தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
ஒரு நாள் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் தோழர்களுடன் பள்ளிவாயலில் இருந்த போது அங்கிருந்தவர்களில் எவருக்கும் அறிமுகமில்லாத ஒருவர் வந்து பெருமானார் அவர்களை நெருங்கி “ஈமான்” என்றால் என்ன? என்று வினவினார். நபீ பெருமானார் ஈமானின் அம்சங்கள் ஆறு எனக் கூறி அவற்றைச் சொல்லியும் காட்டினார்கள்.
வந்தவர் இரண்டாவதாக இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டார். நபீ பெருமான் அவர்கள் இஸ்லாமின் ஐந்து கடமைகளையும் சொன்னார்கள்.
வந்தவர் மூன்றாவதாக إِحْسَانْ “இஹ்ஸான்” என்றால் என்ன? என்று கேட்டார். “இஹ்ஸான்” என்றால் إِخْلَاصْ என்று சொல்லப்படும். இரண்டும் ஒரே பொருளுக்குரிய சொற்களாகும். இதன் பொருள் கலப்பில்லாமை என்பதாகும். தூய்மை என்றும் பொருள் கொள்ளலாம். புனிதம் என்ற பொருளும் பொருந்தும்.
அவரின் கேள்விக்கு பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்,
أَنْ تَعْبُدَ اللهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ،
“நீங்கள் அல்லாஹ்வைப் பார்ப்பவன் போல் அவனை வணங்குவதாகும். நீங்கள் அவனைக் காணாது போனாலும் அவன் உங்களைக் காண்கிறான்” என்று பதில் கூறினார்கள்.
இந்த பதில்தான் “தஸவ்வுப்” எனும் ஸூபிஸத்தின் அத்திவாரமாகும்.
நான் ஓதுகின்ற காலத்தில் எனக்கு எனது “உஸ்தாத்” ஆசிரியர்கள் இவ்வாறுதான் பொருள் சொல்லித் தந்தார்கள். நான் ஓதிய கால கட்டத்தில் ஏனைய மாணவர்களுக்கும் இவ்வாறுதான் பொருள் சொல்லிக் கொடுக்கப்பட்டது.
இந்தப் பொருளை நிதானமாக ஆய்வு செய்தால் இது பிழையான பொருள் என்பது தெளிவாகும். இதை விளக்கமாகவும், விரிவாகவும் அலசி ஆய்வு செய்வதற்கு அதிகம் எழுத வேண்டும். அவ்வாறு எழுதினாற் கூட இவ்வசனத்தின் சரியான பொருளை விளங்கிக் கொள்வது கடினம்தான். எனினும் நன்றாக விளக்கி வைக்கும் ஒருவர் நேரில் சொல்லக் கேட்பது போல் அமையாது. ஒரு ஞானகுரு தனது மாணவர்களின் முகம் பார்த்து நேரில் விளக்கி வைப்பது போல் அமையாது.
எனவே, இவ்வசனத்தின் சரியான, எதார்த்தமதான விளக்கத்தை ஒருவர் அறிய விரும்பினால் அவர் முடியுமானால் என்னை, அல்லது இவ்வசனத்தின் எதார்த்தம் புரிந்த ஒரு மகானை சந்திப்பது அவசியம் என்று நான் ஆலோசனை கூறுகிறேன்.
இங்கு ஒரு சிக்கல் உள்ளது. அது – நீ அல்லாஹ்வைப் பார்ப்பவன் போல் அவனை வணங்க வேண்டும். كَأَنَّكَ تَرَاهُ “அவனைப் பார்ப்பவன் போல்” என்ற வசனத்தில் ஒரு “காப்” வந்துள்ளது. (இதை வாசிக்கும் எந்தச் சகோதரனாயினும் இந்த விளக்கம் காத்தான்குடி றஊப் சொல்வதாக நினைத்துக் கொள்ளாமல் யாரோ ஒருவர் சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டு வாசிப்பது சிறந்தது)
குறித்த அந்தக் “காப்” “தஷ்பீஹ்” என்று மொழியிலக்கணத்தில் சொல்லப்படும். “தஷ்பீஹ்” என்றால் ஒன்றை இன்னொன்றுக்கு ஒப்பாக்குதல் என்று சொல்லப்படும்.
இதை ஓர் உதாரணம் மூலம் ஓரளவேனும் புரிந்து கொள்ளலாம்.
அப்துல்லாஹ் என்பவன் அப்துல் மஜீத் என்பவனிடம் அவன் தனது வாழ்வில் காணாத ஒருவரின் பெயர் குறிப்பிட்டு, உதாரணமாக “அப்துஸ் ஸத்தார் என்பவனைக் குறிப்பிட்டு அவனைப் பார்ப்பவன் போல் இவ்விடத்தில் நின்று கொள்” என்று சொல்வது போன்று.
அப்துல் மஜீத் என்பவன் தனது வாழ்வில் அப்துஸ்ஸத்தார் என்பவனை ஒரு முறையேனும் காணாமலிருக்கும் நிலையில் அப்துல் மஜீத் என்பவனிடம் அப்துஸ்ஸத்தாரைப் பார்ப்பவன் போல் இவ்விடத்தில் நின்று கொள் என்று சொன்னால் அப்துல் மஜீத் எவ்வாறு நிற்க வேண்டும்? அப்துஸ்ஸத்தாரை ஒரு முறையேனும் காணாத அப்துல் மஜீத் அவனைப் பார்ப்பவன் போல் எவ்வாறு நிற்க முடியும்? இது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.
அப்துஸ்ஸத்தாரை அப்துல் மஜீத் ஒரு முறையாவது கண்டிருந்தால்தானே அவனைப் பார்ப்பவன் போல் நிற்க முடியும். அப்துஸ்ஸத்தார் கறுப்பானவனா? சிவப்பானவனா? கட்டையானவனா? நெட்டையானவனா? என்பதே தெரியாத அப்துல் மஜீத் அவனைப் பார்ப்பவன் போல் நிற்பது எவ்வாறு சாத்தியமாகும்? அல்லாஹ் உருவமில்லாதவன். கறுப்பானவனா? சிவப்பானவனா? கட்டையானவனா, நெட்டையானவனா? என்றும் சொல்ல முடியாத அல்லாஹ்வை பார்ப்பவன் போல் நிற்பது சாத்தியமற்றதாகும். நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சாத்தியமில்லாத ஒன்றைச் செய்யுமாறு சொல்வார்களா? நாம் சிந்திக்க வேணடும்.
எனவே, இங்கு விபரமாகச் சொல்ல வேண்டிய விடயங்கள் நிறைய இருப்பதால் இது தொடர்பாக இன்னோர் இடத்தில் எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்!
فإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ،
“நீ அவனைக் காணவில்லையானால் அவன் உன்னைக் காண்கிறான்”
இந்த வசனத்தின் வெளி அமைப்பு அறபு மொழி நடைக்குப் பொருத்தமற்றதாகக் காணப்படுகிறது.
இவ்வசனத்தில் வந்துள்ள فَإِنْ என்பது “ஷர்த்” என்றும், فَإِنَّهُ يَرَاكَ அவன் உன்னைப் பார்க்கிறான் என்ற வசனம் முன்னால் வந்துள்ள “ஷர்த்” என்பதற்கு “ஜவாப்” ஆகவும் வந்துள்ளது. மொழியிலக்கணத்தில் “ஷர்த்” வந்தால் அதற்கு “ஜவாப்” வர வேண்டும். அவ்விரண்டுக்கும் பொருளில் பொருத்தம் இருக்கவும் வேண்டும். பொருத்தமின்றேல் வசனம் பிழையாகிவிடும். நபீ பெருமானாரின் திரு வாய் மூலம் பிழையான வசனம் வெளியாகாதென்பது திட்டமான விடயமாயிருப்பதால் இங்கு சற்று விரிவான விளக்கம் அவசியமாகிறது. அதை என்னால் முடிந்தவரை எழுதுகிறேன். வாசிக்கும் நேயர்களுக்கு நான் கூறும் விளக்கம் கூட சரியாகப் புரியவில்லையானால் இதை தூக்கியெறிந்து விடாமல் பொறுமையுடன் மீண்டும் பல தரம் வாசிக்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன். பல தரம் படித்தும் பயன் கிடைக்காது போனால் என்னை நேரில் சந்தித்து விளக்கம் பெற முயற்சிக்க வேண்டும். அல்லது இது தொடர்பான ஞானமுள்ள இந்நாட்டில் இலைமறை காய் போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்களைச் சந்தித்து விளக்கம் பெற வேண்டும் என்று அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
அல்லாஹ் திருக்குர்ஆனில்,
وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا
“எங்களிலே “ஜிஹாத்” போர் செய்பவர்களுக்கு எங்களின் வழிகளை நாங்கள் காண்பித்துக் கொடுப்போம்” என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான். (29-69)
அல்லாஹ் கூறியுள்ள இவ்வசன நடை மிகவும் உன்னிப்பாக ஆய்வு செய்ய வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் وَالَّذِيْنَ جَاهَدُوْا فِى سَبِيْلِنَا “எங்களின் பாதையில் “ஜிஹாத்” செய்பவர்களுக்கு எங்களின் வழிகளைக் காட்டிக் கொடுப்போம்” என்று அல்லாஹ் சொல்லியிருந்தால் இது மிக உன்னிப்பாக ஆய்வு செய்ய வேண்டிய ஒன்றாக இருக்காது. அல்லாஹ் தனது பாதையில் போர் செய்வதைச் சொல்கிறான் என்று மிக இலகுவாக முடிவு செய்து விடலாம். ஆனால் அவனோ அவ்வாறு சொல்லாமல் فى سبيلنا எங்களின் வழியில் என்று சொல்லாமல் فِيْنَا எங்களிலே போர் செய்தவர்கள் என்று கூறுகிறான்.
அல்லாஹ்விலே “ஜிஹாத்” போர் செய்வதற்கும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வதற்கும் வித்தியாசமுண்டு. இரண்டும் ஒன்றல்ல. இதை மிக நுணுக்கமாக ஆய்வு செய்யவேண்டும்.
இவ்வசனத்திற்கு உலமாஉகளிற் சிலர் பின்வருமாறும் ஒரு விளக்கம் சொல்வார்கள். அதாவது فِيْنَا எங்களிலே என்றால் எங்களின் பாதையில் என்று ஒரு விளக்கம் சொல்வார்கள். அவர்களின் இவ்விளக்கத்தை நிறுவுவதற்காக மொழியிலக்கணத்தோடு தொடர்புள்ள ஒரு சாட்டும் சொல்வார்கள். அதாவது فِيْنَا என்றால் فِى سَبِيْلِنَا என்றுதான் இருக்கும். இங்கு سَبِيْلْ என்ற சொல் நீக்கப்பட்டுள்ளது. அதாவது “ஸபீல்” என்ற சொல் “முழாப்” அது நீக்கப்பட்டுள்ளது என்று சொல்லி இவ்வசனம் புனிதப்போர் செய்வதையே குறிக்குமேயன்றி அல்லாஹ்வில் போர் செய்தல் என்ற அம்சத்தைக் குறிக்காது என்று சமாளித்துவிட்டு ஆன்மிக வழிக்குரிய கதவை மூடிவிடுவார்கள். ஒரு வகையில் இவர்கள் சொல்வதுதான் சரியான விளக்கம் என்று நாம் வைத்துக் கொண்டால் கூட நாம் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் விளக்கம் சொல்ல வேண்டும். அவர்கள் சரியான விளக்கம் சொல்வார்களாயின் அதை முழு மனதுடன் நாம் ஏற்றுக் கொள்ளத் தயாராகவே உள்ளோம். ஸூபீகளான எம்மிடம் “இனாத்” மன முரண்டிற்கு இடமே இல்லை. وَالْحَقُّ أَحَقُّ أَنْ يُتَّبَعَ சத்தியம் எதுவோ இது பின்பற்றப்பட வேண்டியதாகும். இதுவே எமது கொள்கை. வாதமும் செய்யமாட்டோம். விதண்டாவதமும் செய்யமாட்டோம். எமது கருத்துக்களை ஏற்பவர்கள் ஏற்கட்டும். எறிபவர்கள் எறியட்டும். எமது கடமையை நாம் செய்வோம். இக்கேள்வியும், இதற்கான விடையும் மொழியிலக்கணத்தோடு தொடர்புடையதால் இதன் தாற்பரியமும், அனுபவமும், திறமையும் உள்ள உலமாஉகளுக்கும், திறமையுள்ள மாணவர்களுக்கும் மட்டும் விளங்குமாதலால் இது தொடர்பான விபரத்தை அறபு மொழியிலக்கணம் படிக்காதவர்கள் வாசித்து தடுமாற வேண்டாம் என்று அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ،
“நீ அவனைக் காணவில்லையானால் அவன் உன்னைக் காண்கிறான்” என்ற வசனத்தில் வந்துள்ள فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ என்ற “ஷர்த்”திற்கு فَإِنَّهُ يَرَاكَ என்ற வனத்தை “ஜவாப்” ஆக கொடுத்தால் பொருள் பொருந்தாது. பொருள் பொருந்தாது என்பது கூட எல்லோருக்கும் விளங்காது. அறபு மொழியிலக்கணத்தில் திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே விளங்கும். அதேபோல் அறபுக் கல்லூரிகளில் அறபு மொழியிலக்கணம் கற்கும் திறமையுள்ள மாணவர்களுக்கும் புரியும்.
ஆகையால் இதற்கு ஸூபீ மகான்கள் சொல்லும் விளக்கம் மட்டுமே பொருத்தமாகத் தோணுகிறது. அதெவ்வாறெனில் فَإِنْ لَمْ تَكُنْ என்ற வசனத்தில் வந்துள்ள تَكُنْ என்ற சொல்லை فعل ناقص ஆக கொடுக்காமல் அதை “தாம்”மான “பிஅல்” ஆக கொடுத்து பொருள் கொள்ள வேண்டும். அவ்வாறு கொடுத்தால் فَإِنْ لَمْ تَكُنْ நீ இல்லையானால் என்று பொருள் வரும். تَرَهُ அதாவது நீ இல்லையானால் அவனைக் காண்பாய் என்று சரியான விளக்கம் வந்து விடும். இவ்வாறு அமையும் போது பின்னால் வந்துள்ள فَإِنَّهُ என்பதில் உள்ள “பேF”யை “ஜவாப்” இலுள்ள “பேF” யாக நாம் கணிக்காமல் அதை تعليل – காரணம் சொல்கிற “பேF” என்று கருத வேண்டும்.
இதன் சுருக்கம் என்னவெனில் உன்னிலுள்ள “நீ” எனும் உணர்வு இல்லாமற் போனால் மட்டுமே அவனைக் காண்பாய் என்பதாகும். நீ என்ற உணர்வு உன்னிடம் இருக்கும்வரை நீ அவனைக் காண முடியாது என்பதாகும்.
எனவே, “இக்லாஸ்” என்றாலும், “இஹ்ஸான்” என்றாலும் ஒருவன் தன்னிடமுள்ள أَنِّيَّةْ “அன்னிய்யத்” நான் என்ற உணர்வை அழிப்பதேயாகும். ஸூபீ மகான்களிடம் “அன்னிய்யத்” என்ற உணர்வு இறைவனை அறிய முடியாமல் தடுக்கும் மா பெரும் திரையென்பதை அறிந்து வணக்க வழிபாட்டின் போது “நானில்லை” அவன் மட்டும்தான் உள்ளான் என்ற உணர்வோடு வணக்கம் செய்ய வேண்டும். இதுவே “இஹ்ஸான்” எனப்படும். இந்த உணர்வோடு தொழப்படும் தொழுகைதான் உயிரோட்டுமுள்ள தொழுகையாகும். நான் அவனாக இருக்கும் நிலையில் நான் என்ற உணர்வு வருவது தண்டனைக்குரிய குற்றமாகும். பொய்யுமாகும்.
இந்தக் கருத்தை வலியுறுத்தியே இறைஞானி ஒருவர் பின்வருமாறு பாடியுள்ளார்.
நான் என்றிருந்தேனே
நாளும் கழிந்தேனே
தானாயிருந்த தன்மையறியேனே! என்று
இதே கருத்தை வலியுறுத்தியே ஞான மகான்கள்
لَوْ زَالَ عَنْكَ أَنَا لَلَاحَ لَكَ مَنْ اَنَا
உன்னை விட்டும் “அன” நான் என்பது நீங்கினால் நீ யாரென்று உனக்குப் புரியும் என்று சொல்லியுள்ளார்கள்.
ஸூபிஸத்தின் “றூஹ்” உயிர் போன்ற பிரதான இலட்சியம் என்னவெனில் ஒருவன் தன்னிடமுள்ள “அன” நான் என்ற உணர்வை இழப்பதாகும். நான் வேறு, அவன் வேறு என்ற திரையை நீக்குவதாகும். أَنِّيَّةْ “அன்னிய்யத்” என்பது “நான்” என்ற உணர்வையும், أَنَانِيَّةْ “அனானிய்யத்” என்பது நான் என்ற கர்வத்தையும் குறிக்கும் சொற்களாகும். இது குறித்தே கலீல் அவன் மௌலானா அவர்களின் தந்தை ஞான மகான் அஸ்ஸெய்யித் யாஸீன் மௌலானா அவர்கள் ஒரு சமயம்
إِنْ تَغَيَّبْتُ بَدَا – وَإِنْ بَدَا غَيَّبَنِيْ
நான் மறைந்தால் அவன் வெளியாகுவான். அவன் வெளியானால் என்னை மறைத்து விடுவான் என்று சொன்னார்கள் போலும்.
குறிப்பு: நான் மேலே எழுதியுள்ள மொழியிலக்கண விபரம் புரியாதவர்கள் அறபுக் கல்லூரிகளில் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களிடம் கேட்டால் சொல்லித் தருவார்கள்.