Tuesday, October 8, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“ஷம்சுல் உலமா” மிஸ்பாஹீ வாழ்க!

“ஷம்சுல் உலமா” மிஸ்பாஹீ வாழ்க!

      -கவித்திலகம் இப்றாஹீம் நத்வீ

அறிவுக்கண் திறந்த
ஆத்மிகப் பேரொளியே
அகவிருளை நீக்கிவைத்த
அருள் ஞானம் கொண்டவரே
ஆண்டு பல வாழ்ந்திடவே
அல்லாஹ்வை பிரார்த்தித்தேன்
அன்புள்ளம் கொண்டவரே
அகமகிழ்ந்து வாழ்த்திடுவீர்!

தியாகத்திரு நாளாம் திக்கெல்லாம் புகழ் நாளாம்
திருவருள் சொரி நாளாம்
தியாகங்கள் சொரி நாளாம்
தரணியிலே நீங்கள்
தித்திக்கும் பேரின்பம்
தனித்துவங்கள் கொண்டுயர
துய்யோனை வேண்டுகின்றேன்

சற்குணத்தின் சற்குருவே
சாந்தமொழிர் இன்முகமே
சலனமற்ற மனங்கொண்ட
சமூகத்தின் தீன் சுடரே
சத்தியத்தை நிலை நாட்டி
சரித்திரங்கள் படைத்தவரே
சங்கையப்துல்ஜவாத் வலியின்
சத்தியமே வாழ்க என்றேன்

உத்தமரே உம்போதம்
உணவாக நானுண்டேன்
உம்மாலே உயிர் பெற்றேன்
உம்போதம் உளம் சுமந்தேன்
உலக​மெனும் மாயையதன்
உட்பொருளை உணர்து கொண்டேன்
உவகையுடன் வாழ்த்துகின்றேன்
உரவோரில் உயர் ஷம்ஸே!

இவ்வுலகம் மறுவுலகம்
இடர் நீக்கும் சற்குருவே
இறை நேசர் பரம்பரையில்
இகம் வந்த சொல்லமுதே
இணையில்லா இரத்தினமே
இறை நூல்கள் படைத்தவரே
இல்லையுங்கள் போலொருவர்
இல்மினிலே இரவியானீர்!

இப்றாஹீம் நத்வியெந்தன்
இதயத்தை ஆள்பவரே
இறை ஞானக் கவ்ம்களுக்கு
இறையிரசம் தருபவரே
இரக்க மனம் கொண்டவரே
இழவு எனைத்தொடுகையிலே
இறையிவனைப் பொருந்திடவே
இறைஞ்சிடுவீர் நாயகமே!

அருஞ் சொற்பத விளக்கம்-
01)சலனம்-சஞ்சலம்
02)உரவோர்-அறிஞர்
03)இரவி-சூரியன்
04)இழவு-மரணம்

RELATED ARTICLES

Most Popular

Recent Comments