அவர்களின் இயற் பெயர் அப்துல் கனீ ஆகும். அவர்களின் தந்தை இஸ்மாயீல் அவர்களும், அவர்களின் தந்தை அப்துல் கனீயுமாகும். டமஸ்கஸ் நகரைச் சேர்ந்தவர்கள். ஹனபீ மத்ஹபைப் பின்பற்றியவர்களுமாவர். தன்னுடைய முன்னோர்கள் போன்று “அந் நாபலஸீ” என்று பிரபல்யமானவர்கள். ஹிஜ்ரீ 1050 ல் டமஸ்கஸ் நகரில் பிறந்து, அங்கேயே தனது தந்தையான இப்னு அறபீ நாயகத்தின் வழி செல்லும் ஸூபீ அவர்களின் அரவணைப்பில் வளர்ந்தார்கள்.
இமாம் அப்துல் கனீ அந் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடிக்கும் அளவு சட்டக்கலை, ஹதீதுக்கலை, இல்முல் கலாம் (கொள்கை), மற்றும் மொழியறிவு போன்பவற்றை ஷாம் – சிரிய அறிஞர்களிடமிருந்து பெற்றார்கள். “தஸவ்வுப்” ஸூபிஸ ஞானத்தை “பல்கீ” அவர்களிடமிருந்து பெற்றார்கள். (அல் பல்கீ: ஸஈதுல் பல்கீ, நக்ஷபந்திய்யஹ் தரீகஹ்வின் ஷெய்குமார்களில் நின்றும் ஒருவர். டமஸ்கஸ் நகருக்கு ஹிஜ்ரீ 1087ல் வந்தார்கள்)
இமாம் நாபலஸீ அவர்கள் தனது 40வது வயதை கடந்ததும் ஸூபிய்யாக்களிடம் உள்ள “கல்வத்” தனிமையை தனக்கு அவசியமாக்கிக் கொண்டார்கள். தனது வீட்டிலேயே 07 வருடங்கள் வெளியாகாமால் தங்கியிருந்தார்கள். முடிகள் நீளமாக வளர்ந்தும், நகங்கள் வளர்ந்தும், ஸூபீகளின் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டும் , “வஹ்ததுல் வுஜூத்” பேசிய ஸூபீகளின் நூல்களை வாசித்துக் கொண்டும் இருந்தார்கள்.
அவர்களின் காலத்து ஸூபீகளில் ஒருவர் பின்வருமாறு கூறுகின்றார். “இப்னு அறபீ நாயகம் மற்றும் இப்னு ஸப்ஈன் மற்றும் ஸூபீகளின் நூல்களைப் படிப்பதில் நிரந்தரமாக இருந்ததால் இவர்களின் அருள் கிடைக்கப்பெற்று அவர்களின் உள்ளம் “பத்ஹுல் லதுன்னீ” என்ற இறைஞானம் (உள்ளம் திறக்கப்படல்) கிடைக்கப்பெற்றார்கள்.
ஸூபிய்யாக்களிடமிலுள்ள உறுதி நிலையைப் பெற்றதும் “வஹ்ததுல் வுஜூத்” ஐ உணர்ந்தார்கள். தனது வீட்டை விட்டும் (“கல்வத்” ஐ விட்டும்) வெளியேறினார்கள். சிரிய மற்றும், எகிப்து நாட்டின் பல ஊர்களுக்கும் ஸூபிய்யாக்களின் புனித ஸ்தளங்களைத் தரிசிப்பதற்காதகவும், உயிர் வாழ்ந்து கொண்டிருந்த ஸூபிய்யாக்களின் “குத்பு”மார்களைத் தரிசிப்பதற்காகவும் சென்றார்கள். மீண்டும் டமஸ்கஸ் நகருக்கு ஹிஜ்ரீ 1143ல் வந்தார்கள்.
இமாம் நாபலஸீ அவர்களுக்கு ஸூபிஸம், ஷரீஅத், மொழி மற்றுமுள்ள கலைகளில் அதிக நூல்கள் உள்ளன. மேலும் கவிப் பெட்டகம் ஒன்றும் உள்ளது. அவர்களின் ஸூபிஸம் சம்பந்தப்பட்ட நூல்களில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றோம்.
01. ஈளாஹுல் மக்ஸூத் மின் மஃனா வஹ்ததில் வுஜூத்
02. ஜவாஹிருன் நுஸூஸ் பீ ஹல்லி கலிமாதில் புஸூஸ்
03. ஜம்உல் அஸ்ரார் பீ மன்இல் அஷ்றார் மினத் தஃனி அலஸ்
ஸூபிய்யதில் அக்யார்.
04. அல்வுஜூதுல் ஹக்
05. ஷர்ஹு தீவானி இப்னில் பாரிழ்
06. தீவானுல் ஹகாயிக்
இமாம் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள், அல்லாஹ் மாத்திரமே எதார்த்தமான “வுஜூத்” உள்ளமை கொண்டு வர்ணிக்கப்பட்டவன் என்று கருதுகின்றார்கள். பின்வரும் பாடல் மூலம் இக்கருத்தைச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
ليس لله فى الوجود شريك – لا اشتباه فيه ولا تشكيكٌ
பின்பு அதைத் தொடர்ந்து படைப்புக்கள் அனைத்தும் அல்லாஹ்வே என்று நம்புகின்றார்கள். பின்வரும் பாடல் மூலம் இக்கருத்தைச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
ألا إنّ ذاتي ذاتُ كُلِّ الخلائقِ – وسَلْ عنه ذا علمٍ كريمِ الخلائقِ
(அறிந்து கொள்! என்னுடைய “தாத்” உள்ளமையாகின்றது எல்லா படைப்புக்களினதும் “தாத்” உள்ளமையாகும். அதுபற்றி அறிவும், நற்குனங்களும் உள்ளவரிடம் கேள்!)
மேலும் “சிருஷ்டியில் இறைவனின் உள்ளமையை மட்டும் உறுதி செய். அங்கே சிருஷ்டி, இரட்டை, ஒற்றை என்பன கிடையாது” என்றும் ஒரு பாடலில் கூறுகின்றார்கள்.
(தீவானுல் ஹகாயிக் லின் நாபலஸீ, 1-229)
இந்த இடத்தில் இமாம் அந் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஐ நம்புகின்றார்கள். “ஸுபிய்யஹ்” களிடம் அனைத்து உள்ளமைகளும் ஒரே எதார்த்தம்தான். வஸ்த்துக்களை விட்டும் வேறுபட்டதாகும்.
(அல் வுஜூதுல் ஹக் லிந் நாபலஸீ, பக்கம் – 104)
தனது தீவானுல் ஹக் என்ற பாடல் பெட்டகத்தின் ஒரு பாடலில் (1-138) பின்வருமாறு கூறுகின்றார்கள். “உண்மையான வுஜூத் – உள்ளமை ஒன்றுதான். அதன் வெளிப்பாட்டை எவன் தரிசிக்கின்றானோ அவன் சீதேவியாகிவிட்டான்”
இமாம் அந் நாபலஸீ அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” என்பது படைப்பையும், படைத்தவனையும் , பரிபாலிப்பவனையும் (றப்பு), பரிபாலிக்கப்பட்டவனையும் (மர்பூப்) சேர்த்த ஒன்றாகும் என்று பின்வரும் வாக்கியத்தின் மூலம் கூறிக் காட்டுகின்றார்கள். “அவ்விரண்டும் (படைப்பும், படைத்தவனும்) இரண்டல்ல. ஆனால் ஒன்றேதான்”
(ஹுக்மு ஷத்ஹில் வலிய்யி லிந் நாபலஸீ, பக்கம் – 196 )
இதேபோல் தன்னுடைய தீவானுல் ஹகாயிக் பாடல் பெட்டகத்திலும் (2-170) கூறிக்காட்டுகின்றார்கள். “வுஜூத் – உள்ளமை என்பது படைத்தவன், படைப்பு என்று இரண்டில்லை. அப்படியென்றால் இரண்டு வஸ்த்துக்களாகிவிடும். இது எதார்த்த வாதியிடம் இழி கொள்கையும், பொய்யானதுமாகும்”
தன்னுடைய அல் வுஜூதுல் ஹக் என்ற நூல் 37ம் பக்கத்தில் கூறுகின்றார்கள். “அல்லாஹ் தவிரவுள்ள அனைத்தும் எதார்த்தமான அவனது வுஜூத் – உள்ளமை கொண்டு தரிபட்டதாகும். வேறு கிடையாது”
ஒரு ஆரிப் – இறை ஞானி இமாம் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கருதுவது போல் “மனிதர்கள் சிருஷ்டி என்று அல்லது படைப்பு என்று பார்க்கின்ற – நம்புகின்ற அனைத்தும் அவைகளின் “தாத்” அடிப்படையில் மாயை அல்லது கானல்நீர் போன்றதாகும். கானல் நீர் என்பது தொலைவில் இருந்து பார்க்கும் போது தெரியும். ஆனால் அருகில் சென்று பார்க்கும் போது அங்கே அது இருக்காது. அதற்கு சுயமான வுஜூத் – உள்ளமை இல்லை.
இமாம் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கின்றார்கள். வஸ்த்துக்கள் அனைத்தும் மிகவும் நுட்பமான விடயங்களாகும். அவைகள் “கயால்” – மாயை ஆகும். அல்லது தொலைவில் தெரிகின்ற ஆனால் உண்மையில் இல்லாத கானல் நீர் போன்றாகும்.
(அல் வுஜூதுல் ஹக் லிந் நாபலஸீ, பக்கம் – 193)
மனிதர்கள் சிருஷ்டியாக அல்லது படைப்பாக காணுகின்ற மாயை இமாம் அந் நாபலஸீ அவர்களிடம் இறைவனின் வெளிப்பாடுகள் ஆகும். இதைப் பின்வரும் பாடல் மூலம் குறிப்பிடுகின்றார்கள்.
جميعُ الكون مظهرُه – فَيُخْفِيْهِ ويُظْهِرُهُ
(ديوان الحقائق للنابلسي 1 ஃ 255)
(சிருஷ்டிகள் அனைத்தும் அவனின் வெளிப்பாடாகும். தன்னை மறைத்து சிருஷ்டியை வெளிப்படுத்திக் காட்டுகின்றான்)
“வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை அடைந்து, அதை நம்பியவர்களே இமாம் அந் நாபலஸீ அவர்களிடம் “அல் உலமாஉல் முஹக்கிகூன்” உண்மையான, எதார்த்தமான அறிஞர்களாகும். மேலும் சிறப்புமிக்க ஞானிகளுமாகும். “கஷ்பு” என்ற ஞானம் வழங்கப்பட்டவர்களுமாகும். அகக்கண் பார்வை உடையவர்களாகும். உடலும், உள்ளமும் சுத்தமானவர்களுமாகும்”
(அத் தஸவ்வுபுல் இஸ்லாமீ பீ அஸ்ரிந் நாபலஸீ லிஅப்தில் காதிர் அதா, பக்கம் – 361 )
“அல் பத்ஹுர் றப்பானீ” என்ற தன்னுடைய நூல் 201, 202ம் பக்கங்களில் இமாம் நாபலஸீ அவர்கள் பின்வருமாறு கூறிக்காட்டுகின்றார்கள். “நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வெளித்தோற்றத்தில் மறைந்து, “பாதினிய்யத்” உள்ளமைப்பில் – எதார்த்தமாக வெளியானபோது….. இப்லீஸ் லஃனதுல்லாஹி அலைஹி நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உள்ளமைப்பை – எதார்த்தத்தை புரியவில்லை. அதாவது அது இறைவனின் உருவம் என்பதைப் புரியவில்லை”
இமாம் நாபலஸீ அவர்களிடம் “வஹ்ததுல் வுஜூத்” ஐ நம்பாதவன் அல்லாஹ்வுடன் இன்னொரு “வுஜூத்”ஐ தரிபடுத்திய “முஷ்ரிக்” இணைவைத்தவனும், அல்லாஹ்வை மறுத்த (படைப்புக்களின் உருவில் அவனே உள்ளான் என்பதை மறுத்த) “காபிர்”உம் ஆகும்.
மேலும் இதுபோன்ற கருத்தை தனது “தீவானுல் ஹகாயிக்” என்ற நூல் 2-16 ல் கூறுகின்றார்கள். “அல்லாஹ்வுடன் இன்னொரு வுஜூத் – உள்ளமையை வாதிடுபவனின் வாதம் இணை வைத்தலாகும்”
இமாம் நாபலஸீ அவர்களிடம் எதார்த்தத்தின் அடிப்படையில் “குப்ர்” இன் வகைகள் மூன்றாகும்.
01. அல்லாஹ்வை மறந்து இருத்தல்.
02. அல்லாஹ்வுடன் இன்னொரு வுஜூதை தரிபடுத்தல்.
03. அல்லாஹ் அல்லாதவைகளைப் பார்த்தல்.
(அல் பத்ஹுர் றப்பானீ – பக்கம் – 197)
இமாம் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களுக்கு ஸூபிய்யஹ் களிடம் ஒரு தனி அந்தஸ்த்து உண்டு. அவர்களை ஸூபிய்யஹ் கள் “ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர்”, “ஞானிகளுக்கெல்லாம் பெரும் ஞானி” , “இறைஞானியான வலீ” , “இறைஞான ஊற்றுக்கண்” என்றெல்லாம் கருதுகின்றார்கள்.