தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“தீன்” மார்க்கம் என்ற அறபுச் சொல் திருக்குர்ஆன், மற்றும் நபீ மொழி ஆதாரங்களின் படி மூன்று அம்சங்களை உள்வாங்கிய ஒரு சொல்லாகும். அம்மூன்று அம்சங்களும் ஒருவனிடம் இருந்தால் மட்டும்தான் அவன் “தீன்” வாதியாவான். மார்க்கவாதியாவான். “முஃமின்” விசுவாசியாகவும் ஆவான். முஸ்லிம் ஆகவும் ஆவான். மூன்று அம்சங்களில் ஒன்று மட்டும் உள்ளவனும், இரண்டு மட்டும் உள்ளவனும் பெயரளவில் முஸ்லிமாக இருப்பானேயன்றி அவன் எதார்த்தத்தில் “தீன்” மார்க்கவாதியாக இருக்கமாட்டான்.
நான் கூறுகின்ற இக் கருத்துக்கு ஆதாரம் நபீ மொழிதான். இந்த நபீ மொழி நான் எழுதிய கடந்த பல கட்டுரைகளிலும், நான் பேசிய பேச்சுக்களிலும் மிகவும் விபரமாக எழுதப்பட்டதும், பேசப்பட்டதுமேயாகும். மீண்டும் விபரமாக எழுதத் தேவையில்லை. ஆயினும் சுருக்கமாக அந்த நபீ மொழியை இங்கு குறிப்பிடுகிறேன்.
அறபு வசனங்களை எழுதாமல் விடயத்தை மட்டும் தமிழில் எழுதுகிறேன்.
ஒரு சமயம் நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் தோழர்களோடு திரு மதீனாப் பள்ளிவாயலில் இருந்த வேளை ஒரு மனிதர் அங்கு வந்து பெருமானார் அவர்களிடம் “ஈமான்” நம்பிக்கை – விசுவாசம் என்றால் என்ன என்று கேட்டார். அதற்கவர்கள் “ஈமான்” விசுவாசத்தின் ஆறு அம்சங்களையும் கூறினார்கள்.
அதன் பின் வந்தவர் “இஸ்லாம்” என்றால் என்னவென்று கேட்டார். அதற்கவர்கள் “இஸ்லாம்” மார்க்கத்தின் ஐந்து அம்சங்களையும் கூறினார்கள்.
அதன் பிறகு “இஹ்ஸான்” என்றால் என்னவென்று கேட்டார். அதற்கு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
أن تعبد الله كأنك تراه، فإن لم تكن تراه، فإنه يراك،
(“இஹ்ஸான்” என்றால் நீ அல்லாஹ்வைப் பார்ப்பவன் போல் அவனை வணங்குவதாகும். நீ அவனைக் காணாது போனால் அவன் உன்னைக் காண்கிறான்) என்று கூறினார்கள். அதாவது இதுதான் “இஹ்ஸான்” என்றார்கள்.
இந்த நபீ மொழி பலமான நபீ மொழி என்பதில் சந்தேகமில்லை.
அறபுக் கல்லூரியில் கற்று மௌலவீயான அனைவருக்கும் இந்த நபீ மொழி தெரியும். ஆயினும் அவர்கள் இதற்கு மேல்வாரியாக பொருள் கொள்வதோடு மட்டும் நின்று கொள்கிறார்களேயன்றி அவர்களில் இதை ஊன்றிக் கவனிப்பவர்கள் அரிதினுமரிதென்றே சொல்ல முடியும்.
(அல்லாஹ்வைப் பார்ப்பது போல் வணங்க வேண்டும். அவனை நாம் காணாவிட்டாலும் அவன் நம்மைக் காண்கிறான்) என்று பெரும் பெரும் உலமாஉகளும், பெரும் பெரும் ஹழ்றத்மார்களும் பொருள் கூறி வருகிறார்கள். பெரும் பெரும் உலமாஉகள் என்று நான் இங்கு குறிப்பிடுவது உடல் பெருத்த, கரண்டை வரை “ஜுப்பா” உடுத்த, தலைப்பாகை கட்டிய, அடர்ந்த தாடி வைத்துள்ளவர்களையல்ல. மாறாக அறிவு ஞானத்தில், சிந்தனையாற்றலில், ஆய்வுத் தன்மையில் பெரியவர்களையே குறிக்கும்.
நீ அல்லாஹ்வைப் பார்ப்பவன் போல் அவனை வணங்குதல் என்றால் அது எவ்வாறு என்று எவரும் சிந்திப்பதில்லை.
அல்லாஹ் உருவமில்லாதவன் என்று அனைத்து முஸ்லிம்களும் நம்பியிருக்கும் நிலையில் “அவனைப் பார்ப்பவன் போல்” என்று எவ்வாறு சொல்ல முடியும்? எவ்வாறு அதை விளங்க முடியும்?
இதை ஓர் உதாரணம் மூலம் தெளிவு படுத்துகிறேன். அப்துல்லாஹ் என்பவன் முசம்மில் என்பவனை தனது வாழ்நாளில் ஒரு தரமேனும் காணாதவன் என்று வைத்துக் கொள்வோம். முசம்மில் என்பவன் வெள்ளை நிறமுள்ளவனா? கறுப்பு நிறமுள்ளவனா? நெட்டையனா? கட்டையனா? என்ற எந்த ஒரு விபரமும் தெரியாதவன் என்றும் வைத்துக் கொள்வோம். இவனிடம் – அதாவது அப்துல்லாஹ்விடம் (முசம்மில் என்பவனைப் பார்ப்பவன் – காண்பவன் போல் இவ்விடத்தில் நின்று கொள்) என்று சொல்ல முடியுமா? இவ்வாறு சொல்வது பொருத்தமாகுமா? என்று ஆய்வு செய்ய வேண்டும்.
ஆய்வுத் திறன் உள்ள ஒருவன் இது அசாத்தியம் என்று தான் சொல்வான். அறிவு ரீதியாக நாம் சிந்தித்தால் இவ்வாறு சொல்வது கூட பிழையென்றே சொல்ல வேண்டும்.
ஆயினும் இவ்வாறு சொன்னவர்கள் எல்லாம் அறிந்த, உலகில் தோன்றிய, இதன் பிறகு தோன்றவுள்ள அனைவரின் அறிவையும் அறிந்த நபீகட்கரசராக இருப்பதால் இது பிழையென்றோ, பொருத்தமற்றதென்றோ எவராலும் சொல்ல முடியாது. அவ்வாறு சொன்னாற் கூட சொன்னவன் “காபிர்” ஆகிவிடுவான். பெருமானாரை தரக் குறைவாகக் கண்டவனாவான்.
எனவே, இங்கு ஓர் இடியப்பச் சிக்கல் உண்டு. இச் சிக்கலைப் பிரிப்பதற்கு வழி இருந்தாலும் கூட அதைப் பிரித்துக் காட்டும் பொழுது அதை ஜீரணிக்க முடியாத அறிவிலிகள் – ஸூபிஸ ஞானம் தெரியாதவர்கள் பெரியதொரு பூகம்பத்தையே ஏற்படுத்திவிடுவார்கள் என்பது மட்டுமல்ல என்னைக் கொலை செய்தும் விடுவார்கள். எனினும் கடந்த பதிவில் இது தொடர்பாக சமிக்ஞை செய்துள்ளேன். புத்திசாலிகள் புரிந்திருப்பார்கள்.
“வஹ்ததுல் வுஜூத்” وحدة الوجود எனும் ஸூபிஸ தத்துவத்தைச் சொன்னதற்கே “முர்தத்” பத்வாவும், கொலையும் என்றால் இதில் மறைந்துள்ள இரகசியத்தைக் கூறினால் என்ன நடக்கும்? “பத்வா” வழங்கிய போர் வீரர்களே அணுகுண்டுடன் என்னிடம் வந்து விடுவார்கள். எதற்கு இந்த “முஸீபத்” நமக்கு? அறிவுத் தாகமுள்ளவர்கள் எங்கிருந்தாலும் அதைப் பெற்றுக் கொள்வார்கள். தாகமுள்ளவர்கள் மலையேறியேனும் தண்ணீர் எடுக்கத்தான் வேண்டும்.
இந்த வசனத்தில் மேற்கண்டது போன்ற இன்னுமொரு சிக்கல் பின்னால் நான் எழுதுகின்ற வசனத்திலும் உண்டு. அதை ஓரளவேனும் விளக்கி வைக்கிறேன்.
அதாவது நபீ மொழியில் فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ، فَإِنَّهُ يَرَاكَ என்று ஒரு வசனம் வந்துள்ளது. இதற்கு நமது உலமாஉகளும், மற்றும் “ஹழ்றத்”மாரும் சொல்கின்ற பொருள் “நீ அவனைக் காணாது போனால் அவன் உன்னைக் காண்கிறான்” என்பதாகும்.
இந்த வசனத்தையும், இக்கருத்தையும் மேலெழுந்த வகையிலன்றி ஆழமாக ஆய்வு செய்தால் இக்கருத்து பொருத்தமற்றதென்று விளங்கும். ஆயினும் நபீ பெருமானார் அவர்களின் திரு நாவால் வெளியானதாகையால் அதில் எந்த ஒரு பிழையும் இருக்க முடியாது. எனவே, நாம் இதற்குப் பொருள் கொள்வதில்தான் பிழை உள்ளதேயன்றி நபீ மொழி வசனம் சரியானதேயாகும்.
எனவே, மேற்கண்ட நபீ மொழி வசனத்திற்கு வெளி நீச்சல் செய்கின்றவர்கள் சொல்கின்ற கருத்தை வைத்துக் கொண்டு காலத்தை வீணாக்காமல் ஸூபீகள் இதற்கு கூறும் விளக்கத்தையும் சற்று ஆய்வு செய்ய வேண்டும்.
ஸூபீகள் கூறும் கருத்து ஏனையோர் கூறும் கருத்தை விட பொருத்தமானதாயிருந்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஸூபீகளின் கருத்து என்னவெனில் இந்த வசனத்தின் சரியான பொருள் (நீ இல்லையெனில் அவனைக் காண்பாய்) என்பதாகும். (அதாவது உன்னிடமுள்ள “அன்னிய்யத்” “நான்” எனும் உணர்வு உன்னை விட்டும் நீங்கினால் நீ அவனைக் காண்பாய்) என்பதாகும்.
ஸூபீ மகான்கள் இப்பொருளை இவ்வசனத்தின் மூலம் எவ்வாறு விளங்கினார்கள் என்றால் இதற்கு மொழியிலக்கணச் சட்டப்படி ஒரு விதியுண்டு. அந்த விதியை இங்கு எழுதுகிறேன். அதை அறபு மொழியிலக்கணத்தோடு தொடர்புள்ளவர்கள் மட்டும் கவனத்திற் கொள்தல் நல்லது.
அறபு மொழி கற்றவர்களுக்காகவும், கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்காகவும் சில வரிகள்.
فَإِنْ لَمْ تَكُنْ
என்ற வசனத்தில் வந்துள்ள تَكُنْ என்ற சொல் மொழியிலக்கணக் கலையில் فعل ناقص “பிஅல் நாகிஸ்” என்று சொல்லப்படும். இவ்வகை “பிஅல்” “இஸ்மு”க்கு “றப்உ”ச் செய்து “கபர்” க்கு “நஸ்பு”ச் செய்யும் என்பது இலக்கண விதி. இவ் அடிப்படையில் இங்கு வசனத்தில் வந்துள்ள تَكُنْ என்ற சொல் “பிஅல் நாகிஸ்” என்று கொள்ளாமல் “பிஅல் தாம்” என்று கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு கொண்டால் இதற்குச் சட்டம் வேறு. இவ்விதிப்படி فإن لم تكن என்ற வசனத்தில் வந்துள்ள تَكُنْ என்ற சொல்லுக்கு “நீ இல்லையானால்” என்று பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு பொருள் கொண்டால் فإن لم تكن என்ற வசனத்தின் வந்துள்ள إن என்ற “ஷர்த்”திற்கு تَرَهُ என்பது “ஜவாப்” விடையாகிவிடும். இவ்வாறு வசனத்தை அமைத்தால் நீ இல்லையானால் அவனைக் காண்பாய் என்று பொருள் அமையும். இவ்வாறு அமையும் போது கூட இங்கேயும் இன்னுமொரு சிக்கல் உள்ளது. அதாவது “நீ இல்லையானால் அவனைக் காண்பாய்” என்ற வசனத்தில் تَرَهُ என்பது முன்னால் வந்துள்ள فإن لم تكن என்ற வசனத்தில் வந்துள்ள إن என்ற “ஷர்த்”திற்கு تَرَاهُ என்பது “ஜவாப்” ஆகிவிடும். “ஷர்த்” என்பதும், “ஜவாப்” என்பதும் “ஜஸ்ம்” செய்யப்பட்டு வர வேண்டும். இவ்விடத்தில் تَكُنْ என்பது முறைப்படி “ஜஸ்ம்” செய்யப்பட்டு வந்துள்ளது சரியே! ஆனால் “ஜவாப்” ஆன تَرَاهُ என்பது “ஜஸ்ம்” செய்யப்படவில்லையே! இது “ஜஸ்ம்” செய்யப்பட்டிருந்தால் تَرَاهُ என்று வராமல் تَرَهُ என்றுதானே வந்திருக்க வேண்டும். அவ்வாறு வரவில்லையே! என்று ஒருவர் கேட்கலாம். இவ்வாறு கேட்பது நியாயமே! இதற்கும் விடை உண்டு.
அதாவது இந்த நபீ மொழி சில அறிவிப்புக்களில் تَرَاهُ என்று வராமல் “ஜஸ்ம்” செய்யப்பட்டு تَرَهُ என்று வந்திருப்பதாக ஸூபீ மகான்கள் கூறுகிறார்கள். அவர்களின் பேச்சை நாங்கள் நம்ப வேண்டுமேயன்றி அதற்கு என்ன ஆதாரம்? எந்த கிதாபில் உள்ளது? என்று கேட்க முடியாது.
“புகஹாஉ” எனும் சட்டக்கலை மேதைகளான இமாம் ஷாபிஈ, இமாம் நவவீ, இமாம் றாபிஈ போன்றோர் ஒரு சட்டம் சொல்லியிருந்தால் அச் சட்டத்தை நாம் எடுத்து நடக்கின்றோமேயன்றி அவர்களிடம் எந்த கிதாபில், எந்தப் பக்கத்தில் வருகிறதென்று யாரும் கேட்பதில்லை.
அறபு மக்கள் “ஷர்த்” உடைய “ஜவாப்” என்பதற்கு “ஜஸ்ம்” செய்யாமல் கூறுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இவற்றைக் கருத்திற் கொண்டும் “நீ இல்லையானால்தான் அவனைக் காண முடியும்” என்ற தத்துவத்தைக் கருத்திற் கொண்டும் ஸூபீ மகான்கள் மேற்கண்ட நபீ மொழிக்கு கூறும் கருத்தே சரியானதென்பது எனது கருத்தாகும்.
நான் கூறிய கருத்தைப் பிழை காணும் உலமாஉகளும், முப்தீகளும், ஹழ்றத்மார்களும் சரியான ஆதாரங்களோடு இக்கருத்தை மறுத்தும், அவர்கள் சொல்லி வருகின்ற கருத்தே சரியானதென்றும் நிறுவ முன்வரலாம். வரவேற்கிறேன்.
ஒரு மனிதனிடம் “அன்னிய்யத்” எனும் “நான்” எனும் உணர்வும் இருக்கும். “அனானிய்யத்” எனும் “நான் எனும் மமதை”யும் இருக்கும். அவனிடம் நான் எனும் மமதை இல்லாது போனாலும் “நான்” எனும் உணர்வு இல்லாதவர்கள் இருக்க முடியாது. அவ்வாறு இருப்பதாயினும் ஸூபீ மகான்கள், நபீமார், வலீமார் போன்றோர் மட்டுமே அவ்வாறிருப்பர்.
எனது தலைப்பின் சுருக்கம் என்னவெனில் மேற்கண்ட நபீ மொழியின் படி “தீன்” என்ற சொல் நான் மேலே எழுதியுள்ள ஈமான், இஸ்லாம், இஹ்ஸான் ஆகிய மூன்று அம்சங்களையும் உள் வாங்கிய ஒரு சொல்லாயிருப்பதால் மூன்று அம்சங்களும் உள்ளவன் மட்டுமே “தீன்” எனும் மார்க்கத்தில் உள்ளவனாயிருப்பான்.
இன்று “முஸ்லிம்” என்றும், இஸ்லாமியன் என்றும் அடையாளப்படுத்தப்பட்ட அனைவரும் “தீன்” மார்க்கத்தில் உள்ளவர்களா? இல்லாதவர்களா? என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றேயாகும்.
இன்று முஸ்லிம் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களிடம் அறை குறையாகவேனும் “ஈமான்” உள்ளது என்றும், “இஸ்லாம்” உள்ளது என்றும் வைத்துக் கொண்டாலும் “இஹ்ஸான்” என்பது மண்ணளவும் இல்லை என்றே சொல்ல முடியும்.
“இஹ்ஸான்” என்றாலும். “இக்லாஸ்” என்றாலும் இரண்டும் ஒன்றுதான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
பெருமானார் அவர்கள் கூறிய வரைவிலக்கணத்தின் படி “இக்லாஸ்” இல்லாதவன் முஸ்லிமே அல்ல என்றே முடிவு செய்ய வேண்டும்.
இவ் அடிப்படையில் இன்று உலகில் “தீன்” மார்க்கவாதிகள் எத்தனை பேர் உள்ளார்கள் என்று ஓரளவு சொல்ல முடியும். இவ் அடிப்படையில் இலங்கை நாட்டில் “தீனுல் இஸ்லாம்” இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?