோழர் அபூ பக்ர் நாயகம் அவர்கள் சத்தமிட்டு இதோ வந்து விட்டான் எதிரி “சுறாகா” நாயகமே என்று கூறினார்கள். இது கேட்ட பெருமானார் அவர்கள் திருக்குர்ஆன் “சூறா தவ்பா”வின் நாற்பதாம் வசனமான لَا تَحْزَنْ إِنَّ اللهَ مَعَنَا நீங்கள் கவலைப் படாதீர்கள் அல்லாஹ் எங்களுடனுள்ளான்” என்ற வசனத்தை சொல்லிக் காட்டினார்கள்.
“சுறாகா” என்ற எதிரி இவர்கள் இருவரையும் இரண்டு ஈட்டி அளவு தூரம் நெருங்கிய போது மீண்டும் தோழர் அபூ பக்ர் அவர்கள் இதோ நெருங்கி வந்து விட்டான் நாயகமே என்று சொன்ன போது நபீகளார் முதலில் பிரார்த்தனை செய்தது போல் மீண்டும் பிரார்த்தனை செய்த போது அவன் குதிரை மேலிருக்கும் நிலையில் குதிரை நாலு கால்களையும் அதன் வயிறு வரை பூமி விழுங்கிவிட்டது. குதிரை மீதிருந்த “சுறாகா” கீழே – நிலத்தில் பாய்ந்து, முஹம்மதே! இது உங்களின் வேலைதான். ஆகையால் அல்லாஹ் என்னை ஈடேற்றமாக்கி வைக்குமாறு அவனிடம் கேளுங்கள். அவ்வாறு செய்தால் உங்கள் இருவரையும் தேடிக் கொண்டிருந்த எதிரிகிளிடமிருந்து உங்களைக் காப்பாற்றுவேன் என்றான். உங்களுக்கு நான் வேறென்ன செய்ய வேண்டுமென்று கேட்டான். பெருமானார் அவர்கள் உன்னிடம் எங்களுக்கு எத் தேவையுமில்லை என்று உருக்கமான பதில் கூறிவிட்டு அவனுக்காக “துஆ” செய்தார்கள். அவன் கஷ்டத்திலிருந்து விடு பட்டான். அவர்களும், தோழர்களும் இரவு நேரத்தில் திரு மதீனா நகர் வந்து சேர்ந்தனர்.
மேற்கண்ட நபீ மொழிகள் மூலம் நாம் பல பாடங்கள் படிக்கலாம்.
குகையில் இருவரும் இருந்த நேரம், பயங்கர சூழலில் அல்லாஹ் எவ்வாறு அவர்களைக் காப்பாற்றினான் என்பதை நினைக்கும் போது பெருமானாரின் “முஃஜிஸத்” அற்புதத்தையும், அவர்களின் கேள்விக்கு அல்லாஹ் வழிப்படுவதையும் பார்க்கும் போது அஷ்ஷெய்ல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ அவர்களின் ஒரு வசனம் என் நினைவுக்கு வருகிறது. அவர்கள் ஒரு கட்டத்தில் அல்லாஹ் பற்றிச் சொல்கையில்
يَعْبُدُنِيْ وَأَعْبُدُهُ – وَيَمْدَحُنِيْ وَأَمْدَحُهُ
அவன் என்னை வணங்குகிறான். நான் அவனை வணங்குகிறேன்.
அவன் என்னைப் புகழ்கிறான். நான் அவனைப் புகழ்கிறேன்.
என்று சொன்னார்கள்.
அவர்களின் இவ்வசனம் ஸூபிஸ ஞானம் தெரியாத உலமாஉகளின் பித்தைக் கலக்கிவிட்டது. மூளையைக் குழுப்பிவிட்டது. துறை தெரியாமல் தோணி தள்ளத் தொடங்கி ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ நாயகம் அவர்களை “காபிர்” என்றும், “சிந்தீக்” என்றும் சொன்னார்கள்.
ஒரே “வுழூ”வுடன் மூன்று மாதங்கள் இருந்த மகானை, 900 நூல்களுக்கும் அதிகமான நூல்களை எழுதிய மகானை, இறைஞான மேதைகளால் அஷ்ஷெய்குல் அக்பர், வல்மிஸ்குல் அத்பர், வல் கிப்ரீதுல் அஹ்மர், வந்நூறுல் அப்ஹர் என்று வாழ்த்தப்பட்ட அறிவு மலையை, சிரியா நாட்டில் வாழ்ந்த ஒருவர் ஐங்காலத் தொழுகையின் பின்னும் اَللهم الْعَنْ اِبْنَ عَرَبِيْ இறைவா! இப்னு அறபீயை சபித்து விடுவாயாக! என்று 10 தரம் சபித்து வந்தார்.
ஒரு நாள் அவர் மரணித்து விட்டார். அவரின் முகம் ஒரு மிருகத்தின் முகமாக மாறிவிட்டது. ஊரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அலையலையாக மக்கள் கூட்டம் குவிந்தன. இறந்தவரின் உறவினர்கள் குடும்ப சகிதம் இப்னு அறபீ நாயகம் அவர்களிடம் வந்து, இவர் தினமும் உங்களை சபித்தவர் என்பது எங்களுக்குத் தெரியும். இன்று அவர் மரணித்து விட்டார். அவரின் முகம் மிருகத்தின் முகம் போல் மாறிவிட்டது. அவரை வந்து பார்த்து மன்னித்து விடுங்கள் என்று அழுது சலித்து நின்றார்கள்.
இப்னு அறபீ நாயகம் அவர்கள் அவரின் வீடு சென்று “ஜனாஸா”வைப் பார்த்துவிட்டு அங்கேயே இரண்டு “றக்அத்” தொழுது நீண்ட நேரம் “ஸுஜூத்” நிலையில் இருந்த பின் தொழுகையை முடித்து விட்டு இப்போது “ஜனாஸா”வைப் பாருங்கள் என்றார்கள். அங்கு கூடி நின்ற சனங்கள் முண்டியடித்துக் கொண்டு பார்க்கத் தொடங்கினர். மரணித்தவர் உயிருடன் இருந்த போது இருந்ததை விட அழகாக இருந்தது கண்டு வியந்தார்கள். இத்தகைய ஒரு மகானை “காபிர்” என்றும், “சிந்தீக்” என்றும் சொல்வது அல்லாஹ்வின் சாபத்தை நேரடியாகவே இறக்கிவிடும் செயலாகும்.
مَعْنَى الشِّعْرِ فِى بَطْنِ الشَّاعِرِ
“கவியின் கருத்து கவிஞனின் வயிற்றினுள்ளே” என்று சொல்வது போல் ஸூபீ மகான்கள், ஆரிபீன்களான இறைஞானிகளின் பேச்சுக்களையோ ஆழமாக ஆராயமல் அவர்களைப் பிழை சொல்வது நூறு வீதம் தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஸூபீகள், إِذَا تَمَّ الْفَقْرُ هُوَ اللهُ “பக்ர் பூரணமானால் அவன் அல்லாஹ்” என்று சொல்லியுள்ளார்கள். அதாவது உச்சக்கட்ட “பக்ர்”ல் இருப்பவன் அல்லாஹ் என்று சொல்லியுள்ளார்கள்.
“பக்ர்” என்ற சொல்லின் வெளிப்படையான பொருள் வறுமை என்பதாகும். இவ்விடத்தில் இச் சொல்லுக்கு வறுமை என்று பொருள் கொண்டால் வறுமைக் கோட்டிலுள்ள அனைவரையும் அல்லாஹ் என்றே சொல்ல வேண்டும். இது “ஷரீஆ”வுக்கு முற்றிலும் முரணானதாகும்.
இது தொடர்பான விபரம் விரிவாக எழுத வேண்டியுள்ளதால் அடுத்த தொடரில் எழுதுகிறேன். இன்ஷா அல்லாஹ்! இத் தொடரை வாசித்தவர்கள் அடுத்த தொடரையும் வாசித்தல் விளக்கத்திற்கு துணை செய்யும். (தொடரும்..)