தொடர் 08…
எழுதுபவர் –
கவித்திலகம்,
மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ
நபிகளின் திருக்காட்சி
“அல்ஜாமிஅதுல் இஸ்லாமிய்யா ” மதீனஹ் வளாகத்தின் இமாறதுஸ்ஸுபைஃ மாணவர் விடுதியில் துயின்ற பேரறிஞர் மிஸ்பாஹீ நாயகம் திடீரென்று எழுந்து மச்சான் ஹஸ்புல்லாஹ் எழும்பு என்று நித்திரையிலிருந்த தமது நண்பனை அழைத்தார்கள். நண்பனின் அழைப்பைக் கேட்டு தீடீரென விழித்த நண்பன் ஹஸ்புல்லாஹ் என்ன மச்சான் றஊப்… என்று கேட்டவராகவே அருகில் வந்தார். அவரை அருகில் அமர்த்திய அறிஞர் அவருக்கு தான் கண்ட அருள் நிறைந்த அந்த அற்புதக் கனவை விளக்கினார்கள்.
எங்குமே பாலைவனக் காட்சி
மலைகள் போன்ற மண்குவியல்கள்
சூடுமில்லா குளிருமில்லா காற்று உடலைத் தழுவியது .
மண்மலைகளிடையே நான் நின்று கொண்டிருந்தேன்.
எங்கோயிருந்து மழலைகளின் பைத்தோசையொன்று
காற்றோடு கலந்து காதில் கேட்டுக் கொண்டிருந்தது.
அது எனக்குப் பழக்கப்பட்ட இசையாகவும் இருந்தது. மீண்டும் அந்த பைத்தோசையைக் காற்று காதில் போட்டது. ஆம், அது நபிகள் கோமான் முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்றத் வந்த போது மதீனத்து மக்கள் கூடி நின்று நபீ பெருமானை வரவேற்றுப் பாடிய அதே பாடல் தான்.
“தலஅல் பத்று அலைனா
மின் தனிய்யாத்தில் விதாஇ
வஜபஷ்ஷுக்று அலைனா
மாதஆ லில்லாஹி தாஇ”
இப்பாடலைக் கேட்டதும் எம்மனதில் நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்றத் நிகழ்ச்சி நினைவில் மலர்ந்தது. அதனால் நபி கோமான் அவர்கள் இங்கிருக்க வேண்டும் என்ற எண்ணம் இதயத்தில் உதயம் பெற்றது . மலைபோல் உயர்ந்திருந்த மணல் மலைகளின் மேலேறியிறங்கி பாடல் வந்த திசையைத் தேடினேன்.
பாடலிசை தற்போது என் செவிகளுக்கு மிகத் தெளிவாகவும் அண்மித்ததாகவும் கேட்டது. ஆனால் பாடுவோரைத்தான் காணவில்லை.
இங்கு நபிகள் நாயகம் இருக்கிறார்கள் என்ற எண்ணம் உறுதிபெற என் ஆவல் அதிகரித்தது. மீண்டும் மலைகளில் ஏறி இறங்கி ஓடினேன். அப்பொழுது பாடலிசை மிக அண்மித்தது. அத்திசையால் விரைந்தோடினேன்.
அங்கே நான் கண்ட காட்சி
இறைவனே அதற்குச் சாட்சி
வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.
அங்கே அண்ணல் கோமான் (ஸல்) தங்கள் பொற்கன்னத்தில் மரகதக் கரத்தை வைத்து சாய்ந்து படுத்தவண்ணமிருந்தார்கள்.
செக்கச்சிவந்த சிறுவர் சிறுமியறும் செம்பிறை வதனம் கொண்ட மற்றோறும் செம்மல் நபியவர்களின் முன்னே நின்று பாடலிசைத்துக் கொண்டிருந்தார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களை நானும் நோக்கினேன். நபி அவர்களும் என்னை நோக்கினார்கள். அவ்வாறே தான் கனவு கலைந்தது. கனவை நண்பரிடம் சொன்ன அறிஞர் மிஸ்பாஹி அவர்கள் காணக்கிடைக்காத முழுமதியை , சம்பூரணோதயத்தைக் கண்ட களிப்பில் ஆனந்தக் கண்ணீருடன் காணப்பட்டார்கள். தனக்குக்கிடைத்த நற்பாக்கியத்தை நினைத்து அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள் இருவரிடையே சில வினாடிகள் மௌனம் நிலவியது. மௌனத்தைக் கலைத்த நண்பர் ஹஸ்புல்லாஹ் ( மச்சான் றஊப், நீ சத்தியமாக றஸுலுல்லாஹ்வையே கண்டாய் நீ நபிகட்கரசரையே கண்டாய். நீ நபிகள் கோமானையே கண்டாய் நீ பாக்கியவான். நீபாக்கியவான் என்று வாழ்த்துக் கூறிய நண்பர் அறிஞர் மிஸ்பாஹி அவர்களை முஸாபஹஹ், முஆனகஹ் செய்து அருள் பெற்றார்.
مَن رآني فى المنام فقد رآني
மன்றஆனீ பில்மனாமி பகத் றஆனீ
என்னைக் கனவில் கண்டவர் என்னையே கண்டார் என்றும்
فا ن الشيطان لايتمثل فى صورتي
பஇன்னஷ் ஷெய்த்தான லாயதமத்தலு பீஸுறதீ
நிச்சயமாக ஷெய்தான் எனதுருவத்தில் தோன்றமாட்டான்
என்றும் நபிகள் நவின்ற பொன் மொழி அறிஞரின் நினைவுக்கு வந்தது.
நபிகளைக் காண்பது சாதாரண வணக்கமல்ல
நபி (ஸல்) அவர்களை கனவில் காண்பது சாதாரண விடயமல்ல எல்லோரும் காணவுமாட்டார்கள் அதற்கு நிகரான வணக்கம் எதுவும் இல்லை அதே போன்று ஒரு முஃமின் நபிகளை நேரில் காண்பதும் அவர்களை கண்டவரைக் காண்பதுமாகும்.
அவர்களின் திருமுகக் காட்சிக்கு நிகரான காட்சி எதுவுமில்லை சொர்க்கமும் அதிலுள்ளவையும் உலகவும் அதிலுள்ளவையும் அதற்கு நிகராகாது.
அதேபோல் நாம் ஆயிரம் வருடம் வாழ்ந்து கோடிக்கணக்கான அமல்களைச் செய்தாலும் அவை அக்காட்சிக்கு நிகராகாது.
இதை சுருக்கமாக விளங்குவதாயின் பின்வரும் உதாரணத்தின் மூலம் விளங்க முடியும்.
நபி ஸல் அவர்களின் காலத்தில் காபிராக இருந்து நபிகளுக்கெதிராகப் போர் செய்த ஒருவர் நபிகளிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றார். இஸ்லாத்தை ஏற்ற அவர் பத்து நிமிடத்தில் மௌத்தாகி விட்டார். இவர் சஹாபீ என்ற பெயரைப் பெறுகிறார்.
இவர் செய்த அமல் இரண்டு
ஒன்று இஸ்லாத்தை ஏற்று திருக்கலிமாவை மொழிந்து ஈமான் கொண்டது.
இரண்டு இவர் நபி ஸல் அவர்களின் திருமுகத்தைப் பார்த்தது.
இவ்விரண்டு அமல்களைத் தவிர இவர் எந்த அமலும் செய்ய வில்லை.
மற்றவர் நபிகளின் காலத்தின் பின் ஒரு முஸ்லிமுக்குப் பிறந்து முஸ்லிமாக வாழ்ந்து இடைவிடாத வணக்கத்தாலும் இறையருளாலும் விலாயத் என்ற பட்டத்தை பெற்றவர் நூறு வருடங்கள் வாழ்ந்து மௌத்தை அடைந்தார்.
ஒருவர் காபிறாக வாழ்ந்து நபிகளிடம் வந்து இஸ்லாத்தை ஏற்று நபிகளைக் கண்டு சஹாபியாகி இஸ்லாத்தில் பத்து நிமிடம் வாழ்ந்து மரணித்தவர்.
மற்றவர் நபிகளின் காலத்தின் பின் ஒரு முஸ்லிமுக்கு மகனாகப் பிறந்து இறை விலாயத்தைப் பெற்று நூறு வருடம் வாழ்ந்து மரணித்தவர்.
ஷரீஅதின் சட்டத்தில் இவ்விருவரில் யார் உயர்ந்தவர் என்று கேட்கப்பட்டால் நூறு வருடம் வாழ்ந்து விலாயத்தைப் பெற்று மரணித்தவர்தான் என்று சட்டம் சொல்லாது. பத்து நிமிடம் முஸ்லிமாகவும் சஹாபியாகவும் வாழ்ந்து மரணித்தவர் தான் என்று சட்டம் சொல்லும்.
அப்படியானால் நூறு வயது வாழ்ந்தவனை விட பத்து நிமிடம் வாழ்ந்த அந்த சஹாபி செய்த அமல் என்ன? எதனால் அவர் பதவியில் உயர்ந்தார்?
அந்த சஹாபி இவரைப் போல் நூறு வருடங்கள் வாழவுமில்லை ஆயிரக்கணக்கான நல்லமல்களைச் செய்யவுமில்லை.
அப்படியாயின் அவர் செய்த விசேட அமல் நபி ஸல் அவர்களை தன் தலைக் கண்களால் நேரடியாகக் கண்டதேயாகும்.
அந்த திருமுகத்தைப் பார்த்ததால் தான் அந்த விலாயத்தைப் பெற்ற மகானை விட அந்த சஹாபீ சரீஅத்தின் தரஜாவில் உயர்ந்தவரானார்.
இதே போல் தான் நபிகள் கோமான் முஹம்மத் ஸல் அவர்களைக் கனவில் கண்டவருக்கும் உயர்வான அந்தஸ்துண்டு அவர்களைக் கனவில் கண்டவருக்கும் காணாதவருக்கும் இடையில் நிறைய வேறு பாடுகளும் உள்ளன.
அவர்களைக் கனவில் கண்டவர் அவர்களையே காண்கிறார் என்றும் ஷெய்தான் அவர்களின் திருவுருவில் தோற்றமளிக்கான் என்றும் அவர்களே நமக்குச் சொல்லியுள்ளது அவர்களின் திருக்காட்சியின் மாண்பைக் காட்டுவதுடன் சிந்தனைக்கும் வித்திடுகிறது.
ஷெய்தான் பல உருவங்களை எடுத்து மக்களை வழி கேட்டில் சேர்ப்பான் ஒரு தோற்றத்தில் தோன்றி நான் இறைவன் என்றும் சொல்வான். ஆனால் நபிகளின் உருவில் அவன் தோன்ற மாட்டான். அவனால் தோன்றவும் முடியாது.
எனவே ஒருவர் கனவில் நபி ஸல் அவர்களைக் கனவு காண்கிறார். கனவில் தான் காண்பது நபிகளைத்தான் என்பது அவருக்கு ஏதோ ஒரு வகையில் தெரியவருகிறது. கண்ணை விழித்தார். அவர் கண்டது நபிகள் ஸல் அவர்களையே ஆகும். இதில் சந்தேகமில்லை.
நபி ஸல் அவர்களின் இளமைத் தோற்றம் முதுமைத் தோற்றம் , சிறு வயதுத் தோற்றம் இவற்றில் விளக்கங்கள் வித்தியாசப்படினும் நபிகளைக் கண்டவர் அவர்களையே காண்கிறார்.
எனவே நமது பேரறிஞர் மிஸ்பாஹி நாயகம் அவர்கள் நபிகள் ஸல் அவர்களை ஹிஜ்றத் கால தோற்றத்தில் கண்டு சுகம் பெற்றார்கள். அதனாற்றான் அவர்களும் எதிரிகளின் கொலைப்பயமுறுத்தலினால் தான் பிறந்த ஊரான காத்தான்குடியை விட்டும் ஹிஜ்றத் செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது என்று கருதுகின்றேன்.
இது நபிமாருக்கும் பெரியாருக்கும் ஏற்படும் சோதனைகளேயாகும். அதிக மகான்கள் எதிரிகளின் தொல்லையால் தாம் பிறந்த ஊரை விட்டே ஹிஜ்றத் செய்த வரலாறே இஸ்லாமிய வரலாற்றில் நிறைந்து காணப்படுகின்றன.
(பூக்கும்)
***==***==***==***==***==***
தொடர் 07…
கவித்திலகம்,
மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ
இறையறருளால் அறிஞரின் “ஹஜ்” கடமை இனிது நிறைவேறியது. தான் நினைத்திடாத ஹஜ் கடமையை இறைவன் தந்ததையிட்டு அல்லாஹ்வை மனமாரப் புகழ்ந்தார்கள். அங்குள்ள புனித தலங்களையெல்லாம் அறிஞருக்குக் கண்ணாரக் காணும் பாக்கியத்தை அல்லாஹ் அருளினான்.
அப்போது அவ்வருடம் ஹஜ் கடமைக்காக வந்திருந்த தமதூர் சகோதரர்களான அல்ஹாஜ் மீராமுகைதீன் (பதுளை முஹம்மதியாஸ்) அல்ஹாஜ் ஷாஹுல் ஹமீது (மட்டக்களப்பு மர்ழியாஸ்) ஆகியோரையும் சந்தித்து அவர்களுடன் ஒருவாரம் மக்காவில் தங்கினார்கள். அதிகாலை அவர்களையும் அவர்களுடன் வந்தவர்களையும் அழைத்துச் சென்று புனித தலங்களை ஸியாரத் செய்து அத்தலங்களின் வரலாறுகளை விளக்கினார்கள்.
அறிஞர் மிஸ்பாஹீ அவர்களை மக்காவில் வைத்து சந்திக்கும் பாக்கியம் அவர்களுக்குக் கிடைத்தது பெறும் மகிழ்வைக் கொடுத்தது.
கஃபாவுக்குப் பிரியா விடை
ஆம். கஃபாவின் சிறப்புக்கள் எத்தனை எத்தனை. பிரியா விடைக்காக கஃபாவின் முன் நின்ற அறிஞரின் சிந்தனையில் அதன் சிறப்புக்கள் பூத்தன. அது கோடிக்கணக்கான நெஞ்சங்களைக் காந்தம் போல் ஈர்த்துக் கொண்ட வல்ல அல்லாஹ்வின் முதல் இல்லம்.
Ø உலகில் தோன்றிய ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார்களும் தவாப் செய்த புனித தலம்.
Ø சொர்க்கத்திலிருந்து “ஹஜறுல் அப்யழ்” வெள்ளைக் கல்லாக இறக்கப்பட்டு மனிதர்களின் முத்தங்களால் அவர்களது பாவங்களை உறிஞ்சியெடுத்து கறுப்பாகிக் காட்சி தரும் புனித “ஹஜறுல் அஸ்வத்” கறுப்புக்கல்.
Ø அருகே மகாமே இப்றாஹீம், இப்றாஹீம் (அலை) அவர்களின் திருப்பாதம் பதிந்த இடம்.
Ø கஃபாவின் அருகில் நபீ இஸ்மாயீல் (அலை) அவர்களின் மகாமே இஸ்மாயீல்!
Ø அதில் ஒரு றக்அத் தொழுதால் ஒரு இலட்சம் நன்மை தரும் புனித இல்லம்!
Ø இறுதி காலத்தில் தோன்றும் தஜ்ஜால் நுழைய முடியாத இறை அரண்!
Ø எவ்வேளையிலும் மனிதர்களாலும் மலக்குகளாலும் சூழப்படும் இறை ஆலயம்!
Ø துஆக்கள் அங்கீகரிக்கப்படும் புனிதத் தலம்!
Ø இஸ்லாமியர்களின் உயிராகக் கணிக்கப்படும் இல்லம்.
Ø அப்றஹா அரசன் யானைப் படையுடன் கஃபாவை இடிக்கவந்த போது அவனும் அவனது படைகளும் இடிக்கப்பட்டு உடைக்கப்பட்டு சாம்பலாகுவதற்குரிய காரணமான ஆலயம்.
Ø கோடீஸ்வரர்களும், மன்னர்களும் ஏழைகளும் வேறுபாடின்றி ஒரே உடையில் ஒன்று கூடும் உன்னத தலம்.
Ø நிகரில்லா ஸம்ஸம் நீர் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கும் உயர்பீடம்.
Ø பார்ப்பது வணக்கமாக்கப்பட்ட உயர் இல்லம்.
இவ்வாறு கஃபாவின் சிறப்புக்கள் அறிஞரின் சிந்தனையில் ஒன்றன் பின் ஒன்றாக பூத்துக் கொண்டேயிருந்தது.
புனித தவாபை முடித்த மகானவர்களுக்கு கஃபாவை விட்டும் பிரியப்போகின்றோம் என்பதை நினைத்து அழுகையும் சலிப்பும் ஏற்பட்டது.
தன்னை மீரிய கண்கள் நீரைச் சொரிந்தன. கைகள் மேலே உயர்ந்தன. யாஅல்லாஹ், உனது புனித இல்லத்தை பார்க்கும் பாக்கியத்தை இந்தப் பாவிக்கம் தந்து விட்டாய். ஹஜ்ஜை நிறைவேற்ற வகை செய்தாய் .
நான் உனது வீட்டை விட்டும் பிரியப் போகிறேன். உனது ஹபீபாகிய முஹம்மதுன் (ஸல்) அவர்களை தரிசிக்கப் போகின்றேன். எனக்கு அவர்களின் தரிசனத்தை தருவாயாக! நான் மிகத்தூரத்திலிருந்து வந்துள்ளேன். என்னை உனது சிற்றடிமையாக ஏற்றுக் கொள்வாயாக. எனது பிராத்தனைகளை ஏற்றுக் கொள்வாயாக என்று பிரியாமல் பிரிந்தார் நமதரிஞர்.
அறிஞர் மிஸ்பாஹியின் மதீனாப் பயணம்
தன்னந்தனியனாய் வந்து இறை கடமைகளை இறைநேசத்துடன் முடித்த அறிஞர் மக்காவிலிருந்து மதீனா நகருக்குப் பிரயாணத்தை மேற்கொண்டு மதீனாவை வந்தடைந்தார்கள். அங்கே அவர்களை வரவேற்பதற்கு அவர்களுடன் இலங்கை,இந்தியாவில் ஒரேபாடத்தில் ஓதியவரும் இலங்கையில் ஒன்றாக ஓதிக் கொண்டிருந்தவருமான அல்ஹாஜ் மௌலவீ ஹஸ்புல்லாஹ் அவர்கள் வந்திருந்தார் அவர் அப்போது மதீனாவின் “அல்ஜாமிஅதுல் இஸ்லாமிய்யாஹ்” இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே சேர்ந்து ஓதிக்கொண்டிருந்தார். அதனால் அறிஞருக்கு தனிமை என்ற கவலை மறந்தது. காரணம் மௌலவீ ஹஸ்புல்லாஹ் அவர்கள் அறிஞரின் அன்பு நண்பர்.
கற்கும் காலத்திலும் கற்பிக்கும் காலத்திலும் பல வருடங்கள் ஒன்றாகப் பழகியவர். திஹாரியைச் சேர்ந்தவர். சுறுசுறுப்பானவர். எதையும் முன் சென்று செய்யும் தைரியமும் துணிவும் கொண்டவர். அவருடன் கற்கும் காலத்திலும் கற்பிக்கும் காலத்திலும் நடந்த சுவையான செய்திகளை மிஸ்பாஹீ நாயகம் எமக்குச் சொல்லியிருக்கிறார்கள். இலங்கையில் தற்போதைய “சரீஆ” கவ்ன்ஸிலின் தலைவர் சுவையான நண்பர். இருவரும் மச்சான் முறை சொல்லிப்பேசிக் கொள்ளும் நெருக்கம் கொண்டவர்கள். இதனால் அறிஞருக்கு கவலை மறந்து மகிழ்வு தோன்றியது.
மதீனா வந்தடைந்த அறிஞர் தனது நண்பருடன் பல்கலைக்கழகம் சென்று தன்னை ஒரு மாணவராக பதிவு செய்து கொண்டார்கள்.
காத்தான் குடியிலிருந்து மதீனா வளாகம் சென்ற முதல் மாணவர் அறிஞர் தான்.
அறிஞருக்கு முதல் யாரும் காத்தான்குடியிலிருந்து அங்கு கற்கைக்காக சென்றதில்லை.
நண்பர் ஹஸ்புல்லாஹ்வுக்கு தங்கும் வசதி மதீனாவிலுள்ள “இமாறதுஸ் ஸூபைஃ” மாணவர் விடுதியே கிடைத்தது.
அங்கிருந்து பார்த்தால் நேராக மஸ்ஜிதுன் நபவியும் குறிப்பாக அதில் கொலுவீற்றிருந்து செங்கோள் நடாத்தும் றஸூலுல்லாஹ் அவர்களின் திரு றவ்ழஹ்வுக்குரிய பச்சை குப்பாவும் தெரியும். அங்கேதான் நண்பர் ஹஸ்புல்லாஹ்வும் தங்கியிருந்தார்.
அன்று மதீனா வந்து நபீ (ஸல்) அவர்களின் திரு றவ்ழாஹ்வைத் தரிசித்த பின் பல்கலைக்கழகம் சென்று பெயரை பதிவு செய்தபின் மீண்டும் நபிகள் நாதர் அவர்களின் புனித றவ்ழாஹ்வுக்கு வந்து அங்கு நீண்டநேரம் முனாஜாத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அன்று முதல்நாள் நமதறிஞர் நண்பர் ஹஸ்புல்லாஹ்வின் அறையிலேயே தங்கினார்கள். மிக நீண்ட நேரம் இருவரும் பிரிந்திருந்த காலத்தில் ஏற்பட்ட நன்மை தீமைகளை ஒருவருக் கொருவர் பகிர்ந்து கொண்டனர். தாமிருவரும் இலங்கையிலும், இந்தியாவிலும் ஒருமித்திருந்தது போல் இங்கும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு இறைவன் தந்த பாக்கியத்தை நினைத்து அல்லாஹ்வை புகழ்ந்தார்கள்.
பயணக் களைப்பால் துயில் ஆரத்தழுவியது. இருவரும் உறங்க முடிவு செய்தனர். நண்பர் ஹஸ்புல்லாஹ் நமதரிஞருக்கு தனது கட்டிலைக் கொடுத்து தான் கீழே துயின்றார். அதிகாலை மூன்றரை மணியிருக்கும் அறிஞர் நண்பர் ஹஸ்புல்லாஹ்வை மிக அவசரமாக எழுப்பினார்.
(பூக்கும்)
***==***==***==***==***==***
தொடர் 06...
கவித்திலகம்,
மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ
மதீனா வளாகம்
தனது தளராத நம்பிக்கையும் தொடரான முயற்சியும் பயன் தந்தது. அல்லாஹ்வின் அருளாலும் அண்ணல் நபீ (ஸல்) அவர்களின் நல்லாசியாலும் அவ்லியாஉகளின் பறகத்தாலும் மதீனா வளாகத்திலிருந்து அழைப்புக் கடிதம் வந்தது.
அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். உடன் பயணதுக்குரிய ஏற்பாடுகள் துரிதமாய் நடந்தன. அரச பாடசாலையிலிருந்து ஆசிரியர் பதவியை இரத்துச் செய்தார்கள். பயணத் திகதியும் வந்தது.
அன்றிரவு “அல்மத்றஸதுர் றப்பானிய்யாவில்” பிரியாவிடை வைபவம் மிகச்சிறப்பாக நடந்தேறியது.
அவர்களை வழியனுப்ப பலரும் கொழும்பு சென்றனர். நானும் அவர்களில் ஒருவனாகச் சென்றிருந்தேன்.
ஈழத்தின் சொற்கொண்டல் விமானத்தில் பறந்தார்கள். அவர்கள் பயணம் செய்த காலம் ஹஜ்கடமை புரியும் காலமாக இருந்தது.
ரியாத் நகரை அடைந்த அவர்களுக்கு ஹஜ்ஜின் சிந்தனை ஏற்பட்டது. மக்காவுக்குச் சென்றால் ஹஜ்ஜை முடித்துக் கொள்ள முடியும். மதீனா சென்றால் ஹஜ்ஜுக்காக பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும் அங்கு போய் இப்போது ஒன்றும் செய்ய முடியாது. நாம் முதலில் அல்லாஹ் வழங்கிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முதலில் மக்கா செல்ல முயற்சிப்போம். இறை நாடினால் ஹஜ்ஜுச் செய்வோம். பின்னர் மதீனா செல்வோம் என்று முடிவு செய்தார்கள்.
ஆனால் தான் ரியாத்திலிருந்து மதீனா செல்வதற்கே டிக்கட்
போடப்பட்டிருந்தது. மக்கா செல்வதென்றால் டிக்கட்டை மாற்ற வேண்டும். அதை மாற்றுவதென்றால் பணம் வேண்டும். கையில் பணமில்லை. என்ன செய்வது? என்று சிந்தித்த அவர்கள் ரியாத்திலுள்ள டிக்கட் ஒப்பீசுக்குச் சென்று அங்கிருந்த உத்தியோகத்தர்களுக்கு தனது நிலையை விளக்கினார்கள்.
உண்மையை அறிந்த உத்தியோகத்தர் இருவர் அறிஞர் மீது இரக்கம் கொண்டு தாமே மக்கா பயணிப்பதற்கான பணத்தைப் போட்டு டிக்கட்டும் மாற்றிக் கொடுத்தனர்.
அல்ஹம்துலில்லாஹ். அறிஞரின் எண்ணத்தை அல்லாஹ் நிறைவேற்றி வைத்தான்.
அல்லாஹ்வின் அருளால் ஜித்தா சென்று அங்கிருந்து மக்கா போய்ச் சேர்ந்தார்கள்.
புதிய உலகம்.
புதிய காட்சிகள்.
இலட்சக்கணக்கான மக்கள்.
எந்த அறிமுகமும் இல்லாத நிலை.
கையில் பணமில்லாத நிலை.
எங்கும் சனத்திரள், கடலலைபோல் திரண்டிருந்தது. கையிலிருந்த பயணப் பெட்டியை ஒர் இடத்தில் வைத்து விட்டு நிமிர்ந்து பார்த்தார்கள்.
அங்கே அல்லாஹ்வின் புனித வீடாம் கஃபதுல்லாஹ் அவர்களின் கண்களில் தெரிந்தது.
இத்தனை நாளும் நிழலுருவில் பார்த்த கஃபாவின் காட்சி இன்று நிஜமாகி விட்டது.
இதுவரை கண்காணாத காட்சி இன்று கல்புக்கும் கண்ணுக்கும் விருந்தாகிவிட்டது.
செல்வந்தர்கள் சென்று இன்புற்ற காட்சி இன்று இந்த ஏழைக்கும் கிடைத்து விட்டது.
குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இமாம்களின் நூல்களிலும் வர்ணிக்கப்பட்டு தாம் வாசித்த இறை கஃபாவின் காட்சி இன்று நிதர்சனமாகிவிட்டது.
கஃபாவை பார்த்தார்கள் அறிஞர்.
பார்த்துக் கொண்டே நின்றார்கள்.
ஆயிரமாயிரம் அர்த்தங்கள் அப்பார்வையில் தோன்றின.
கண்கள் பார்த்தன.
இதயம் அழுதது.
கண்கள் நீரை ஓட்டிக் கொண்டிருந்தன.
ஆம். அதில் ஆனந்தக் கண்ணீர்.
உலகிலுள்ள பள்ளிவாயல்களுக்கெல்லாம் தாய் பள்ளிவாயல் இலங்கிக் கொண்டிருந்தது.
அதைச் சுற்றி மக்கள் “தவாப்” செய்யும் காட்சியும், மக்கள் சேர்ந்து சொல்லும் “லெப்பைக் அல்லாஹும்ம லெப்பைக்” எனும் தல்பியா முழக்கமும் நெஞ்சைப் பற்றியது.
ஆனந்தக் களிப்பால் தன்னையறியாமல் கண்கள் பன்னீரைச் சொரிந்து கொண்டிருந்தன.
மெல்ல மெல்ல அடிவைத்து கஃபாவை நெருங்கினார் அறிஞர்!
இதயம் இறைவனை முன்னோக்கியது.
கைகள் அவனை நோக்கி உயர்ந்தன.
உள்ளம் தன்னுள்ளே இருப்பதை உவகையுடன் ஒப்புவித்தது.
யாஅல்லாஹ்! வல்ல நாயனே.
உனது பொறுமையையும் மாண்பையும் என்னென்று சொல்வேன்.
நீயே உயர்ந்தோன். உனக்கு நிகர் எதுமேயில்லை.
இந்தப்பாவியையும் உனது வீட்டுக்கு அழைத்து விட்டாயே.
இந்தப்பாவிக்கும் உனது முதல் வீட்டை காட்டிவைத்தாயே.
உன்னை எப்படிப் புகழ்வேன்.
உனக்கே புகழ் அல்ஹம்து லில்லாஹ்.
யா அல்லாஹ்! எனது நிலையை நீ நன்கறிவாய்.
இங்கு உனது உதவியைத்தவிர எனக்கு வேறு உதவியில்லை.
இங்கு உன்னைத் தவிர எனக்குத் தெரிந்தவர் வேறுயாறுமில்லை.
நான் இப்போது உனது வீட்டில் நின்று கொண்டிருக்கின்றேன்.
எனக்குத் தெரிந்தவர் யாருமில்லை.
கையில் பணமெதுவுமில்லை.
எனக்குத் தெரிந்தவர் யாரையாவது காட்டித் தருவாயாக.
எனக்கு உதவி செய்வாயாக.
நான் வரும் போது எனது தந்தை சுகயீனமாக இருக்கிறார்கள். எனது பிரிவால் கவலையும் துயரும் அடைந்துள்ளார்கள். அவர்களது கவலையைப் போக்குவாயாக! அவர்களது ஹயாத்தை நீளமாக்குவாயாக.
நீ அவர்களை உன்னிடம் எடுக்க நாடினால் நான் ஊரில் அவர்களின் சமூகத்தில் இருக்கும் போதே, எனது முன்னிலையலேயே அவர்களது றூஹை எடுப்பாயாக.
நான் ஆயிரக் கணக்கான கிலோமீட்டர்களைத் தாண்டி உன்னிடம் வந்துள்ளேன். என்மனதிலுள்ள ஹாஜத்துக்களை நிறை வேற்றி வைப்பாயாக. எனது பிராத்தனையை ஏற்றுக் கொள்வாயாக. என்று துஆவை முடித்தார்கள்.
பிரார்த்தனை முடிந்து திரும்பிய அறிஞருக்கு “மச்சான் றஊப்” என்று ஒரு சத்தம் கேட்டது. என்னே அதிசயம். சத்தம் வந்த திசையை நோக்கினார்கள் அறிஞர்.
ஆம்! நிஜம்தான்! ஒருவர் இஹ்றாம் உடையில் நின்று புன்னகைத்தவராக மீண்டும் மச்சான் றஊப். நலமாயிருக்கிறாயா? என்று குசலம் விசாரித்தார். உற்று நோக்கினார் அறிஞர், ஆளை அடையாளம் தெரியவில்லை.
“மச்சான் றஊப்” என்று நெருங்கியவர் போல் அழைக்கிறாரே இவர் யார்? என்று சிந்தித்த அறிஞர், நீங்கள் யார்? நான் றஊப்தான் தெரிந்து கொள்ள முடியவில்லையே என்று சொன்ன போது நான்தான் மச்சான் அபூபக்கர் உம்முடன் இந்தியாவில் ஓதியவன். உனது நண்பன் அபூபக்கர் என்று சொன்னார்.
அப்போதுதான் அவர் தனது இந்திய நண்பர் அபூபக்ர். தன்னுடன் ஒரே பாடத்தில் ஓதியவர் என்று அடையாளம் தெரிந்து கொண்டார் அறிஞர்.
ஆ…மச்சான் அபூபக்கர், பல வருடங்களின் பின்பும் நீ என்னை அடையாளம் கண்டு கொண்டாய். நான்தான் உன்னை தெரிந்த கொள்ளவில்லை என்று முஸாபஹா, முஆனகா செய்து கொண்டனர்.
தனது பிரார்த்தனையை வல்ல அல்லாஹ் ஏற்றுக் கொண்டான் என்பதை நினைந்து அவனை உளமாரப் புகழ்ந்தார்கள்.
பின்னர் தனது நண்பரிடம் முழு விபரங்களையும் எடுத்துரைத்தார் அறிஞர் அப்போது நண்பர் அபூ அறிஞரிடம் இங்கு ஹஜ் கடமை செய்வதாயின் பணம் தேவைப்படும். ஆனால் உன்னிடம் பணம் இல்லை என்றும் சொல்கின்றாய். சரி அதற்கான முயற்சியில் ஈடுபடுவோம். எனக்கும் தெரிந்த ஒருவர் இன்று ஹஜ்ஜுக்கு வந்துள்ளார். என்னுடன் வாரும். நான் அவரிடம் உன்னை அழைத்துச் செல்கின்றேன் என்று கூட்டிச் சென்றார்.
ஆம் அது ஒரு பெரிய வீடு. அம்மாடி வீட்டில் வயது முதிர்ந்த ஒருவரும் அவரது மனைவியுமே இருந்தார் மனைவி சள்ளல் மீன் அறுத்துக் கொண்டிருந்தார். இருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
நண்பர் அபூவும் இந்தியராகையால் அந்த பெரிய மனிதருக்கு அறிஞரின் நிலையை சுருக்கமாக எடுத்துச் சொன்னார்.
அப்போது அந்த பெரிய மனிதர், அறிஞரிடம் நீங்கள் இலங்கையில் எந்த ஊரைச் சேர்ந்தவர்? கொழும்பிலுள்ள பல்லாக் கொம்பனியை உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்.
ஆம். நான் காத்தான்குடியைச் சேர்ந்த மௌலவீ அப்துர் றஊப். பல்லாக் கொம்பனி உடையவர்களை எனக்குத் தெரியும்.
நான் கொழும்பு சென்றால் அங்கு போய் அவர்களை சந்திப்பதுண்டு. இப்போது நான் சிலோனிலிருந்து புறப்பட்டபோது அவர்களது வீட்டில்தான் நான் நின்று வந்தேன். அவர்கள் எனக்கு சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் நெருக்கமானவர்கள்.
அவர்கள் தான் என்னைக் காரில் விமான நிலையைத்திற்கு கொணர்ந்து வந்து விட்டுச் சென்றனர்.
நான் வரும் போது அவர்கள் என்னிடம் எங்கள் வாப்பாவும் உம்மாவும் மக்காவில் தான் இருக்கிறார்கள். உங்களுக்கு மக்கா செல்வதற்கு சந்தர்ப்பம் இல்லை.
ஆனால் இறைவன் உங்களுக்கு மக்கா செல்ல சந்தர்ப்பமளித்தால் அவர்கள் இருவருக்கும் எங்கள் ஸலாத்தை எத்திவையுங்கள் என்றும் அறிஞர் அந்த பெரிய மனிதரிடம் சொன்னார்.
அப்போது அவர், அவர்கள் எனது மக்கள்தான், உங்களை சரியான இடத்தில் தான் இறைவன் அனுப்பியுள்ளான். என்று மகிழ்ந்து அன்று பகல் சாப்பாடும் கொடுத்து 500 றியாழ் பணமும் கொடுத்தார்கள்.
மீண்டும் பணம் தேவையாயின் நான் இங்குதான் இருப்பேன். வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லியும் அனுப்பினார்கள்.
அறிஞருக்கு பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. அல்லாஹ்வின் செயல் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை நினைந்து அவரை புகழ்ந்தார்கள்.
தனது நண்பர் அபூபக்கருக்கும் நன்றி தெரிவித்தார்கள்.
ஹஜ் கடமைகளையும் இனிது நிறைவேற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
(பூக்கும்)
***==***==***==***==***==***
கவித்திலகம்,
மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ
காத்தான்குடியில் ஒரு சூரியன் தோற்றியது போன்று அறிஞரின் வருகை அமைந்தது. உலமாஉகளில் கண்ணியத்துக்குரிய ஒரு ஆலிமாக கருதப்பட்டார்கள்.
பல பள்ளிவாயல்களிலும் உரையாற்றி கௌரவிக்கப்பட்டார். பத்ரிய்யாவில் பலஉபதேசங்களை நிகழ்தினார். புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்று மக்கள் பேசிக்கொண்டனர். பேச்சில் புதுமையை ஏற்படுத்திய அறிஞர் சுன்னத் வல் ஜமா அத்தை உயிர்ப்பிக்கும் கருத்து மலர்களை மக்கள் மத்தியில் சொரிந்தார். மக்கள் மனங்களில் நிறைந்தார்.
அவர்களது பேச்சைக் கேட்பதற்காக மக்கள் அலைபோல் திரண்டனர். கெஸட் றேடியோக்களைக் கொணர்ந்து அவரகளது பேச்சைப் பதிவு செய்து சென்றனர்.
ஓதிமுடிந்து வந்த அறிஞர் திருமண வயதையடைந்த இளவலாக இருந்தார். பல இடங்களிலிருந்து அவர்களுக்கு திருமணம் கேட்டு வந்தனர். இறுதியில் பெற்றோரின் வேண்டுதலின் படி 1970ஆம் ஆண்டு காத்தான்குடி 5ஆம் குறிச்சியை சேர்ந்த செலவந்தரும் தரீகா வழி நடந்தவருமான மர்ஹூம் ஆதம்போடி ஹாஜியாரின் அன்பு மகள் சித்தி ஜெமீலா எனும் மணமங்கையைத் திருமணம் செய்து கொண்டார் அறிஞர்.
இத்திருமணத்தின் மூலம் இரு ஆண்களும் இரு பெண்களும் அறிஞருக்குப் பிறந்தனர். இன்றும் பல் வளங்கள் பெற்று ஹயாத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
அறபுக்கல்வியில் மிகத் திறமை பெற்றிருந்த எமது அறிஞர் பெருமகனை இலங்கையின் பல அறபுக்கல்லூரிகள் அதிபர் பதவிக்கு அழைத்தன. அதனடிப்படையில் 1970ஆம் ஆண்டு முதல் 1971ஆண்டுவரை அக்கரைப்பற்று “மன்பஉல் கைறாத் ” அறபுக்கல்லூரியிலும், அதன் பின் மாநகர் காலியிலுள்ள “ஜிப்ரிய்யஹ்” அறபுக்கல்லூரியிலும் இருவருடங்கள் அதிபராகக் கடமையாற்றினார்கள்.
இவர்களிடம் கல்வி பயின்றவர்கள் இன்று தலைசிறந்த உலமாஉகளாகவும் சமூக, சமயத் தலைவர்களாகவும் பேச்சாளர்களாகவும் திகழ்கின்றனர். அக்கரைப்பற்று அறபுக்கல்லூரியில் அறிஞரிடம் கல்வி பயின்ற மாணவரே இன்றைய மாஹ்புமிகு அமைச்சர் அல்ஹாஜ் அதாவுல்லாஹ் ஆகும்.
இதனிடையே மௌலவிமார்களுக்கு அரசாங்கப் பாடசாலைகளில் கற்பிற்கும் வாய்பை அரசாங்கம் வழங்கியிருந்தது. அதனடிப்படையில் அரச சேவையில் நுழைந்த அறிஞர் 1972 முதல் 1975 வரை மட்/காங்கேயனோடை அல் அக்ஸா வித்தியாலயத்திலும், பூநொச்சிமுனை அரச பாடசாலையிலும், மட்/காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்திலும் மௌலவீ ஆசிரியராகக் கடமை செய்தார்கள்.
மத்திய மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் போது அறிஞரிடம் கற்றவரே நமதூர் மைந்தன் மாண்புமிகு அமைச்சர் அல்ஹாஜ் ஹிஸ்புல்லாஹ் MA அவர்களாகும்.
அறிஞர் அரச சேவையில் ஆசிரியராகக் கடமை செய்த போது மதீனா சென்று அங்குள்ள பல்கலைக்கழகத்தில் கற்கும் ஆசை ஏற்பட்டது. அதனால் அங்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்கள்.
இதையறிந்த அறிஞரின் தந்தை அப்துல் ஜவாத் ஆலிம் நாயகமவர்கள் தன் மனைவிடம் ‘மகனை இம்முயற்சியைக் கைவிடும் படி சொல்லும்படி வேண்டினார்கள்.
தான் வயோதிப நிலையை அடைந்து விட்டதாலும், தன்னுடன் மகன் இருக்க வேண்டுமென்றும் தொடர்ந்து வெளிநாடுகளில் இருப்பதை தான் விரும்பவில்லை என்றும் சொன்னார்கள்.
அறிஞரின் அன்னை தந்தையின் சொல்லை எடுத்தோதிய போது அறிஞர் எடுத்த முடிவில் மாற்றம் கொள்ள வில்லை. முயற்சியைத் தொடர்ந்தார்கள்.
மீண்டும் அன்னை அறிஞரிடம் ‘மகனே நீ போய்விட்டால் வாப்பாவும் சுகயீனமாக இருக்கிறார்கள். மௌத்து ஹயாத்தும் இருக்கிறது. நீயில்லாமல் நான் என்ன செய்வேன். நீ போக வேண்டாம் என்று மீண்டும் அன்னை கேட்டுக்கொண்டார்கள்.
அதற்கு மைந்தர் ‘உம்மா, நீங்கள் கவலைப்படாதீர்கள். வாப்பா இப்பொழுது மௌத்தாகமாட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நான் ஊரிலிருக்கும் போதே எனது முன்னிலையிலேயே அவர்கள் இறைவனையடைவார்கள். நான் போகவே வேண்டும். எனது முடிவில் மாற்றமில்லை என்று உறுதியாக மொழிந்தார்கள். அன்னை என்ன செய்வார்? மகன் சொன்னவற்றை தனது அன்புக் கணவரிடம் சொன்னார்கள்.
இதை கேட்ட அப்துல் ஜவாத் நாயகத்திற்கு கவலை அதிகரித்தது. மைந்தர் தாம் எடுத்த முடிவில் மாற்றம் செய்யார் என்பதை திடனாக அறிந்தார்கள். அதனால் தனது ஆன்மீக சகோதரர் ஆதம் லெப்பை அதிபர் மூலம் தன்னைச் சந்திக்கும் படி தூதனுப்பினார்கள்.
அதிபர் ஆதம் லெப்பை அவர்களின் தூதுக்கமைவாக அன்பு மைந்தர் அன்பு தந்தையைச் சந்தித்தார்கள்.
மகனே, உம்மை நான் நீண்ட நாள் பிரிந்து வாழ்ந்து விட்டேன். மார்க்க ஞானம் பயில்வதற்காக நீங்கள் உள்நாட்டிலும் இந்தியாவிலும் பல வருடங்களைக் கழித்து விட்டீர்கள். அக்காலத்தில் உம்மை நாம் பிரிந்து வாழ்ந்த காலம் எம்மை வருத்தி விட்டது. இனிமேலும் வெளியிற் செல்வது எம்மால் தாங்க முடியாது. நீங்கள் இனிமேல் எங்கும் போக வேண்டாம். ஊரில் அல்லது நம் நாட்டில் இருப்பதே சிறந்தது என்று சொன்னார்கள்.
அப்போது மைந்தர் ‘வாப்பா, நான் மதீனாவுக்கு படிக்கச் செல்வதற்கு முயற்சிகள் செய்து முடியும் தறுவாயிலுள்ளது. அங்கு நான் சென்று மதீனா பல்கலைக் கழகத்தில் கற்க வேண்டும் என்று நவின்றார்கள்.
அதைக் கேட்ட தந்தை ‘மகனே, எதற்காக அங்கு செல்ல வேண்டும். அங்கு படித்துத்தான் நீ அறிஞனாக வேண்டுமா? உங்களிடம் இருக்கும் கல்விபோதும். அங்கு படிக்க வேண்டிய அவசியமில்லை நீ படித்துத்தான் கல்வியைத் தேடவேண்டுமென்பது அவசியமில்லை. உம்மைக் கல்வி தேடி வரும். நமது பரம்பரையில் எவரும் அதிகம் கல்வியைத் தேடிச் செல்லவில்லை. நம்மைத் தேடிக் கல்வி வரும். நீபோக வேண்டாம் என்று அன்புக் குரலில் தந்தை வேண்டினார்கள்.
அதற்கு மைந்தர், நான் படிப்பதற்கு மட்டும் அங்கு செல்லவில்லை. றஸூலுல்லாஹ்வை ஸியாறத் செய்யவே போகின்றேன். என்று நவின்றார்கள்.
அதற்குத் தந்தை ‘போகும் காலத்தில் போகலாம். இப்போது போக வேண்டிய அவசியமில்லை. அங்கு போய்தான் றஸூலுல்லாஹ்வைத் தரிசிக்க வேண்டுமா? இங்கிருந்து றஸூலுல்லாஹ்வைத் தரிசிக்க முடியாதா? என்று கேட்டார்கள்.
மைந்தருக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. தந்தையிடம் முடிவொன்றும் சொல்லாமல் உள்ளே சென்று உம்மாவிடம் வாப்பா போக வேண்டாம் என்று சொல்கிறார்கள். நான் முடிவு செய்து விட்டேன். இன்ஷா அல்லாஹ் நான் போகத்தான் போகிறேன். எனக்கு வாப்பாவின் முகத்தில் சொல்ல முடியவில்லை. நீங்கள் சொல்லி வையுங்கள் என்று சொல்லிவிட்டு தான் போகும் முயற்சியைத் தொடர்ந்தார்கள்.
மைந்தர் தந்தையிடம் “நான் மதீனா சென்று றஸூலுல்லாஹ்வைத், தரிசிக்க வேண்டும் என்று சென்னதற்கு ‘அங்கு போய்த்தான் றஸூலுல்லாஹ்வைத் தரிசிக்க வேண்டுமா? இங்கிருந்து தரிசிக்க முடியாதா? என்று அப்துல் ஜவாத் நாயகம் கேட்டது அவர்கள் இங்கிருந்தே நபிகள் நாயகத்தைத் தரிசித்துள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
இவ்விடத்தில் அவர்கள் வீட்டில் இருந்தவாறு நபிகள் கோமானைத் தரிசித்துள்ளார்கள் என்பதை பின்வரும் நிகழ்வின் மூலம் சொல்ல விளைகின்றேன்.
ஆம், 1978ஆம் ஆண்டு. அவர்கள் இவ்வுலகை விட்டும் பிரிவதற்கு மூன்று தினங்களின் முன் நானும் அவர்களிடம் ஓதுகின்ற மாணவர்களும் அவர்களை வளைத்திருந்தோம். அவர்கள் படுத்திருந்தார்கள். அவர்களது தலை கிப்லாவை நோக்கியும் கால் கீழ் திசை அதாவது கடல் திசையை நோக்கியும் இருந்தது. அவர்களது தவமைந்தர் மிஸ்பாஹீ நாயகம் அவர்களும் இருந்தார்கள்.
வளைத்திருந்த அனைவரையும் “யாலதீப்” எனும் அருள் பாடலை ஓதும் படி வேண்டினார்கள். எல்லோரும் ஓதிக்கொண்டிருந்தார்கள்.
திடீரென்று எம்மைப் பார்த்து ‘நபிகள் நாயகம் வாழும் மதீனா முனவ்வறா எப்பக்கம் இருக்கிறது? என்று கேட்டார்கள். எல்லோரும் கிப்லா திசையைக் காட்டி இப்பக்கமே இருக்கிறது என்றனர்.
உடன் அவர்கள், இல்லை, இதோ என் கண் முன்னே இருக்கிறது. இதோ றஸூலுல்லாஹ்வுடைய றவ்ழத் இருக்கிறது. என்று கிழக்கு திசையைக் காட்டி “அஸ்ஸலாமு அலைக்கும் யாறஸூலல்லாஹ், அஸ்ஸலாமு அலைக்கும் யாஹபீபல்லாஹ்” என்று சப்தமிட்டவர்களாக அழுதார்கள். தேம்பித் தேம்பி அழுதார்கள். இருந்தவர்களும் அழுதார்கள். சிறிது நேரத்தில் அழுகையை நிறுத்தி மௌனம் சாதித்தார்கள்.
அதேபோல் மவ்லித் மஜ்லிஸ்களிலும் றஸூலுல்லாஹ்வின் பைத்தை ஓதும் போது அழுவார்கள். சபை மௌனமாகி விடும். இப்படி பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இதில் இருந்து மகான் அவர்கள் ஊரில் வீட்டில் இருந்தவாறே றஸூல் (ஸல்) அவர்களைக் கண்டு வாழும் பேரின்ப நிலையை பெற்றவர்களாக இருந்தார்கள் என்பது தெளிவாகிறது.
எனவே, அவர்கள் மைந்தரிடம் தன் உயர் மகாமையே எடுத்துக் காட்டி இந்நிலை அவர்களது மைந்தருக்கும் கிடைக்கும் என்றே அவ்வாறு சொன்னார்கள்.