இவர்கள் பகிரங்க அற்புதங்கள் நிகழ்த்தும் தங்களின் தந்தை முஹம்மத் ஸஈத் அல் ஜல்வதீ றஹிமஹுல்லாஹ் அவர்களுக்குப் பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் திறமை மிக்க ஒரு மார்க்க அறிஞரும், “தஸவ்வுப்”, இறை ஞானக் கலையில் வேரூண்டிய மகானும் ஆவார்கள். அவர்களுக்கு நபீ தோழர் அப்துர் றஹ்மான் இப்னு அவ்ப் றழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஒரு அலாகஹ் – தொடர்பு உண்டு. இவர்களும் தனது தந்தை போன்று அற்புதங்கள் உடைய மகானாவார்கள். “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை ஏற்று அதைப் பகிரங்கமாகச் சொல்லக் கூடிய ஒருவர். ஒரு நாள் நான் என்னுடைய நண்பன் மௌலவீ அப்துஸ் ஸமத் (சின்னச் சமது மௌலவீ) அவர்களுடன் “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பாக நான் எழுதிய “பத்வா” வில் கையெழுத்துப் பெறுவதற்காக அவர்களின் ஊரான கம்பம் சென்றிருந்தேன். அவர்களை நான் அவர்களின் தைக்காவில் சந்தித்தேன். அவர்கள் நான் சென்ற வேளை வுழூ செய்து கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டதும் “உங்களின் தகப்பனாரின் ஜனாஸஹ் வுக்கு “அப்தால்”களில் ஒருவர் சமூகமளித்திருந்தார்” என்று கூறி எங்களை வரவேற்று அமரச் செய்தார்கள்.
பின் என்னையும், எனது நண்பனையும் அழைத்து அவர்கள் அமர்ந்திருந்த கட்டிலில் அமரச் செய்தார்கள். உங்களின் வயிற்று வலி எப்படி? என்று வினவினார்கள். அது குறையவுமில்லை, கூடவுமில்லை. எப்படியிருந்ததோ அப்படியேதான் உள்ளது என்றேன். பின் உங்களின் மாமி (மனைவியின் தாய்) எப்படியிருக்கின்றார்? என்று கேட்டார்கள். நலமாக உள்ளார் என்றேன். அவர்களின் மேற்கண்ட வினாக்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எனது உள்ளத்தையும், உடலையும் உசுப்பிவிட்டது. நான் பல வருடங்களாக வயிற்று வலியினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அது அவர்களுக்குத் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் அவர்களுக்கும் எனக்குமிடையில் எவ்வித தொடர்பும் இருந்திருக்கவில்லை. இதுவே அவர்களைச் சந்திப்பது முதல் தடவை. அதேபோல் எனது மாமியை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பும் இல்லை. அவர்களின் கேள்விகள் ஆரிபீன்களின் ஒரு கூற்றை உனக்கு ஞபகமூட்டியது. “இறை ஞானி என்பவர் அல்லாஹ்வின் ஒளி கொண்டு பார்ப்பவர்” இறையொளிக்கு எதுவுமே திரையாக முடியாது. வீடோ, சுவரோ எதுவுமே திரையிட முடியாது. அவரின் பார்வை எல்லாத் திரைகளையும் ஊடுருவிச் செல்லும். கனமானதாக இருந்தாலும், மென்மையானதாக இருந்தாலும் சரியே! அம்பா நாயகம் அவர்கள் ஆரிப் – இறை ஞானி என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
பின்பு அவர்களின் ஆண்மக்களில் ஒருவரான மௌலவீ அப்துல் கபூர் அவர்களை அழைத்து நான் எழுதிச் சென்ற “அல் கிப்ரீதுல் அஹ்மர்” என்று நூலை ஆரம்பம் முதல் இறுதி வரை வாசிக்கும் படி ஏவினார்கள். அவர் வாசிக்கின்ற போது ஒவ்வொரு சொல்லாக செவிமடுத்தார்கள். வாசித்து முடிந்த பிறகு நூலை வாங்கி அதிலே அல்லாஹ் நாடிய படி எழுதினார்கள். அவர்கள் எழுதும் போது “இதுவே எனது முதல் கையெழுத்தும் இறுதிக் கையெழுத்துமாகும்” என்று கூறி கையெழுத்திட்டார்கள். அதன் பிரதி இன்றும் என்னிடம் பாதுகாப்பாக உள்ளது. எவரேனும் பார்க்க விரும்பினால் என்னிடம் வருகை தந்து பார்வையிடலாம்.
இவர்கள் தங்களின் தைக்கா வாயலில் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்.
“உள்ளது ஒன்று மற்றது அன்று”
“ஒன்றும் பூச்சியமும் இரண்டாகாது”
அதாவது இறைவன் மட்டுமே உள்ளான். அவனல்லாதவை அனைத்தும் இல்லாதவை. உண்மையான அந்த உள்ளமையுடன் இல்லாத இந்த சிருஷ்டியை சேர்த்துப் பார்த்தால் ஒன்றுதான். சிருஷ்டி உன்பது பூச்சியமே! என்பதை தத்துவமாக வடித்து எழுதியுள்ளார்கள்.