يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள் (அல்குர்ஆன் 9:119)
கூனூ மஅஸ்ஸாதிகீன் !
நீங்கள் உண்மையாளர்களுடன் ஆகியிருங்கள் !ஆகிவிடுங்கள் !
இது, வல்ல அல்லாஹ்வின் ஆணை, கட்டளை !
இறைக்கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்பட்டவரே நல்லடியார்கள் .
இந்த உண்மையாளர்கள் என்றால் யார் ?
அரபியில் حق என்னும் சொல் மெய்ப்பொருளான அல்லாஹ்வை குறிக்கும்
உண்மை பேசுதலை குறிக்காது !
அதற்கு, صدق, ஸித்குன், (உண்மை) ஸதக – உண்மை யை பேசினான் எனப்பொருள்படும் صادق ஸாதிக் என்றால் உண்மை பேசுபவர் என்றும் உண்மையாளர் என்றும் இரண்டு அர்த்தங்கள் உண்டு !
வெளிப்படையில் பார்த்தால், இரண்டு பதங்களுக்கும் பொருள் ஒன்றே எனத் தோன்றும் ! சற்று உன்னிப்பாக அவதானிக்கும்போது, இரண்டு சொற்களுக்குமிடையிலுள்ள வேறுபாட்டை தெரிந்து கொள்ளலாம் !
உண்மை பேசுபவர் என்பது பொதுவாக, பொய்பேசாமல் எப்போதும் உண்மையை பேசுபவர் என்று அர்த்தமாகும் !
ஆனால், உண்மையாளர் என்று சொல்லும்போது உண்மையின் உருவாக உள்ளவர் என்பதே சரியான பொருளாகும் !
முதலில், ஸித்குன் என்ற சொல்லுக்கும் ஹக் என்னும் சொல்லுக்கும் உள்ள வேறுபாட்டைத் தெரிந்துக்கொள்ளவேண்டும் ! ஹக் என்பது மெய்மை ! அதாவது உண்மையில் உள்ளது !
உதாரணமாக, ஒரு சோளக் கொல்லையின் அல்லது நெல்விளையும் வயலின் நடுவில் துணியினால் செய்யப்பட்ட மனிதனைப் போலவே தோற்றமுடைய ஒரு பொம்மையை (scare- crow) செய்து, நீண்டதொரு மூங்கில் கழியில் கட்டி வைத்திருப்பார்கள் அதைப் பார்க்கும் காக்கை முதலிய பறவைகள் மற்றும் ஆடு, மாடுகள், மனிதன் என நினைத்து, தானியங்களை சேதப்படுத்தாமல் ஓட வேண்டும் என்பதற்காக, அவ்வாறு ஒரு ஏற்பாட்டை செய்திருப்பார்கள் ! அவர்கள் எண்ணியவாறே, காக்கைகளும் மற்றப் பறவைகளும், மிருகங்களும்,அந்த பொம்மையை மனிதன் என நினைத்து ஓடிவிடும் !
ஆனால், அந்த பொம்மையை அறிவுள்ள ஒரு மனிதன் பார்த்தால், அது நிஜ மனிதன் அல்ல மனிதன் போன்று தோற்றமளிக்கும் ஒரு பொம்மைதான்! என நன்றாக விளங்கிக் கொள்வான் !
இப்போது , வயலில் மனிதனைப்போலவே தெரிவது பொய்த்தோற்றம் ! அது, துணியினால் செய்யப்பட்ட பொம்மைதான் !
இதுவே மெய் !
இதுவே ஹக் !
அதாவது, உண்மையில் உள்ளது!
அதுவே உள்ளமையானது !
இதேபோலவே, நம் கண்களால் பார்க்கப்படும், அனைத்தும், சிருட்டிகளாகத்தெரியும் எல்லாம் பொய்த்தோற்றமே! உண்மையில் இருப்பது, அவ்வலுல் அவ்வலீன் ஆகிய ஆதி மூலமாகிய அல்லாஹ்வே ! என, தன் ஞானத்தினால் அறிந்துணர்தலே ஸித்குன், என்னும் மெய்யுணர்வு ! அதாவது, அல்லாஹ்தான் உள்ளமையானவன் என்பது ஹக் ! இதை உணர்தலே ஸித்குன், மெய்யுணர்வு ! இத்தகைய மெய்யுணர்வு உடையவரே ஸாதிக் ! இதன் பன்மையே ஸாதிகீன் !மெய்யுணர்வாளர்கள் ! இத்தகைய மெய்யுணர்வுடையவர்களை எங்கே போய்த்தேடுவது ? எங்கும் போகவேண்டாம் ! குத்புமார்கள், குத்புல் அக்தாபுகள், வலிமார்கள் எனும் இறை நேசச் செல்வர்களின் புனிதமிக்க அந்த நீதி அரசர்களின் தர்காக்கள் (Dhargah) எனும் பாதுகாப்பின் புகலிடங்கள் (The Glorious and powerful shelter of Ahlallaah ) நம் போன்ற பாவிகளை பரிசுத்தப்படுத்துவதற்காகவே அல்லாஹ்வின் அருளால் அமைக்கப்பட்டிருக்கின்றன !
அந்த ஞான சூரியன்களின் ஒளியைப்பெற்று நம் ஈருலக வாழ்க்கையையும் பிரகாசமாக்கிக்கொள்ள, அந்த மகத்துவமிக்க ஸூஃபி மஹான்களை, அவ்லியாக்களை நாடி, தேடி, ஓடிச்சென்று அவர்களின் பொற்றாமரைப் பாதங்களில் நம்மை முழுமையாக ஒப்படைத்து, நம் உடல், உயிர், மனம் அனைத்தையும் அண்ணல்களிடம் அர்ப்பணித்து அவர்களில் நம்மை தொலைத்து, பனா ஆகுவோம் !
இதுவே கூனூ மஅஸ்ஸாதிகீன் ! தன்னை ஹக்கென்று உணர்ந்து, தான் ஹக்கே என்று ஹக்காகவே இருக்கக்கூடிய இன்ஸானே காமில்களிடம், அருட்பெரும் சோதியிடம், தனிப்பெரும் கருணையிடம், ஆகி இருங்கள் !ஆகி விடுங்கள் ! என்பதன் தாத்பரியம் ! அந்த மஹானுபவர்களை நெருங்க ஒரே வழி, இடைவிடாத அல்லாஹ்வின் திக்ரும், அண்ணலெம் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சலவாத்தும் மிக்க மிக்க அவசியம் !
அல்லாஹ் தன்னை அதிகமதிகமாக திக்ர் செய்பவர்களின் ஹிஸ்புல்லாஹ் என்னும் நல்லடியார்களின் திருக்கூட்டத்தில் நம்மனைவரையும் சேர்ந்து, அவனும் அவனது மெய்நேசர்களும் ஒன்றேயாதலால், நம் ஒரே கரைசேரும் தலமும் நிலையான ஆதரவும், பாதுகாப்பும் அவர்களே (அல்லாஹ்வே ) என்பதை உணர்ந்து கரைசேர ஏகன் வல்ல ரஹ்மான் அல்லாஹ் தௌபீக் என்னும் நல்லுதவி புரிவானாக ! ஆமீன் ! யா றப்பல் ஆலமீன் ! நம் அனைவரின் சங்கைக்குரிய ஷெய்குனா மௌலானா மௌலவி A. J. அப்துற் றவூஃப் மிஸ்பாஹி பஹ்ஜீ வாப்பா நாயகம் தவ்வலல்லாஹு உம்ரஹு வ தாமத்த பரக்காதுஹு இந்த நாதாக்களின் அருளாசிகளுடன்
இறை நன்றியுடன்
இறையன்புடன்
மஹானந்தன்( அமீருத்தீன்