– மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ) BBA. Hons. –
படைப்புகளைப் பற்றி சிந்திக்குமாறு அல்குர்ஆன்
إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
(آل عمران : 190،191)
நிச்சயமாக, வானங்கள், பூமி, ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறிமாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப்புறங்களில் சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, ‘எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!
أَوَلَمْ يَرَوْا كَيْفَ يُبْدِئُ اللَّهُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ
(العنكبوت: 19)
அல்லாஹ் எவ்வாறு முதலில் படைப்பைத் துவங்கிப் பிறகு (அதனை எவ்வாறு தன்பால் மீட்டுகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபம்.
قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ بَدَأَ الْخَلْقَ ثُمَّ اللَّهُ يُنْشِئُ النَّشْأَةَ الْآخِرَةَ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
(العنكبوت: 29)
‘பூமியில் நீங்கள் பிரயாணம் செய்து, அல்லாஹ் எவ்வாறு (முந்திய) படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்;நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுள்ளவன்’ என்று (நபியே!) நீர்கூறுவீராக.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள அல்குர்ஆனின் திருவசனங்களின் மூலம் படைப்புகளைப் பற்றி சிந்திக்குமாறு அல்லாஹ் தஆலா கூறுகிறான்.
பிரபஞ்சம் பற்றி இன்றைய விஞ்ஞானம்
பூமி, சூரியக் குடும்பம், பால் வெளி மண்டலம், பேரண்டம் அனைத்தும் எப்படி தோன்றின, இந்த பிரபஞ்சத்தை படைத்தது யார்? அதன் மூலப்பொருள் என்ன? என்பதை அல்குர்ஆனின் வழிகாட்டலில் இன்றைய நவீன விஞ்ஞானத்தின் கருத்துக்களுடன் சிந்திப்போம்.
சிருஷ்டிகளின் தோற்றம் என்பது பல அணுக்களின் சேர்க்கை எனவும் சிருஷ்டிகளின் மறைவு என்பது அணுக்கள் ஒன்று சேர்ந்த நிலையிலிருந்து பிரிதல் எனவும் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலிருந்து நாம் அறிய முடிகிறது.
ஒரு பொருள் மறைகின்ற போது அதனுள் இருக்கும் அணுக்களின் சேர்க்கையின் தன்மை மாறுகிறதே தவிர அணுக்கள் அழிவதில்லை.
அணுக்களின் சேர்க்கையே நிலமாகவும், நீராகவும், தீயாகவும், காற்றாகவும், ஆகாயமாகவும் பொதுவாக உலகமாகவும் மற்றும் பல்வேறு பொருட்களாகவும் நம் முன் தோன்றி நிலைபெற்று ஒடுங்கும் தன்மையை பெற்றுள்ளது.
இந்த பிரபஞ்சத்தில் நாம் காணும், உணரும் எந்த பொருட்களாகட்டும், திரவமாகட்டும் திடப் பொருளாகட்டும் வாயுவாகட்டும் எல்லாம் அணு என்ற மிக மிகச் சிறிய ஒன்று கூட்டுச் சேர்வதால் உருவானவை என்பதை இன்றைய நவீன விஞ்ஞானம் வலியுறுத்துகின்றது.
இந்த அடிப்டையில்நோக்கும் போது…
> சிருஷ்டிகளாக தோன்றுவது அணுக்களே தவிர வேறில்லை.
> அணுக்களைத்தான் நாம் பல்வேறு பொருட்களாக காண்கின்றோம்.
> நம்மிலுள்ள பேதமைதான் யதார்த்தமாக உள்ள அணுக்களை யதார்த்தமற்ற பொருட்களாக எமக்கு காட்டுகின்றது.
> நாம் பொருட்கள் என்று எண்ணிக்காண்டிருப்பவை பொருட்கள் அல்ல அது மாய தோற்றம். எமது பார்வையும் அறிவும் பொருட்கள் இருப்பதாக எமக்கு ஒரு மாயையை தோற்றுவித்துள்ளன.
> ஒரே வகையான மூலப்பொருளே (அணுக்களே) பல்வேறுபட்ட சிருஷ்டிப் பொருட்களாக தோன்றியுள்ளது.
> மூலப்பொருளின் அடிப்படையில் சிருஷ்டிகள் ஒன்று மற்றொன்றுக்கு வேறானதல்ல. தோற்றத்தின் அல்லது உருவத்தினடிப்டையிலேயே அவை ஒன்று மற்றொன்றுக்கு வேறானதாக தோன்றுகின்றது.
போன்ற முடிவுகளை இன்றைய விஞ்ஞானக் கருத்துகளிலிருந்து நாம் பெற முடியும்.
படைப்புகளின் மூலப்பொருளான அணுக்களின் மூலம் எது?
இவ்வாறு பிரபஞ்சத்தில் தோன்றுகின்ற, நிலைத்து நிற்கின்ற, தன்மை மாறுகின்ற, மறைகின்ற பொருட்கள், அவற்றின் மூலப்பொருளான அணுக்கள் அனைத்துடனும் இறைவன் இருக்கின்றான். அவனது உள்ளமையும் அவனது அறிவும் ஆற்றலும் அவற்றை விட்டும் எப்பொழுதும் பிரிவதே இல்லை என அல்குர்ஆன் கூறுகின்றது.
وَمَا تَكُونُ فِي شَأْنٍ وَمَا تَتْلُو مِنْهُ مِنْ قُرْآنٍ وَلَا تَعْمَلُونَ مِنْ عَمَلٍ إِلَّا كُنَّا عَلَيْكُمْ شُهُودًاإِذْ تُفِيضُونَ فِيهِ وَمَا يَعْزُبُ عَنْ رَبِّكَ مِنْ مِثْقَالِ ذَرَّةٍ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَلَا أَصْغَرَ مِنْ ذَلِكَ وَلَا أَكْبَرَ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ
(يونس: 61)
“எக்காரியத்திலும் நீர் இருப்பதில்லை; இந்தக் குர்ஆனிலிருந்து நீங்கள் ஓதுவதுமில்லை; செயலில் எதையும் நீங்கள் செய்வதுமில்லை; நீங்கள் அதில் ஈடுபட்டிருக்கும் போது உங்கள் மீது நான் (தாத்தை கொண்டும் ஸிபத்துளை கொண்டும் அஸ்மாக்ளைக்கொண்டும்) பிரசன்னமாக இருந்தே தவிர, இன்னும் பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் ( நபியே! ) உமது இரட்சகனுக்குத் தெரியாமல் மறைந்து விடுவதில்லை; இன்னும், இவற்றை விடச் சிறிதோ,பெரிதோ (எதுவாயினும்) அவனுடைய தெளிவான (லவ்ஹுல் மஹ்பூல் எனும்) பதிவுப் புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டு) இருந்தேயல்லாமல் இல்லை”
هُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يَعْلَمُ مَا يَلِجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ وَمَا يَعْرُجُ فِيهَا وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْوَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
(الحديد: 4)
அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அர்ஷின் மீது உயர்ந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான்; நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் – அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.
இந்ததிருவசனங்களில்குறிப்பிடப்பட்டுள்ள’படைப்புகள் மீது “பிரசன்னமாக இருத்தல்”, “படைப்புகளுடன் இருத்தல்” எனும் தன்மை அல்லாஹ்வுக்கு புதிதாக ஏற்பட்ட ஒரு தன்மையாக இருக்க முடியாது.
அது அல்லாஹ்வின் பூர்வீகமான தன்மையாகவே இருக்க வேண்டும். அதாவது படைப்புகளை படைக்க முன்னரும் இருந்த தன்மையாகவே இருக்க வேண்டும். படைப்புகளை படைத்த பின் அவைகளுடன் அல்லாஹ் இருப்பது பற்றி பிரச்சினை இல்லை. படைப்புகளை படைக்க முன், படைப்புகளே இல்லாத போது அவைகளுடன் அல்லாஹ் இருப்பது எவ்வாறு? என்பதை சிந்திய்யுங்கள்.
படைப்புகளை படைக்க முன் அவை அல்லாஹ்வின் தாத் எனும் உள்ளமையிலேயே இருந்தன. அப்போது அவற்றுக்கு தனியான தோற்றம் இருக்கவில்லை அந்த நேரத்தில் அவை அல்லாஹ்வுடனேயே இருந்தன.
படைப்புகளைப் படைத்த பின் அவற்றுக்கு தனியான தோற்றம் உருவானது. ஆயினும் அவை அல்லாஹ்வை விட்டு பிரியவுமில்லை. அல்லாஹ் அவற்றை விட்டு பிரியவுமில்லை. எப்போதும் உங்கள் மீது பிரசன்னமாக இருக்கின்றான். எப்போதும் ‘நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன் (அல்லாஹ்) இருக்கின்றான்’ அவன் சகல சிருஷ்டிகளுக்கும் மிகச் சமீபமாக இருக்கின்றான். அவன் அடியானின் பிடரி நரம்பை விட அவனுக்கு மிகச் சமீபமாக இருக்கின்றான்.
எண்ணிலா கோடி அண்ட பேரண்டங்களின் இயக்கம், கோடான கோடி அணுக்கள், அணுக்கள் தொகுப்பான ஜீவராசிகள் அனைத்துமாக உள்ளும், புறமும், மேலும், வெளியுமாக அல்லாஹ் இருக்கின்றான் என அல்குர்ஆன் கூறுகின்றது.
هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
(الحديد: 3)
முந்தியவனும் அவனே; பிந்தியவனும் அவனே; பகிரங்கமானவனும் அவனே; அந்தரங்கமானவனும் அவனே; மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன்.
எனவே படைப்புகளின் மூலப் பொருளான அணுக்களின் மூலப்பொருள் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றுமில்லை. அவனே அதன் மூலப்பொருளாக யதார்த்தமாக இருக்கின்றான்.
நீங்கள் திரும்பும் திசைகளனைத்திலும் இருப்பது அவன்தான் என அல்குர்ஆன் கூறுகின்றது.
وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ إِنَّ اللَّهَ وَاسِعٌ عَلِيمٌ
(البقرة: 115)
கிழக்கும், மேற்கும் (ஒளிர்ந்த பிரதேசங்களும், இருண்ட பிரதேசங்களும்) அல்லாஹ்வுக்கே சொந்தம். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் (உள்ளமை) இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; எல்லாம் அறிந்தவன்.
இந்த அல்குர்ஆன் வசனங்களின் அடிப்டையில் நோக்கும் போது…
> எங்கும் தோன்றுவது ஒரே பொருள்தான் அது அல்லாஹ்தான். அவனைத் தவிர எதுவுமில்லை. உள்ளமையில் அவன் மாத்திரமே இருப்பதால் அவனுக்கு உள்ளமையிலும் பண்புகளிலும் நிகர் இல்லை.
> உள்மையின் அடிப்படையில் சிருஷ்டிகள் ஒன்று மற்றொன்றுக்கு வேறானதல்ல. உருவத்தினடிப்டையிலேயே அவை ஒன்று மற்றொன்றுக்கு வேறானதாக தோன்றுகின்றது. உள்ளமையில் அல்லாஹ் மாத்திரமே இருக்கின்றான்.
> நாம் படைப்புகள் என்று எண்ணிக் கொண்டிருப்பவை படைப்புகள் அல்ல. அது மாய தோற்றம். எமது பார்வையும் அறிவும் படைப்புகள் இருப்பதாக எமக்கு ஒரு மாயையை தோற்றுவித்துள்ளன. நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்தான் இருக்கின்றான். என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
இதுவே அல்குர்ஆனும், அல்ஹதீதும் குறிப்பிடும் தத்துவமாகவும் ஒரு விசுவாசி நம்பிக்கை கொள்ளவேண்டிய ஈமானாகவும் இருக்கின்றது.
உள்ளமை ஒன்றுதான் அது அல்லாஹ்தான். அவனுக்கு மாத்திரமே சுயமான உள்ளமை உண்டு. படைப்புகளுக்கு சுயமான உள்ளமை இல்லை. அல்லாஹ் எனும் உள்ளமைதான் படைப்புகளாக தோன்றுகின்றது. படைப்புகளுக்கும் சுயமான உள்ளமை இருப்பதாக நம்புவது ஷிர்க் எனும் இணையாகும்.
உள்ளமை யாருக்கு இருக்கின்றதோ அவனுக்கே செயல்களும் உரியன. உள்ளமை அற்றவர்களால் செயல்களை செய்ய முடியாது. இதனால் தான் படைப்புகளால் எந்த செயலையும் செய்ய முடியாது எனவும் அல்லாஹ்வால் மாத்திரமே செயல்களை செய்ய முடியும் எனவும் நாம் நம்பியுள்ளோம். படைப்புகளால் சுயமாக செயல்களை செய்ய முடியும் என நம்புவதும் ஷிர்க் எனும் இணையாகும்.
எல்லாம் அவன் செயலே என்று நம்பிக்கை கொண்டுள்ள பலர் எல்லாம் அவன் உள்ளமையே என்பதை நம்பாமல் மறுப்பது விந்தையான விடயமே.
உள்ளமையிலும் செயல்களிலும் பண்புகளிலும் அவனுக்கு இணையில்லை. காரணம் அவனைத் தவிர ஒன்றுமில்லை.