தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“தீன்” என்ற சொல் ஈமான், இஸ்லாம், இக்லாஸ் இம் மூன்றையும் உள் வாங்கிய ஒரு சொல்லாகும். இதற்கு ஆதாரம் பின்வரும் பலமான நபீ மொழிதான்.
ஒரு நாள் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் தோழர்களுடன் பள்ளிவாயலில் இருந்த சமயம் அங்கு எதிர்பாராமல் ஒரு மனிதர் வந்தார். வந்தவர் “மதீனா” வாசியுமல்லர். வெளியூர் வாசியுமல்லர். மதீனா வாசியாயிருந்தால் அவர் யாரென்று அங்கிருந்த தோழர்களில் ஒருவருக்காவது தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறிருக்கவுமில்லை. அல்லது வெளியூர் வாசியாக இருக்க வேண்டும். அவ்வாறிருக்கவுமில்லை.
ஏனெனில் வெளியூர் வாசியாயிருந்தால் அவர் ஒரு பயணியாக இருக்க வேண்டும். பயணியாயிருந்தால் அவரின் உடையிலும், தோற்றத்திலும் பயணிக்குரிய அடையாளங்களில் எதுவும் இருக்கவுமில்லை. ஏனெனில் அவரின் உடல் அவ்வேளைதான் குளித்துவிட்டு வந்தவர் போல் தோற்றியது. அதேபோல்தான் அவரின் உடையும் இருந்தது.
இதனால் நபீ பெருமானாரின் தோழர்களுக்கு வியப்பாக இருந்தது. இவர் யார்? எங்கிருந்து வருகிறார்? ஏன் வந்துள்ளார் என்ற கேள்விகள் தோழர்களின் உள்ளங்களை வட்டமிட்டன. எனினும் அவர்கள் பொறுமையுடன் இருந்தார்கள்.
அங்கு வந்த எவருக்கும் அறிமுகமில்லாத அந்த மனிதர் பெருமானார் அவர்களை நெருங்கி அவர்களின் தொடையில் – அல்லது தனது தொடையில் இரு கைகளையும் வைத்துக் கொண்டு يَا مُحَمَّدْ أَخْبِرْنِيْ عَنِ الْإِيْمَانِ “ஈமான்” விசுவாசம் என்றால் என்ன? என்று கேட்டார். பெருமானார் அவர்கள் “ஈமான்” உடைய ஆறு அம்சங்களையும் கூறினார்கள். வந்தவர் صَدَقْتَ يَا مُحَمَّدْ முஹம்மதே! உண்மை சொன்னீர்கள் என்றார். இருந்த தோழர்கள் வியப்படைந்து தெரியாதவர் போல் கேட்கிறார், விடை சொன்னபின் தெரிந்தவர் போல் சரியாகவே சொன்னீர்கள் என்கிறார் என்று வியந்தார்கள்.
இரண்டாவதாக “இஸ்லாம்” என்றால் என்னவென்று கேட்டார். பெருமானார் அவர்கள் இஸ்லாமின் ஐந்து கடமைகளையும் முறைப்படி சொல்லிக் காட்டினார்கள். அப்போதும் வந்தவர் சரியாகவே சொல்லிவிட்டீர்கள் என்றார். இருந்த தோழர்களுக்கு வியப்புக்கு மேல் வியப்பு ஏற்பட்டது. எனினும் அவர்கள் மௌனிகளாயிருந்தார்கள்.
மூன்றாவதாக “இஹ்ஸான்” என்றால் என்ன என்று கேட்டார். அதற்கு நபீ பெருமானார் அவர்கள்,
أَنْ تَعْبُدَ اللهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ،
என்று கூறினார்கள். இதன் பொருள் – நீ அல்லாஹ்வைக் காண்பவன் போல் அவனை வணங்க வேண்டும். நீ அவனைக் காணாது போனால் அவன் உன்னைக் காண்கிறான் – என்பதாகும்.
அங்கு வந்த அந்த மனிதர் மேலும் சில கேள்விகள் கேட்டு அவற்றுக்கான விடைகளைப் பெற்றுக் கொண்டு போய் விட்டார். அவர் போன பின் நபீகளார் தோழர்களிடம் வந்து போனவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வும், றசூல் அவர்களுமே அறிவார்கள் என்று கூறினார்கள். அப்போது பெருமானார் அவர்கள் இவர்தான் ஜிப்ரீல் என்ற “மலக்” ஆவார். உங்களுக்கு உங்களின் “தீன்” மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக வந்தார் என்று கூறினார்கள். பெருமானார் பயன்படுத்திய வசனம், هَذَا جِبْرِيْلُ، أَتَاكُمْ لِيُعَلِّمَكُمْ دِيْنَكُمْ என்பதாகும். இதன் பொருள், இவர்தான் “ஜிப்ரீல்” என்ற “மலக்” ஆவார். உங்களுக்கு உங்களின் மார்க்கத்தை கற்றுத்தர வந்தார்கள் என்று கூறினார்கள்.
இன்னும் சில கேள்வி பதில்களோடு இந்த நபீ மொழி நிறைவு பெறுகிறது.
ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம், 01-08.
அறிவிப்பு: உமர் இப்னுல் கத்தாப்,
இந்த நபீ மொழி தொடர்பாக நான் கடந்த காலங்களில் பல கட்டுரைகள் எழுதியுமுள்ளேன். பல இடங்களில் பேசியுமுள்ளேன். எனது பேச்சுக்கள் அடங்கிய “பென்ட்றைவ்” தேவையானோர் எனது செயலாளரின் கீழே குறிப்பிட்டுள்ள கைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும். தேவையானோர் நேரில் வந்தும் பெற்றுக் கொள்ளலாம். நம்பத்தகுந்தவர்களை அனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த நபீ மொழி மூலம் நமக்கு கிடைக்கின்ற பாடங்கள் பல உள்ளன. அவற்றில் சில பாடங்களை மட்டும் எழுதுகிறேன்.
“ஜிப்ரீல்” என்ற “மலக்” பற்றிய சிறு குறிப்பு:
جِبْرِيْلْ – جَبْرَائِيْلْ
இரண்டு விதமாகவும் சொல்ல முடியும். எழுதவும் முடியும். جِبْرٌ என்றால் அடிமை. إِيْلْ என்றால் அல்லாஹ். جِبْرِيْلْ என்றால் அல்லாஹ்வின் அடிமை என்று பொருள். அறபு நாடுகளில் சிலர் தமது பிள்ளைகளுக்கு “ஜிப்ரீல்” என்றும் பெயர் வைப்பார்கள். வலீமார் பரம்பரையில் உள்ள சிலர் இப் பெயரில் உள்ளார்கள்.
இவரின் பட்டங்களில் أَمِيْنُ الْوَحْيِ, اَلرُّوْحُ الْأَمِيْنُ, رُوْحٌ مِنْ أَمْرِ اللهِ, اَلرُّوْحُ الْقُدْسُ என்ற பட்டங்கள் அடங்கும்.
இவரின் “ஜிப்ரீல்” எனும் பெயர் திருக்குர்ஆனில் தெளிவாகவே வந்துள்ளது.
قُلْ مَنْ كَانَ عَدُوًّا لِجِبْرِيلَ فَإِنَّهُ نَزَّلَهُ عَلَى قَلْبِكَ بِإِذْنِ اللَّهِ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ وَهُدًى وَبُشْرَى لِلْمُؤْمِنِينَ، مَنْ كَانَ عَدُوًّا لِلَّهِ وَمَلَائِكَتِهِ وَرُسُلِهِ وَجِبْرِيلَ وَمِيكَالَ فَإِنَّ اللَّهَ عَدُوٌّ لِلْكَافِرِينَ،
إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ صَغَتْ قُلُوبُكُمَا وَإِنْ تَظَاهَرَا عَلَيْهِ فَإِنَّ اللَّهَ هُوَ مَوْلَاهُ وَجِبْرِيلُ وَصَالِحُ الْمُؤْمِنِينَ وَالْمَلَائِكَةُ بَعْدَ ذَلِكَ ظَهِيرٌ
பகறா அத்தியாயம், வசனம்: 97,98
தஹ்ரீம் அத்தியாயம், வசனம்: 04.
عَلَّمَهُ شَدِيدُ الْقُوَى
இவர் அபார சக்தி வழங்கப்பட்டவர் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (“நஜ்ம்” அத்தியாயம், வசனம் 5-6)
இவரின் அபார சக்தியில் ஒன்று – இவர் நபீ “லூத்” அலைஹிஸ்ஸலாம் அவர்களின் “மதாயின்” எனும் ஊரை அல்லாஹ்வின் கட்டளையின் பேரில் தலை கீழாய் புரட்டியவர் ஆவார்.
نقل القُرطبي فى تفسيرِه عن الكلبي، وَكَانَ مِنْ شِدَّةِ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ: أَنَّهُ اقْتَلَعَ مَدَائِنَ قَوْمِ لُوطٍ مِنَ الْأَرْضِ السُّفْلَى، فَحَمَلَهَا عَلَى جَنَاحِهِ حَتَّى رَفَعَهَا إِلَى السَّمَاءِ، حَتَّى سَمِعَ أَهْلُ السَّمَاءِ نَبْحَ كِلَابِهِمْ وَصِيَاحَ دِيَكَتِهِمْ ثُمَّ قَلَبَهَا.
இமாம் குர்துபீ அவர்கள் தங்களின் “தப்ஸீர்” திருக்குர்ஆன் விரிவுரை நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்.
ஜிப்ரீலின் அபார சக்தி எவ்வாறானதென்றால், நபீ லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஊரான “மதாயின்” எனும் ஊரை பூமிக்கு கீழ் தனது வலுப்பமிகு இறக்கையை செலுத்தி அந் நகரை தங்களின் இறக்கையின் மீது வைத்தவராக வானளவில் உயர்த்தி அதை தலை கீழாய்ப் புரட்டி விட்டார். அவ்வேளை அந்த நகரில் வாழ்ந்த நாய்களினதும், சேவல்களினதும் சத்தத்தை வானிலிருந்த மலக்குகள் கேட்டார்கள். இவ்வாறு அபார சக்தி வழங்கப்பட்டவராகவே ஜிப்ரீல் இருந்தார். இந்த ஊர்தான் புரட்டப்பட்ட பின் கடலாக மாறி இன்று “பஹ்றுல் மைய்யித்” செத்த கடல் “டெட் சீ” என்று அழைக்கப்படுகிறது. இது உயிரினம் எதுவும் இல்லாத கடலாகும். இது ஜோர்தானில் உள்ளது. நான் இக்கடலில் கால் நனைத்தும், கடல் நீரை வாயில் எடுத்து சுவைத்தும் பார்த்துள்ளேன்.
அல்லாஹ் ஜிப்ரீல் அவர்களை வலுப்பமிகு தோற்றத்தில் படைத்துள்ளான். அவர்களின் இயற்கையான தோற்றத்தில் பெருமானார் அவர்கள் கூட இரண்டு அல்லது மூன்று தடவைகள் மட்டுமே கண்டதாக வரலாறு கூறுகிறது. துர்முதியிலும் இது தொடர்பாக ஒரு ஹதீது வந்துள்ளது.
அல்லாஹ்வின் அனுமதிப்படி “மதாயின்” நகரை தங்களின் இறக்கையால் தூக்கி அதை தலை கீழாய் புரட்டிய ஜிப்ரீல் அவர்களுக்கு எந்த நாடாயினும் அதை தலை கீழாய்ப் புரட்டுவது பெரிய காரியமல்ல. அட்டூழியம் வரம்பை மீறின் நிச்சயமாக நடக்கும்.
தலைப்பில் எழுதிய நபீ மொழியில் பெருமானார் அவர்களிடம் வந்த இனம் தெரியாத நபர் ஜிப்ரீல் தான் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதிகமான கட்டங்களில் நபீ தோழர் “திஹ்யதுல் கல்பீ” அவர்களின் தோற்றத்திலேயே பெருமானார் அவர்களிடம் வந்துள்ளார்கள். மிகக் குறைவாகவே இரண்டு அல்லது மூன்று தரம் மட்டுமே தனது வலுப்பமிகு தோற்றத்தில் அவர்களிடம் வந்துள்ளார்கள். நபீ பெருமானார் அவர்களே இரண்டு மூன்று தரம் மட்டுமே அவர்களின் இயற்கையான உடலமைப்பில் கண்டுள்ளார்கள் என்றால் ஏனையோர் அதனை விடக் குறைவாகவே கண்டிருப்பார்கள். அல்லது கண்டிருக்கவே மாட்டார்கள்.
(“ஜிப்ரீல்” ஆயினும், வேறு “மலக்” ஆயினும் மலக்குகள் அனைவரும் ஒளியால் படைக்கப்பட்டவர்களேயாவர்)
ஒளி என்பது எந்த “ஸூறத்” உருவத்திலும் வெளியாகும் தன்மை உள்ளதாகும். இதுவே விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும் கூறும் தத்துவமாகும். நாம் டீவி மூலம் காண்கின்ற கடல், மலை, நகர், காடு, வீடு, நதி முதலானவை ஒளியின் உருவங்களும், தோற்றங்களுமேயன்றி அவை எதார்த்தத்தில் டீவிக்குள் வருவதில்லை. வரவும் முடியாது. டீவி மூலம் ஒளியின் உருவங்களையே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆயினும் அவற்றை ஒளியின் உருவங்கள் – தோற்றங்கள் என்பதை உணராமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவே நம்மிலுள்ள அறியாமையாகும்.
اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ
அல்லாஹ் வானங்களினதும், பூமியினதும் ஒளி என்று திட்டமாகவும், தெளிவாகவுமே சொல்லியுள்ளான். அதாவது அவன் வானங்களினதும், பூமியினதும் ஒளியாக உள்ளான் என்றால் அல்லாஹ்வுக்கு “நூர்” ஒளியென்று ஒரு பெயர் இருப்பதால் அவன் அப் பெயர் கொண்டு வானங்களாகவும், பூமியாகவும் தோற்றுகிறான் என்பதேயாகும். இதுவேதான் உண்மையும், எதார்த்தமுமாகும். இவ்வாறு விளங்காமல் அல்லாஹ் வானங்களின் ஒளியாகவும், பூமியின் ஒளியாகவும் உள்ளான் என்றால் அவனின் ஒளி எங்கோ இருந்து கொண்டு வானங்களையும், பூமியையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது என்று பொருள் கொள்வது முற்றிலும் பிழையாகும். இது “வஹ்தத்” ஒன்றைக் காட்டாமல் “கத்றத்” என்ற ஒன்றுக்கு மேற்பட்டதையே காட்டுகிறது. ஒன்றென்று சொன்னவன்தான் ஒளியுள்ளவன். இரண்டென்று சொன்னவன் இருண்டவன்தான்.
மலக் ஜிப்ரீல் மனித உருவமெடுப்பதால் அவரின் இயற்கை உருவம் அழியாதா? இல்லை.
0094773186146
தொடரும்…