ஹிஜ்ரி 1338 ம் ஆண்டு தொண்டியை நோக்கி பல்லக்கில் வந்து கொண்டிருக்கிறார் பொருமகனார் ஒருவர். அங்கே அடங்கியிருக்கும் தமது பாட்டனாரை தரிசிப்பதற்காக அவர் வருகின்றார் என்பதை அறிந்த ஊர் மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். வழியிலேயே அவர்களை வரவேற்க வேண்டுமென்ற ஆர்வத்தில் பல்லக்கு வரும் திசையை நோக்கிச் சென்று அதைச் சுமக்கவும் செய்கின்றார்கள்.
பாட்டனார் அடங்கியுள்ள தர்காவுக்கு அன்பர்களுடன் வந்து சேர்கிறார் அவர். அங்கு அமர்ந்தபடி அரபு மொழியில் தமது பாட்டனாரின் புகழ் பாடுகின்றார்கள். கவிதை ஊற்றெடுத்துப் பொருகுகின்றது.
வந்தவர்தான் “பல்லாக்கு வலிய்யுல்லாஹ்” என்று போற்றப்படும் ஹபீப் முஹம்மது ஸதகதுல்லாஹ் அவர்கள் கல்வத்து நாயகம் அவர்களிடம் கல்வி பயின்று, மாப்பிள்ளை லெப்பை ஆலிமிடம் தீட்ச்சை பெற்று அரும் பெரும் ஆன்மீகப் பணிபுரிந்து, கீழக்கரைக்குப் புகழ் சேர்த்த இறைநேசச் செல்வர் பல்லாக்கு வலிய்யுல்லாஹ் அவர்கள்.
தொண்டியில் உறையும் அபூபக்ர் வலிய்யுல்லாஹ், இவர்களின் பாட்டனார். அவர்களின் தர்காவில் அமர்ந்து பல்லாக்கு வலிய்யுல்லாஹ் அவர்கள், அரபு மொழியில் பாமாலை பாடப்பாட, தொண்டி மக்கள் பல்லவியை இசைத்தார்கள்.
அபூபக்ர் வலிய்யுல்லாஹ் அவர்களின் பாரம் பரியத்தில் அவர்களின் புதல்வர் லெப்பை கனி ஆலிம் சாஹிபு வழி வந்த நூர் முஹம்மது சாஹிபு அவர்களின் திருப் புதல்வராக பல்லாக்கு வலிய்யுல்லாஹ் அவர்கள், கீழக்கரையில் பிறந்தார்கள். பிறந்த நாள் ஹிஜ்ரி 1268 ரபீஉனில் அவ்வல் பிறை12. தாயார் பாத்திமா அம்மையாரும், தந்தையாரும் அவர்களுக்குச் சூட்டிய பெயர்தான் ஹபீப் முஹம்மது ஸதகதுல்லாஹ், ‘பல்லாக்குத் தம்பி’ என்றும் செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார்கள்.
பல்லாக்கு வலிய்யுல்லாஹ் அவர்கள், மூன்று வயது பாலகராக இருந்த பொழுது தந்தையார் நூர் முஹம்மது சாஹிபு அவர்கள் மறைந்து விட்டார்க்ள. எனினும் தடையின்றி மார்கக்கல்வி பயின்றார்கள். திருக் குர்ஆனை இளம் வயதிலேயே மனனம் செய்து ‘ஹாபிஸ்’ ஆனார்கள். கல்வத்து நாயகமும் பல்லாக்கு வலிய்யுல்லாஹ்வும் ஒன்றாகக் கல்வி பயின்றார்கள். கல்வத்து நாயகம் இலங்கை பயணம் மேற் கொண்ட போது, இவர்களும் உடன் சென்றார்கள். நாடு திரும்பியதும் இறை தியானத்தில் தீவிரமாக ஈடுபட்டார்கள். கல்வத்து நாயகம் இல்லத்திலேயே தனித்திருந்து இறை தியானம் புரிந்து வந்தார்கள். பல்லாக்கு வலிய்யுல்லாஹ் அவர்கள் கானகம் சென்று வழிபட்டு வந்தார்கள். தென்னகத்தில் பல பகுதிகளுக்கும் சென்று அற்புதங்களை நிகழ்திய அவர்கள், கீழ் திசை நாடுகளுக்கும் செல்லத் தவறவில்லை. புனித ஹஜ் கடமையை அவர்கள் நிறைவேற்றிய போது வயது 23 .
ஞான மார்க்கத்தில் ஈடுபட்டிருந்தாலும் பல்லாக்கு வலிய்யுல்லாஹ், இல்லற வாழ்வைப் புறக்கணிக்கவில்லை. கல்வி கற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே ஆயிஷா அம்மையாரை மணம் புரிந்து கொண்டார்கள். இந்த அம்மையார் மறைவுற்றார். பல்லாக்கு வலிய்யுல்லாஹ் அவர்கள், ஆயிஷா அம்மையாரின் தங்கையை மணந்து கொண்டார்கள். அந்த அம்மையார் பெயர் ஷைமா. சேமநாச்சியார் என்றும் அழைக்கப்பட்டு வந்தார்.
இறைவனின் பேரன்பில் மூழ்கிய ‘மஜ்தூப்’ ஆகவும் பல்லாக்கு வலிய்யுல்லாஹ் அவர்கள் இருந்திருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு ‘ஜத்பு’ ஏற்படுவதுண்டு. உயிரினங்களின் பேச்சை புரிந்து கொள்ளும் ஆற்றலை இவர்கள் பெற்றிருந்தார்கள்.
ஒரு முறை பல்லாக்கு வலிய்யுல்லாஹ் அவர்கள் புறா ஒன்றைச் சுட்டிக்காட்டி இது தம்மை ‘காத்தமுல்வலீ’ என்று சொல்வதாக மற்றவர்களிடம் கூறினார்கள். அவ்வாறே ஒரு வண்டை மற்றவர்களுக்குக் காட்டி, அது தம்மை ‘சையிதுல் ஆலிம்’ என்று மொழிவதாக நவின்றார்கள். இன்னொரு சமயம் தங்கள் மேனியில் அமர்ந்திருந்த ஈக்களைக் காட்டி அவை தம்மை ‘ஒருமுஃமின்’ என்றும், வலிய்யுல்லாஹ் என்றும் சொல்கின்றன என்பதாகக் குறிப்பிட்டார்கள்.
ஒரு முறை கீழக்கரை ஓடக்கரை பள்ளிவாசலில் மவ்லித் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது பல்லாக்கு வலிய்யுல்லாஹ் அவர்கள் இடையிடையே குறுக்கிட்டு இன்னின்னவற்றை ஓத வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதனால் குறித்த நேரத்தில் ஓதி முடிக்க முடியாது என்று தோன்றியதால் அவர்களை அங்கிருந்த சிலர் அழைத்துச் சென்று அருகில் இருந்த அறையில் பூட்டி வைத்து விட்டு வந்து விட்டார்கள். மவ்லித் முடிந்ததும் வந்திருந்தவர்களுக்கு வழங்குவதற்கான ‘தப்றுக்’ அந்த அறையில் தான் வைக்கப்பட்டிருந்தது. இறுதியில் அந்த அறையை திறந்தார்கள். வைக்கப்பட்டிருந்த தப்றுக் இருந்தது. ஆனால் அடைக்கப்பட்டிருந்த பல்லாக்கு வலிய்யுல்லாஹ் அவர்கள் அங்கிருக்கவில்லை. அவர்கள் தெருவில் சென்று கொண்டிருந்ததைப் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர்.
கீழக்கரை பள்ளிவாசலில் தொழுகையை நிறைவேற்றுவதற்காக பல்லாக்கு வலிய்யுல்லாஹ் அவர்கள் அங்க சுத்தி (வுழூ) செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது நீர் நிறைந்த ஹவ்ழிருந்து சில முறை தண்ணீரை கைகளால் வீசியெறிந்தார்கள். இதனைக் கவனித்துக் கொண்டிருந்த சிலர், தண்ணீரை வீசியதற்கு காரணம் கேட்டார்கள்.
‘தொண்டியில் ஒரு தீ விபத்து ஏற்பட்டிருக்கின்றது. சில வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அந்தத் தீயை அணைப்பதற்காகவே அவ்வாறு செய்தேன். தீ அணைந்து விட்டது’ என்று அவர்கள் கூறினார்கள். இதை நம்பாத சிலர், உறுதிப்படுத்திக் கொள்ளும் விதத்தில் விசாரித்து வர ஏற்பாடு செய்தார்கள். ‘வலிய்யுல்லாஹ் விவரம் கூறிய அந்த நேரத்தில் தொண்டியில் தீ விபத்து ஏற்பட்டது என்பதும் பின்னர் தானாகவே அணைந்து விட்டது’ என்றும் தகவல் கிடைத்தது.
பல்லாக்கு வலிய்யுல்லாஹ் அவர்கள் தஞ்சை மாவட்டத்தில் வலிமார்கள் உறையும் ஊர்களுக்கு அவ்வப்போது சென்று வருவார்கள். அதிராம் பட்டினத்திற்கு சென்றிருந்தார்கள். அவ்வூரில் ஒருவர் வலிய்யுல்லாஹ் அவர்களை இகழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தார். ஞானதிருஷ்டியினால் வலிய்யுல்லாஹ் அவர்கள் இதனை உணர்ந்து கொண்டார்கள். அந்த அன்பர் ஒரு கூட்டத்தில் ஒரு நாள் நின்றிருந்தார்.
அவரை அடையாளம் கண்டு கொண்ட வலிய்யுல்லாஹ் அவர்கள் அருகில் வரும் படி அழைத்தார்கள். இதை எதிர்பார்த்திடாத அவர் பயந்து கொண்டே பக்கத்தில் வந்து நின்றார். ‘மனம் போன போக்கில் பேசிக் கொண்டு திரியாதே. நாவை அடக்கிப் பேசி நல்லவராக மாறு’ என்றார்கள். தான் அவர்களை பழித்துரைத்து வந்ததற்காக அவர் வருந்தித் திருந்தினார்.
மற்றொரு சமயம் பல்லாக்கு வலிய்யுல்லாஹ் அவர்கள் சில அன்பர்களோடு சென்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது, ‘யானை வருகிறது’ என்றார்கள். உடன் வந்தவர்கள் சுற்று மற்றும் திரும்பிப் பார்த்தார்கள். யானை கண்ணில் படவில்லை. ஆனால் சற்றுநேரத்தில் அவர்களை வியப்புக்கு ஆளாக்கும் வித்தில் ஒரு யானை தோன்றியது. வலிய்யுல்லாஹ் அவர்களுக்கு அது பணிந்து சென்றது.
அருள் வாக்குடையவர்களாக விளங்கிய வலிய்யுல்லாஹ் அவர்களின் ஆசியினால் குறை நீக்கப்பெற்றவர்கள் பலர். கீழக்கரையை சேர்ந்த ஹாஜி கே.டி.எம். ஹூஸைன் , மகப் பேறில்லாமல் இருந்து வந்தார். வலிய்யுல்லாஹ் அவர்களைக் காண சென்ற போது, அவருக்குக் குழந்தைகள் இருக்கின்றார்களா என்று வினவினார்கள். பதில் சொல்லத் தயங்கிய ஹாஜியார் அவர்களைப் பார்த்து ‘குழந்தைச் செல்வம் பெறுவீர்கள்’ என்று மும்முறை வலிய்யுல்லாஹ் அவர்கள் கூறினார்கள். அதன் படி பிள்ளைச் செல்வம் பெற்றார் அவர்.
நம்புதாளையும் முத்துவாப்பாவும்
முத்துவாப்பா, முத்துவாப்பா என அன்போடு வாய் நிறம்ப அழைக்கப்படும் மேன்மைமிகு பல்லாக்கு வலிய்யுல்லாஹ் (றஹ்) அவர்கள் தொண்டிக்கு வருகை தந்திருக்கும் செய்தி அவ்வூரின் அண்மையிலிருக்கும் நம்புதாலை வாசிகளுக்கு தெரிய வந்த பொழுது அவ்வூரில் இருந்த அறிஞர்கள், பெரியோர்கள் எல்லாம் பல்லாக்கு வலிய்யுல்லாஹ் அவர்களை தங்களின் ஊருக்கு வரும் படி அழைத்தனர். அவ்வன்பழைப்பை அவர்கள் ஏற்றுக் கொள்ளவே அவ்வூரில் இருந்த பல்லக்கில் இவர்களை அமர்த்தி தங்கள் தோள்களிளே சுமந்து நம்புதாலைக்குக் கொண்டு வந்தார்கள். புகழ் கவி விண்ணைப் பிளக்க இந்நல்லாரை ஊர் சுற்றி முடித்து பள்ளிவாசலுக்குக் கொண்டு வந்தனர். அங்கு வைத்து அவ்வூர் மக்களின் நல்வாழ்விக்காக பல ஆசுகவிகளை இசைத்தனர் பல்லாக்கு வலிய்யுல்லாஹ் (றஹ்) அவர்கள்.
1929- ம் ஆண்டு நம்புதாளைக்கு விஜயம் செய்த போது இவ்வூரில் கடுமையாக காரலா நோய் பரவி கொள்ளை கொண்டுள்ளதை மக்கள் பீதியுடன் கருணை மிக்க வலிய்யுல்லாஹ் அவர்களிடம் முறையிட்ட போது வலிய்யுல்லாஹ் அவர்கள் நம்புதாளையை தனது அருள் ஆட்சிக்கு உட்பட்ட ஊராக தத்து எடுத்துக் கொண்டு இவ்வூரில் உள்ள ஒவ்வொரு குடியும் மாதம் ஒன்றுக்கு அரையணா வீதம் வருடத்திற்கு ஆறு அணா இருசால் செலுத்தி வர வேண்டும் என கட்டளையிடப்பட்டு அதன் படி மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்று வரை இருசால் செலுத்தி வரப்படுகிறது. அன்று முதல் இவ்வூரில் காளரா நோய் இல்லாமல் ஆகிவிட்டது.
இப் பெரியார் அவர்கள் கி.பி. 1925 ம் ஆண்டிலிருந்து அகிலத்தின் அருட் பிழம்பாய் வந்துதித்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மீது மவ்லித் ஷரீப் ஓதி அன்னதானம் வழங்கும் படி நம்புதாளை மக்களுக்கு ஆலோசனை கூறினார்கள். இன்று வரை அவ்வூர் மக்கள் அதைப் பேணிவருகின்றார்கள்.
இந் நல்லார் அவர்கள் நம்புதாளையில் இருக்கும் பொழுது ஒரு சமயம் ஸுப்ஹுத் தொழுகைக்குப் பிறகு அண்மையில் உள்ள ஆயா குளத்தில் மீன் பிடித்து உண்ண ஆவலாய் உள்ளது என்றார்கள். அக்கணமே மக்கள் பல வலைகளைக் கொண்டு வந்து மீன் பிடித்தனர். பிடித்த மீன்களில் சிலதைச் சுட்டிக் காட்டி அதை தண்ணீரில் மீண்டும் விட்டு விடும் படியும், சிலதை சமைப்பதற்கு எடுத்துக் கொள்ளும் படியும் ஏவினர். அச்சமயம் சிறுவன் ஒருவன் தன் தோளில் மைனா ஒன்றை வைத்து விளையாடிக் கொண்டு இவர்கள் முன் வர ஏ! நங்க நத்தியே! அற்ப ஆயுள் கொண்ட பறவையே! அதற்குள் பல்லாக்குத் தம்பியை பார்த்து விட்டு வரலாம் என்றா வந்திருக்கின்றாய்? என்று மொழிந்து சில வினாடிகள் தான் இருக்கும், மீன்பிடி குளத்தின் மேல் வட்டமிட்டுக் கொண்டிருந்த செம்பருந்து ஒன்று சர்….ர்….ரென்று கீழே இறங்கி அதனை ராஞ்சி சென்றது. என்று இயம்புகின்றனர் சிலர்.
பல்லாக்கு வலிய்யுல்லாஹ் அவர்களின் புதல்வர் சையிது முஹம்மது ஸாஹிபு ஒரு முறை காரைகாலுக்குச் சென்றிருந்தார். மவ்லித் மாதமான றபீஉனில் அவ்வல், ஆண்டு ஹிஜ்ரி 1344. காரைக்கால் பிரமுகர் தம்பி ஸாஹிபு மரைக்காயர் சிறப்பாக தமது இல்லத்தில் மவ்லித் விழாவை நடத்துவார். மகனார் அந்த விழாவுக்கு சென்றிருந்த சமயம், பல்லாக்கு வலிய்யுல்லாஹ் அவர்கள் புதல்வரின் வீட்டுக்கு உணவு உட்கொள்ளச் சென்றிருந்தார்கள்.
அந்தச் சமயத்தில் அவர்கள், “சேமு நாச்சி மகன் இறந்து விட்டால், பல்லாக்குத் தம்பி என்ன செயவார்?” என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டார்கள். இதைச் செவியுற்ற மருமகள் அதிர்ச்சியும் மனக் கலக்கமும் அடைந்தார். மாமனாரின் வாக்கு பலித்து விடுமோ என்ற பீதி அந்த அம்மையாருக்கு! உடனே கரைக்காரலுக்குத் தந்தி கொடுத்து கணவரின் நலத்தை விசாரித்தார்.ஸையிது முஹம்மது ஸாஹிபு அவர்கள் நலமாக இருந்து வருவதாக பதில் கிடைத்தது.
மற்றொரு சமயம் ஸையிது முஹம்மது ஸாஹிபு அவர்கள் தூத்துக்குடிக்குச் சென்றிருந்தார்கள். அதே ஆண்டு றமழான் மாதம் அது. அப்பொழுதும் பல்லாக்கு வலிய்யுல்லாஹ் அவர்கள், சேமுநாச்சி மகன் இறந்து விட்டால் பல்லாக்குத் தம்பி என்ன செய்வார்? என்று சொல்லிக் கொண்டார்கள். இம்முறை மருமகளும் மற்றவர்களும் இதை பெரிது படுத்தவில்லை.
ஆனால், வலிய்யல்லாஹ் அவர்கள், தங்கள் மருமகளை அழைத்து ‘உம் கணவருக்கு இவ்வுலகில் ஒன்றுமில்லை. மறுமையில் தான் நற்பேறுகள் உள்ளன. என்று சொன்னார்கள். அந்த அம்மையார் கண்ணீர் விட்டார்கள். சரியாகப் பன்னிரன்டாம் நாள், புதல்வர் ஸையிபு முஹம்மது ஸாஹிபு அவர்கள் கீழக்கரையில் காலமானார்கள்.
புதல்வர் மறைந்த பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பல்லாக்கு வலிய்யுல்லாஹ் அவர்கள் மறைவுற்றார்கள். அப்பொழுது அவர்களுக்கு வயத 92. இறப்பெய்வதற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு தங்கள் முடிவைப் பற்றி அறிவித்தார்கள். ‘பல்லாக்குத் தம்பி மறையப் போகிறார். ஏராளமான அன்பர்கள் வெளியூர்களில் இருந்து வருவார்கள்’ என்றார்கள். அதன் படி 1360 ம் ஆண்டு துல்கஃதா இருபத்தைந்தாம் நாள் வௌ்ளிக்கிழமை அன்று வழக்கம் போல் காலை உணவு உட்கொண்ட அவர்கள் ஜூம்ஆ நேரத்தில் மறைந்தார்கள். கீழக்கரை புதுப் பள்ளிவாசலை அடுத்துள்ள தோட்டத்தில் பல்லாக்கு வலிய்யுல்லாஹ் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.