இறையடிமை இன்ஸானே!
ஈமான் கொண்டவனே!
இறைகடமை ஹஜ்ஜதனை
இதயத்தால் எண்ணிப்பார்!
இறையில்லம் சென்று நீ
“இபாதத்” செய்யப்பார்!
இரண்டென்ற இணை நீங்க
“இஃறா” மை நீ உடுத்துக் கொள்!
ஒன்டென்ற “தௌஹீத்” ஓங்க
“தல்பியா” வை உரத்துச் சொல்!
நானென்ற உணர்வு போக்கி
நாயனிடம் எழுந்து நில்!
உள்ளமை “அல்லாஹ்” வை
உள்ளத்தால் உணர்ந்துவிட
இல்லம் “கஃபா” வை
ஏழு முறை சுற்றி விடு!
கள்ளமை ஷைத்தானை விரட்ட
கல்லெடுத்து எறிந்துவிடு!
மலை அறபா தரித்து – நீ
மறுமையை நினைத்திடு!
மலை போன்ற பாவம் நீங்க
மன்றாடிக் கேட்டிடு!
தலைமுடி சிரைத்து நீ
தலைக்கனம் போக்கிடு!
நில்லாமல் ஓடோடி
நிலையில்லா உலகை உணர்ந்திடு!
அல்லப்படும் அடியானே! – நீ
அவனளவில் சேர்ந்திடு!
வல்லமை வல்லோனின்
வாய்மையை அறிந்திடு!
குறைகொள்கை “குப்ரை”
கொன்று ஒழித்திட
நிறைவாக நீயும்
குர்பானை கொடுத்திடு!
அரை குறை எண்ணத்தை
அடியோடு கலைத்திடு!
இறைநேசர் இப்றாஹீம்
இஸ்மாயீல் இருவரின்
இணையற்ற தியாகத்தை
எண்ணியே பார்த்திடு!
முறையாக முதலோனை
முன்னோக்கி இருந்திடு!
கண்மணி நாயகத்தின்
கபுறுக்குச் சென்றிடு!
பொன்மேனி தாங்கிய
மண்ணை நீ மணந்திடு!
உன்னுயிர் உடலை விட
உத்தமரை கொண்டிடு!
இல்லம் கஃபா சென்று
இறைகடமை செய்யும் நீ
உள்ளம் வெள்ளையாய்
உண்மையில் வந்திடு!
நல்லோராய் வாழ்விலே
நாளெல்லாம் வாழ்ந்திடு!
கவிஞர். M.A.C. றபாய்தீன் J.P