கவித்திலகம் மாதிஹுர்றஸூல் HMM. இப்றாஹீம் நத்வீ.
மாண்புடையோன் அல்லாஹ்வின் நோன்பை நோற்கும்
மனிதர்கள் செய்கின்ற நற்செயல்கள்
எண்ணற்ற கூலிதனை இறையிடத்தில்
இமயமலை போல் குவிக்கும் வணக்கமாகும்.
நோன்பாளி நித்திரையும் மூச்சும் கூட
நேய இறை வனுக்குகந்த வணக்கமாகும்.
நோன்பாளி சிந்தனையும் பேச்சும் கூட
நிகரில்லா நன்மையொளிர் வணக்கமாகும்.
+++++=====+++++
நரகத்தின் வாசலெல்லாம் மூடும் மாதம்!
நாயனருள் பூமியிலே இறங்கும் மாதம்!
முரடர்களும் மனமுடைந்து வணங்கும் மாதம்!
திருடர்களும் திருந்தியுளம் பணியும் மாதம்!
மரணித்த பாவிகட்கும் வேதனைகள்
மிகக்குறைவாய் கிடைக்கின்ற மேன்மை மாதம்!
சொர்க்கத்தின் மாளிகைகள் திறக்கும் மாதம்!
சிக்கனமாய் வாழ்வதற்கு வந்த மாதம்!
+++++=====+++++
உண்ணாமல் பருகாமல் இருந்தால் மட்டும்
உயர் நோன்பை நோற்றவர்களாக மாட்டோம்!
எண்ணங்கள் பரிசுத்தம் இல்லையானால் –
எதைச்செய்தும் நற்பதவியடையமாட்டோம்!
கண்ணியமாய் இந்நாளைப் பேணி, வாழ்வில் –
கலிமாவின் குணம்கொண்டு ஒழுகாவிட்டால் –
ஆண்டவனின் கோபம்தான் எம்மை நோக்கி
அடியெடுத்து வைத்தெம்மை வதைத்தே தீரும்!
+++++=====+++++
இன்பம் தரும் உயர் நோன்பை நோற்றவர்க்கு
இதயத்தில் இரண்டுமுறை இன்பமுண்டு
ஒன்று :- அவன் நோன்பதனைத் திறக்கும் வேளை;
உளத்தினிலே உண்டாகும் பெருமகிழ்வு!
மாண்புடையோன் அல்லாஹ்வின் கூலியைத்தான் –
மறுமையிலே பெறுகையிலே மறுமகிழ்வு!
நோன்பாளிக் கிறையளிக்கும் கண்ணியத்தை
விண்டு விட முடியாது மனித நாவு!