ஆக்கம் : மௌலவீ MJ. அஹ்மத் ஸுஹ்ரீ (றப்பானீ)
அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் ‘நிச்சயமாக, அல்லாஹ்வாகிய நானும், என்னுடைய அமரர்களும் (அந்த) நபியின்மீது ஸலவாத்துச் சொல்கின்றோம். ஈமான் கொண்ட விசுவாசிகளே! நீங்களும் அந்த நபிமீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுங்கள்’ என்று கூறுகின்றான்.
அல்லாஹ்வும் அவனுடைய அமரர்களும் செய்யக்கூடிய ஓர் வணக்கமென்றால், அது அந்த நபியின்மீது சொல்லக்கூடிய ஸலவாத்தையன்றி வேறு ஏதுண்டோ? சொல்வதற்கரிய வசனத்தை இறக்கி, மேன்மைப்படுத்திய அந்த நபிகள் கோமகனார் யார்..?
‘இறைவனே! உன் திருப்பெயர் நானறிவேன். இருப்பினும் உன் திருப்பெயருடன் இணைக்கப் பெற்றிருக்கும் பெயர் தங்கிய மாமகனை நானறியேனே? இவர்கள் யார்…?
‘ஆதமே! இவர் உன்னுடைய குழந்தைகளில் ஒருவர் பிற்காலத்தில் இறுதித் தூதராக வந்துதிப்பார். இவர் இன்றேல் நீ இல்லை’ என்றான் இறைவன்.
‘சற்குருவை மிகைத்த சிஷ்யன்’ போல்,’தந்தையை மிஞ்சிய தனயன்’ போல் பிறக்கும் முன்பே தன்னுடைய மகோன்னதத் தன்மையை எடுத்துக் காட்டி, தந்தையை விழிக்கச் செய்த அந்த மாமன்னவர் யார்…?
கருணையில் மன்னவர்,கார்முகில் வென்றவர், எம்மையெல்லாம் ஆழ்பவர், இறையொளியின் முதலொளி, அகிலத்தார்க்கோர் அருட்கொடையாய் வந்துதித்த எம் பெருமானார் முஹம்மது முஸ்தபா (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைத் தவிர இப்பூவுலகில் இத்தகு சிறப்புமிக்க கோமகன் வேறுயார்தான் உள்ளார்..? எவருமே இல்லை!
அன்று, அரேபிய தீபகற்பமே பொழிவுற்றுப் பிரகாசித்தது. மக்களின் உள்ளங்களெல்லாம் அமைதி பெற்றாப்போல் ஓர் நிலை. எங்கும் அமைதியே உருவெடுத்து ஆடியது.
எம்மழகைக்காண பேரழகுமிக்க ஓர் நபீ பிறக்கப் போகிறார் என்பதை அறிந்த மாலை மதியவன், வெட்கத்தால் மேகத்தில் நுழைந்து விட்டான். அதற்கும் அழகு சேர்த்தாப்போல் நட்சத்திரங்களெல்லாம் பரிணமித்துக் கண்களை சிமிட்டிக் கொண்டிருக்கும் காட்சியோ கண்கொள்ளாக் காட்சியாகத்தான் இருந்தது.
வானவர்களெல்லாம் சுடர்வீசும் கொடிகளைத் தாங்கிய வண்ணம் மாமகனின் உதயத்தை வழிமேல் விழிவைத்தவர்களாக ஆமினா (றழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வீட்டுக் கதவடியில் ஆனந்தமே உருவெடுத்தாப்போல் மலர் தூவி நின்றனர்.
‘எஜமான், எஜமான்’ என்று தொலைவில் ஓர் சப்தம் கேட்கிறது. அபூலஹப் சப்தம் வந்த திசையை ஏறிட்டுப் பார்க்கிறான். தூரத்தில் தன்னுடைய அடிமைப் பெண் துவைபதுல் அஸ்லமிய்யா திசைகெட்டு சந்தோசம் முகத்தில் தவழ ஓடோடி வருகிறாள்.
சந்தோசப் பெருமூச்சுடன் முன்னே நின்ற தன்னுடைய அடிமைப் பெண்ணை நோக்கி ‘துவைபாவே! யாது நேர்ந்ததோ உமக்கு..?’ என்று ஆவலாய்க் கேட்டான் அபூலஹப்.
‘எஜமானே, உம்முடைய சகோதரர் அப்துல்லாஹ்வுக்கு அழகின் உருவாய் ஓர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இச்சுபச் செய்தியைத் தங்களுக்குத் தெரிவிக்கவே நான் ஓடோடி வந்தேன்’ என்றாள் துவைபா.
‘தேனினிக்கும் பேரின்பம் தந்தாயே. இச்சுபச் செய்தி சொன்னதனால் உன்னை இப்பொழுதே அடிமைத் தனத்திலிருந்து உரிமையிட்டேன்’ என்றவனாய் சந்தோஷத்தில் சிறகடிக்கப் பறந்தான் அபூலஹப்.
இச் சம்பவத்தைப் பற்றி அல்ஹாபிழ் ஷம்சுத்தீன் இப்னு நஸ்றுத்தீன் அத்திமஸ்கீ (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தங்களின் ‘மௌரிதுஸ் ஸாதீபீ மௌலிதில் ஹாதீ’ எனும் நூலில்…
‘அவனுடைய இரண்டு கைகளும் நாசமாகட்டும் என்று அல்குர்ஆனில் இகழப்பட்டவனாகவும், நிரந்தரமான நரகத்தில் என்றும் குடியிருப்பான் என்று இழித்துரைக்கப்பட்ட ஓர் காபிர் (அபூலஹப்). பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிறப்பை சந்தோஷம் கொண்டு தன்னுடைய அடிமைப் பெண்ணை உரிமையிட்டதன் காரணமாக, அவனுக்கு ஒவ்வோர் திங்கட்கிழமைகளிலும் வேதனை குறைக்கப்படுகின்றது என்றால்…
தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிறந்த தினத்தை மகிழ்வுற்று, கண்ணியம் செய்து இறுதியில் ஓர் ‘முவஹ்ஹித்’ (ஏகத்துவவாதி)யாக மரணிக்கக்கூடிய ஓர் விசுவாசியைப் பற்றி என்ன நினைக்கிறாய்?’ என்று கேட்கின்றார்கள்.
இச் சம்பவத்தைப் பற்றி இப்னு கதீர் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் தங்களின் ‘அல்பிதாயா வன்னிஹாயா’ (பக்கம்:272-273),’ஸீறதுன் நபீ’ (பாகம்:01, பக்கம்:124),’மௌலிதுன் நபீ’ (பக்கம்:21) ஆகிய நூல்களில்…
‘பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு முதன்முதலாகப் பாலூட்டி வளர்த்தவர், அபூலஹபுடைய அடிமைப் பெண் துவைபாவாகும். அப்பெண்ணை பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறந்து விட்டார்கள் என்ற சுபச் செய்தியினைச் சொன்னதற்காக வேண்டி அவன் உரிமையிட்டான்.
அபூலஹப் மரணித்ததன் பின்னால் அவனுடைய சகோதரர் அப்பாஸ் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கனவில் கண்டு ‘உம்முடைய மரணத்தின் பின்னால் எதைப் பெற்றுக் கொண்டீர்?’ என்று கேட்டதற்கு,’நான் எவ்வித நற்காரியத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை. ஆயினும் என்னுடைய அடிமை துவைபாவை உரிமையிட்டதன் காரணமாக பானம் வழங்கப்படுகிறேன்’ என்று கூறிய அபூலஹப், பெருவிரலுக்கும் அதை அடுத்து வரக்கூடிய விரலுக்கும் இடையிலுள்ளதை சுட்டிக் காட்டினார் என்ற விபரத்தினை இமாமவர்கள் கூறிக் காட்டுகின்றார்கள்.
மேற்கண்ட இரண்டு ஆதாரங்களின் சாரம் கொண்டு அபூலஹப் ஓர் காபிராக-இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவனாக இருந்தும் அவனுக்கு இப்படிக்கொத்த பாக்கியம் கிடைத்தது பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீலாதை – பிறந்த தினத்தை மகிழ்வுற்று சந்தோஷம் கண்டதே அன்றி வேறில்லை.
சிறுபராயத்திலிருந்தே அன்பின் உறைவிடமாகவும், பண்பின் பொன்னிலமாகவும் உண்மையும் நம்பிக்கையும் ஒருங்கே உருவெடுத்தாற்போல் வாழ்ந்து வந்த எம் பெருமான் முஹம்மது முஸ்தபா (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கொடையிலும், தயாள குணத்திலும் மேன்மையானவர்களாகவும் நற்குணம் தங்கியவர்களாகவும் வாழ்ந்தார்கள்.
தனக்கென்று நாளைக்கென ஒரு காசுகூட சேர்க்காமல் தன்னுடைய எஜமானாகிய இறைவனையே நம்பி வாழ்ந்து வந்த மாமகன் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களையன்றி இவ்வுலகில் வேறு யார்தான் உள்ளார்…?
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தங்களின் இறுதித் தருவாயிலே ஸெய்யிதா ஆயிஷா (றழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வீட்டிலே உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மனம் அமைதி பெறுவதாக இல்லை.
உடனே தம் அருகே உறங்கிக் கொண்டிருந்த தம் அன்புத் துனைவியாரை அணுகி,’என் அன்பின் துனைவியாரே! எம்முடைய வழக்கத்திற்கு மாற்றமாக இன்று ஏதாவது செய்துள்ளீரா?’ என்று கேட்டார்கள்.
அதற்குத் துனைவியார் ‘பெருமானே! தங்களுக்கு சுகயீனம் ஏற்பட்டிருப்பதன் காரணமாக ஐந்து நாணயங்களை நாளைக்காக எடுத்து வைத்துள்ளேன் நாயகமே’ என்று பதிலளித்தார்கள்.
அதைக் கேட்டுத் திணறிய பெருமானார் ‘துனைவியாரே! அவ் ஐந்து நாணயங்களையும் இப்பொழுதே சென்று தானம் செய்துவிட்டு வாரும்’ எனக் கூற ‘இவ் நல்லிரவிலே யார்தான் இதற்கென இருப்பாரோ..?’ என வியப்புடன் கேட்டனர் துனைவியார்.
‘இக்காசுகளை யாருக்காக இறை நாடினானோ அவரை அவனே கொண்டு வரப் போதுமானவன்’ என்று கூறினார்கள் எம் பெருமான்.
இதனைக் கேட்டு எழுந்து சென்ற துனைவியார் அவர்கள் தாழிட்ட கதவுகளைத் திறந்து பார்க்கிறார்கள். ஊரெல்லாம் உறங்கும் அவ் நல்லிரவிலே ஓர் யாசகர் உண்பதற்கு உணவில்லாமல் பசியின் வாட்டம் முகத்தில் தவழ தள்ளாடி வருவதைக் கண்டு, அவ் யாசகருக்கே அக் காசுகளைத் தானம் செய்தனர் நல் துனைவியார் அவர்கள்.
இவ்விடயத்தை பெருமானாரிடம் துனைவி ஆயிஷா (றழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறியபோது ‘இதுபோன்றே இறைவன் எமக்கும் நாளை ஒருவரைத் தயார் செய்திருப்பான்’ என்று கூறினார்கள் எம் காருண்ய நபீ கோமான் முஸ்தபா (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.
‘தான் உழைக்கும் பணத்தில் தானம் செய்வது பெரிதல்ல. அத் தானத்திலும் ஏழ்மையாக விழித்தெழுவதே பெரிதாகும்!’
‘வறுமையே பெரிது’ எனும் கோட்பாட்டில் வாழ்ந்து இப்புவி நீத்த எம் பெருமானார் முஹம்மது முஸ்தபா (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கையினை வடிப்பதற்கு எழுகடலும் போதாது! இவ்வரலாறுகள் ஏடுகளில் அல்ல தங்கத் தகடுகளில் எழுதிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்களாகும்.
வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லிக் காட்டிய எம் பெருமானார் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீலாதை – பிறந்த தினத்தைக் கொண்டாடுவோரில் இறைவன் எம்மைச் சேர்த்ததே மாபெரும் பாக்கியமாகும்.
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீலாத் – உதய தினம் என்றாலே இரு பெருநாட்களையும் காண மேன்மைப்படுத்தி, அதை கௌரவித்து, வீடுகளையும் வீதிகளையும் மின் விளக்குகளால் அலங்கரித்து, அன்னாரின் புகழ்பாடி, விருந்தளித்து அருள்தேடி அருள்பெற்றோர் வாழ்ந்தனர் அக்காலம்.
‘அரசர் சுல்தான் முளப்பர் அவர்கள் தங்களின் ஆட்சிக் காலத்திலே மக்கா மதீனா ஹறம்களில் நபிகளின் மௌலிதுகளை ஓதக்கூடிய காரிகளை மிகவும் சங்கை செய்யக்கூடியவராக இருந்தார். இதன் காரணமாக இறைவன் அவருக்கு உதயகிரியில் உள்ள இரு கண்டங்களுக்கும், அஸ்தகிரியில் உள்ள இரு கண்டங்களுக்கும் அதிகாரம் செய்யக்கூடிய ஆட்சியை வழங்கினான்.
அரசர் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீலாதை – பிறந்த தினத்தை கண்ணியம் செய்யும் முகமாக ஓர் விருந்தோம்பல் செய்தார். அவர் உணவில் முப்பதினாயிரம் சகன் தயாரித்தார். ஒவ்வொரு சகனும் பத்துப் பேருக்குப் போதுமானதாக இருந்தது. கறியில் சர்க்கரை, சீனிப் பதார்த்தங்கள் கணக்கிடப்படாத அளவு இருந்தன. ஆட்டுத் தலைகள் இருபதினாயிரம் தலைகள் வைக்கப்பட்டன. பின்பு மௌலிதை ஓதியவர்களுக்கு பெறுமதிமிக்க நன்கொடைகளை ஸதகாவாகக் கொடுத்தார். அந்த சபைக்கு வந்தவர்களை அதிகம் கண்ணியம் செய்தார்.’
இவ் வரலாற்றினை கீழக்கரை – இந்தியாவில் சமாதி கொண்டுள்ள மாதிஹுர் றஸூல் அல்லாமஹ் ஆலிமுல் அறூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் தங்களின் ‘மௌலிது ஸறந்தீப்’ எனும் நூலில் குறிப்பிட்டுக் காட்டுகின்றார்கள்.
இவ்வாறாக முன்னோர்களான நேர்வழி பெற்ற நல்லோர்கள் எம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீலாதை கண்ணியப்படுத்தி சந்தோஷம் கண்டு அருள் பெற்று வந்த காலங்கள் என்றும் பொற்காலமே!
ஆனால் இன்று பொற்காலங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் துற்காலங்களாக வரையப்பட்டு விட்டதே மனவேதனைக்குரிய விடயமாகும்.
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீலாதைக் கொண்டாடுவது, அதற்காக விருந்துகளை ஏற்பாடு செய்வது, வீடுகளையும் வீதிகளையும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்வது, அவர்களின் பிறந்த தினத்தில் அவர்களின் புகழ்களைப் பாடுவது போன்ற விடயங்களுக்குரிய ஆதாரங்களும், சம்பவங்களும் எண்ணிலடங்காதவையாகும்.
இமாம் அல்லாமா ஷிஹாபுத்தீன் அஹ்மத் இப்னு ஹஜர் ஹைதமீ ஷாபிஈ (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் தங்களின் ‘அன் நிஃமதுல் குப்றா அலல் ஆலம் பீ மௌலிதி ஸெய்யிதி வுல்தி ஆதம்’ எனும் நூலில்… நாற்பெரும் கலீபாக்கள், நேர்வழி பெற்ற ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபஉத்தாபிஈன்கள், இமாம்கள் நல்லோர்கள் கூறிய கருத்துக்களை முத்துக்களாகப் பதித்திருப்பது நபிகளைப் புகழ்வோருக்கும், அறிவுடையோருக்கும் மறைவானதல்ல! பகல் சூரியனை உள்ளங்கையினால் என்றும் மறைத்து விட முடியாது!
அதேபோன்று பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புகழை யாராலும் மறைக்கவோ,வரையறுத்துக் கூறவோ, கட்டுப்படுத்தவோ, வரணிக்கவோ முடியாத, அசாத்தியமான காரியமாகும்.
இதனையே நபித் தோழர் மாதிஹுர் றஸூல் ஹஸ்ஸான் இப்னு தாபித் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஓர் பாடலில்…
‘நான் என்னுடைய பாடலைக் கொண்டு பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் புகழவில்லை. மாறாக பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் புகழைக் கொண்டு என்னுடைய மத்ஹை – பாடலையே நான் புகழ்கிறேன்’ என்று பாடுகின்றார்கள்.
இக்கவி அடிகள் மூலமாக பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புகழ்களை யாராலும் வரணிக்க முடியாது. மாறாக தங்களின் புகழ்களையே அவர்கள் வரணிப்புச் செய்கிறார்கள் என்ற உண்மைச் செய்தி வெள்ளிடை மழைபோன்று காட்சியளிப்பது மறைவானதல்ல!
மேலும்,மாதிஹுர் றஸூல் அபூஸயீத் முஹம்மத் அல்பூஸீரீ (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் தங்களின் ‘புர்தஹ் ஷரீபஹ்’வில்…
‘நஸாறாக்கள் அவர்களது நபியில் ‘அல்லாஹ்வின் மகன்’ என்று வழக்காடியதை விட்டுவிடு. அது நமக்கு வேண்டாம். மற்றப்படி நமது நபியில் புகழால் நீ நாடியதைக் கொண்டு ஹுக்ம் செய்து கொள்’ என்று பாடுகின்றார்கள்.
மேலும் மாதிஹுர் றஸூல் ஸதகதுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் தங்களின் ‘வித்ரிய்யஹ் ஷரீபஹ்’வில்…
‘முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை மத்ஹு – புகழ் பாடுபவர்கள் அதில் அவர்கள் கடப்புச் செய்து எல்லையையும் கடந்தார்கள். அவ்வாறு கடந்தும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புகழில் பத்தில் ஒரு பங்கைக்கூட எத்திக் கொள்ளாமல் அவர்கள் காலமாகி விட்டார்கள். அப்படியாயிருக்க என் போன்றவர்களைக் கொண்டு எப்படியாகும்? இன்னும் அவர்கள் இயலாது போயிருக்க என்னைக் கொண்டு எப்படி நடக்கும்? மேன்மையுடைய நாயனுக்கு மனிதர்களில் மேலிட்டார்களே அப்படிக்கொத்த றஸூல்மார்களுண்டு. அப்படியாயிருந்தாலும் அஹ்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அந்த றஸூல்மார்களுக்கு மேல் உயர்ந்து வரிசையால் நீண்டு விட்டார்கள்’ என்றுபுகழ் வடிக்கின்றார்கள்.
மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் புகழோதக் கூடிய மாதிஹீன்கள் – புகழ்பாடுவோர்கள் தங்களின் இயலாமையையும், அவர்களின் முன்னாள் புகழ்பாடியோரின் இயலாமைகளையும் கூறிக்காட்டியதன் நோக்கம் ‘பிற்காலத்தில் பெருமானாரைப் புகழ்பாடும் செயல்களெல்லாம் ஹறாமான செயல்கள் என்றும், அனைத்தும் பித்அத்துக்களே’ என்றும் சொல்லக்கூடிய ஓர் கூட்டம் வரும் என்பதனையும், பெருமானாரை இழிவுபடுத்தக் கூடிய, அவர்களின் அந்தஸ்த்தினை மட்டிடக்கூடிய அறிவீனர்கள் தோற்றுவார்கள் என்பதனையும் உள்ளுணர்வால் அறிந்த தீர்க்கதரிசிகளாக அவர்கள் இருந்ததே சான்றாகும்.
மடை திறந்த வெள்ளம்போல் அணிதிரண்டாலும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புகழை யாராலும் அழிக்க முடியாது. ஏனெனில் அப்புகழ் யதார்த்தத்தில் அல்லாஹ்வின் புகழ் என்பதில் ஐயமில்லை.
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புகழை நாம் பாடாமல் விடுவதால் அவர்களின் அந்தஸ்த்தில் எவ்வித குறைபாடும் வரப் போவதில்லை. ஏனெனில் இறைவன் அல்குர்ஆனில் ‘நபியே, நாயகமே! தங்களின் நினைவை நாங்கள் உயர்த்தியுள்ளோம்’,’தங்களுக்கு இப்பொழுது இருக்கக்கூடிய நொடியைவிட மறுநொடி உமக்கு மிகச் சிறப்புடையதாகும்’ என்று கூறியிருப்பதே ஆதாரமாகும்.
எனவே, பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நம் உயிரை விடவும் நேசிப்போம். அவர்கள் அவதரித்த மாதத்தினைக் கண்ணியம் செய்து அவர்களின் புகழ்பாடி அருள் பெறுவோமாக. ஆமீன்!