ஸஜத என்னும் அரபி மூலச் சொல்லினின்றும் ஸுஜூத், ஸஜ்தா, ஸாஜித், மஸ்ஜித் முதலிய சொற்கள் வந்துள்ளன !
ஸஜத என்ற சொல்லுக்கு வெளிப்படையான அர்த்தம் சிரம் பணிந்தான் என்பதாகும் ! ஆனால், அந்தரங்கமான, பாத்தினான பொருளாவது, ஒரு அடியான் தனது உடலையும், உயிரையும், மனதையும், ஆன்மாவையும் அல்லாஹ்வில், அவனது எல்லையற்ற தூய்மையான உள்ளமையில் அழிந்து போகவிடுதல்! கரைந்துபோகவிடுதல் ! பனா ஆகிவிடுதல் ! அதாவது அல்லாஹ்வின் வுஜூத் என்னும் உள்ளமையிலும் ஸிபாத்துக்கள் என்னும் அவனுடைய கல்யாண குணங்களிலும் தன் உடலையும், மனதையும் காணமலாக்கி-பனாவாக்கி,தொலைத்து அப்து வேறு றப்பு வேறு எனும் உண்மையான ஷிர்க்கை முற்றிலும் நீக்கி, இறைவனோடு ஒன்றித்த பேரின்ப நிலையில் மூழ்கியிருத்தல் ஆகும் .
இந்த நிலையே குர்பியத் எனும் மனம், உள்ளம் கடந்து அல்லாஹ்வுடன் மிக மிக நெருங்கியிருத்தலாகும் அந்த நெருக்கம் எத்தகையதென்றால், நெருக்கமும், நெருங்குபவனும், நெருங்கப்படுபவனும் ஒன்றாய் இருத்தல் ! “குன்” என்றால் அது ஆகிவிடுமே அந்த குன்ஹு தாத்தாகவே இருத்தல் !
இந்த நேரத்தில் தான், துஆ மக்பூலாக, ஏற்றுக்கொள்ளப்பட மிக அதிக வாய்ப்புள்ளது. காரணம் துஆவும், துஆ கேட்பவனும், கேட்கப்படுபவனும் ஒன்றாகவே ஆகியிருத்தல் ! அதை விட்டு , வெறும் நெற்றியை ஆகாயத்திலிருந்து தரையில் வைத்து தேய்த்துக்கொண்டு, இரு உள்ளங்கைகளையும், இரு முழங்கால் முட்டிகளையும், இரண்டு கால்களின் விரல்களின் உட்பக்கங்களையும் தரையில், நிலத்தில் வைத்துக்கொண்டும், உள்ளத்தால் ஊர்மேய்ந்துக்கொண்டும் பழைய நாற்றமெடுத்த குப்பைக்கூல சாக்கடை எண்ணங்களையெல்லாம் கிளறிக்கொண்டும் கற்பனைக்கனவுகளை கண்டுகொண்டும், சதித்திட்டங்களை தீட்டிக்கொண்டும் முஸல்லாவில் உடம்பு இருக்க, அல்லாஹ்வில் உள்ளம் இருக்காமல் அங்கிங்கு அலைந்துக்கொண்டேயிருப்பது ஸஜ்தா என்ற பெயரில் நாம் செய்யும் மாபெரும் பாவமாகும் !
ஸஜ்தாவென்பது ஹுலூர் என்னும் பரவச நிலை ! இறைவனை சந்திக்கும் நிலை ! A Pleasant state of being in the Presence of Allah ! இறை பிரசன்ன நிலை ! இந்த நிலையில், பிரசன்னம் என்னும் பரவசமும் பரவசப்படுபவனும் வுஜூத் ஆகிய மெய்ப்பொருளும் ஒன்றாயிருத்தலே உண்மையான ஸஜ்தாவாகும் ! அதுவே திக்ராகவும் ஆகிவிடும் ! திக்ர் எனும் தியானமும் தாகிர் என்னும் தியானிப்பவனும் மத்கூர் என்னும் தியானிக்கப்படுபவனும் ஏகமாயிருத்தல் ! இதனையே, {وَاذْكُرِ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ إِلَيْهِ تَبْتِيلًا [المزمل: 8] வத்குரிஸ்ம ரப்பிக வதபத்தல் இலைஹி தப்தீலா…… உமது இரட்சகனின் திருநாமத்தை நினைவு கூறுவீராக, மேலும் அவனவனவில் முற்றிலும் ஆகிவிடுவீராக ! என்னும் திருமறை வசனத்தின் கருத்தும் இதுவே என நம் ஸூபி மஹான்கள் விளக்கம் அளிக்கின்றனர் !
ஸுஜூதின் அல்லது இபாதத்தின் தத்துவமும் இதுவே ! இது தொழுகைக்கு மட்டுமல்ல திருக்குர்ஆன் ஓதுவதற்கும் சாலப்பொருந்தும் ! இந்த ஏகத்துவ ,அத்வைத ஞான உணர்வு நம் கல்புக்குள் மலர்ந்து விட்டால்
அந்த பரவச உணர்வு நம் ரூஹுக்குள் பிரவேசித்து, ஸிர் என்னும் இறை இரகஸியத்தில் தன்னுடைய இருப்பிடத்தை மைய்யமாக கொண்டு விடும்! இதனையே, அல் இன்ஸானு ஸிர்ரீ வ அன ஸிர்ருஹு நான் மனிதனின் இரகஸியமாக உள்ளேன் ! அந்த மனிதன் எனது இரகஸியமாக இருக்கின்றான் என இறைவன் கூறியதாக கௌது நாயகம் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானீ அவர்கள் நவின்றுள்ளார்கள்!
எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ் நம்மை உண்மையான ஸாஜிதீன்களாக ஆபிதீன்களாக ஆரிபீன்களாக ஆக்கியருள்வானாக ! ஆமீன்…………..! யா றப்பல் ஆலமீன் !
இறையன்பன்
மஹானந்தன் (அமீருத்தீன்)