Tuesday, October 8, 2024
Homeஎழுத்தாக்கங்கள்'ஷாதுலிய்யஹ் தரீகஹ்' வின் தாபகர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.

‘ஷாதுலிய்யஹ் தரீகஹ்’ வின் தாபகர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.

பூமியின் நாலா பக்கமும் பரவியிருக்கும் “ஷாதுலிய்யஹ் தரீகஹ்”வின் தாபகர் இமாம் அபுல் ஹஸன் அலீ அஷ் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் ஹிஜ்ரீ 591ல் “ஙமாறஹ்” (மொறோகோவிலுள்ள ஒரு கிராமம், “ஸப்தஹ்” நகருக்கு அருகில் உள்ளது) கிராமத்தில் பிறந்தார்கள்.

தனது சிறு பராயத்திலேயே “தூனுஸ்” நாட்டிற்கு இடம் பெயர்ந்து அங்கேயே கல்வி கற்றார்கள். பின் உலகின் கிழக்குப் பிரதேசங்களுக்குச் செல்ல நாடி முதலில் “ஹஜ்” செய்துவிட்டு இராக் நாட்டில் நுழைந்தார்கள். மீண்டும் தனது பிறந்த ஊரான “ஙமாறஹ்” வுக்கு வந்தார்கள். அங்கு வந்த அவர்கள் அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஷ் றஹிமஹுல்லாஹ் அன்னவர்களிடம் ஸூபிஸ ஞானங்களைக் கற்றார்கள்.

(அப்துஸ்ஸலாம் இப்ன மஷீஷ் மொறோக்கோ நாட்டின் ஙமாறஹ் கிராமத்தில் வாழ்ந்த ஸூபிய்யஹ் களில் ஒருவர். இவர்கள் ஸூபிஸ ஞானத்தை அப்துர் றஹ்மான் அல் அத்தார் அஸ்ஸய்யாத் அவர்களிடமிருந்து பெற்றார்கள். மொறோக்கோ “ஸூபீகளிடம்” அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஷ் அவர்களுக்கு தனிப்பெரும் மரியாதையே உண்டு. இவர்களின் “அஸ் ஸலாதுல் மஷீஷிய்யஹ்” என்ற ஸலவாத் மிகப் பிரபல்யமானதும், ஷாதுலிய்யஹ் தரீகஹ் வைச் சார்ந்தோரிடம் மிக முக்கியமான “விர்து” ஓதலுமாகும். இமாம் அஷ் ஷெய்கு இப்னு மஷீஷ் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் ஹிஜ்ரீ 622ல் கொலை செய்யப்பட்டு மரணித்தார்கள்.)

அதன் பிறகு அபுல் ஹஸன் அஷ் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் தூனுஸ் நகருக்கு அருகிலுள்ள “ஷாதுலஹ்” என்ற ஊருக்கு நகர்ந்தார்கள். “ஸஃபறான்” என்ற மலையடிவாரத்துக்கு அருகில் தனிமையில் மனிதர்களைப் பிரிந்து சில காலம் (அவர்களை அந்த ஊருடன் சேர்த்து “ஷாதுலீ” என்று கூறப்படும் அளவிற்கு) இருந்தார்கள்.

பின் “ஷாதுலஹ்” விலிருந்து தூனுஸ் நகருக்கு சென்றார்கள். அங்கிருந்து ஸூபிஸத்தை பரப்ப ஆரம்பித்தார்கள். அவர்களைப் பின்பற்றக் கூடிய ஒரு கூட்டம் அவர்களைச் சூழ்ந்து கொண்டது. அங்கே தூனுஸ் நகர தலைவர்கள், காழீ – நீதிவான்களிடமிருந்து கடும் எதிர்ப்புக்களையும் சந்தித்தார்கள். ஆதலால் அங்கிருந்து வெளியாகி எகிப்து நோக்கி வந்தார்கள். “இஸ்கன்தரிய்யஹ்” என்ற ஊரில் தங்கிய அவர்கள் அந்த ஊரை தனது “தஃவா” அழைப்புப்பணிக்கான தளமாக ஆக்கிக் கொண்டார்கள். அவர்களைத் துயரக் கூடியவர்கள் அதிகமாகி அவர்களின் ஆத்மீக நிலையும் வலுப்பெற்றிற்று. தனது மீதி ஆயுளை ஸூபிஸ கல்வியைப் போதிப்பதிலும், முரீதுகளை அவ்வழியில் நடாத்துவதிலும் கழித்தார்கள். ஹிஜ்ரீ 656ல் எகிப்தின் கிழக்கு “ஐதாப்” பாலைவனத்தில் புனித “மக்கஹ்” நோக்கி “ஹஜ்” செய்ய செல்லும் வேளை “வபாத்” இறையடி சேர்ந்தார்கள்.

அஷ் ஷெய்கு அபுல் ஹஸன் அலீ அஷ் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை நம்பி விசுவாசம் கொண்டவர்களாயும், அதன் பால் மக்களை அழைப்பவர்களாயும் இருந்தார்கள் என்பதை அவர்களின் பேச்சுக்களும், அவர்களின் ஞானகுருவாகிய அஷ் ஷெய்கு அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஷ் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் நம்பிக்கையும் தெளிவுபடுத்துகின்றன.

ஷாதுலீ இமாம் அவர்களின் ஷெய்காகிய அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஷ் அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது ஒரு “ஸலவாத்” ஐக் கோர்வை செய்து அதற்கு “அஸ்ஸலாதுல் மஷீஷிய்யஹ்” எனப் பெயரிட்டுள்ளார்கள். ஷாதுலிய்யஹ் தரீகஹ் வைச் சார்ந்தவர்கள் இந்த ஸலவாத்தை ஒவ்வொரு காலையிலும், “மனாகிப்” உடைய தினங்களிலும் ஓதிவருகின்றார்கள். இந்த ஸலவாத் “வஹ்ததுல் வுஜுத்” தத்துவத்தை உள்ளடக்கியதாக இருப்பது விஷேட அம்சமாகும்.

மேற்கண்ட ஸலவாத்தில் இமாம் இப்னு மஷீஷ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். “இறைவா! என்னை “அஹதிய்யத்” என்ற கடலில் எறிந்து விடு. தவ்ஹீதின் சேற்றிலிருந்து என்னைக் காப்பாற்றி “வஹ்தத்” என்ற கடலில் மூழ்கடித்துவிடு. நான் எதையும் காண்பதாயின், கேட்பதாயின், உணர்வதாயின் அதைக் கொண்டே (வஹ்ததுல் வுஜூத்) அவைகள் உண்டாக வேண்டும். (ஜாமிஉஸ் ஸலவாத் லிந்நப்ஹானீ, பக்கம் – 93 ) இந்த வசனம் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை தெளிவாகக் காட்டக் கூடியதாகும். இக்கருத்து ஸூபிஸ, வஹ்ததுல் வுஜூத் வழி நடக்கக் கூடிய ஒருவருக்கு மறைவானதல்ல.

இமாம் ஷாதுலீ அவர்கள், தன்னுடைய ஆசான் பின்வருமாறு தனக்கு “வஸிய்யத்” நல்லுபதேசம் செய்ததாகக் கூறிக் காட்டுகின்றார்கள்.”ஈமானுடைய பார்வையை கூர்மையாக்கிக் கொள்! ஒவ்வொரு வஸ்த்துவிலும், ஒவ்வொரு வஸ்த்துவிடத்திலும், ஒவ்வொரு வஸ்த்துவுடனும், ஒவ்வொரு வஸ்த்துவின் மேலும், ஒவ்வொரு வஸ்ததுவுக்கு சமீபமாகவும், எல்லா வஸ்த்துக்களையும் சூழ்ந்ததாகவும் அல்லாஹ்வைப் பெற்றுக் கொள்வாய். படைப்புக்களை இடத்தாலோ, திசையாலோ, மட்டுப்பாட்டாலோ சூழ்ந்தவனாக அல்லாமல், தூரத்தால் நெருக்கமானவன் என்றல்லாமல் பெற்றுக் கொள்வாய். இப்படியான குறையுள்ள தன்மைகளை அவனுடைய “அவ்வல், ஆகிர், ளாஹிர், பாதின்” என்ற முந்தியவன், பிந்தியவன், வெளியானவன், உள்ளானவன் என்ற தன்மைகள் கொண்டு அழித்துவிடு. அவனுடன் எந்த வஸ்த்துவும் இல்லை.
(அத்தபகாதுல் குப்றா, லவாபிஹுல் அன்வார் பீ தபகாதில் அக்யார் லிஷ் ஷஃறானீ, 2-13)

இமாம் ஷாதுலீ அன்னவர்களின் மேற்கண்ட வசனம் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தையே அதாவது “எல்லாம் அவனே” என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

“அலீயே! என்னைக் கொண்டு சொல். என்னையே காட்டு. நானே எல்லாமாய் இருக்கின்றேன்” என்று எனக்குச் சொல்லப்பட்டது என்று இமாம் ஷாதுலீ அவர்கள் கூறிக்காட்டினார்கள்.
(ஈகாளுல் ஹிமம் ஷர்ஹுல் ஹிகம் லிப்னி அஜீபஹ், பக்கம் – 57 )

“ஹிஸ்புல் பஹ்ர்” என்ற தன்னுடைய “துஆ”வில் பின்வருமாறு கூறுகின்றார்கள். இறைவா! உன்னிடமிருந்து உன்னளவில் பார்த்தவர்களாக, உன்னைக் கொண்டு உன்னைப்பற்றி பேசியவர்களாக உன்னுடைய ஏவலுக்கு உன் திருமுகக் காட்சி என்ற விரிப்பில் கட்டுப்படுவதை உன்னிடம் கேட்கின்றோம். உன்னுடைய “குர்பு” நெருக்கம் கொண்டு என்னை நெருக்கி வை. உன்னுடைய “இஸ்ஸத்” கண்ணியம் என்ற திரைகள் கொண்டும், உன்னுடைய திரைகள் என்ற கண்ணியம் கொண்டும் எனக்குத் திரையிடு. என்னிலிருந்து உனக்கேயன்றி ஏதும் உண்டாகாத வரை நீ எனக்கு சாதகமாக ஆகிவிடு. நீ என்னுடைய திரையாக இருக்கின்றாய். எனக்கும் உனக்கும் இடையிலிருக்கின்ற இருட் திரைகளை அகற்றிவிடு. என்னுடைய அந்தஸ்த்தை உனக்கு முன் நிலையானதாக ஆக்கிவிடு. உன்னில் நின்றும் உன்னளவில் பார்ப்பவனாக ஆக்கிவிடு. எனக்கும், உனக்கும் “மத்தியில்” என்ற பிரிவு இல்லாமல் என்னை விட்டும் அந்த தூரத்தை இல்லாமலாக்கிவிடு. விடயத்தின் எதார்த்தத்தை எனக்கு காட்டு. உன்னையன்றி எதனளவிலும் இதன் பிறகு சேராத வண்ணம் என்னை சுண்டி இழுத்துவிடுவாயாக! உன்னுடைய பரிசுத்த “தாத்” கொண்டு நான் உறுதி பெறும் வகையில் உன்னுடைய “அஸ்மாஉ” திரு நாமங்களின் ஒளியை எனக்கு அருள்வாயாக! எனக்கு வெற்றியை தருவாயாக! நான் இல்லாமலிருப்பதுதான் எனது உள்ளமை. என்னுடைய உள்ளமை என்பது இல்லாமை. நான் உன்னைத் தேடுவது என் மடமை”
(அல் மபாகிறுல் அலிய்யஹ் லிப்னி அப்பாத், 204 – 208 )

நபீமார்களுக்கு அருளப்பட்ட வேதங்களில் ஒன்றில் “எவன் எனக்கு எல்லா விடயங்களிலும் வழிப்பட்டானோ அவனுக்கு நான் சகல விடயங்களிலும் வழிப்படுவேன்” என்று இருப்பதாக இமாம் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் கூறியுள்ளார்கள்.

“எவன் எனக்கு சகல விடயங்களிலும் சகல விடயங்களையும் வெறுத்து வழிப்பட்டானோ அவனுக்கு நான் அனைத்து வஸ்த்துக்களிலும் வெளியாகி என்னை அவன் அனைத்து வஸ்த்துக்களை விடவும் மிக நெருக்கமாகப் பார்க்கும் அளவு வழிப்படுவேன்” இதுவே சிற்நத வழியும், ஞான வழி நடப்பவர்களின் வழியுமாகும் என்று இமாம் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் கூறியுள்ளார்கள்.
(லதாயிபுல் மினன் லிப்னி அதாயில்லாஹில் இஸ்கந்தரீ, பக்கம் -27)

“நாங்கள் படைப்புக்களில் எதையும் பார்க்கவில்லை. உள்ளமையில் “அல் மலிகுல் ஹக்” ஆகிய அல்லாஹ் தவிர வேறு உண்டோ? அந்தப்படைப்புக்கள் காற்றில் தெரியும் புழுதி துகள்கள் போன்றவை. அதை தேடிப்பார்த்தால் எதையுமே பெற்றுக் கொள்ள மாட்டாய். ஆச்சரியத்திலும் பெரிய ஆச்சரியம் என்னவெனில் அந்தப் படைப்புக்கள் அவனளவில் சேர்த்து வைக்கக் கூடியதாக இருப்பதாகும். அவனளவில் சேர்த்து வைக்க அவைகளுக்கு வுஜூத் – உள்ளமை உண்டோ? (இல்லை)” என்று இமாம் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அல் மத்றஸதுஷ் ஷாதுலிய்யஹ் லிஅப்தில் ஹலீம் மஹ்மூத், பக்கம் – 76)

“சம்பூரணமானவர்கள் (காமில்) என்பவர்கள் அல்லாஹ்வினதும், படைப்பினதும் தன்மைகளைச் சுமந்தவர்கள். அவர்களை நீ படைப்பு என்று பார்த்தால் மனித தன்மைகளைப் பார்ப்பாய். “ஹக்” அல்லாஹ் என்று பார்த்தால் தன்னுடைய பன்புகள் கொண்டு அவர்களை அழகு படுத்திய அல்லாஹ்வைப் பார்ப்பாய்.” என்றும் கூறியுள்ளார்கள்.
(அத் தபகாதுல் குப்றா லிஷ் ஷஃறானீ, 2-11 )

இமாம் ஷாதுலீ நாயகம் றஹிமஹுல்லாஹ் அன்னவர்களுக்கு பெரும் எண்ணிக்கையிலான “முரீது”கள் இருந்தார்கள். அவர்களிடமிருந்து பலர் ஸூபிஸ குருக்களாக வெளியானார்கள். ஆனால் இவர்களில் இமாம் ஷாதுலீ அவர்களின் பார்வையில் வலுப்பமான அந்தஸ்த்தையுடையவர்களாக இமாம் அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் காணப்பட்டார்கள்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments