அறிவுக்கடல் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் அல் அல்லாமா முஹம்மத் இப்னு அபீஹாமித் அல் கஸாலீ (றழி) அவர்களின் இஹ்யாஉ உலூமித்தீன் என்ற நூலிலிருந்து
தமிழில் : மௌலவீ MM அப்துல் மஜீத் ’றப்பானீ’ அவர்கள்
(விரிவுரையாளர் : றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்.)
தொடர் 01.
بسم الله الرحمن الرحيم
நோன்பின் இரகசியங்கள் என்ற தலைப்பிலிருந்து சில பகுதிகள்.
பொறுமை என்பது ஈமானின் அரைவாசியாகும். நோன்பு என்பது பொறுமையின் அரைவாசியாகும் என்ற நபீ (ஸல்-அம்) அவர்களின் சொற்படி நோன்பு என்பது ஈமானின் நான்கில் ஒரு பகுதியாகும்.
நபீ (ஸல்-அம்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
எனது உயிர் யாருடைய கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை கஸ்தூரி வாடையை விட இறைவனிடத்தில் மிக மணமானது.
அல்லாஹுத்தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.
அவன் (நோன்பாளி) எனக்காகவே தனது மனோ இச்சையையும், தனது உணவையும், தனது குடிப்பையும் விடுகின்றான். நோன்பு என்பது எனக்குரியது அதைக்கொண்டு நானே கூலி வழங்குகிறேன். அல்லது நானே கூலியாக வழங்கப்படுகிறேன்.
நபீ (ஸல்-அம்) அவர்கள் இன்னும் சொன்னார்கள்
சுவர்க்கத்துக்கு ஒரு கதவு உண்டு. அதற்கு அர்றையான் என்று சொல்லப்படும். நோன்பாளிகள் மாத்திரமே அந்தக் கதவினால் நுழைவர்.
நபீ (ஸல்-அம்) அவர்கள் இன்னும் சொன்னார்கள்
நோன்பாளிக்கு இரண்டு சந்தோசங்கள் உள்ளன. நோன்பு திறக்கும் போது ஒரு சந்தோசம். தனது இறைவனை சந்திக்கும் போது ஒரு சந்தோசம்.
நபீ (ஸல்-அம்) அவர்கள் இன்னும் சொன்னார்கள்
ஒவ்வொரு விடயத்துக்கும் கதவு உண்டு வணக்கத்தின் கதவு நோன்பாகும்.
நபீ (ஸல்-அம்) அவர்கள் இன்னும் சொன்னார்கள்
நோன்பாளியின் உறக்கம் வணக்கம்.
நபீ (ஸல்-அம்) அவர்கள் கூறியதாக அபூஹுறைறா (றழி) அவர்கள் கூறினார்கள்.
றமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்பபடுகின்றன. நரகத்தின் கதவுகள் மூடப்படுகின்றன. ஷெய்த்தான்கள் விலங்கிலிடப்படுகின்றார்கள். நன்மையைத் தேடுபவனே விரைந்து வா, தீமையைத் தேடுபவனே நீ சுருக்கிக்கொள் என்று ஒருவன் அழைப்பான்.
நிச்சயமாக வணக்கசாலியான இளைஞனைக் கொண்டு தனது அமரர்களிடம் அல்லாஹ் பெருமை பேசுகின்றான். எனக்காக தனது இச்சையை விட்ட வாலிபனே! எனக்காக தனது வாலிபத்தை செலவு செய்தவனே! நீ எனது மலக்குகளில் ஒருவர் போன்ற எனது அடிமை என்று அல்லாஹ் கூறுகின்றான். என்று நபீ (ஸல்-அம்) அவர்கள் கூறினார்கள்.
எனது அமரர்களே! எனது அடிமையைப் பாருங்கள். தனது இச்சையையும், தனது இன்பத்தையும், தனது உணவையும், தனது பானத்தையும் எனக்காகவே விட்டான் என்று அல்லாஹுத்தஆலா கூறுவதாக நோன்பாளி பற்றி நபீ (ஸல்-அம்) அவர்கள் கூறினார்கள்.
நோன்பின் வாஜிபுகள் 06.
- றமழான் மாதத்தின் முதலாவது தினத்தை கண்காணித்தல். அது பிறையைக் காண்பது கொண்டாகும். பிறை தென்படவில்லை எனில் ஷஃபான் மாதத்தை 30 தினங்களாக பூரணப்படுத்த வேண்டும். நாங்கள் காணுதல் என்று கூறுவது அறிவதையாகும். நீதியுள்ள ஒருவன் சொல்வது கொண்டு அது உண்டாகும். ஆனால் ஷவ்வால் மாதத்தின் பிறை நீதியான இருவர் சொல்வது கொண்டே தரிபடும்.
நீதியுள்ள ஒருவன் பிறை தென்பட்டதாகக் கூறுகின்றான். அவனுடைய சொல்லை இவன் நம்புகின்றான். இவனுடைய எண்ணத்தில் அவன் சொல்வது உண்மை என்ற எண்ணம் மிகைக்குமானால் இவன் மீது நோன்பு நோற்பது அவசியமாகிறது. ஊரின் காழீ அதைக்கொண்டு தீர்ப்புச் செய்யவில்லையாயினும் சரியே.
- ஒவ்வொரு இரவும் உறுதியான குறிப்பாக்கப்பட்ட நிய்யத் வைப்பது அவசியமாகும். றமழான் மாதம் முழுவதும் தான் நோன்பு நோற்பதாக ஒரே தடவையில் ஒருவன் நிய்யத் வைத்தால் அது போதாது. இதையே ஒவ்வொரு இரவும் நிய்யத் வைக்கவேண்டும் என்று நாங்கள் கூறினோம்.
பகல் நேரத்தில் ஒருவன் நிய்யத் வைத்தால் றமழானுடைய நோன்பின் கூலியோ, வேறு பர்ழான நோன்பின் கூலியோ இவனுக்குக் கிடைக்காது. மாறாக அது சுன்னத்தான நோன்பாக மாறிவிடும்.
பொதுவாக நோன்பை அல்லது பர்ழை அவன் நிய்யத் வைத்தால் அவனுக்கு பர்ழுடைய கூலி கிடைக்காது. மாறாக றமழான் மாதம் நோன்பு நோற்பதை அல்லாஹ்வுக்காக பர்ழை நிறைவேற்றுவதை அவன் நிய்யத் வைக்க வேண்டும்.
நாளை றமழானாக இருந்தால் நாளை நோன்பு நோற்பதாக ஒருவன் ஷக்குடைய (சந்தேகத்துக்குரிய) இரவில் நிய்யத் வைத்தால் அவனுக்கு அதன் கூலி கிடைக்காது. ஏனெனில் அது உறுதியானது அல்ல.
- நோன்பை நினைவு கூர்ந்த நிலையில் மனமுரண்டாக உள்ளே ஓர் வஸ்த்துவை சேர்ப்பதை விட்டும் தடுத்திருத்தல்.
ஒருவன் சாப்பிடுவது கொண்டும், குடிப்பது கொண்டும், மூக்கினுள் விடப்படக் கூடிய மருந்தைக் கொண்டும் அவனுடைய நோன்பு வீணாகிவிடும்.
- உடலுறவில் ஈடுபடுவதை விட்டும் தடுத்திருத்தல். ஒருவன் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில் உடலுறவில் ஈடுபட்டால் அவனுடைய நோன்பு முறியாது.
இன்னும் இரவில் அவன் உடலுறவில் ஈடுபட்டால் அல்லது கனவில் அவனுக்கு நுத்பஹ் (இந்திரியம்) வெளியானால் அவனுடைய நோன்பு முறியாது.
ஒருவன் தனது மனைவியுடன் கலந்த நிலையில் ஃபஜ்ர் உதயமாகிவிட்டால் உடனே அவன் அதிலிருந்து விலகிவிட்டால் அவனுடைய நோன்பு சரியானதாக ஆகிவிடும். மாறாக தொடர்ந்தும் உடலுறவில் ஈடுபட்டால் அவனுடைய நோன்பு வீணாகிவிடும். அவன் தெண்டகுற்றம் கொடுப்பதும் அவனுக்கு அவசியமாகிவிடும்.
- சுய இன்பம் பெறுவதை விட்டும் தடுத்திருத்தல். ஒருவன் தான் விரும்பிய நிலையில் உடலுறவில் ஈடுபடுவது கொண்டோ அல்லது அதில் ஈடுபடாமலோ நுத்பஹ்வை வெளிப்படுத்தினால் அது அவனுடைய நோன்பை முறித்துவிடும்.
தனது மனைவியை முத்தமிடுவது கொண்டோ அல்லது அவளில் சாய்வது கொண்டோ நோன்பு முறியாது. ஆனால் அதன் மூலம் இவனுக்கு நுத்பஹ் வெளியாகக் கூடாது.
ஒருவன் முத்தமிடுவதை பற்றி பரவாயில்லை ஆனால் அதை விடுவதே மிகச்சிறந்தது. தான் முத்தமிடுவதால் தனக்கு நுத்பஹ் வெளியாகிவிடும் என்பதை பயந்தவனாக இவன் முத்தமிட்டால், நுத்பஹ்வும் இவனுக்கு வந்துவிட்டால் இவன் திறக்குறைச்சல் செய்த காரணத்தினால் இவனுடைய நோன்பு முறிந்து விடும்.
- வாந்தியை வெளிப்படுத்துவதை விட்டும் தடுத்திருத்தல். ஒருவன் தானாக வாந்தியை
வெளிப்படுத்துவது நோன்பை முறித்து விடும். ஆனால் அவனை அறியாமல் அவனுக்கு வாந்தி வந்துவிட்டால்
அவனுடைய நோன்பு முறியாது.
ஒருவன் தனது தொண்டையில் அல்லது தனது நெஞ்சில் இருக்கின்ற
சளியை விழுங்கிவிட்டால் அவனுடைய நோன்பு முறிந்துவிடாது. இது தவிர்க்க முடியாத ஒன்று
என்ற சலுகையின் அடிப்படையிலாகும். ஆனால் தனது வாயினுள் சளி வந்த பின் அதை அவன் விழுங்கினால்
அவனுடைய நோன்பு முறிந்துவிடும்.