தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இவர்களின் இயற் பெயர் யஹ்யா, புனைப் பெயர் அபூ சகரிய்யா, இமாம் நவவீ என்று பிரசித்தி பெற்றிருந்தார்கள்.
இவர்கள் ஹதீது, பிக்ஹ், லுஙத் முதலான கலைகளில் பெரும் மேதையாக இருந்தார்கள். “ஷாபிஈ” மத்ஹபின் சட்ட மேதையாவார்கள். “ஷாபிஈ மத்ஹப்” இன் சட்டக்கலையில் இவர்களின் கூற்றுக்கு முதலிடம் வழங்கப்படும்.
இவர்கள் شَيْخُ الشَّافِعِيَّةْ “ஷாபிஇய்யாக்களின் ஷெய்கு” என்று பட்டம் வழங்கப்பட்டவர்களாவர். شيخان இரு ஷெய்குகள் என்று “ஷாபிஈ மத்ஹப்” நூல்களில் கூறப்பட்டால் இமாம் நவவீ, இமாம் றாபிஈ இருவரையுமே அச் சொல் குறிக்கும்.
இமாம் நவவீ ஹிஜ்ரீ 631ல் نَوَى – “நவா” எனும் ஊரில் பிறந்தார்கள். 10 வயதை அடைந்த போது தந்தை இவர்களை ஒரு கடையில் கூலிக்கு வேலை செய்ய அமர்த்தியிருந்தார்கள். ஆனால் மகனோ கடையில் வேலை செய்யாமல் திருக்குர்ஆனை மனனம் செய்வதிலேயே நேரத்தைக் கழித்து 15 வயதை அடையுமுன் திருக்குர்ஆனை மனனம் செய்து கொண்டார்கள். கடையிலிருந்து விலக்கப்பட்டு 18 வயது வரை வீட்டிலேயே இருந்தார்கள்.
ஹிஜ்ரீ 649ல் சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ் வந்து சிரியாவின் “முப்தீ” அப்துர் றஹ்மான் இப்னு இப்றாஹீம் அல் பசாரீ அவர்களிடம் கல்வி கற்றார்கள். சுமார் 28 வருடங்கள் தலை நகரிலேயே இருந்தார்கள். அக்காலங்களில் “அல் மத்ரஸதுர் றவாஹிய்யா”விலுள்ள சிறிய அறையொன்றில் தங்கியிருந்து படிப்பதிலும், படித்துக் கொடுப்பதிலும், “கிதாபு”கள் எழுதுவதிலும் காலம் கழித்தார்கள். பின்னர் ஹிஜ்ரீ 676 வரை – மரணிக்கும் வரை “தாறுல் ஹதீதில் அஷ்றபிய்யா”வில் தலைமைப் பதிவியில் இருந்தார்கள். இவர்கள் மக்களால் “முஹ்யித்தீன்” என்ற பட்டத்தால் அழைக்கப்பட்டாலும் தங்களின் பணிவின் காரணத்தால் அதை விரும்பாதவர்களாயும் இருந்தார்கள். இவர்கள் நவவீ என்றும், நவாவீ என்றும் அழைக்கப்பட்டார்கள். ஆயினுமவர்கள் தங்களின் பெயரை “நவவீ” என்றுதான் எழுதுவார்கள்.
இமாம் நவவீ அவர்கள் ஏழு வயதுச் சிறுவனாயிருந்த போது றமழான் மாதம் பிறை 27ம் இரவு தங்களின் தந்தைக்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று விழித்து தந்தையே! வீடு முழுவதும் ஒளியாகத் தோற்றுகிறதே! இது என்ன என்று கேட்ட போது தந்தை இன்றிரவு “லைலதுல் கத்ர்” இரவு என்று கூறினார்கள்.
இமாம் நவவீ அவர்களின் முக்கிய குறிப்புக்களை மட்டும் எழுதியுள்ளேன். எனக்கு வாய்ப்புக் கிடைத்தால் அவர்களின் முழு வரலாற்றுக் குறிப்புகளையும் எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்!
“நவா” எனும் ஊர் “டமஸ்கஸ்” நகரிலிருந்து சுமார் 85 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. நானும், அல்ஹாஜ் MCM ஹுஸைன் அவர்களும், நண்பர் நஸார் அவர்களும் “டமஸ்கஸ்” நகரில் மூன்று நாட்கள் தங்கியிருந்த போது இமாம் நவவீ அவர்களின் தரிசனத்திற்காக “நவா” எனும் ஊர் செல்ல விரும்பினோம். ஆயினும் அவ்வேளை அங்கு சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்ததால் எங்களுக்கு வாகனம் கிடைக்கவில்லை. கவலையோடு நாடு திரும்பிவிட்டோம்.
இமாம் நவவீ அவர்கள் “டமஸ்கஸ்” நகரிலிருந்து சுமார் 85 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள “நவா” எனும் ஊரில் பிறந்தவர்களாயினும் தலைநகர் டமஸ்கஸிலேயே மரணிக்கும் வரை வாழ்ந்துள்ளார்கள். இங்குதான் அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ நாயகம் அவர்கள் அடக்கம் பெற்றுள்ளார்கள். இவர்கள் அடக்கம் பெற்றது ஹிஜ்ரீ 631ல் ஆகும். இப்னு அறபீ நாயகம் மரணித்த அதே வருடம்தான் இமாம் நவவீ பிறந்துள்ளார்கள். இதிலிருந்து சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இப்னு அறபீ அவர்கள் யாரென்று அறிவதற்கும், அவர்கள் எழுதிய நூல்களை வாசிப்பதற்கும் இமாம் நவவீ அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும். இதனால் இமாம் நவவீ அவர்கள் இப்னு அறபீ பற்றி நாம் அறிந்திருப்பதை விட அதிகமாக அறிந்திருப்பதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு என்பது விளங்குகிறது.
இமாம் நவவீ அவர்களிடம் இப்னு அறபீ நாயகம் அவர்கள் பற்றி மக்கள் கேட்ட போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். இத்தகவலை இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ அவர்கள் தங்களின் “அல்யவாகீத்” எனும் நூல் முதலாம் பாகம் 08ம் பக்கத்தில் கூறுகிறார்கள்.
وَسُئِلَ الْاِمَامُ مُـحْيِ الدِّيْنِ النَّوَوِيْ رَحِمَهُ الله عَنِ الشَّيْخِ ابْنِ عَرَبِيْ قَالَ تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ. وَلَكِنِ الَّـذِيْ عِنْدَنَا أَنَّهُ يَحْرُمُ عَلَى كُلِّ عَاقِلٍ اَنْ يُسِيْئَ الظَّنَّ بِاَحَدٍ مِنْ أَوْلِـيَاءِ اللهِ عَزَّوَجَلَّ وَيَجِبُ عَلَيْهِ اَنْ يُـؤَوِّلَ اَقْـوَالَهُمْ وَاَفْعَالَهُمْ مَادَامَ لَمْ يَلْحَقْ بِدَرَجَتِهِمْ. وَلَايَـعْجِزُ عَنْ ذَلِكَ اِلَّا قَلِيْلُ التَّـوْفِيْقِ. قَالَ فِيْ شَرْحِ الْمُهَذَّبِ ثُمَّ اِنْ اُوِّلَ فَلْيُؤَوَّلْ كَلَامُهُمْ اِلَى سَبْعِيْنَ وَجْهًا. وَلَانَقْبَلُ تَأْوِيْلًا وَاحِدًا. مَاذَاكَ اِلَّا تَعَنُّتٌ
இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் இப்னு அறபீ நாயகம் அவர்கள் பற்றிக் கேட்கப்பட்ட போது (அது வாழ்ந்து மறைந்து விட்ட ஒரு சமூகம். எங்களின் கடமை என்னவெனில் அல்லாஹ்வின் வலீமாரில் எவர் மீதும் கெட்ட எண்ணம் வைப்பது “ஹறாம்” விலக்கப்பட்டதாகும். ஆயினும் ஒரு புத்திசாலியின் கடமை என்னவெனில் வலீமாரின் சொல், செயல்களுக்கு “தஃவீல்” வலிந்துரை வைப்பதேயாகும். இவ்வாறு செய்தல் கூட அந்த வலீமாரின் ஆன்மிகத் தரத்தை அடையாதவர் மீதே கடமையாகும். அவர்களின் அந்தஸ்தை அடைந்தவர்களோ வலிந்துரை எதுவுமின்றி அவர்கள் சொல்வதையும், செய்வதையும் விளங்கிக் கொள்வார்கள். இவ்வாறு சொன்ன இமாம் நவவீ அவர்கள் இடையில் ஒரு வசனம் சொல்லியுள்ளார்கள். அது وَلَا يَعْجِزُ ذَلِكَ إِلَّا قَلِيْلُ التَّوْفِيْقِ என்ற வசனமாகும். இதன் பொருள் அவ்வாறு வலிந்துரை செய்யாமல் அவர்களின் சொற், செயல்களைப் பிழை காண்பவர்கள் அல்லாஹ்வின் நல்லனுகூலமும், நற் பாக்கியமும் இல்லாதவர்களேயாவர்)
இவ்வாறு கூறிய இமாம் நவவீ அவர்கள் மேலும் தங்களின் “ஷர்ஹுல் முஹத்தப்” எனும் நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
ثُمَّ اِنْ اُوِّلَ فَلْيُؤَوَّلْ كَلَامُهُمْ اِلَى سَبْعِيْنَ وَجْهًا. وَلَانَقْبَلُ تَأْوِيْلًا وَاحِدًا. مَاذَاكَ اِلَّا تَعَنُّتٌ، (اليواقيت، ج 1، ص 8، للشعراني)
அவ்லியாஉகளின் பேச்சுக்கு வலிந்துரை கூறுவதாயினும் ஒரேயொரு வலிந்துரையோடு மட்டும் நின்று கொள்ளாமல் எழுபது வலிந்துரையாவது கொள்ள வேண்டும். நாங்கள் ஒரு வலிந்துரை மட்டும் கூறுவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஒரு வலிந்துரை மட்டும்தான் கூற வேண்டுமேயன்றி எழுபது வலிந்துரை தேவையில்லை என்பது மன முரண்டேயாகும் என்று கூறியுள்ளார்கள். இது சிந்தனையிற் கொள்ள வேண்டிய ஒரு கருத்தாகும். குறிப்பாக உலமாஉகள் சிந்திக்க வேண்டியதாகும்.
இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ள தகவலின் படி முஹ்யித்தீன் இப்னு அறபீ அவர்கள் வலீமாரில் ஒருவர் என்பதும், அவர்களின் பேச்சின் ஆழம் விளங்காதவர்கள் அதற்கு ஒன்றன் பின் ஒன்றாக 70 வலிந்துரைகளேனும் கொள்ள வேண்டும் என்பதும், அவ்வாறு கொள்ள முடியாது என்பவன் மனமுரண்டு உள்ளவன் என்பதும் தெளிவாகின்றன.
இமாம் நவவீ அவர்கள் “ஷரீஅத்”தைப் பேணுவதில் மிக உயர்வான இடத்தில் உள்ளவர்களாவர். இப்னு அறபீ அவர்கள் பற்றி பிழையாகச் சொல்வதாயின் அவர்கள்தான் முதல் வரிசையில் நின்று சொல்ல வேண்டியவர்களாவர்.
“அகீததுஸ் ஸூபிய்யா” عقيدة الصوفية என்ற நூலை எழுதியவர் நூறு வீதமும் வஹ்ஹாபிஸக் கொள்கையுள்ளவராவார். இவர் வஹ்ஹாபிஸத்திற்கு ஆதரவான அமைப்பில் தனது நூலை எழுதியுள்ளார்.
இவர் தனது நூலில் 629ம் பக்கத்தில் இமாம் ஸிறாஜுத்தீன் அல்புல்கீனீ அவர்கள் இமாம் இப்னு அறபீ அவர்களை “காபிர்” என்று சொன்னதாக ஒரு தகவல் எழுதியுள்ளார்.
இவர் எழுதிய தகவலுக்கு மாறான ஒரு தகவலை இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ அவர்கள் தங்களின் “அல்யவாகீத்” எனும் நூலில் 09ம் பக்கத்தில் எழுதியுள்ளார்கள்.
وأمّا ما أشاعَه بعضُ المُنكرين عن الشيخ عِزِّ الدين بن عبد السلام وعن شيخنا الشيخِ سِراجِ الدين البُلۡقِيۡنِيۡ أنَّهُما اَمَرَا بإحراقِ كُتُبِ الشيخ محي الدين فكَذِبٌ وزُوۡرٌ، ولو أنّها اُحرِقتۡ لم يَبۡقَ منها الآن بمِصْرَ والشّام نسخةٌ، ولا كان أحدٌ نَسَخَهَا بعد كلام هذين الشيخين وحَاشَاهُمَا من ذلك ولو أنّ ذلك وقع لم يَخۡفَ. لأنّه من الأمور العِظام، الّتي تَسِيرُ بها الرُّكۡبَانُ فی الآفاقِ ولتعرض لها أصحابُ التواريخ،
அஷ்ஷெய்கு இஸ்ஸுத்தீன் இப்னு அப்திஸ்ஸலாம் அவர்களும், அஷ்ஷெய்கு ஸிறாஜுத்தீன் அல்புல்கீனீ அவர்களும் இப்னு அறபீ அவர்களின் “கிதாப்” – நூல்கள் அனைத்தையும் எரிக்க வேண்டுமென்று சொன்னதாக “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தின் எதிரிகள் சிலர் பரப்பிய செய்தி பொய்யும், புரட்டுமாகும். அவ்வாறு இவர்கள் இருவரும் சொல்லி இப்னு அறபீ அவர்களின் நூல்கள் எரிக்கப்பட்டிருக்குமாயின் இன்று மிஸ்ர், சிரியா போன்ற நாடுகளில் அவர்களின் நூல்களில் ஒரு பிரதி கூட இருக்கவும் முடியாது. அவ்வாறு குறிப்பிட்ட இரு இமாம்களும் சொல்லியிருந்தால் அவர்கள் அவ்வாறு சொன்னபின் எவரும் அவற்றில் ஒரு பிரதி கூட எடுத்திருக்கவும் முடியாது. (ஆனால் இன்று மிஸ்ர், ஷாம் – சிரியா முதலான நாடுகளில் இப்னு அறபீ அவர்களின் நூல்களிற் பல நூலகங்களிலும், புத்தகக் கடைகளிலும் விற்பனைக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்).
உண்மையில் அவ்வாறு நடந்திருந்தால் – அதாவது அவர்களின் நூல்கள் எரிக்கப்பட்டிருந்தால் இத்தகவல் உலகம் முழுவதும் பரவியிருக்கும். அவ்வாறு ஒன்றுமே நடக்கவில்லை. ஆகையால் எதிரிகளின் இக்கூற்று பொய்யானதாகும்.
ஆதாரம்: அல்யவாகீத், பாகம் 01, பக்கம் 09.
இமாம்களிற் பலர் இருக்கும் நிலையில் இமாம் நவவீ அவர்களை பற்றி மட்டும் குறிப்பாக நான் எழுதியதற்கான காரணம் என்னவெனில், “ஷரீஆ”வின் “பிக்ஹ்” சட்டக் கலையோடு மட்டும் தொடர்புள்ள அறிஞர்களில் தரமான ஒருவர் ஒரு சட்டம் சொன்னார் என்றும், தரமில்லாத இன்னும் சிலர் அதற்கு மாறான சட்டம் சொன்னார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். இவ்வாறான கட்டத்தில் தரமான அறிஞரின் கருத்துக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
“ஷாபிஈ மத்ஹப்” தொடர்பான சட்டங்களில் நான் அறிந்த வகையில் இமாம் றாபிஈ, இமாம் நவவீ போன்றவர்களின் கூற்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
“ஷரீஆ”வுக்கு முரணான எந்த ஓர் அம்சம் எதில் உள்ளதோ அதை முதலில் எதிர்ப்பவர்கள் “ஷரீஆ”வாதிகளான “புகஹாஉ” சட்ட மேதைகளேயாவர்.
“வஹ்ததுல் வுஜூத்” கொள்கை “ஷரீஆ”வுக்கு முரணானதாயிருந்தால், அல்லது இப்னு அறபீ அவர்கள் திருக்குர்ஆனுக்கும், நபீ மொழிகளுக்கும் முரணான கருத்துள்ளவர்களாயிருந்தால் அவர்கள் பற்றி மேலே கருத்துக் கூறிய இமாம் நவவீ அவர்கள் இப்னு தைமிய்யாவை விட பல படி மேலே நின்று இப்னு அறபீ அவர்களையும், அவர்களின் கொள்கையான “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையையும் எதிர்த்திருப்பார்கள்.
இமாம் நவவீ அவர்கள், இப்னு அறபீ அவர்களையும், “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையையும் ஆதரித்து கருத்துத் தெரிவித்திருப்பது போல் இன்னும் பல வலீமாரும், இமாம்களும், ஷெய்குமார்களும் கருத்துக் கூறியுள்ளார்கள். அவர்களின் பட்டியலையும் பொது மக்களின் பார்வைக்கும், உலமாஉகளின் பார்வைக்கும் நாம் தருவோம். இன்ஷா அல்லாஹ்!
தொடரும்…