கவித்திலகம் இப்றாஹீம் நத்வீ
ஹாஜ்ஜாக்களே வாருங்கள்
கடும் தவம் புரிந்து
சுடும் தரையில் கால் பதித்து
கஷ்டங்கள் அனுபவித்து
ஹஜ்ஜதனை நிறைவு செய்த
ஹாஜிகளே வாருங்கள்
இறைஜோதிகளே வாருங்கள்!
பணத்தாசைதனையறுத்து
பெருந்தொகையைச் செலவு செய்து
படைத்தோனை வணங்கிடவே
பெரும்தூரம்தனைக்கடந்தீர்
பயணத்தில் களைப்புற்று
பயகம்பர் ஆசியுடன்
புனித ஹஜ் முடித்திட்ட
புனிதர்களே வாருங்கள்!
புனிதர்களாம் நபிமார்கள்
பேரிறையின் வலீமார்கள்
பாதம்பட்ட பூமியிலே
பாதங்கள் தொட்டவர்காள்!
பாவங்கள் உதிர்தவர்காள்!
பரிசுத்தம் பெற்றவர்காள்!
பாலர்காள் வாருங்கள்
பறகத் நாம் பெறுவதற்கு!
கர்த்தன் அல்லாஹ்வின்
கஃபாவை கண்டவர்காள்!
கட்டி முத்தம் சொரிந்தவர்காள்!
கண்கள் குளிர்ந்தவர்காள்!
கண்ணீர் வடித்த வர்காள்!
கால்கடுக்க அதில் நின்று
கடும் வணக்கம் புரிந்தவர்காள்
கனிவுடனே வாருங்கள்!
இஹ்றாம் உடையுடுத்து
இருள் பாவம்தனைக்களைந்து
இலங்கும் வெண்துணிபோல்
இதயம் வெளித்தவர்காள் !
இப்றாஹீம் நபிதியாகத்தை
இகத்தில் செய்த வர்காள்!
இங்கோடி வாருங்கள்
எம்மிதயம் ஔி பெறவே!
கஃபாவை தவாப் செய்து
கல்மனம் கரைந்தீர்கள்
கல்லெறிந்து ஷைத்தானை
கல்பில் அழித்தீர்கள்
குர்பான்தனைக் கொடுத்து
கொடிய நப்ஸை கொன்றீர்கள்
குளிர் ஸம்ஸம்தனைப்பருகி
கழுவிவிட்டீர் மனவழுக்கை
ஹாஜிகளே வாருங்கள்-இறை
பக்தர்களே வாருங்கள்
ஆசித்தோம் உம் வரவை
நேசித்தோம் உம் மனதை
முஸாபஹா செய்திடவே
மனம் மகிழ்ந்து நிற்கின்றோம்
ஹாஜிகளே வாருங்கள்
ஹஜ்கதைகள் சொல்லுங்கள்.