தொடர் 01
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: ‘ إنَّ اللَّهَ تَعالى يُحِبُّ العُطاسَ، وَيَكْرَهُ التَثاؤُبَ، فإذا عَطَسَ أحَدُكُمْ وَحَمِدَ اللَّهَ تَعالى، كان حَقّاً على كُلّ مُسْلِمٍ سَمِعَهُ أنْ يقول له: يرحمك الله. وأمَّا التَّثاؤُبُ، فإنَّما هُوَ مِنَ الشَّيْطان، فإذا تَثَاءَبَ أحَدُكُمْ، فَلْيَرُدَّهُ ما اسْتَطاعَ، فَإن أحدَكم إذا تَثاءَبَ ضَحِكَ مِنْهُ الشَّيْطانُ ‘.
நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். உங்களில் யாராவதொருவன் தும்மி “அல்ஹம்து லில்லாஹ்” என்று அல்லாஹ்வைப் புகழ்ந்தானாயின் அதைச் செவியேற்ற முஸ்லிம்கள் அனைவர் மீதும் அவ்வாறு தும்மி அல்லாஹ்வைப் புகழ்ந்தவனுக்கு يَرْحَمُكَ اللهُ “யர்ஹமுகல்லாஹ்” அல்லாஹ் உனக்கு “றஹ்மத்” அருள் செய்வானாக! என்று சொல்வது கடமையாகிவிட்டது.
கொட்டாவி என்பது “ஷெய்தான்” ஷாத்தானில் நின்றுமுள்ளதாகும். உங்களில் ஒருவன் கொட்டாவி விட்டால் முடிந்தவரை அதைத் தட்டி விடுங்கள். ஏனெனில் உங்களில் யாராவது கொட்டாவி விட்டால் “ஷாத்தான்” சிரிக்கிறான் என்று அருளினார்கள்.
புகாரி, அறிவிப்பு: அபூ ஹுறைறா,
அல் அத்கார், ஆசிரியர்: இமாம் நவவீ, பக்கம் 220.
இந்த நபீ மொழி மூலம் தும்மினால் அல்லாஹ் விரும்புகிறான் என்பதும், கொட்டாவி விட்டால் அல்லாஹ் வெறுக்கிறான் என்பதும் அறியப்படுகின்றன. இதற்கான காரணம் பின்னால் எழுதப்படும்.
இதனால் நாமாக மூக்குத் துவாரத்தில் ஏதாவதொன்றைச் செலுத்தி தும்மலை வரவழைப்பது கூடாது. தும்மல் தானாக வந்தால் மட்டுமே அது அல்லாஹ் விரும்பக் கூடியதாக இருக்கும்.
மேலும் இந்த நபீ மொழியிலிருந்து விளங்கப்படுகின்ற மற்றொரு விடயம், தும்மினவன் “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொன்னால் மட்டும்தான் அதைச் செவியேற்றவன் يَرْحَمُكَ اللهُ அல்லாஹ் உனக்கு “றஹ்மத்” செய்வானாக! என்று அவனுக்காக “துஆ”ச் செய்ய வேண்டும் என்பதும், அவன் தும்மி விட்டு அல்லாஹ்வைப் புகழ வில்லையானால் அவன் முஸ்லிமாயிருந்தாலும் கூட அவனுக்கு يرحمك الله அல்லாஹ் உனக்கு “றஹ்மத்” செய்வானாக! என்று சொல்லுதல் “ஸுன்னத்” ஆகாது.
அல்லாஹ் விரும்புகின்ற “தும்மலை” அவனே ஒருவன் மூலம் வெளிப்படுத்தினால் அல்லாஹ் விரும்புகின்ற ஒன்றை தன்மூலம் வெளிப்படுத்தி வைத்தான் என்பதற்காக அவன் அல்லாஹ்வை புகழவில்லையானால் அவனுக்கு “யர்ஹமுகல்லாஹ்” அல்லாஹ் உனக்கு அருள் செய்வானாக! என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? அவன் தனது வாயை அசைத்து அல்லாஹ்வைப் புகழவில்லையானால் – அதற்கு அவன் மனம் இடமளிக்கவில்லையானால் அவனுக்கு நாம் நன்மையை நாடுவது எங்கனம் நியாயமாகும்?
இது எதுபோல் உள்ளதெனில்,
اَلْبَخِيْلُ مَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ،
“எவனிடம் நான் கூறப்பட்டு அதாவது என் பெயர் சொல்லப்பட்டு அவன் என் மீது “ஸலவாத்” சொல்லவில்லையோ அவன் “பகீல்” உலோபி – கஞ்சன் ஆவான்” என்று நபீகளார் சொன்னது போல் உள்ளது. ஏனெனில் பெருமானார் அவர்களின் பெயர் கேட்டு வாயசைத்து “ஸலவாத்” சொல்லாதவன் உலோபியாகத்தானே இருப்பான். பெருமானாருக்காக வாயசைக்காதவன் மனிதனாயிருப்பானா?
மேற்கண்ட நபீ மொழி மூலம் நாம் விளங்க வேண்டிய இன்னுமொரு விடயம், தும்மிவிட்டு “அல்ஹம்து லில்லாஹ்” என்று கூறி அல்லாஹ்வைப் புகழ்வதை கேட்பவர்கள் அனைவரும் يَرْحَمُكَ اللهُ என்று சொல்வது “ஸுன்னத்” நபீ வழியேயன்றி அது தொழுகை போல் “பர்ழ்” கடமையானதல்ல. நபீ மொழியில் வந்துள்ள كَانَ حَقًّا என்ற வசனத்திற்கு இவ்வாறுதான் விளக்கம் கொள்ள வேண்டும்.
தும்மியவன் “அல்ஹம்து லில்லாஹ்” என்று அல்லாஹ்வைப் புகழ்வதற்கான காரணம் என்னவெனில் ஒருவன் தும்மினால் அவனின் “ஹார்ட்” இருதயம் ஒரு நொடியை 60 ஆக பங்கிட்டு வரும் நேரம் இயங்காமல் நின்று விடுகின்றது. நின்றது மீண்டும் இயங்கவில்லையானால் அவன் மரணித்து விடுவான். அல்லாஹ் தனது பேரருளால் அதை மீண்டும் இயங்கச் செய்யும் போது அவனைப் புகழாமல் இருக்க முடியாது. இது விஞ்ஞானம் கற்றவர்கள் சொன்ன கருத்தேயன்றி நான் கற்பனை செய்ததோ, வேறு நூல்களில் படித்ததோ அல்ல. தும்மும் போதே அல்லாஹ்வைப் புகழாமல் தும்மிய பிறகுதான் புகழ வேண்டும். மார்க்க வழிமுறை தெரியாத அநேகர் தும்முகின்ற வேளையிலேயே “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொல்கிறார்கள். தும்மல் சத்தத்தோடு புகழும் சத்தமும் வெளியாவதால் அவன் என்ன சொல்கிறான் என்பதை மற்றவர்களால் புரிய முடியாமற் போகிறது. இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதோடு தும்மல் சத்தத்தை முடிந்த அளவு குறைத்துக் கொள்ள வேண்டும். சிலர் தும்மினால் வீட்டில் உறங்கும் பாலருந்தும் குழந்தைகள் கூட திடுக்கிட்டு எழுவதை நாம் காண்கிறோம். இது நாகரிகமான நடைமுறையல்ல. தனியே இருக்கும் நேரம் அவ்வாறு சத்தமாக தும்மினாலும் கூட பள்ளிவாயல்களிலும், சபைகளிலும் அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும். சபை நடைமுறை தெரியாத சிலர் சாப்பிடுவதற்காக “ஸஹன்” சாப்பாடு வைக்கப்பட்டிருக்கும் போது தும்மி விடுகிறார்கள். அவர்களின் உமிழ் நீர் உணவில் தெறித்து விடுவதையும் நாம் காண்கிறோம். இதுவும் கட்டாயம் தவிர்க்கப்ப்ட வேண்டியதாகும். اَلتَّثَائُبُ “அத்ததாஉபு” கொட்டாவி விடுதல் ஷெய்தான் – ஷாத்தானில் நின்றுமுள்ளதென்று நபீ பெருமானார் அவர்கள் கூறியுள்ளது மேற்கண்ட நபீ மொழியிலிருந்து விளங்கப்படுகிறது.
“கொட்டாவி” என்றால் களைப்பு, தூக்கம் முதலியவற்றால் வாயை அகலத் திறந்து வெளியே விடும் காற்று. Yawn என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும்.
கொட்டாவி வந்தால் அதை முடிந்த அளவு தடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உண்மையும் மேற்கண்ட நபீ மொழி மூலம் விளங்கப்படுகிறது. மீறி வரும் கொட்டாவியை தடுப்பது கடினமாயினும் முடியுமானதைத் தடுக்க வேண்டும். கையை வாயில் வைத்தும், துணியை வாயில் வைத்தும் தடுக்கலாம். கையைப் பயன்படுத்தாமல் வாயாலேயே அதைத் தடுக்க முடியும். இதற்கு ஓரளவு பயற்சி வேண்டும். கொட்டாவி வரும் போது காற்றை மட்டும்தான் வெளிப்படுத்த வேண்டுமேயன்றி சத்தத்தை வெளிப்படுத்துதல் கூடாது. சிலர் கொட்டாவி விடுவதற்காக வாயை அகல விரித்துக் கொண்டு தமது கை விரல்களால் ஏதோ ஒன்றை தெறிப்பது போல் செய்வதுண்டு. இதுவும் தவிர்க்கப்பட வேண்டும். அளவோடு சாப்பிட்டவர்களுக்கு மிகக் குறைவாகவே கொட்டாவி வரும். மிதமிஞ்சி சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு சாப்பிடு முன்னும் கொட்டாவி வரும். சாப்பிட்ட பின்னும் கொட்டாவி வரும்.
عن أبي هريرة أيضاً عن النبيّ صلى الله عليه وسلم قال: ‘ إذا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلْ: الحَمْدُ لِلَّهِ، وَلْيَقُلْ لَهُ أخُوهُ أوْ صَاحبُهُ: يَرْحَمُكَ اللَّهُ، فإذَا قالَ لَهُ: يَرْحَمُكَ اللَّهُ، فَلْيَقُلْ: يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بالَكُمْ ‘ (رواه البخاري)
நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு அருளினார்கள்.
(உங்களில் யாராவது தும்மினால் அவன் “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொல்லவும். அவன் அவ்வாறு சொன்னதை செவியேற்றவன் அவனுக்கு يَرْحَمُكَ اللهُ அல்லாஹ் உனக்கு அருள் செய்வானாக என்று சொல்லட்டும். இவ்வாறு அவன் சொன்னதைக் கேட்ட தும்மினவன் இவனுக்கு, يَهْدِيْكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ “அல்லாஹ் உங்களை நேர்வழி காட்டுவானாக! இன்னும் உங்களின் விடயங்களை சீராக்கி வைப்பானாக!” என்று சொல்லட்டும் என்பதாக பெருமானார் அவர்கள் அருளினார்கள்.
முதலில் எழுதிய நபீ மொழியை விட இரண்டாவது நபீ மொழி சற்று விளக்கமாக உள்ளது.
சுருக்கம் என்னவெனில் ஒருவன் தும்மினால் அவனே அல்ஹம்து லில்லாஹ்! என்று சொல்ல வேண்டும். அவன் அவ்வாறு சொல்வதை கேட்டவன் يَرْحَمُكَ اللهُ அல்லாஹ் உனக்கு அருள் செய்வானாக! என்று அவனுக்கு – தும்மினவனுக்குச் சொல்ல வேண்டும். இதைக் கேட்டவன் அவனுக்கு يَهْدِيْكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ என்று சொல்ல வேண்டும்.
இதுவே நபீ மொழி. நம்மில் பலர் இவ்வாறு செய்வதில்லை. மிகவும் குறைவு. நானும்தான். இந்த நடைமுறை நம்மவர்களிடம் தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வரவில்லை.
நமது மனைவி தும்மி அல்ஹம்து லில்லாஹ்! என்று சொன்னாளாயின் அதற்குப் பதிலாக நாம் அவளுக்கு يَرْحَمُكِ اللهُ என்று சொன்னால் அவள் நம்மிடம் உங்களுக்கு சுகமில்லையா? என்று கேட்பாள். இதற்கான காரணம் இது வழக்கத்தில் இல்லாமற் போனதேயாகும்.
முஸ்லிம்களாகிய நாம் நமது பிள்ளைகளுக்கு அவர்களின் இளமை – பிஞ்சுப் பருவத்திலேயே இவ்வாறான நடைமுறைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இது எமது கடமை.
عن أنس رضي الله عنه قال: ‘ عَطَسَ رجلان عند النبيّ صلى الله عليه وسلم ‘ فَشَمَّتَ أَحَدَهُمَا، وَلَمْ يُشَمِّتِ الْآخَرَ، فَقَالَ الَّذِيْ لَمْ يُشَمِّتْه: عَطَسَ فلانٌ فَشَمَّتَّهُ، وَعَطَسْتُ فَلَمْ تُشَمِّتْنِيْ، فقال: هَذَا حَمِدَ اللَّهَ تَعالى، وَإنَّكَ لَمْ تَحْمَدِ اللَّهَ تَعالى ‘ (رواه البخاري ومسلم)
நபீ தோழர் அனஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
(நபீ பெருமானாரின் சபையில் இருவர் தும்மினார்கள். அவர்களில் ஒருவருக்குப் பெருமானார் அவர்கள், شَمَّتَ – يَرْحَمُكَ اللهُ என்று சொன்னார்கள். மற்றவருக்கு அவ்வாறு சொல்லவில்லை. அப்போது அவர் பெருமானாரிடம் இன்னார் தும்மினார். அவருக்கு நீங்கள் يرحمك الله என்று சொன்னீர்கள். நானும் தும்மினேன். ஆனால் எனக்கு அவ்வாறு சொல்லவில்லையே என்று சொன்னார். அதற்குப் பெருமானார் அவர்கள் அவர் தும்மிய பின் “அல் ஹம்து லில்லாஹ்” என்று சொன்னார். அதற்காக நான் يرحمك الله என்று சொன்னேன். ஆனால் நீங்கள் தும்மிய பின் அல்ஹம்து லில்லாஹ் சொல்லவில்லை. இதனால் நானும் அவ்வாறு சொல்லவில்லை) என்று கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம், அறிவிப்பு: அனஸ், அல் அத்கார், பக்கம்: 220)
மேற்கண்ட நபீ மொழிகளில் கூறப்பட்ட விடயங்களை விட இந்த நபீ மொழியில் விஷேடமாக ஒரு விடயம் சொல்லப்பட்டுள்ளது. அதாவது ஒருவர் தும்மிய பின் “அல்ஹம்து லில்லாஹ்” என்று அவர் சொன்னால் மட்டும்தான் அவருக்கு يَرْحَمُكَ اللهُ என்று சொல்ல வேண்டுமேயன்றி அவ்வாறு சொல்லாதவருக்கு அவ்வாறு சொல்லாமலிருப்பதே சிறந்ததாகும்.
இன்று அதிகமான முஸ்லிம்களுக்கு தும்மினால் என்ன சொல்வதென்றும், பிறர் தும்மினால் அதற்கு எவ்வாறு பதில் சொல்ல வேண்டும் என்பன போன்ற விபரங்கள் தெரியாமலேயே உள்ளன. இவ்விடயத்தில் முஸ்லிம்கள் அனைவரும் பேணுதல் உள்ளவர்களாக இருப்பதுடன் தமது மனைவி, மக்களுக்கும், உற்றார், உறவினர், மற்றும் நெருங்கிப் பழகி வருகின்ற நண்பர்களுக்கும் இவற்றின் விபரங்களை சொல்லிக் கொடுக்கவும் வேண்டும்.
தொடரும்….