சங்கைக்குரிய ஷெய்குனா அல்ஹாஜ்,
மௌலவீ A. அப்துர்றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்கள்
எல்லாப்புகழும் ஏகன் அல்லாஹ்வுக்கே ஸலவாத்,ஸலாம் இரண்டும் வழி கேட்டைஅழித்து நல்வழியை காட்டினவர்களான நபீ(ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள், குடும்பத்தவர்கள் அனைவர் மீதும் அவ்லியாஉகள், நல்லடியார்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.!
ஐங்காலத் தொழுகை நேரத்தை அறிவிப்பதற்காக பாங்கு செல்லுமுன் நபீ (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் செல்லும் வழக்கம் இலங்கை நாட்டிலுள்ள எல்லாப் பள்ளிவாயல்களிலும் பல்லாண்டுகளாக இருந்து வந்துள்ளது.
ஸலவாத் மட்டுமன்றி பாங்கு சொல்லும் முஅத்தின் முதலில் அஸ்தஃபிருல்லாஹல் அளீம் என்று மூன்று தரமும்.
ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர், வலாஹவ்ல வலாகுவ்வத இல்லாபில்லாஹல் அலிய்யில் அளீம் என்று ஒரு தரமும் சொல்லும் வழக்கமும் இருந்து வந்தது.
இவ்வழக்கம் இருந்த காலத்தில் இலங்கையில் தலைசிறந்த மௌலவீமார்களும், அறபுக்கலாபீட அதிபர்களும்,மார்க்கஅறிஞர்களும் இருந்தும்கூட அவர்களில் எவரும் இவ்வழக்கம் பித்அத் என்றோ ஆதாரமற்ற செயலென்றோ சொன்னதுமில்லை. அவ்வாறு பத்வா வழங்கியதுமில்லை. தடுத்து நிறுத்தியதுமில்லை. மாறாக அவர்கள் அனைவரும் அதைச் சரிகண்டும், அனுமதித்துமே வந்துள்ளனர். அக்காலகட்டத்தில் இது சர்ச்சைக்குரிய விடயமாகவே கருதப்படவில்லை.
எனினும் வஹ்ஹாபிஸ எயிட்ஸ்நோய் இலங்கைக்கு வந்தபிறகுதான் இவ்வழக்கம் வஹ்ஹாபிகளால் கொஞ்சம் கொஞ்சமாகநிறுத்தப்பட்டது. இன்று அந்த நோயை இறக்குமதி செய்வோர் மலிந்துவிட்டபடியால் அவர்களின் ஆட்சியதிகாரத்திலுள்ள பள்ளிவாயல்களில் மட்டும் இச்சிறப்பான வழக்கம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
பாங்கு செல்லுமுன் ஒன்றுமே சொல்லாமல் அல்லாஹு அக்பர் என்றே அது ஆரம்பிக்கப்படவேண்டுமென்றும் ,அதற்குமுன் ஸலவாத் சொல்லுதல் நபீ (ஸல்) அவர்களின் காலத்தில் இருக்காத பித்அத் என்றும்,அதற்கு திர்குர்ஆனிலும் நபீமொழியிலும் ஓர் ஆதாரம் கூட இல்லை என்றும் வஹ்ஹாபிகள் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். அதோடு மட்டும் அவர்கள் நின்றுவிடவில்லை.
ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை வழி செல்லும் ஏழைகளைத் தேடி இனங்கண்டு அவர்களுக்கு வீடு, கிணறு, மலசலகூடம் போன்றவற்றைக் கட்டிக்கொடுத்தும், றமழான் மாதம் அரிசி, ஈத்தம்பழம், பணம் முதலானவற்றை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியும் அவர்களைத் தமது வழிகேட்டின் ஈர்த்துக் கொண்டுமிருக்கின்றார்கள். இது வியப்பான விடயமில்லை.ஆனால் வியப்பான விடயம் என்னவெனில் ஸுன்னத்வல் ஜமாஅத் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டு அக்கொள்கை வழி சென்று கொண்டிருந்த மௌலவீமார்களிற் சிலர் வஹ்ஹாபிகளால் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற ரியால் என்ற மதுவை அருந்தி அதனாலேற்றப்படும் மயக்கத்தில் அவர்களுடன் சேர்ந்துகொண்டு பாங்கு சொல்லுமுன் ஸலவாத் சொல்லுதல் பித்அத் என்று கூச்சலிடுவதும் அவர்களின் பாட்டுக்குத் தாளம் போடுவது மேயாகும்.
பாங்கு செல்லுமுன் ஸலவாத் சொல்லக்கூடாதென்று கூறும் வஹ்ஹாபிகள் தமது வாதத்துக்கு இரண்டு ஆதாரங்கள் கூறுகின்றார்கள்.
ஒன்று– பாங்கு செல்லுமுன் ஸலவாத் செல்வதற்கு திர்குர்ஆனிலோ, நபீ மொழியிலோ எந்த ஓர் ஆதாரமுமில்லை. ஆகையால் பாங்கு செல்லுமுன் ஸலவாத் சொல்லுதல் கூடாது.
இரண்டு – நபீ(ஸல்) அவர்களின் காலத்தில் செய்யப்படாமல் அவர்களின் மறைவுக்குப்பின் செய்யப்படும் ஒரு செயல் பித்அத் ஆகும். பித்அத் எல்லாம் வழிகேடு.விழிகேடல்லாம் நரகத்தில் என்ற நபீ மொழிப்படி பாங்கு செல்லுமுன் ஸலவாத் சொல்லுதல் நபீ (ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாத, அவர்களின் மறைவுக்குப்பின் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாயிருப்பதால் இது பித்அத் ஆகும். ஆகையால் பாங்கு செல்லுமுன் ஸலவாத் சொல்லுதல் கூடாது, மேற்கண்ட இரண்டு ஆதாரங்கள் கொண்டே பாங்கு சொல்லுமுன் ஸலவாத் சொல்லுதல் கூடாதென்று வஹ்ஹாபிகள் வாதிடுகின்றனர். வஹ்ஹாபிகள் கூறும் இரண்டு ஆதாரங்களில் முதலாவது ஆதாரம் பற்றி ஆராய்வோம்.
பாங்கு சொல்லுமுன் ஸலவாத் சொல்லும் விடயமாயினும், அல்லது வேறெந்த விடயமாயினும் அது ஆகாதென்பதற்கு திருக்குர்ஆனிலோ, அல்லது நபீ மொழியிலோ ஆதரம் இருந்தால் மட்டும்தான் அது ஆகாதென்று முடிவு செய்தல் வேண்டும். அது கூடாதென்பதற்கு திருக்குர்ஆனிலும், நபீ மொழியிலும் ஆதரமில்லை என்பதால் அது கூடாதென்று முடிவு செய்தல் பிழையானதாகும். ஏனெனில் உஸூல் என்று ஓர் அடிப்படை உண்டு. அந்த அடிப்படை விதியைக் கொண்டே ஒரு விடயம் கூடாதென்றோ கூடுமென்றோ முடிவு செய்தல் வேண்டும்.
அடிப்படை விதி
அஸ்லுல் அஷ்யாயில் இபாஹது. மாலம் யஃதி அன்ஹூன் நஹ்யு இதுவே அடிப்படை விதி. இதன் விபரமென்னவெனில் எந்த ஒரு விடயமாயினும் அது கூடாதென்று திருக்குர்ஆனிலோ, நபீமொழியிலோ விலக்கல் – தடை வரவில்லையானால் அந்த விடயம் ஆகுமென்பதே சட்டமேதைகளின் தீர்க்கமான முடிவாகும். இந்த அடிப்படை விதியைக் கருதிற் கொண்டு ஆராய்ந்தால் பாங்கு சொல்லுமுன் ஸலவாத் சொல்வது கூடாதென்பதற்கு திருக்குர்ஆனிலோ, நபீ மொழயிலோ எந்த ஒரு விலக்கலும் – தடையும் வராதபடியால் அது ஆகுமென்றே முடிவு செய்தல் வேண்டும்.
இந்த அடிப்படையில்தான் தர்க்கவியல் தத்துவத்தில், ஒரு விடயம் ஆகாதென்று வாதிடுபவன்தான் ஆதாரம் கூறவேண்டும்மேயன்றி அது ஆகுமென்று வாதிடுபவனில்லை என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, பாங்கு சொல்லுமுன் ஸலவாத் சொல்லுதல், கூடாதென்று கூறும் வஹ்ஹாபிகள்தான் தமது வாதத்துக்கு திருக்குர்ஆனிலிருந்தும், நபீ மொழியிலிருந்தும் ஆதாரம் காட்ட வேண்டுமேயன்றி அது கூடுமென்று கூறும் நல்லடியார்களல்லர். வஹ்ஹாபிகள் ஆதாரம் காட்டுவார்களா?
பாங்கு சொல்லுமுன் ஸலவாத் சொல்லுதல் கூடாதென்று கூறும் வஹ்ஹாபிகள் தமது வாதத்துக்கு திருக்குர்ஆனிலிருந்தும், நபீ மொழியிலிருந்தும் ஆதாரம் காட்டாமலிருந்து கொண்டு அதற்கு திருக்குர்ஆனிலும், நபீமொழியிலும் ஆதரமில்லை என்று கூறுவது அவர்களின் வாதத்துக்கு ஆதாரமாகாது.
சிந்தியுங்கள்
மிதி வண்டி, பஸ், கார், மோட்டார் சைக்கில், விமானம் போன்றவற்றில் பிரயாணம் செய்வதும், கையில் கடிகாரம் அணிதல், ஷேட் பாக்கட்டில் பேனை வைத்தலும் மார்கத்தில் ஆகுமானவைகளாகும். இவை ஆகுமானவை என்பதற்கு திருக்குர்ஆனிலோ, நபீ மொழியிலோ எந்த ஓர் ஆதாரமும் கிடையாது. ஆயினும் அவ்விரண்டிலும்அவை ஆகாதென்பதற்கு எந்த ஒரு விலக்கலும் – தடையும் வராமலிருப்பதே அவை ஆகுமென்தன்பதற்கான ஆதாராமாகும். இவ்வாறுதான் பாங்கு சொல்லுமுன் ஸலவாத் சொல்லும் விடயமென்பதை அறிதல் வேண்டும். ஸலவாத் சொல்லுதல் ஆகாதென்று அவ்விரண்டிலும் விலக்கல் வராமலிப்பதே அது ஆக மென்பதற்கான ஆதரமாகும்.
பாங்கு சொல்லுமுன் ஸலவாத் சொல்வது ஆகுமென்பதற்குதிருக்குர்ஆனிலிருந்தும், நபீ மொழியிலிருந்தும் ஆதாரம் கேட்க்கும் வஹ்ஹாபிகள் மிதி வண்டி, பஸ், கார், மோட்டார் சைக்கில், விமானம் போன்றவற்றில் பிரயாணம் செய்வது ஆகுமென்பதற்கும், கையில் கடிகாரம் அணிதல், ஷேட் பாக்கட்டில் பேனை வைத்தல் ஆகுமென்பதற்கும் திருக்குர்ஆனிலிருந்தும், நபீ மொழியிலிருந்தும் ஆதாரம் காட்ட வேண்டும். காட்டுவார்களா?
வஹ்ஹாபிகளே!
பாங்கு சொல்லுமுன் ஸலவாத் சொல்வதற்கு திருக்குர்ஆனிலும், நபீ மொழியிலும் எந்த ஓர் ஆதரமும் இல்லையென்பதால் அது கூடாதென்று கூறும் நீங்கள் திருக்குர்ஆனிலும், நபீமெழியிலும் ஆதரமில்லாத எத்தனையோ விடயங்கள் செய்கின்றீர்கள். மிதி வண்டி, பஸ், கார், மோட்டார் சைக்கில், விமானம் போன்றவற்றில் பிரயாணம் செய்கின்றீர்கள். கையில் கடிகாரம் அணிகின்றீர்கள், ஷேட் பாக்கட்டில் பேனை வைக்கின்றீர்கள். இவற்றுக்கு திருக்குர்ஆனிலும், நபீ மொழியிலும் ஆதாரமுண்டா? எந்த ஆதாரம் கொண்டு செய்கின்றீர்கள். பாங்கு சொல்லுமுன் ஸலவாத் சொல்வது கூடாதென்று சொன்னது போல் இவையும் கூடாதென்று சொல்லிவிட்டு தமிழ் முனிவர்கள் போல் எங்கு செல்லவேண்டுமானாலும் காலால் நடந்து சொல்லுங்கள். கையில் உள்ள கடிகாரத்தை கழற்றி குப்பையில் எறியுங்கள். புத்தியுள்ள, அறிவுள்ள, நல்லமனமுள்ள எந்த ஒரு மனிதனாவது எதைத்தடுத்தாலும் நபீ (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதை தடுப்பானா? உங்களுக்கு அவர்கள் மீது மஹப்பத் இல்லையா? அவர்கள் இல்லையென்றால் நீங்களும் இல்லை, உலகில் எதுவும் இல்லை என்பது உங்களுக்கு புரியாதா? அவர்கள்தான் உலக முஸ்லிம்களுக்கு தொழுகை தந்தவர்கள் என்பதும், பாங்கு தந்தவர்கள் என்பதும் உங்களுக்கு புரியாதா? தொழுகையில் அவர்கள் மீது ஸலவாத் சொல்லிவிட்டால் தொழுகை வீணாகிவிடும் என்பதும், பாங்கில் அவர்களின் பெயர் சேர்க்கப்படாவிட்டால் பாங்கு நிறைவேறாதென்பதும் உங்களுக்க விளங்காதா? இத்தகைய சிறப்புக்கள் உள்ள உலகின் உயிர்நாடியான நபீ (ஸல்) அவரகள் மீது ஸலவாத் சொல்வதை தடுக்காதீர்கள். எந்த நேரமும் ஸலவாத் சொல்லுமாறு மக்களைத் துண்டுங்கள். நீங்களும் சொல்லுங்கள். நாங்களும் சொல்லுகிறோம். உலகமே அவர்கள் மீது ஸலவாத் சொல்லட்டும். ஸல்லல்லாஹூ அலாமுஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்.
பங்கு சொல்லுமுன் ஸலவாத் சொல்லக்கூடாது என்று கூறும் வஹ்ஹாபிகள் தமது வாதத்தை நிறுவக் கூறிவரும் இரண்டு ஆதாரங்களில் முதலாவது ஆதாரம் பற்றி ஆராய்ந்தோம். நான் மேலே எழுதிக் காட்டிய விபரங்கள் மூலம் வஹ்ஹாபிகளின் வாதம் அர்த்தமற்றதென்று தெளிவாகி விட்டது.
ஆதாரம் 02
பாங்கு சொல்லுமுன் ஸலவாத் சொல்லுதல் கூடாதென்பதற்கு வஹ்ஹாபிகள் கூறும் இரண்டாவது ஆதாரம் பற்றி ஆராய்வோம்.
குல்லுபித்அதின்ழலாதுன் வகுல்லுழலாலதின் பின்னர். பித்அத் எல்லாம் வழிகேடு. வழிகேடேல்லாம் நரகத்தின் என்ற நபீ மொழியின்படி பாங்கு சொல்லுமுன் ஸலவாத் சொல்லுதல் நபீ (ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாத, அவர்களின் மறைவிற்குப் பின் ஏற்படுத்தப்பட்ட பித்அத் ஆகயிருப்பதால் அது வழிகேடென்று வஹ்ஹாபிகள் கூறுகின்றார்கள்.
வஹ்ஹாபிகள் கூறும் மேற்கொண்ட நபீ மொழி சரியான நபீமொழியே, அதைநாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம். ஆயினும் வஹ்ஹாபிகள் துறை தெரியாமல் தோணி தள்ளியதே அவர்களின் விளக்கத்தில் குழப்பம் ஏற்படக்காரணமாகும்.
விளக்கம்
மேற்கண்ட நபீமொழியில் குல்லுபித்அதின் ழலாலதுன் என்று ஒருவசனம் வந்துள்ளது. இதன் நேரடிப்பொருள் பித்அத் எல்லாம் வழிகேடு என்பதாகும்
இந்த வசனத்தை வைத்துக் கொண்டுதான் பாங்கு சொல்லுமுன் ஸலவாத் சொல்லுதல் பித்அத் என்றும், வழிகேடு என்றும் வஹ்ஹாபிகள் வாதிடுகின்றார்கள்.
இந்த வசனத்திற்கு நேரடிப் பொருள் கொள்ளாமல் வலிந்துரை கொண்டு பொருள் கொள்ளல் வேண்டும். ஏனெனில் வலிந்துரையின்றி நேரடிப்பொருள் கொண்டு பித்அத் எல்லாம் வழிகேடென்ற முடிவுக்கு வந்தால் நாம் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டிவரும். அதனால் பல விபரீதங்கள் உண்டாகும். விடை சொல்லமுடியாத பலகேள்விகளை எதிர்கொள்ளவும் நேரிடும். அவற்றின் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன்.
எனது தோழர்கள் நட்சத்திரம் போன்றவரகள், அவர்களில் எவரை நீங்கள் பின்பற்றினாலும் நேர்வழி பெற்றுவிடுவீரகள் என்று நபீ (ஸல்) அவர்களால் புகழப்பட்ட நபீ தோழர்களும், ஹதீது- நபீமொழிக்கலை மேதைகளான ஆறு இமாம்கள், சட்டக்கலை மேதைகளாக நான்கு இமாம்களும், தரீகஹ்களை ஸ்தாபித்த ஷெய்குமர்களும், மற்றும் உலகில் தோன்றிய அறிஞர்களும், பித்அத் செய்த வழிகேடர்கள் என்று முடிவுசெய்யவேண்டி வரும். இது மேற்கொண்ட வசனத்துக்கு பித்அத் எல்லாம் வழிகேடென்று நேரடிப்பொருள் கெள்வதால் ஏற்படுகின்ற தீய விளைவாகும். ஏனெனில் மேற்கொண்ட மஹான்கள் அனைவரும் பித்அத் செய்தவர்களேயாவர்.
சில எடுத்துக்காட்டுகள்
நபீ (ஸல்) அவர்களின் காலத்தில் தறாவீஹ் தொழுகை ஜமாஅத் கூட்டடாக நடைபெறவில்லை. அபூபக்கர் சித்தீக் (றழி) அவரகளின் காலத்திலும் அவ்வாறுதான் இருந்தது. ஒவ்வொருவரும் தனித்தனியே தொழுதுவந்தார்கள். உமர் (றழி) அவர்களின் ஆட்சிக்காலத்தின் ஆரம்பக்கட்டத்தில்லும் அவ்வாறுதான் இருந்தது. பின்னர் ஒருநாள் றமழான் மாத இரவு உமர் (றழி) அவர்கள் அப்துர்ரஹ்மான் இப்னு அப்தில் காரீ என்பவருடன் மதீனஹ் பள்ளிவாயலில் நுழைந்தார்கள். அங்கு மக்கள் தனித்தனியே தறாவீஹ் தொழுது கொண்டிருந்ததைக் கண்டு, இந்த மக்கள் அனைவரையும் ஒரே இமாம் தலைவரின்கீழ் ஒன்று சேர்த்தால் சிறப்பாயிருக்குமென்று கூறிவிட்டு தறாவீஹ் தொழுகையை உபையிப்னு கஃப் (றழி) அவர்களின் தலைமையில் கூட்டாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார்கள். ஜமாஅத் கூட்டாகத் தறாவீஹ் தொழுதுகொண்டிருந்ததைக் கண்டு நிஃமதில்பித்அது ஹாதிஹீஇது நல்ல பித்அத் என்று கூறினார்கள்.
ஆதாரம் – புஹாரீ,மிஷ்காத் பக்கம் – 115
அறிவிப்பு – அப்துர்றஹ்மான் இப்னு அப்தில்காதிரீ
ஹழ்றத் உமர் (றழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மிக நெருங்கிய தோழர். குலபாஉர்றாஷிதீன் நல்வழி பெற்ற நான்கு கலீபாக்களிலும் ஒருவர். இவர்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் செய்யப்படாத ஒன்றை அவர்களின் மறைவின் பின் செய்துள்ளார்கள். இவர்கள் செய்த இச்செயல் பித்அத் என்பதில் சந்தேகமில்லை. நிஃமத்தில் பித்அத்து ஹாதிஹீ என்று அவர்கள் சொன்ன வசனம் கொண்டு அவர்களே தான் செய்தது பித்அத் என்பதை ஏற்றுக் கொண்டார்கள். அத்தோடு நிஃமத் என்று அவர்கள் சொன்ன சொல் கொண்டு பித்அத்தில் நல்லதும் உண்டு என்ற கருத்தையும் அவர்களே சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
வஹ்ஹாபிகள் சொல்வது போல் பித்அத் எல்லாம் வழிகேடாயும், வழிகேட்டை செய்தவர்கள் வழிகேடர்களாயும் நரக வாதிகளாயுமிருந்தால் ஹழ்றத் உமர் (றழி) யார்? அவர்கள் வழி கேடரா? நரக வாதியா? வஹ்ஹாபிகள் பகிரங்கமாக பதில் தர வேண்டும்.
ஹதீது – நபிமொழி கலை மேதைகளான ஆறு இமாம்களும் நபி(ஸல்) அவர்களின் நிறை மொழிகளைத் தொகுத்து நூல்கள் எழுதினார்கள். நபி மொழிகளை ஆராய்ந்து ஸஹீஹ், ழயீப், ஹஸன், மவ்ழுஉ என்றெல்லாம் வகுத்தார்கள். இவர்கள் செய்த இந்த வேலையும் பித்அத் ஆகும்.
சட்டக்கலை மேதைகளான நான்கு இமாம்களும் திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் ஆராய்ந்து சட்டக்கலையில் நூல்கள் எழுதினார்கள். ஹலால், ஹராம், ஸுன்னத், மக்றூஹ் என்றெல்லாம் சட்டங்கள் வகுத்தார்கள். இவர்கள் செய்த இந்த வேலையும் பித்அத் ஆகும்.
தரீக்கஹ்களை ஸ்தாபித்த குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றழி), அபுல்ஹஸன் அஷ்ஷாதுலீ (றழி), ஸெய்யித் அஹ்மத் கபீர் ரிபாயீ (றழி), ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழி) ஆகியோரும் தரீக்கஹ்களை ஸ்தாபித்து அதில் பல்வேறு திக்ர்களையும் அமைத்தார்கள். இவர்கள் செய்த இந்த வேலையும் பித்அத் ஆகும்.
மேற்கொண்ட இமாம்களும், மகான்களும் செய்தவை யாவும் பித்அத் என்பதில் சந்தேகமில்லை. வஹ்ஹாபிகள் சொல்வது போல் நபீ மொழியில் வந்துள்ளது குறித்த வசனத்துக்கு நேரடிப்பொருள் கொண்டு பித்அத் எல்லாம் வழிகேடென்று வைத்துக்கொண்டால் மேற்கொண்ட இமாம்களும், மகான்களும் வழிகேட்டைச் செய்த வழிகேடர்களென்றும் நரகவாதிகளென்றும் கொள்ளவேண்டிவரும். வஹ்ஹாபிகள் இதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
வஹ்ஹாபிகள் சொல்வதுபோல் பித்அத் எல்லாம் வழிகேடன்று கொண்டால் இன்று உலகில் வாழும் முஸ்லிம்களில் பித்அத் செய்யாதவர் எவருமிக்க முடியாது.
குர்ஆன் பாடசாலை, அறபுக் கல்லுரி கட்டுவதும், மௌலவீ பட்டமளிப்பு விழா நடத்துவதும், மௌலவீ மார்களுக்கு தராதரப்பத்திரம் வழங்குவதும், அரசியல் தலைவர்களுக்கு மாலை சூடி அவர்களை கௌரவிப்பதும், நூல்கள் அச்சிடுவதும், வீடுவீடாசென்று ஹஜ் வணக்கத்திற்காக மக்கஹ் செல்ல ஆட்கள் பிடிப்பதும், தேர்தலின்போது வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிப்பதும், பிறஷ் கொண்டு பல்துலக்குவதும், பற்பசை பாவிப்பதும், இன்னுமிவை போன்ற அநேக விடயங்களும் பித்அத் என்பதில் சந்தேகமில்லை. வஹ்ஹாபிகள் சொல்வதுபோல் பித்அத் எல்லாம் வழிகேடன்று வைத்துக்கொண்டால் மேற்கொண்ட விடயங்களைச் செய்பவர்கள் அனைவரும் வழிகேடர்களும், நரகவாதிகளுமேயாவர்.
எனவே “பித்அத் எல்லாம் வழிகேடு”என்ற இந்த வசனத்திற்கு“ கெட்ட பித்அத் எல்லாம் வழிகேடு” என்று வலிந்துரை கொள்ளல்வேண்டும். இதை அறபு மொழியிற் சொல்வதாயின் ‘குல்லுபித் அதின் ஸெய்யிஅதின் ழலாலதுன் ” என்று சொல்ல வேண்டும். இங்கு “செய்யிஅதுன்” என்ற ஒரு சொல்லை வலிந்துரையாகக் கொள்ளவேண்டும். இவ்வாறு வலிந்துரை கொண்டால் கெட்ட பித்அத் மாத்திரமே வழிகேடு மற்றபித்அத் வழிகேடல்ல என்ற சரியான கருத்து வரும்.
கெட்ட “பித்அத்” என்றால் நபீ (ஸல்) அவர்களின் காலத்தில் செய்யப்படாத அவர்களின் மறைவுக்குபின் செய்யப்பட்ட திருக்குர்ஆனுக்கு அல்லது நபீ மொழிக்கு முரணான ஒருசெயலாகும். உதாரணமாக சினிமாத்தியேட்டர் – படமாளிகை கட்டுதல், பார் மதுபான விற்பனை நிலையம் கட்டுதல் , லட்ஞ்ம் பெறுதல் போன்றவை “பித்அத்” ஆக இருப்பதுடன் திருக்குர்ஆனுக்கும், நபீமொழிக்கும் முரணானவையாயிருப்பதால் இவை “பித்அதுன் ஸெய்யிஅதுன்” கெட்ட “பித்அத் ” ஹராமான பித்அத்” என்று சொல்லப்படும்.
“பித்அத்” ஐந்து வகைப்படும் என்ற விபரமும், நபீ மொழியில் வந்துள்ள மேற்கண்ட வசனத்துக்கு “ஸெய்யிதுன்” என்ற ஒரு சொல்லை வலிந்துரையாகக்கொள்வதற்கு “ உஸூல்” அடிப்படை என்ன என்ற விபரமும் இது தொடர்பாக நான் எழுதிவெளியுடவுள்ள நூலில் விரிவாக இடம்பெறும் விரிவையஞ்சி இங்கு எழுதவில்லை.
எனவே நபீ மொழியில் வந்துள்ள பித்அத் எல்லாம் வழிகேடு என்ற வசனத்துக்கு நேரடிப் பொருள் கொண்டு உலக முஸ்லிம்கள் அனைவரையும் நரகவாதிகளாக்கிவிட்டாமல் மேற்கண்டவாறு வலிந்துரை கொண்டு கெட்ட பித்அத் மட்டும் வழிகேடு என்று முடிவு செய்தல் வேண்டும்.
இந்த அடிப்படையில் பாங்கு சொல்லுமுன் “ஸலவாத்” சொல்லுதல் “பித்அத்” என்ற பெயருக்குப் பொருத்தமானதாயிருந்தாலும் அது திருக்குர்ஆனுக்கும், நபீ மொழிக்கும் முரணில்லாத ‘பித்அதுன்ஹஸனதுன்’ நல்ல “பித்அத்” என்று கருத்துக் கொள்ளுதல் வேண்டும்.
பாங்கு சொல்லுமுன் “ஸலவாத்” சொல்லுதல் இஸ்லாத்தின் அனுமதிக்கப்பட்ட விடயம் என்பதற்கு ஆதாரம் தேடி அலையவேண்டியதில்லை. திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறியுள்ள ஒரேயொரு வசனம் மட்டும் அது கூடாதென்று ஊழையிடும் வஹ்ஹாபிகளின் வாலை நறுக்கப்போதும்.
அல்லாஹ்வும், அவனின் மலக்குகளும் நபீ (ஸல்) அவர்கள் மீது “ஸலவாத்” சொல்கிறார்கள். விசுவாசிகளே! நீங்களும் அந்த நபீ மீது ஸலவாத் சொல்லுங்கள். இன்னும் ஸலாமும் சொல்லுங்கள்.
– திருக்குர்ஆன் –
மேற்கொண்ட திருவசனத்தில் வந்துள்ள “ ஸல்லூ”என்ற சொல்லும், “ஸல்லிமூ” என்ற சொல்லும் “ அம்றுன் முத்லகுன்” பொதுவான ஏவல் வினைச் சொற்களாகும். இச்சொற்கள் நபீ (ஸல்) அவரகள் மீது எந்த நேரம் வேண்டுமாயினும் ஸலவாத், ஸலாம் சொல்லலாம் என்ற கருத்தைத் தரும் சொற்களேயன்றி ஒருநேரம் குறிப்பிட்டு இந்தநேரம் சொல்லுங்கள் இந்த நேரம் சொல்லாதீர்கள் என்ற கருத்தை ஒருபோதும் தரமாட்டா.
நபீ (ஸல்) அவர்களின் மீது ஸலவாத் ஸலாம் சொல்லுதல் தொடர்பாக திருக்குர்ஆன் வசனங்களும், நபீமொழிகளும் பொதுவாக வந்துள்ளனவேயன்றி ஒருநேரம் குறிப்பிட்டு இந்நேரம் சொல்லுங்கள் இந்நேரம் சொல்லாதீர்கள் என்று வரவில்லை.
எனவே நபீ (ஸல்) அவர்கள் மீது ஸலவாத், ஸலாம் சொல்லவிரும்பும் ஒரு முஸ்லிம் எந்நேரம் சொல்லவிரும்பினாலும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் மலசலகூடம் போன்ற அசுத்தமான இடங்களில் மட்டும் சொல்வது தடுக்கப்பட்டுள்ளது. ஒரு முஸ்லிம் எந்நேரமும் ஸலவாத், ஸலாம் சொல்லலாம் என்தற்கும், பாங்குசொல்லு முன்னும் அதன் பின்னும் சொல்லலாம் என்பதற்கு மேற்கண்ட திருவசனம்மறுக்கமுடியாத ஆதரமாகும்.
ஒருவன் தனது வீட்டில் நுழையும் போது ஸலவாத் சொல்லவிரும்பினால் அவன் சொல்லிக்கொள்ளலாம். ஒருவன் சாப்பிடு முன் ஸலவாத் சொல்ல விரும்பினால் சொல்லிக்கொள்ளலாம். ஒருவன் உறங்குமுன் ஸலவாத் சொல்லவிரும்பினால் அவன் சொல்லிக்கொள்ளலாம். இதற்காக உலமாசபையிடம் பத்வா கேட்கவேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு செய்வதை மார்க்கத்தைச் சரியாபுரிந்த, நபீ(ஸல்) அவர்களைத் தனது உயிரினும் மேலாக மதித்த எந்த ஓர் ஆலிமும் மறுக்கமாட்டார். நபீ(ஸல்) அவர்களின் அன்பை இழந்த வஹ்ஹாபிகள் தவிர.
பனுன் நஜ்ஜார் குடும்பத்தைச் சேர்நத ஒரு பெண் கூறுகின்றார் “மஸ்ஜிதுன் நபவி” மதீனஹ் பள்ளிவாயலின் பக்கத்தில் இருந்த வீடுகளின் எனது வீடு மிக உயர்ந்த வீடாக இருந்தது. பிலால் (றழி) அவர்கள் அந்தவீட்டில் நின்று கொண்டே “ஸுபஹ்” தொழுகைக்கான பாங்கு சொல்வார். அதற்காக அவர் “ஸஹர்” நேரம் வந்து “ஸுப்ஹ்” நேரம் வரும்வரை அந்த வீட்டில் இருப்பார். “ஸுப்ஹ்” நேரம் வந்து விட்டால் கையை அசைத்தவண்ணம் விரைவாக நடந்து பாங்கு சொல்லுமுன் ‘ அல்லாஹும்ம இன்னீ அஹ்மதுக வஅஸ்தயீனுக அலா குறைஷின் அன்யுகீமூ தீனக” என்ற வசனங்களைக் கூறுவார். அதன் பிறகுதான் பாங்கு சொல்வார். ஓர் இரவேனும் இந்த வசனங்களை அவர் சொல்லாமல் பாங்கு சொன்னதேயில்லை.
ஆதாரம்-அபூதாஊத்,பாகம்– 01, பக்கம் – 143
நபீமொழி இலக்கம் – 519
மேற்கொண்ட “ஹதீது” நபீமொழி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆறு கிரந்தங்களில் ஒன்றான அபூதாஊத் என்ற நூலில் வந்துள்ளது.
பிலால் (றழி) அவர்கள் நபீ (ஸல்) அவர்களின் விஷேட“ முஅத்தின்” பாங்கு சொல்லும் ஒருவரார். அவர் பாங்கு சொல்லுமுன் மேற்கொண்ட வசனங்களைச் சொன்ன பிறகுதான் பாங்கு சொல்வார். அவர் இவ்வாறு செய்ததை நபீ (ஸல்) அவரகள் தடுக்கவுமில்லை. நபீ தோழர்களில் எவரும் தடுக்கவும்மில்லை.பாங்குசொல்லுமுன் மேற்கண்ட வசனங்கள் சொல்வது இஸ்லாமில் அனுமதிக்கப்படாதவையாயிருந்தால் பிலால் (றழி) அவர்கள் ஒரு போதும் சொல்லியிருக்கமாட்டார்கள். ஒரு சமயம் அவர் தெரியாமல் சொல்லியிருந்தால் கூட ஏனைய நபீ தோழர்களாவது அவரைத் தடுத்திருப்பார்கள். எனது தோழர்கள் நட்சத்திருங்கள் போன்றவர்கள். அவர்களின் எவரை நீங்கள் பின்பற்றினாலும் வெற்றிபெறுவீர்கள் என்ற நபீ மொழியின்படி பிலால் (றழி) அவர்கள் “பித்அத்” செய்த வழிகேடராகயிருக்கமுடியாது . அவர்களின் இச்செயலை முன்மாதிரியாகக் கொண்டு பாங்கு சொல்லுமுன் அவர் சொன்ன அதே வசனங்களைச் சொல்வதும் பிழையாகாது.
பாங்கு சொல்லுமுன் ஸலவாத் சொல்லவும் கூடாது. வேறொன்றும் சொல்லவும் கூடாதென்று கூறும் வஹ்ஹாபிகள் மேற்கொண்ட இந்த நபீமொழிக்கு பதில்தருவார்களா? அல்லது பிலால் (றழி) அவரகளையும் “பித்அத்” செய்த வழிகேடன் என்றும், நரகவாதி என்றும் சொல்வார்களா?
பிலால் (றழி) அவர்கள் பாங்கு சொல்லுமுன் சொன்ன வசனங்களின் பொருள் பின்வருமாறு. (இறைவா! நான் உன்னைப் புகழ்கின்றேன். குறைஷிகள் உனது மார்கத்தை நிலைநாட்டுவதற்காக உன்னிடம் உதவிதேடுகின்றேன்.)
பிலால் (றழி) அவர்களின் இந்தச் செயலின் மூலம் பாங்கு சொல்லுமுன் வேறு வசனங்கள் சொல்லலாம் என்பது தெளிவாகிறது. வேறு வசனங்களில் ஸலவாத், ஸலாம் போன்று மிகச் சிறந்த வசனம் வேறொன்றும் இல்லை.
பாங்கு சொன்னபின் ஸலவாத் சொல்லுதல்
நமது இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில் வஹ்ஹாபிஸ எயிட்ஸ் பரவுமுன் பாங்கு சொல்வதற்கு முன்னர் மட்டும் ஸலவாத், ஸலாம் சொல்லும் வழக்கம் இருந்துவந்தது. பாங்கு சொன்னபின் ஸலவாத், ஸலாம் சொல்லும் வழக்கம் இருந்ததில்லை. ஆயினும் இறாக், ஈரான், ஜோர்தான், சிரியா போன்ற நாடுகளில் இவ்வழக்கம் இன்றுவரை இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. நான் இந்நாட்டுகளில் இருந்த நேரம் இதை என் காதால் கேட்டுள்ளேன்.
பாங்குசொன்னபின் “ஸலவாத்”சொல்வதற்கு சரியான நபீமொழிகளில் ஆதாரம் உள்ளன. அவற்றின் ஒன்றைமட்டும் இங்கு எழுதுகிறேன்.
“ முஅத்தின் ” பாங்கு சொல்வதை நீங்கள் கேட்டால் அவர் சொல்வதுபோல் நீங்களும் சொல்லுங்கள். பின்னர் என்மீது “ஸலவாத் ” சொல்லுங்கள். ( நபீமொழியை கடைசிவரை பார்க்கவும்.)
ஆதாரம் – ஷர்ஹு முஸ்லிம், பாகம் – 04, பக்கம் – 85
அறிவிப்பு – அம்றுப்னுல் ஆஸ் (றழி)
ஆதாரம் – அபூதாஊத்,பாகம் – 01, பக்கம் – 144
அறிவிப்பு – அம்றுப்னுல் ஆஸ் (றழி)
“முஅத்தின்” பாங்கு சொல்லும் போது அதைகேட்பார் அவர் சொல்வது போல் சொல்லவேண்டும். பின்னர் நபீஸல் அவர்கள் மீது “ஸலவாத்” சொல்லவேண்டும். இந்த நபீ மொழியில் வந்துள்ள “ஸல்லூ” ஸலவாத் சொல்லுங்கள் என்ற ஏவல் வினைச்சொல் பாங்கு சொன்ன முஅத்தினையும்,அதைக் கேட்டோரையும் எடுத்துக் கொள்ளக்கூடிய பொதுவான சொல்லாயிருப்பதால் பாங்கு சத்தத்தை கேட்டவர்கள் ஸலவாத் சொல்லி பாங்கு ‘துஆ’ஓதுவது ஸுன்னத்”ஆக இருப்பது போல் முஅத்தின் – பாங்கு சொன்னவனும் ஸலவாத் சொல்லி ‘ துஆ’ ஓதுவது ‘ஸுன்னத்’ ஆனதே”. “முஅத்தின்” பாங்கு சொன்னதோடு அவனும் அதைக் கேட்டவனேயாவான். ஸலவாத் சொல்வது அவனுக்கும் ஸுன்னத் ஆனதே.
சுருக்கம்
பாங்கு சொல்லுமுன் ஸலவாத்,ஸலாம் சொல்வதும், அல்லது மக்களுக்குப் பயன்தரக்கூடிய வேறு வசனங்கள் சொல்வதும், பாங்கு சொன்னபின் “ஸலவாத்” சொல்வதும் எந்தவகையிலும் வழிகேடாகவோ, கெட்ட ‘பித்அத்’ ஆகவோமாட்டாது. இவை “பித்அதுன்ஹஸனதுன்” ”நல்ல “பித்அத்” என்ற வகையையேசேரும். நல்ல “பித்அத்” செய்வதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது. அதைச் செய்பவனுக்கு நண்மையுண்டு என்று நபீமொழி கூறுகின்றது. அதைத் தடுப்பது நன்மைதரும் செயலைச் தடுப்பதாகும் என்று நபீமொழி கூறுகின்றது.
பாங்கு சொல்லுமுன்னும் அதன்பின்னும்
ஸலவாத் சொல்வோம்.
அல்ஹம்துலில்லாஹ்.
பாங்கு சொல்லுமுன்ன்னும், இகாமத் சொல்லுமுன்னும் ஸலவாத், ஸலாம் சொல்வது தொடர்பாக ஜாமிஅதுல் பலாஹ் முன்னாள் அதிபர் அல்ஹாஜ் அல்கதீப் மர்ஹூம் அப்துல் கபூர் ஆலிம் அவர்கள் 19-09-1985 அன்று எழுதிய பத்வாவை நாங்கள் பராட்டுகின்றோம். அவரின் ஆத்மா சாந்திக்காக துஆ செய்கின்றோம். அவர்களின் பத்வா ஸுன்னத்துவல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் அமைந்திருந்தது பாராட்டதக்கது.