#அல்லாஹ்வின் தத்துவத்தை யார் அறிவார்?
#அவன் செயலின் மறை பொருளை யார் புரிவார்?
#அவனுக்கு இணையுமில்லை, துணையுமில்லை!
#அவனுக்கு வேறான எதுவும் இல்லை!
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் #மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அன்பிற்குரிய முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.
நமது “ஈமான்” விசுவாசத்தின் பிரதான அம்சங்களில் ஒன்று, எச் செயலாயினும் அது எவரால் அல்லது எதனால் வெளியானதாயினும், அது எமது அறிவுக்கு அநீதியானதாகத் தெரிந்தாலும், அது அல்லாஹ்வின் செயல்தான் என்றும், அது நீதியானதுதான் என்றும் நம்புவதேயாகும். இதற்கு மாறாக நம்புதல் தவறு.
عن أبي ذرّ رضي الله عنه، عن رسول الله (صلى الله عليه وسلم) ، عن جبريلَ (صلى الله عليه وسلم) ، عن اللهِ تبارك وتعالى أنه قال: ‘ يا عِبادي إني حَرَّمْتُ الظُّلْمَ على نَفْسِي وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّماً فَلا تَظالَمُوا، (الأذكار للإمام النووي، ص 660)
الأفعالُ كلّها لله فقط، لا لغيره من خلقه، (هذه هي العقيدة الصحيحة عند الصُّوفيّين)
செயல்கள் அல்லாஹ்வுக்குரியனவாகும். அவனின் படைப்புக்களில் எதற்கும் உரியவையல்ல. இதுவே ஸூபீ மகான்களிடம் சரியான கொள்கையாகும். அவன் மட்டுமே எதையும் சுயமாகச் செய்பவன். படைப்பு எதையும் சுயமாகச் செய்வதில்லை. ஆயினுமவை அவனின் சுயமான செயல் வெளியாகும் مَظَاهِرْ – பாத்திரங்களேயாகும். அவனின் எந்த ஒரு செயலும் பாத்திரமின்றி வெளியாவதில்லை. இதற்கு மாறாக யார் சொன்னாலும் அது பிழைதான். முப்தீ சொன்னாலும் சரியே! முட்டி சொன்னாலும் சரியே!
அல்லாஹ் “ரிஸ்க்” வழங்குகின்றான் என்றால் அவனாக யாரிடமாவது வந்து நான்தான் அல்லாஹ். “ரிஸ்க்” கொடுப்பவனும் நான்தான். இதோ பிடி “ரிஸ்க்” என்று கொடுப்பதுமில்லை. கொடுத்ததுமில்லை.
அல்லாஹ் தனது படைப்புகளுக்கு நேரடியாக ஒன்றுமே செய்வதில்லை. படைப்புகள் மூலமே அவர்களுக்கு எல்லாம் செய்து கொண்டிருக்கிறான். செய்பவன் அவன்தான். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. ஆயினுமவன் செயல் எதுவாயினும் அது படைப்புகள் மூலமே வெளியாகும்.
கத்தி வெட்டியது என்பதும், நெருப்புச் சுட்டது என்பதும், அவன் உதவினான் என்பதும், அவள் அடித்தாள் என்பதும் உலக நடைமுறையில் உள்ள பேச்சு வழக்காகும். எதார்த்தம் இதுவல்ல. எதார்த்தம் என்னவெனில் அல்லாஹ் சுட்டான், அல்லாஹ் வெட்டினான், அல்லாஹ் உதவினான், அல்லாஹ் அடித்தான் என்பதேயாகும். உலக நடைமுறை பேணப்பட வேண்டியது அவசியமே! இன்றேல் “ஷரீஆ”வின் சட்டங்களை நிலை நாட்ட முடியாமற் போய்விடும்.
கத்தி சுமயாக வெட்டுமென்றிருந்தால் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் நபீ இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை அறுத்த வேளை அது அறுத்திருக்க வேண்டும். “நும்றூத்” என்பவன் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை நெருப்பில் எறிந்த போது அது அவர்களைச் சுட்டிருக்க வேண்டும். அல்லாஹ் அந்த நெருப்புக்கு يا نار كوني بردا وسلاما على إبراهيم “நெருப்பே! நீ இப்றாஹீம் நபீ மீது குளிராகவும், ஈடேற்றமாகவும் இருந்து கொள்” என்று சொல்லியிருக்கவும் தேவையில்லை.
எனவே, எச் செயலாயினும், அது யாரால் – யார் மூலம், அல்லது எதன் மூலம் வெளியானாலும் அச் செயலுக்குரியவன் அல்லாஹ் மட்டும்தான் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக நான் சொல்ல விரும்புவது என்னவெனில் படைப்புகள் மூலம் வெளியாகின்ற இறைவனின் எச் செயலாயினும் அது நீதியானதாயும், அர்த்தமுள்ளதாயுமே இருக்கும் என்பதையும் நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அல்லாஹ் எவருக்கும், எதற்கும், எப்போதும் அநீதி செய்வதுமில்லை, எதையும் பொருத்தமின்றி – குறையுடன் படைப்பதுமில்லை. இதுகாலவரை அவ்வாறு படைத்ததற்கு வரலாறுமில்லை.
ஒருவனை பிறவிக்குருடனாக படைத்துள்ளான். இன்னொருவரை ஊமையாகப் படைத்துள்ளான். மற்றும் ஒருவனை இரு கால்களும், இரு கைகளும் இல்லாதவனாகப் படைத்துள்ளான்.
இவ்வாறு அவன் படைத்திருப்பது இறை தத்துவம் தெரியாதவனின் வெளிக் கண்ணோட்டத்தில் அநீதியாகவும், பொருத்தமற்றதாகவும் தெரிந்தால் அவன் அல்லாஹ் அநீதி செய்துள்ளான் என்றோ, பொருத்தமின்றிப் படைத்துள்ளான் என்றோ சொல்லவும் கூடாது. நம்பவும் கூடாது. இரண்டுமே பிழைதான். அது மட்டுமல்ல. “ஈமான்” “குப்ர்” ஆகவும் ஆகிவிடும்.
பார்க்கின்ற மனிதனுக்கு நீதி, நியாயம் விளங்காமற் போனாலும் கூட அல்லாஹ் அநீதி செய்யமாட்டான், அவன் பொருத்தமின்றி எதையும் செய்யமாட்டான் என்று நாம் நம்ப வேண்டும். இத்தகைய செயலுக்கான காரணத்தையும், நீதியையும் இறைஞான மகான்களான வலீமாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு விடை சொல்பவர் சரியாகச் சொல்வதாயின் அவர் இறைஞானத்தில் மாபெரும் திறமையுள்ளவராக இருக்க வேண்டும். “ஷரீஆ” வரம்புக்குள் நின்று கொண்டு மட்டும் ஞானத் தாகமுள்ளவனின் தாகத்தை தீர்க்க முடியாது. இன்று வாழும் முஸ்லிம்களில் இதன் தாற்பரியமும், விளக்கமும் தெரியாத பலர் அல்லாஹ்வை அநீதியாளன் என்று சொல்பவர்களும், நம்புபவர்களும் உள்ளார்கள். இவர்களின் வழிகேட்டிற்குக் காரணம் உலமாஉகள் இறைஞானம் பேசாமலிருப்பதேயாகும். அவர்களே இறைஞானத்தின் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்கலாகாதென்று போதிக்கும் நிலையில் அவ்வாறு அவர்கள் சொல்வார்களா? சொல்லத்தான் தெரியுமா? சொல்லக் கூடியவனுக்கு “முர்தத்” என்று “பத்வா” வழங்கினால் அவன் எவ்வாறு சொல்வான்? சொன்னாற் கூட அவர்களின் “பத்வா”வை நம்பினவர்கள் அவன் சொல்வதை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்? இதன் மூலம் பொது மக்கள் வழி தவறிப் போவதற்கு உலமாஉகளின் மௌனமே காரணம் எனலாம். உலமா சபையினர் மக்களுக்கு இறைஞான சேவை என்ன செய்கிறார்கள்? “ஹலால்” சான்றிதழ் கொடுத்துக் கொண்டு சொகுசாக வாழ்கிறார்கள். அது மட்டும்தான்.
அல்லாஹ் ஏதேனுமொரு படைப்பை நியாயமாகவும், பொருத்தமாகவும் படைக்கவில்லை என்று நினைப்பவர்கள் உள்ளார்களாதலால் அவர்களுக்காக இத்தகைய ஞானம் அவசியம் சொல்லப்பட வேண்டியதாகும். இதோ சில உதாரணங்கள்.
ஓர் ஆய்வாளன் அல்லாஹ்வின் படைப்புகள் பற்றி ஆய்வு செய்து அவற்றில் எது நீதியாகவும், பொருத்தமாகவும் படைக்கப்பட்டுள்ளதென்பதை ஆய்வு செய்தறிவதற்காக காடு, கரைகலெங்கும் பயணித்தான்.
ஒரு தோட்டத்தில் பெரிய காய்களையுடைய ஒரு சுரைக் கொடி படர்ந்திருந்தது. கொடி சிறியதாயும், காய் மிகப் பெரியதாயும் இருந்தது. இது கண்டு வியந்த அவன் சற்று நேரம் தங்கி நின்று சிந்தித்து இது நியாயமான படைப்பல்ல – கொடிக்குப் பொருத்தமான காய் அல்ல. கொடிக்கேற்ற காய் கொடுப்பதாயின் விரலுக்கேற்ற வீக்கம் என்று சொல்வது போல் சிறிய அளவிலான காய்தான் கொடுத்திருக்க வேண்டும். இவ்விடயத்தில் அல்லாஹ் பொருத்தமாகச் செய்யவில்லை. படைக்கவில்லை என்று முடிவு செய்து அல்லாஹ்வை அநீதியாளன், பொருத்தமின்றிச் செய்பவன் என்றும் நம்பிக் கொண்டான்.
தொடர்ந்து பயணித்தான். களைப்பும், பசியும் ஏற்பட்டன. ஓய்வு பெறுவதற்காக நிழல் தரும் மரம் தேடியலைந்து ஓர் ஆல மரத்தைக் கண்டு அதன் கீழே நிழல் பெற்று சாப்பிட்டு ஓய்வெடுத்தான். சிறிது நேரம் உறங்குவதற்காக மல்லாந்து படுத்திருக்கும் போது ஆலம் பழத்தைக் கண்டு வியந்தான். ஆல மரமோ பெரியது. அதன் பழமோ சிறியது. இறைவன் இவ்விடத்திலும் தவறிவிட்டான். மரத்திற்கேற்ற காய் கொடுக்கவில்லை என்று முடிவு செய்து கொண்டு உறங்கினான். இவன் மீது கருணை கொண்ட அல்லாஹ் இவனுக்கு நீதியை உணர்த்தி அவனை வழிகேட்டிலிருந்து காப்பாற்றுவதற்காக ஓர் ஆலங்கனியை அவனின் நெஞ்சில் விழச் செய்தான். அதிர்ச்சியடைந்து கண் விழித்த அவன் சிந்திக்கலானான். மரத்திற்கேற்ற காய் கொடுக்கப்பட்டிருந்தால் இன்று, இதே நேரம் நான் மரணித்திருப்பேனே என்று முடிவு செய்து அல்லாஹ்வின் செயல் நியாயமானதும், பொருத்தமானதுமாகும் என்ற முடிவுக்கு வந்தான்.
இதன் விபரம்: சுரைக் கொடி என்பது நிலத்தில் படர்வதேயன்றி ஆல மரம் போல் உயர்ந்தும், அடர்ந்தும் வளர்வதில்லை. சுரைக் கொடியின் கீழ் எவரும் ஓய்வெடுப்பதுமில்லை. ஓய்வு எடுப்பதற்கு வாய்ப்பும் இல்லை. இதனால் அதற்கு பெரிய காயை கொடுப்பதால் எவருக்கும் தீமையில்லை என்பதால் அதற்குப் பெரிய காயை அல்லாஹ் கொடுத்தான். ஆனால் ஆல மரமோ உயர்ந்தும், அடர்ந்தும் வளர்கின்ற மரமாதலால் அதன் கீழ் மனிதர்கள் ஓய்வு எடுப்பார்கள், உறங்குவார்கள் என்பதை அல்லாஹ் அறிந்தவன். இதனால் அதற்கு பெரிய காயை அவன் கொடுக்கவில்லை. இதுவரை கூறிய விளக்கத்தின் மூலம் அல்லாஹ்வின் எச் செயலாயினும் அது நியாயமானதாயும், பொருத்தமானதாயும் இருக்கும் என்ற உண்மை தெளிவாகிறது.
இன்னுமோர் உதாரணம் சொல்கிறேன். இது நடந்த நிகழ்வேயன்றி கற்பனைக் கதையல்ல.
ஒரு நாட்டில் ஓர் அரசன் இருந்தான். அவனின் அமைச்சரவையில் ஓர் அமைச்சர் இருந்தார். அவரின் வழக்கம் யாருக்கு எது நடந்தாலும் “நன்மைக்காகவே நடந்துள்ளது” என்று சொல்வதாகும். இதுவே இவரின் வழக்கமாக இருந்து வந்தது.
ஒரு நாள் அரசன் அப்பிள் பழமொன்றை கத்தியால் வெட்டிக் கொண்டிருந்த போது கை தவறி அவனின் விரல்களில் ஒன்று துண்டாகிவிட்டது. இதைக் கண்ட அந்த அமைச்சர் வழக்கம் போல் நன்மைக்காகவே நடந்துள்ளது என்று கூறினார். இது கேட்ட அரசன் கோபம் கொண்டு அவரை சிறையில் அடைத்துவிட்டான். பல மாதங்கள் கடந்து விட்டன.
ஒரு நாள் அரசன் வேட்டைக்குச் செல்வதற்காக தனது பாது காவலர் சகிதம் காட்டுக்குச் சென்றான். அக்காட்டில் மந்திரவாதிகள் சிலர் புதையல் எடுப்பதற்காக தயாராகிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பலி கொடுப்பதற்கு எந்தக் குறையுமில்லாத மனித பலி அவர்களுக்கு தேவையாயிருந்தது. அரசனையும், அவனின் பாதுகாவலர்களையும் கண்ட மந்திரவாதிகள் அவர்களில் ஒருவரைப் பலி கொடுப்பதற்காக முடிவு செய்து அவர்களில் அழகிய தோற்றமுள்ளவராயிருந்த அரசனைத் தெரிவு செய்து மந்திரத்தால் அவரை மயக்கினார்கள்.
பலி கொடுப்பதற்கு ஆயித்தமான போது அவர்களில் ஒரு மந்திரவாதி தலைமை மந்திரவாதியிடம், அரசன் அழகாகவே இருக்கிறான். ஆயினும் அவன் குறை உள்ளவன். அவனின் கை விரல்களில் ஒன்று இல்லை. அவன் பலி கொடுக்கப் பொருத்தமற்றவன் என்று கூற அவ் அரசனை அனுப்பிவிட்டார்கள் மந்திரவாதிகள்.
அவ்வேளை அரசனுக்கு சிறையிலுள்ள அமைச்சரின் நினைவு வந்தது. அவன் சற்று சிந்தித்தான். தான் அப்பிள் பழம் வெட்டிய நேரம் விரல் வெட்டப்பட்ட போது எனது அமைச்சர் எல்லாம் நன்மைக்காகவே என்று சொன்னார். அவர் சொன்னது சரிதான். அதை இப்போதுதான் நான் உணர்கிறேன் என்று கூறிவிட்டு உடனே அமைச்சரவையைக் கூட்டி குறித்த அமைச்சரை விடுதலை செய்து, தனதுயிரை கொலையின்றிக் காத்த அமைச்சருக்கு அன்பளிப்பும் வழங்கினான்.
இந்த வரலாறும், நான் முதலில் எழுதிய சுரைக் கொடி, ஆல மர வரலாறும் தருகின்ற பாடம் என்னவெனில், அல்லாஹ்வின் எச் செயலாயினும் அது நீதியானதாயும், பொருத்தமானதாயும் இருக்கும் என்பதேயாகும்.
சுருக்கமாக இன்னுமொரு சம்பவத்தை எழுதுகிறேன். விடுதலைப் புலிகள் தலையெடுத்திருந்த கால கட்டத்தில் நான் பதுளையிலிருந்து பேருந்து வண்டியில் காத்தான்குடிக்குப் பயணித்துக் கொண்டிருக்கையில் “மஹா ஓயா” என்ற “செக் பொய்ன்ட்” இடத்தில் நின்று கொண்டிருந்த பொலிஸ் ஒருவர் என்னுடன் பயணித்த எனது நண்பனின் கன்னத்தில் அறைந்து விட்டார். நண்பனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இருவரும் ஊர் வந்து சேர்ந்து விட்டோம்.
சுமார் ஒரு வருடத்தின் பின் எனது நண்பர் என்னிடம் வந்து “பொலிஸ் எனது கன்னத்தில் அடித்த நாளிலிருந்து எனக்கு இருபதாண்டுகளாக இருந்து வந்த தலைவலி நூறு வீதம் சுகமாகிவிட்டது” என்று வியப்போடு கூறினார். அவர் இன்றுவரை உயிருடன் இருக்கிறார். ஆனால் அவருக்கு இது வரை சாதாரண தலைவலி கூட வரவில்லை.
அவரின் தீராத் தலை வலிக்கான மருந்து எங்கே? எதிலே? இருந்துள்ளது என்பதை நினைக்கும் போது அல்லாஹ்வின் செயல்களில் எதை நாம் குறை கூற முடியும்? ஓர் அறைதான் அவரின் தலைவலிக்கு மருந்தாகவும், விருந்தாகவும் அமைந்திருந்தது.
அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! யாரால், எதனால் எச் செயல் வெளியானாலும் அச் செயலுக்குரியவன் அல்லாஹ் மட்டும்தான் என்றும், சிருட்டிகளுக்கு சுயமான செயல் எதுவுமில்லை என்றும், அல்லாஹ்வின் செயல்கள் எல்லாம் நியாயமானதாயும், பொருத்தமானதாயுமே இருக்கும் என்றும் அறிந்தும், நம்பியும் வாழ்வோம். அல்லாஹ்வுக்கு சுயமான செயல்கள் உள்ளது போல் படைப்புகளுக்கும் சுயமான செயல் உண்டு என்ற தவறான நம்பிக்கையை விடுவோம்.