மௌலவீ KRM. ஸஹ்லான் (றப்பானீ ) BBA, JP
ஹிஜ்ரி 560ம் ஆண்டு ரமழான் பிறை 27 அன்று (கி.பி 1165 ஆகஸ்ட் 7ம் நாள்) ஸ்பைன் நாட்டின் முர்ஸிய்யா எனும் ஊரில் ஷெய்கு அலீ அறபி என்பவர்களுக்கு மகனாக பிறந்தார்கள்.
முஹ்யித்தீன் இப்னு அறபி(றஹ்) அவர்கள் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (கத்தஸழ்ழாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அவர்களிடம் இவர்களின் தந்தை ஐம்பது வயதாகியும் தனக்கு மகப்பேறு இல்லை என முறையிட்ட போது உங்களின் விதிப்பலகையில் மகப்பேறு எழுதப்படவில்லை. ஆயினும் கவலைப்படாதே என்னுடைய விதியில் எனக்கு ஒரு குழந்தை என் முகுகந்தண்டில் இன்னும் மீதியுள்ளது. அதனை நான் உமக்குத் தருகின்றேன் நீர் என் பின்னே வந்து என் முது கோடு உம் முதுகை வைத்து உரசுவீராக என்று கூறினார்கள். அவ்வாறே அவரும் செய்தார். அதன் பின் “உமக்கு ஓர் அறிவார்ந்த ஆண் குழந்தை பிறக்கும் அவருக்கு முஹம்மது முஹ்யித்தீன் எனப் பெயரிடுங்கள். அவர் தம் காலத்தில் குத்புஸ் ஸமானாக விளங்குவார். அவரது புகழ் அகிலமெங்கும் பரவும் என சுபச் செய்தி கூறினார்கள். இவர்கள் பிறந்த போது ஜீலானி நாயகம் வபாத்தாகி ஐந்து மாதங்கள் கழிந்திருந்தன.
இப்னு அறபி (றஹ்) அவர்கள் தமது தந்தையிடம் திருக்குர்ஆனை ஓதக்கற்றார்கள். பின்னர் மாலிக் மத்ஹபின் அடிப்படை சட்ட திட்டங்களையும் தம் தந்தையிடமே பயின்றார்கள். பின்னர் திருக்குர்ஆன் விரிவுரையை அபூபக்ர் இப்னு கலாஃபியிடமும், ஹதீதுக் கலையை முஅல்லிப் அபுல் ஹசன் ஷரீஹிடமும் மாலிக் மத்ஹபின் விரிவான சட்ட திட்டங்களை அபுல் காசிம் ஷர்ராத்திடமும் பயின்றார்கள். இப்னு அறபி (றஹ்) அவர்களின் அறிவுக் கூர்மையும் அபார நினைவாற்றலும், நற்குணங்களும் அவர்களை மதித்து மரியாதை செய்யுமாறு முதியோர்களையும் தூண்டியது. இளைஞராக இருந்த இப்னு அறபி அவர்களை ஹதீதுகளுக்கு விளக்கம் சொல்லுமாறு கூறி அவர்களது விளக்கங்களை செவி தாழ்திக் கேட்டுக் கொண்டிருந்தனர் முதியோர்கள்.
இளமையில் இருந்தே இப்னு அறபி (றஹ்) அவர்கள் ஆன்மீகவாதிகளுடன் உறவாடுவதில் ஈடுபட்டவர்களாக இருந்தார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு பல ஆன்மீக அனுபவங்கள் ஏற்பட்டன. இக்காலப்பகுதியில் மாபெரும் தத்துவ ஞானியும், கிரேக்க அறிஞருமான அரிஸ் டோட்டிலின் நூல்கஞக்கு விளக்கம் எழுதியவரும் மனித இனத்தின் மாமேதை என்றும் அக் காலத்தில் கருதப்பட்ட அபுல் வலீத் இப்னு ருஷ்த் அவர்களை சந்தித்தார்கள். சந்தித்த பின்னர் இப்னு ருஷ்த் அவர்கள் இப்னு அறபி அவர்களைப் பற்றி கூறும் போது “ நான் ஆராய்ந்து கண்ட முடிவுகளை இப்னு அறபி அவர்கள் அனுபவித்து அறிந்துள்ளார்கள். இத்தகு ஆன்மீக அனுபவங்களைப் பெற்று இறைவனுடைய கதவுகளை திறந்த ஒருவர் வாழ்ந்த காலத்தில் என்னையும் வாழச்செய்த இறைவனுக்கே எல்லாப் புகழும்! அவரை என் கண்களால் காணும் பாக்கியத்தை எனக்கு வழங்கிய இறைவனுக்கே எல்லாப் புகழும்” என்று கூறினார்.
இவ்வாறு பல்வேறு இறை நேசச் செல்வங்களையும், அறிஞர்களையும் சந்தித்து அளவளாவினார்கள் இப்னு அறபி (றஹ்) அவர்கள். இதன் போது நாளுக்கு நாள் அவர்களின் ஆன்மீகப் படித்தரம் உயர்ந்து வந்தது. தனிமையை நாடிய அவர்கள் ஒரு சிற்றூர் சென்று அங்குள்ள அடக்க விடத்தில் அமர்ந்து தவம் செய்தார்கள். பெரும் பாலும் பட்டினியாயிருக்கும் அவர்கள், சில வேளை வெளியில் வந்து காய்ந்த ரொட்டியை எடுத்து தண்ணீரில் நனைத்து உண்டு உயிர் வாழ்ந்து வந்தார்கள். இக் காலப்பகுதியில் ஹிஜ்ரி 594 ல் ஒரு விஷேட கனவொன்று கண்டார்கள்.
இப்னு அறபி (றஹ்) அவர்கள் அதை புதூஹாத்துல் மக்கிய்யா எனும் நூலில் அவர்களே பின்வருமாறு கூறுகின்றார்கள். “அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அரியணையில் வீற்றிருக்கிறார்கள். அவர்களைச் சூழ ஆதம் (அலை) அவர்கள் முதல் உலகில் தோன்றிய 124000ம் நபிமார்களும், பின்னர் வலிமார்களும் அமர்ந்துள்ளார்கள். இவ்வாறான சிறப்பு மிக்க பேரவை கூட்டப்பட்டிருப்பதற்கான காரணத்தை அறிய நான் ஆசைப்பட்டேன். அதற்கான காரணத்தை ஹூத் (அலை) அவர்கள் பின்வருமாறு விபரித்தார்கள். இத்திருச்சபை உமக்காகவே கூட்டப்பட்டுள்ளது. நபீ (ஸல்) அவர்கள், நபீமார்கள், வலீமார்கள் முன்னிலையில் உம்மை இன்றைய தினம் விலாயத்தே முஹம்மதிய்யாவின் இறுதி வலீயாக பிரகடனம் செய்யப் போகிறார்கள். என்று கூறினார்கள். அவர்கள் இவ்வாறு கூறி வாய் மூடு முன் நபி (ஸல்) அவர்கள் அப்பிரகடனத்தை வெளியிட்டார்கள்.
இப்பொழுது இப்னு அறபி (றஹ்) அவர்களின் புகழ் மேலும் பரவியது. பலரிடமிருந்தும் அன்புக் காணிக்கை பல நூறு திர்ஹங்கள் கிடைத்தன. அவற்றில் தம் குடும்பச் செலவுக்கு போக எஞ்சியதை ஏழைகளுக்கு வழங்கி வந்தார்கள். பிறரின் உதவிப்பணத்தை கொண்டு வாழ விரும்பாத அவர்கள் டமஸ்கஸ் நகரில் வியாபாரம் செய்தார்கள்
அங்கு அவர்களுக்கு பிடவைக்கடை ஒன்றும் இரத்தினக்கடை ஒன்றும் இருந்தன. ஒரு நாள் அவர்களின் கடைக்கு மார்க்க விற்பன்னர் ஒருவர் வந்தார். அவர்களை சோதிப்பதற்காக. மாபெரும் ஞானநூல்களை எழுதும் இவர்கள் எவ்வாறு வியாபாரத்துறையில் ஈடுபட்டுள்ளார்கள். என்பது விளங்காத புதிராக இருந்தது. கடைக்குள் நழைந்தும் அவர்கள் பணத்தை குவித்து வைத்து எண்ணிக்கெண்டு இருந்தார்கள். வந்தவரை அமரச் செய்து விட்டு எண்ணுவதில் ஈடுபட்டிருந்த அவர்கள் பாங்கொலியை கேட்டதும் அந்தப்பணத்தை எல்லாம் பெட்டியில் போட்டு விட்டு அவரையும் அழைத்துக் கொண்டு பள்ளிக்கு புறப்பட்டு விட்டார்கள். இது வந்தவருக்கு பெரு வியப்பை அளித்தது. பள்ளியில் அவர்களே இமாமாக நின்று தொழவைத்தார்கள். வந்தவரும் பின்னால் நின்று தொழுதார். அப்பொழுது தம் கைத்தடியை , ஹவ்ழுக்கு அருகில் மறந்து வைத்து விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. அது வௌ்ளிப் பூண் கட்டப்பட்ட ஐந்து திர்ஹம் மாத்திரம் பெறுமானம் உள்ள கைத்தடி. தொழுகையை விட்டுவிட்டு அதனை எடுந்து வந்து மீண்டும் தொழ அவர் எண்ணினார். அதற்கு மார்க்கத்தில் இடம் உள்ளது என்று அவரின் வெளி மனம் கூறியது.
எனினும் இந்த அற்பப் பொருளுக்காகத் தொழுகையை விட்டுச்செல்வதா என்று அவரின் உள் மனம் வாதித்தது. இப்படியான தடுமாற்றத்துடன் தொழுகையை இமாமுடன் சேர்ந்து தொழுது முடித்தார்கள்.
தொழுது முடித்ததும் “ஹவ்ழ்” அருகே சென்று தம் கைத்தடியை பார்த்தார்கள். அது வைத்த இடத்தில் வைத்த படியே இருந்தது. அதனை மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்டு வந்த பொழுது இப்னு அறபி (றஹ்) அவர்களும் துஆ ஓதி விட்டு வெளியில் வந்தார்கள். தம் முன் எதிர் பட்ட அவரையும் அழைத்துக் கொண்டு உணவுண்ணத் தம் இல்லம் வந்தார்கள். வீட்டில் வகை வகையான உணவுகள் அவர் முன் கொண்டு வந்து பரத்தப்பட்டன. அவரின் உள்ளத்தில் ஒரு கோடி எண்ணங்கள் ஓடி மறைந்தன. “என்ன துறவு இது? பட்டு வாணிபம் செய்து கொண்டு பல வகையான உணவுகளை உண்டு வாழ்வதுவா துறவு?” என தம்முள்ளே தம்மை வினவிக் கொண்டார்.
‘உண்ணுங்கள்’ என்று உபசரித்த வண்ணம் அவரின் முன் பரத்தி வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை அவரின் உணவுத்தட்டில் எடுத்து வைத்து உண்ணுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
“தாங்கள்?” என்று வினவினார் அந்த மார்க்க விற்பன்னர். “எனக்கான உணவுகள் இப்பொழுது வரும்” என்று கூறினார்கள் அவர்கள்.
இவற்றை விட மேலான உணவுகள் அவர்களுக்கென விஷேடமாக தயாரிக்கப்பட்டிருக்கும் போல் இருக்கிறது. என்று எண்ணிக் கொண்டு அவர் சாப்பிட்டார். அப்போது அவர்களின் ஊழியன் ஒரு கோப்பையில் கஞ்சியையும், ஒரு தட்டில் துவையலையும் கொண்டு வந்து அவர்களி்ன் முன் வைத்தார். துவையலை தொட்டுக் கொண்டு அந்தக் கஞ்சியை பிரியத்துடன் குடித்தார்கள். அவர்கள் அதைக் கண்டதும் அவருக்கு தம் கண்களையே தம்மால் நம்பமுடியவில்லை அப்போது அவர்கள் அவரை நோக்கி “சோதித்தது போதுமா? இன்னும் சோதிக்க வேண்டுமா?” என்று புன்முறுவலுடன் வினவியவண்ணம் “நான் இந்த வியாபாரத்தை பிறருக்கு பிழைப்புக்கு வழி ஏற்படுத்துவதற்காக நடத்தி வருகின்றேனே தவிர, வேறில்லை.
இங்குகுவித்துக்கிடக்கும்பட்டு,நவரத்தினங்களிலோ, பணத்திலோ என்மனம் இலயிக்க நான் ஒரு போதும் அனுமதிப்பதில்லை பட்டும் நவரத்தினமும் கடையில் உள்ளன.பணம் பெட்டியில் உள்ளது. அவற்றை என் உள்ளத்தில் நான் ஒரு போதும் கொலுவேற்றி வைப்பதில்லை”
“நானோ ஒரு சாமான்யன். என்னையே நான் துன்பத்திற்காளாக்கிப் பழக்கப்பட்டவன். பல தடவைகள் ‘ஹவ்ள்’ நீரை அருந்திக் கொண்டு பட்டினி கிடந்துள்ளேன். பாயில் படுக்காது சந்தூக்கில் படுத்துறங்கியுள்ளேன். நான் இப்பொழுது உண்பதோ இந்த எளிய கஞ்சியேயாகும். “ஆனால் தங்களோ மார்க்க விற்பன்னர். தொழுகையில் தக்பீர் கட்டியவுடன் ஹவ்ள் அருகே தாங்கள் மறந்து வைத்து விட்டு வந்த கைத்தடியின் நினைவு வர, தக்பீரை விட்டுவிட்டு அதனை எடுத்து வர எண்ணிணீர்கள். ஐந்து திர்ஹம் மட்டும் பெறுமதியான அதன் மீது தங்களின் உள்ளம் இலயித்து நின்றது. தங்களின் உடல் தான் குனியவும் குப்புறவிழவும், எழுந்து நிற்கவும் செய்தது என்று கூறினார்கள். அத்துடன் அவர் அவர்களிடம் மன்னிப்புக் கோரி மீண்டார்.
இப்னு அறபி (றஹ்) அவர்கள் மறைவாக வைக்கப்பட்டிருந்த ஆன்மீக இரகசியஙகளை வெளிப்படையாக மக்களுக்கு எடுத்தரைத்த முதல் மனிதராக விளங்கினார்கள். இதனால் ஷைகுல் அக்பர் (மாபெரும் குருநாதர்) என அழைக்கப்படுகின்றார்கள்.
புதூஹாத்துல் மக்கிய்யா, புஸூஸூல் ஹிகம், புதூஹாத்துல் மதனிய்யா, தர்ஜூமானுல் அஷ்வாக், கீமியா அல் ஸஆதத், ஹில்யதுல் அப்தால் முதலான முன்னூற்றுக்குமேற்பட்ட நூல்களை அவர்கள் எழுதியுள்ளார்கள்.
அவர்களின் நூல்களின் தனித்தன்மை என்னவென்றால், அவற்றை ஒருவர் படித்துச் சிந்திப்பின் அவரின் இதயம் விசாலமடைகிறது. அவரின் துன்பங்கள் அகழ்கின்றன. அவரின் சிக்கல்களுக்கு ஒரு முடிவு காணப்படுகிறது.
இப்னு அறபி (றஹ்) அவர்கள் தங்களின் வாழ்நாளின் இறுதியில் திருக்குர்ஆனுக்கு ஒரு விளக்கவுரை எழுதத் தொடங்கி பதினைந்து பாகங்களுக்கு விளக்கவுரை எழுதினர். இதன் போது அவர்களுக்கு நோய் ஏற்பட்டது. ‘சூரதுல் கஹ்ப்’க்கு விளக்கவுரை எழுதும் போது அதன் 65 வது வசனம் “இவ்விருவரும் வந்த போது (அவ்விடத்தில்) நம் அடியாரில் ஒருவரைக் கண்டார்கள் அவர் மீது நாம் அருள் புரிந்து நமக்குச் சொந்தமான ஒரு ஞானத்தையும் நாம் அவருக்குக் கற்பித்தோம்” என்பதற்கு விளக்கம் எழுதும் போது அவர்களின் மூச்சு நின்றது. இது நிகழ்ந்தது ஹிஜ்ரி 638 ரபீஉல் ஆகிர், பிறை 28 (கி.பி 1240 நவம்பர் 16) வௌ்ளிக்கிழமை இரவிலாகும்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜஊன்
வலீமார்கள் இவ்வுலகில் சூரியனைப் போன்றவர்கள். இங்கு மறைவது போன்று தெரியும் அங்கு உதயமாகி விடுவார்கள். அங்கு மறைவது போன்று தெரியும் இங்கு உதயமாகி விடுவார்கள்.