பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ்
பேணுதல் மிகுந்த வலிய்யுல்லாஹ்
அரிய ஆலிம் பரம்பரையில்
அவனியில் தோன்றிய வலிய்யுல்லாஹ்
நாகூர் ஆலிம் பரம்பரையில்
அலியார் ஆலிம் புத்திரராய்
அப்துல் ஜவாத் வலீ ஆலிமென
அழைக்கும் பெரிய வலிய்யுல்லாஹ்
காத்த நகரின் வலிய்யுல்லாஹ்
கல்விக் களஞ்சிய வலிய்யுல்லாஹ்
ஏத்தமாய் எமக்கு இறை கூடம்
என்றும் அருளிய வலிய்யுல்லாஹ்
அஹ்மத் மீரான் வலிய்யுல்லாஹ்
திருக் கரம் பற்றிய வலிய்யுல்லாஹ்
அஹதை அறிந்து அவன் வழியில்
அவனியில் நடந்த வலிய்யுல்லாஹ்
ஹக்கன் காட்சி தினம் கண்டு
ஹக்கில் லயித்த வலிய்யுல்லாஹ்
ஹக்கும் கல்கும் எதுவென்று
காட்டித் தந்த வலிய்யுல்லாஹ்
குல்லிய்யஹ் அறபுக் கலாபீடம்
குவலயம் தந்த வலிய்யுல்லாஹ்
பத்ரிய்யஹ் தைக்கிய்யஹ் மஸ்ஜிதையும்
பாருக்களித்த வலிய்யுல்லாஹ்
றமழான் மாதம் முழுவதுமே
நல்லுரை சொல்லிய வலிய்யுல்லாஹ்
றமழான் நோன்பை பக்குவமாய்
காத்து நோற்ற வலிய்யுல்லாஹ்
குணிந்த பார்வை நிமிராது
குதி நிதி பாத அணியோடு
மெதுவாய் நடக்கும் வலிய்யுல்லாஹ்
மேன்மை தங்கிய வலிய்யுல்லாஹ்
வௌ்ளைக் கோட்டுச் சாரனுடன்
பெனியன் சால்வை தொப்பியுடன்
அள்ளிடும் வௌ்ளை தாடியுடன்
அழகாய் ஒளிர்ந்த வலிய்யுல்லாஹ்
கையை பின்னால் கட்டியவர்
காலை மெதுவாய் தூக்கி வைப்பார்
கையை காலை கண்களையும்
ஹக்காய் செலுத்திய வலிய்யுல்லாஹ்
ஸபர் மாதம் முழுவதுமே
சங்கை நபிகள் பெயராலே
வித்ரிய்யஹ் ஓதிய வலிய்யுல்லாஹ்
விரிகடல் ஞான வலிய்யுல்லாஹ்
ஸபர் மாதக் கடைசிப் புதன்
சாந்தம் பெறவே மக்களுக்கு
அஸ்மா இஸ்மை எழுதி நிதம்
அன்பாய் வழங்கிய வலிய்யுல்லாஹ்
றபிஉனில் அவ்வல் வசந்தத்தில்
வசந்தம் பொங்கும் மௌலீதை
நாளும் ஓதி முடிவினிலே
நல் கந்தூரி கொடுத்த வலிய்யுல்லாஹ்
வாரந் தோறும் சனி காலை
வள்ளலிறசூல் புகழ் மாலை
வழங்கும் புர்தஹ் ஷரீபதனை
வழக்கமாய் ஓதிய வலிய்யுல்லாஹ்
வள்ளலிறசூல் பெயராலே
ஓதிய புர்தஹ் ஷரீபுக்கு
பறகத் வேண்டி கந்தூரி
பதமாய் கொடுத்த வலிய்யுல்லாஹ்
அப்துர் றஊப் எனும் அரும் வலீயை
அவனிக்கீந்த வலிய்யுல்லாஹ்
அப்தாய் இருந்து அஹதவனில்
அடங்கிய மாபெரும் வலிய்யுல்லாஹ்
தன்னை ஹக்கில் பனாவாக்கி
தத்துவம் சொல்லி மக்களுக்கு
தன்னை ஒழித்து வாழ்ந்த மகான்
தன்னிகரில்லா வலிய்யுல்லாஹ்
ஹக்கைப் பயந்து நடந்தார்க்கு
இரண்டு சொர்க்கம் உண்டென்று
இனிதாய் உரைத்து வாழ்ந்த மகான்
பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ்
சாந்தம் அளிக்கும் கபுறறைக்கு
பதிலாய் பெறுமதிக் காணியொன்றை
பள்ளியின் பெயரில் எழுத வைத்து
பள்ளி கொண்ட வலிய்யுல்லாஹ் –
– பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ்
சொல்லும் செயலும் ஒன்றாக
சொர்க்கம் இரண்டைப் பெறுவதற்கு
அல்லும் பகலும் இறை திக்ரை
அயராதுரைத்த வலிய்யுல்லாஹ்
வலிமன் காப மகாம றப்பிஹீ ஜன்னதான்
வசனம் கேட்டதும் தானடங்கி
கண்களை மூடிய வலிய்யுல்லாஹ்
காமிலாம் நாயகம் வலிய்யுல்லாஹ்
ஷவ்வால் மாதம் பதினைந்தில்
மறுமையை நோக்கிய வலிய்யுல்லாஹ்
மறைந்தும் மறையாப் பேரொளியாம்
மண்ணில் ஒளிரும் வலிய்யுல்லாஹ்
ஆக்கம்
A.L.A ஜப்பார் (G.S.O.)