மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ
(மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
لَا أَدْرِيْ نِصْفُ الْعِلْمِ،
“லா அத்ரீ நிஸ்புல் இல்ம்”
“எனக்குத் தெரியாது” என்பது அறிவின் பாதி.
இது ஒரு தத்துவம். இதன் சுருக்கம் என்னவெனில், ஒருவனுக்கு எது தெரியாதோ அவன் அது தனக்குத் தெரியாது என்று சொல்வதே அறிவின் பாதி. இவ்வாறு சொல்பவன்தான் உண்மையான அறிஞனாவான். தனக்குத் தெரியாத ஒன்றுக்கு தெரிந்தவன் போல் பிறருக்கு விளக்கம் கூறுபவன் அறிவிலியேயன்றி அவன் அறிஞனல்ல.
ஒருவன் பெரும் அறிஞன் என்று பிரசித்தி பெற்றிருப்பான். ஊர் மக்கள் அவனை பேரறிஞன், “அல்லாமா”, அறிவுக் கடல், “இமாம்” என்றெல்லாம் போற்றிப் புகழ்வார்கள். இதனால் அவன் தன்னை மிஞ்சிய அறிஞன் இல்லை என்று நினைத்து ஏனைய அறிஞர்களை அறிஞர்களாகப் பார்க்கமாட்டான். அவர்களைக் கண்ணியப்படுத்தவோ, கணக்கெடுக்கவோ மாட்டான்.
ஓர் உண்மையான அறிஞன் புகழப்பட வேண்டியவனும், பாராட்டப்பட வேண்டியவனுமேயாவான். இதனால் ஒன்றுமே தெரியாத ஒரு முட்டாளை மேடையில் ஏற்றி வைத்துக் கொண்டு மா பெரும் அறிஞன் என்று புகழ் மாலை சூடுவதும், கஞ்சனான கோடீஸ்வரனை மேடையில் ஏற்றி வைத்துக் கொண்டு உலகப் பிரசித்தி பெற்ற கொடை வள்ளல் என்று பாராட்டி பொன்னாடை போர்த்துவதும் அறியாமையாகும்.