நான் இவனின் பேச்சை றபீஉனில் அவ்வல் 08ம் இரவு முகநூலில் கேட்டேன். “ஸூறத்” உடையையும், உடலையும், தலைப் பாகையையும், அதற்குமேல் போட்டிருந்த சால்வையையும் பார்த்து இவர் ஓர் இறை ஞானியாக இருப்பாரோ, இவரின் பேச்சைக் கேட்டுத்தானாக வேண்டுமென்று பேசி முடியும் வரை செவி சாய்த்துக் கொண்டுமிருந்தேன். வெறும் பச்சத் தண்ணிதான். உப்பும் இல்லை, உறைப்பும் இல்லை. பொதுவாக ருசியே இல்லை. அவரின் நேரமும் வீண். கேட்போரின் நேரமும் வீண்தான்.
ஆசியாவிலேயே பெரிய அறபுக் கல்லூரி “தேவுபந்த்” மத்ரசாதான் என்று சொல்கிறார். அது சரியோ, பிழையோ எனக்குத் தெரியாது. ஆயினும் அதை இல்லையென்ற அளவு பாராட்டுகிறார். அவரிடம் “தேவுபந்த்” என்றால் பொருள் என்னவென்று கேட்கிறேன். அவர் விளக்கம் சொல்லட்டும்.
“தேவுபந்த்” மத்ரசா மௌலித் ஓதுவது “பித்அத்” என்று “பத்வா” கொடுத்துள்ளதென்று மட்டும் கூறுகிறாரே தவிர அந்த “பத்வா”வில் ஒரு வரியையேனும் அவர் வாசித்துக் காட்டவில்லையே அது ஏன்? அவர் இன்னொரு பிரசங்கத்தின் போது வாசித்துக் காட்டுவாரா?
இன்னும் தமிழ் நாடு வேலூர் பாகியாதுஸ் ஸாலிஹாத் அறபுக் கல்லூரியின் தாபகர் அஃலா ஹழ்றத் அவர்கள் மௌலித் ஓதுவது கெட்ட “பித்அத்” என்று “பத்வா” கொடுத்துள்ளாரென்று கூறுகிறார். அதில் ஒரு வரியைக் கூட அவர் வாசித்துக் காட்டவில்லையே அது ஏன்?
நான் 1966, 67 களில் “பகியாதுஸ் ஸாலிஹாத்” அறபுக் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்தேன். அவ்வேளை அங்கிருந்த ஹழ்றத்மார்கள் அனைவரும் ஸுன்னீகளாகவே இருந்தார்கள். ஒருவர் வஹ்ஹாபிஸக் கொள்கையுடையோர் இருக்கவில்லை.
கேரளாவைச் சேர்ந்த அஷ்ஷெய்கு ஹஸன் அவர்களும், அதே மாநிலத்தைச் சேர்ந்த அஷ்ஷெய்கு அப்துர் றஹ்மான் பள்பரீ அவர்களும், சித்தியன் கோட்டை கமாலுத்தீன் ஹழ்றத் அவர்களும், மற்றும் பலரும் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை வாதிகளாகவும், மௌலித் ஓதுவது ஆகும் என்று சொல்பவர்களாகவுமே இருந்தார்கள்.
அஃலா ஹழ்றத் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த அஷ்ஷெய்கு றயீசுத்தீன் ஹழ்றத் அவர்கள் எனக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்தார்கள். அவரும் நம்பர் 01 ஸுன்னீயாகவே இருந்தார்.
எனது காலத்திற்கு முன் அல்லது எனது காலத்திற்குப் பின் “பாகியாதுஸ் ஸாலிஹாத்” அதிபராயிருந்த அஷ்ஷெய்கு ஆதம் ஹழ்றத் அவர்கள் தப்லீக் ஜமாஅத்தின் எதிரியாக இருந்துள்ளார்கள் என்பதும், அவ் அமைப்பு வழிகெட்ட அமைப்பு என்று “பத்வா” வழங்கியவர்கள் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியதாகும்.
மௌலவீ காஸிமீ அவர்களே! நீங்கள் கூறுவது உண்மையாயின் “தேவு பந்த்” “பத்வா”வில் ஒரு பிரதியும், வேலூர் பத்வாவில் ஒரு பிரதியும் எனக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
“வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” என்ற பெயரில் நான் 1648 பக்கங்கள் கொண்ட ஒரு நூல் எழுதி வெளியிட்டுள்ளேன். அதில் ஒரு பிரதி உங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக உங்களின் தபால் முகவரியை எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
يا أخي فى الله مولوي شمس الدين القاسمي! سلام على من سنّ سنّة حسنةً فى الدين، وقرأ مولد ومدائِحَ سيّد الوجود سيّدنا محمد صلّى الله عليه وسلّم، ومدائح أولياء الله تعالى، وجعل قرائتها عبادة لا تماثلها عبادة، فإن كنت تقول وتُفتي ببدعة قراءة المواليد والمدائح للأنبياء والأولياء فأت بآية واحدة من الكتاب، وحديثا واحدا من أحاديث مَن لو لاه لما خُلقتَ وما خلقتُ وما خُلق أيّ شيء من الأشياء المخلوقة، والله يهديك إلى صراطٍ مستقيم، فاستقم كما اُمِرتَ،
أخوك،
عبد الرؤوف عبد الجواد،