ஆக்கம் – சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ்
A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ,பஹ்ஜீ அன்னவர்கள்
தொடர் – 01
ஒரு விளக்கம்
1983-12-27 திகதிய ”தினபதி” நாளிதழில் ஞானபிதா அவர்கள் “உருவ வணக்கம் இஸ்லாம் அதை ஏற்கவில்லை” எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்கள். அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் விமர்சணக் கட்டுரைகளை வெளியிட்டார்கள். எனினும் எஸ்.எம. மன்சூர் என்பவர் 1984-01-02ம் திகதியன்று ”தினபதி”யில் எழுதிய மறுப்புக் கட்டுரையில் ”சூரதுல் இக்லாஸ்” எனும் திருமறை அத்தியாயம் எதிராதாரமாக அவரால் எடுத்தாண்டு எழுதப்பட்டிருந்தது.
உண்மையில் ஞானபிதா அவர்கள் வலியுறுத்தி விளக்கிவருகின்ற ”வஹ்ததுல் வுஜூத்” (உள்ளமை ஒன்றே) கொள்கைக்கு ஆதரவான – ஆதாரமான அத்தியாயமே ”சூரதுல் இக்லாஸ்“ ஆகும். எனவே, ஜனாப் மன்சூர் அவர்களது அம் மறுப்புக் கட்டுரைக்கு ஞானபிதா அவர்கள் “உருவமும் பிரம்மமும்” எனும் தலைப்பில் இவ்விளக்க கட்டுரையை எழுதி முடித்த போது “தினபதி” ஆசிரியபீடம் மேற்படி கட்டுரை தொடர்பான வாசகர்களின் வாதப் பிரதிவாதங்களுக்கு முத்தாய்ப்பு வைத்தது.
எனினும் 1984.02.21ம் திகதி ஞானபிதா அவர்களால் எழுதி முடிக்கப்பட்ட “உருவமும் பிரம்மமும்” என்ற இக்கட்டுரை தொகுப்பை சுமார் 35 ஆண்டுகளாக எனது பெட்டகத்தில் பாதுகாப்பாக வைத்திருந்து “ஷம்ஸ் இணைய தள” வாசகர்களின அறிவுப் பலத்துக்காக இப்போது “பெட்டகக் கட்டுரைத் தொடரில்” பிரசுரிக்கின்றேன். வாசித்துப் பயன் பெறுவீர்களாக, உங்கள் சந்ததியினருக்கும் பாதுகாத்து வைப்பீர்களாக
-ஆசிரியர்
குறிப்பு – பிரம்மம் என்பது தமிழ்ச்சொல் அனைத்தையும் சேர்த்துக் கொண்ட ஒரு மொத்தப் பொருளுக்கு “பிரம்மம்” “தாத்” “வுஜூத்” “உள்ளமை” “மெய்ப்பொருள்” என்றெல்லாம் கூறப்படும் என்பதை கவனித்திற் கொள்ளவும்.
எஸ்.எம. மன்சூர் அவர்களுக்கு ஞானபிதா அவர்கள் எழுதிய மறுப்பு மடல்
27.12.1983ம் திகதிய “தினபதி” பத்திரிகையில் ”உருவ வணக்கம் இஸ்லாம் அதை ஏற்கவில்லை” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை மறுத்து ஜனாப் எஸ்.எம. மன்சூர் என்பவர் 02.01.1984ம் திகதிய “தினபதி”யில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அது, ஏற்கனவே எனது கட்டுரையை மறுத்து எழுதிய சகோதரர் எம்.எச்.எம் ஜுனைதீன் அவர்களுடைய கட்டுரையை போன்று கருத்தை கவரவில்லை.நெஞ்சை கொஞ்சவில்லை. அதற்கு மாறாக நெஞ்சைக் கிள்ளியது.
ஜுனைதீன் எழுதிய கட்டுரையில் தர்க்க ரீதியான கருத்துக்கள் ஆங்காங்கே காணப்பட்டன. ஆனால, மன்சூர் அவர்களின் கட்டுரையை உப்பில்லாப் பண்டம் போல் சப்பென்று இருந்தது.
படிப்பதற்கு கசப்பாக இருந்த போதிலும் பதில் எழுத வேண்டும் என்பதற்காக இறுதிவரை படித்தேன். கருத்துக்கள் இடம்பெற வேண்டிய அக்கட்டுரையில் மனக்குமுறல்களே இடம்பெற்றிருந்தன.
நான் எழுதிய கட்டுரையில் குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் ஆதாரங்களாகக் கூறப்படவில்லை என்று குறைபட்டுக்கொள்ளும் மன்சூர் அவர்கள், தானெழுதிய கட்டுரையில் ,தனது வாதத்துக்கு ஆதாரமாக குர்ஆன், ஹதீஸ்களில் ஒன்றையேனும் கூறாமல் கட்டுரையை மட்டும் விரித்திருப்பது வியப்புக்குரியதாகும்.
அவரின் கட்டுரை திருமறை வசனங்களைக் கொண்டு நிரப்பப்பட்டிருந்தாலும் அவற்றில் ஒன்றேனும் எனது வாதத்தை மறுப்பதற்கான ஆதாரமில்லை. மாறாக அவையனைத்தும் எனது வாதத்தை உறுதிப்படுத்துபவையாகவே உள்ளன. இவ்வுண்மையை வாசகர்கள் இக் கட்டுரை முழுவதையும் படித்த பின் மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
-எனது வாதம்-
அல்லாஹ்வின் “தாத்” எனப்படும் பிரம்மம்தான் மனிதனாகவும் மற்றுமுள்ள சகல வஸ்த்துக்களாகவும் தோற்றுகிறது. பிரபஞ்சமாக தோற்றுவது வுஜூத் ஆகிய பிரம்மமேயன்றி வேறொன்றல்ல.சிருஷ்டி என்பது யதார்த்தத்தில் இல்லாத ஒன்று ஆயினும் சிருஷ்டியாகத் தோன்றுவது யதார்த்தத்தில் உள்ள “தாத்”எனும் பிரம்மமேதான். சிருஷ்டி என்பது நாமரூபத்தில் உள்ளதேயல்லாமல் யதார்த்தத்தில் இலலை. யதார்த்தத்தில் இருப்பது“தாத்”எனும் பிரம்மம் ஒன்றேதான். எது எந்த நாமரூபத்தில் இருந்தாலும் அது உள்ளமையான அப்பிரம்மத்தின் நாமரூபமேயாகும். பிரபஞ்சம் என்பது பிரம்மம்தான். அது அல்லாத ஒன்றுமில்லை. எல்லாமாயும் வெளியாகி இருப்பது பரிசுத்த “வுஜூத்” பிரம்மமேயாகும். அதுவே எல்லாமாயும் இருப்பதால் அதற்கு வேறான ஒன்றுமேயில்லை. எல்லாமாயும் அவனே இருப்பதால் உருவங்கள் யாவும் அவனுடைய உருவமே. இதுதான் எனது வாதமாகும்.
மன்சூர் அவர்கள் எனது இவ்வாதத்தை முற்றாக மறுத்துள்ளார். அவருடைய மறுப்புக்கு இச் சிறுகட்டுரையில் விரிவான ஆதாரங்களுடன் விளக்கம் கூற முடியாது. நான் கூறுகின்ற வாதம் எல்லையில்லாப் பிரம்மத்துடன் “வுஜூதுடன்” சம்பந்தப்பட்ட பரந்து விரிந்த சமுத்திரம் போன்றது.
மேலும் அவர் கூறியுள்ள ஆதாரங்களை ஒவ்வொன்றாக எடுத்து இக் கட்டுரையில் விளக்கம் கூறுவதாயினும் அது கூட சாத்தியமானதல்ல அதற்குத் தனியாக நூல் ஒன்றுதான் எழுதவேண்டும். எனவே, வாசக நேயர்களின் நன்மை கருதியும், சகோதரர் மன்சூர் அவர்களுக்கு உண்மையை தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும், அவர் மறுத்த வாதமான “அல்லாஹ்வுக்கு உருவமும் உண்டு என்பதையும், அல்லாஹ்தான் பிரபஞ்சமாக உள்ளான்” என்பதையும் சுருக்கமாக எழுத விரும்புகிறேன்.
இக் கட்டுரையின் மூலம், மன்சூர் அவர்கள் காட்டிய ஆதாரம் அவர்களின் வாதத்துக்கான ஆதாரமில்லை என்பதை விளக்குவதும், எனது வாதமே சரியானது என்பதைச் சுட்டிக்காட்டுவதும் எனது நோக்கமாகும்.
எனது வாதம் பிழை என்பதற்கு மன்சூர் காட்டிய ஆதாரங்களுள் மிகப் பலம் வாய்ந்த ஆதாரம் ஒன்றை மட்டும் முதலில் எடுத்து ஆராய்வோம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். இவ்வாய்வின் மூலம் மன்சூர் அவர்களின் கூற்று ஆதாரமற்றது என்பதை நிரூபணமாகும். இக் கட்டுரைக்கு மன்சூர் மறுப்பு எழுதினாலும், எழுதாவிட்டாலும் சரியே. எனது வாதம் சரியானது என்பதற்கு இஸ்லாமிய மூலாதாரங்களுடன் தொடர்ந்து எழுதுவேன். “இன்ஷா அல்லாஹ்”
-மன்சூர் காட்டும் ஆதாரம்-
“வுஜூத்”எனப்படும் பிரம்மம்தான் எல்லாமாயும் தோற்றுகிறதென்ற இவ்வாதத்தையும், அல்லாஹ்வுக்கு உருவமும் உண்டு என்ற எனது கூற்றையும் மறுப்பதற்கு “இக்லாஸ்” (112;1-4) எனும் திருமறை அத்தியாயத்தை ஆதாரம் காட்டியுள்ளார். சகோதரர் மனசூர். அதுவருமாறு: 1.அவன்-அல்லாஹ் ஒருவன் 2.அல்லாஹ் தேவையற்றவன் 3.அவன் யாரையும் பெறவில்லை,அவனை யாரும் பெறவுமில்லை 4.அவனுக்கு நிகராக யாரும் இல்லை (என்று முஹம்மதே நீங்கள்) சொல்லுங்கன். மன்சூர் காட்டிய ஆதாரமும் அதன் பொருளும் இதுதான்.
அறபு மொழியில் “உருவம்” என்ற அர்த்தத்தை தரக்கூடிய சொற்களில் மிகப் பிரபல்யமான சொற்கள் இரண்டு உள்ளன. அவை,“சூறத்”,“ஷக்ல்” என்பனவாகும்.
நான்கு வசனங்களைக்கொண்ட மேற்குறிப்பிட்ட அத்தியாயத்தில்,“அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை” என்றும் “அல்லாஹ் தான் அனைத்துமாயும் வெளியாகியுள்ளான் என்பது பிழை” என்றும் காட்டக்கூடிய வசனம் எது? சகோதரர் மன்சூர் சுட்டிக்காட்டுவாரா? அல்லது, “உருவம்“ என்ற அர்த்தமுள்ள மேற்குறிப்பிட்ட இரண்டு சொற்களில் ஒன்றாவாது எங்கே இருக்கின்றது என்பதையாவது அவர் தொட்டுக்காட்டுவாரா? இருக்கின்ற ஒன்றைத்தானே சுட்டிக்காட்டவும்,தொட்டுக்காட்டவும் முடியும். இல்லாத ஒன்றை எப்படிக்காட்ட முடியும்?
அவ்வத்தியாயத்துக்கு விளக்கமாய்ப் பொருள் எழுதிக்காட்டிய மன்சூர், தானெழுதிய பொருளில் “உருவம்” என்ற சொல்லைக் கூடக் கூறவில்லை. ஆனால் “உருவமில்லை” என்று விளக்கம் எழுதியுள்ளார்.
அவ்வத்தியாயத்தில் “உருவம்” என்ற சொல்கூட வராமலிருக்கும் போது “உருவம் இல்லை” என்பதற்கு அதை ஆதாரமாக கூறமுற்பட்டது அறிஞர் மன்சூர் அவர்களின் அதி(வி)வேகமேயாகும்.
சொல் இன்றிப் பொருள் இல்லை. இது நியதி. இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்தது மாத்திரமின்றி, அதைத் தனது வாதத்துக்கு ஆதாரமாகவும் கூறியிருப்பது அவரைப் பற்றி சிந்திக்கவும், அவர் மீது அநுதாபப்படவும் வைத்துள்ளது.
அவ்வத்தியாயத்திலுள்ள நான்கு திருவசனங்களையும் நாம் தனித்தனியே ஆராய்ந்து பார்ப்போம். அதில் ஒன்றிலாவது அறிஞர் மன்சூர் அவர்களின வாதத்துக்கான ஆதாரம் மறைந்து கொண்டிருக்கிறதா? என்று அலசிப்பார்ப்போம்.
-குல் – ஹவ – அல்லாஹ் – அஹத் !
“சொல்லுங்கள் – அவன் – அல்லாஹ் – ஏகன்!”
அத்தியாயத்தின் முதல் வசனமான இவ்வசனத்தில், “அல்லாஹ் ஏகன்” என்பதற்குத்தான் ஆதாரம் உண்டேயன்றி “அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை” என்பதற்கோ, அல்லது “தாத்” எனும் பிரம்மமேதான் பிரபஞ்சமாகத் ‘தஜல்லி’ (வெளி)யாகியுள்ளது என்ற கூற்று பிழையானது என்பதற்கோ எவ்வித ஆதாரமும் இல்லை. ஆனால், எனது வாதம் பிழை என்பதற்கு இவ்வசனத்தை ஆதாரம் காட்டியுள்ளார் சகோதரர் மன்சூர்.
“வுஜூத்” எனும் பிரம்மம் இரண்டு அல்லது பலது என்று வாதிடுபவர்களிடம் காட்டப்பட வேண்டிய ஆதாரம் அது. அல்லாஹ் (பிரம்மம்) ஒன்றுதான் ஏகமானதுதான் என்று வாதிடும் எனவாதம் பிழை என்பதற்கு இதை ஆதாரம் காட்டியுள்ளார். இதிலிருந்து மன்சூர் “துறை தெரியாமல் தோணியைத் தள்ளி விட்டார்” என்பது நன்கு புலனாகிறது என நினைக்கிறேன்.
இவ் வசனத்தில் எனது வாதம் சரியானது என்பதற்கு பலமான ஆதாரமும், விளக்கமும் உண்டு. சகோதரர் மன்சூர் எனது வாதத்தை முற்று முழுதாக மறுக்கின்ற காரணத்தால், இவ்வசனத்தில் புதைந்து கிடக்கும் விலைமதிப்பற்ற தத்துவ விளக்கத்தை கீழே குறிப்பிடுகிறேன். படித்துணர்வாராக!
‘அல்லாஹ்’ என்பது பெயர்
‘அல்லாஹ்’ ஏகன் என்று நம்புவதற்கு முன், அல்லாஹ் என்ற பெயருக்குரிய “வஸ்த்து”எது என்பதைத் தெரிந்து கொள்ளல் வேண்டும். அவ்வஸ்த்து எதுவென்றே தெரியாமல், அது ஒன்றா, பலதா, ஏகமானதா, கண்டதுண்டமானதா என்று நம்ப முடியாது.
‘அல்லாஹ்’ என்பது பெயரேயன்றி, பெயருக்குரிய வஸ்த்துவல்ல. ஆயினும், அவ்வஸ்த்துவை விட்டும் அப்பெயரை பிரித்தெடுக்க முடியாது.
‘அல்லாஹ்’ என்ற பெயருக்குரிய வஸ்த்து, அவனுடைய “தாத்” பிரம்மமேயாகும். அந்தப் பிரம்மத்தின் இடுகுறி-இயற்பெயர்தான் “அல்லாஹ்” என்பது. அது பிரம்மத்தின் இயற்பெயரேயன்றி அதன் தொழிற்பெயரல்ல.
“றஸ்ஸாக்” (உணவளிப்பவன்). “கப்பார்” (குற்றங்களை மன்னிப்பவன்) என்பன போன்ற நாமங்கள் அவனுடைய பிரம்மத்தின் “தாத்”தின் – தொழிற்பெயராகும்.
எனவே அல்லாஹ் ஏகன் என்று நம்புவதென்பதின் கருத்து, அப்பெயருக்குரிய பிரம்மம்-“தாத்” ஒன்றென்றும் அதுவே ஏகமாயுள்ளது என்றும் நம்புவதேயல்லாமல், “அல்லாஹ்” என்ற பெயர் மாத்திரம் ஒன்றென்று நம்புவது கருத்தல்ல.
“முஹம்மத் ஒருவன்” என நம்புவதென்றால் அந்தப் பெயர் மட்டும் ஒன்றென்று நம்புவது அதன் அர்த்தமா? அல்லது அப் பெயருக்குரிய “தாத்”தும் ஒன்றுதான் என நம்புவது அதன் அர்த்தமா?
இதுவரை கூறியதிலிருந்து, “அல்லாஹ்” என்ற பெயர் இறைவனின் “தாத்” பிரம்மத்தின் பெயர் என்பதும், அது அதன் இயற்பெயரேயன்றித் தொழிற்பெயரல்ல என்பதும் தெளிவாகி விட்டது.
“அல்லாஹ்” என்பது “தாத்” பிரம்மத்தின் பெயர் என அறிந்து கொண்டதுபோல், பிரம்மம் “தாத்” என்று எதற்குச் சொல்லப்படும் என்றும், பிரம்மம் என்பது எவற்றையெல்லாம் உள்ளடக்கியதென்றும் தெரிந்து கொள்ளுதலும் வேண்டும்.
பிரம்மம் (தாத், வுஜூத், உள்ளமை)
பிரம்மம் (தாத்) என்பது சர்வ சிருஷ்டிகளையும், தன்மைகளையும், விட்டுப்பிரியாமல் அவற்றை எல்லாம் தன்னகத்தே கொண்டுள்ள ஒன்றாகும். அதை “அல்லாஹ்” என்றும் “கடவுள்”, “கோட்”, “தெய்யோ”, “குதா” என்றும் பல பெயர்களால் அழைக்கின்றோம். இவை மொழிமாற்றங்களால் ஏற்படும் சொல் மாற்றங்களே. அவையனைத்தும் அப்பிரம்மத்தையே – தாத்தையே குறிக்கின்றன.
‘அல்லாஹ்’ என்ற பெயரில் அனைத்தையும் உள்ளடக்கிய “தாத்” பிரம்மத்துக்கு இரு உதாரணங்களைத் தருகின்றேன். அதனால், பிரம்மம் என்பது அனைத்தையும் உள்ளடக்கியதாக இருப்பினும் அது ஒன்றேதான் என்பதும், ஏகமாயுள்ளது அதுவேதான் என்பதும், அது இரண்டோ அல்லது பலதோ அல்ல என்பதும், அப்பிரம்மத்தை விட்டும் இப்பிரபஞ்சம் வேறானதல்ல என்பதும் விளங்கும்.
“அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நீ நன்றியுடையவனாக இருப்பது, அவனை நீ அறிந்தவனாக இருப்பதுதான்”-ஞானபிதா
உதாரணம் : 1- மனிதன்
“முஹம்மத்” என்பது ஒருவனின் பெயர். இப்பெயர் அவருடைய சர்வ (உள்ளான,வெளியான) உறுப்புக்களையும், சிறிய பெரிய அங்கங்களையும், அவரின் சகல தன்மைகளையும் உள்ளடக்கி அவரை மொத்தமாக காட்டுகின்ற ஒன்றாகும்.“ முஹம்மத்” என்ற சொல்லில் அவரின் சர்வங்கமும், தன்மைகளும் அடங்கிவிடுகின்றன. (அதாவது, அவன் உச்சி முதற்கொண்டு உள்ளங்கால் வரையிலான “தாத்” பிரம்மத்துக்கும், அதன் தன்மைகளுக்குமான இடுகுறிநாமமே “முஹம்மத்” என்பதாகும். “தாத்” இல்லாமல் தன்மைகளுமில்லை. நாமமும் இல்லை)
“முஹம்மத்” என்பவர் ஒருவராக இருப்பினும், அவரின் உறுப்புக்களும் தன்மைகளுமோ பல. உறுப்புக்களும் தன்மைகளும் பலவாகத் தோன்றுவதால் “முஹம்மத்” என்பது பலரையல்ல. பல உறுப்புக்களைக் கொண்ட “ஒரு வஸ்த்து”வே “முஹம்மத்” ஆகும்.
முஹம்மதுக்கு அவரின் உறுப்புக்கள் வேறானவையல்ல. பல உறுப்புக்களாலான ஒரு மொத்த வடிவத்துக்கு (பிரம்மத்துக்கு) “மனிதன்” என்றும், அதன் இடுகுறி இயற்பெயர்தான் “முஹம்மத்” என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, உறுப்புக்கள் “முஹம்மத்” என்ற இயற்பெயருக்குரிய அம்மொத்த அமைப்புக்கு (பிரம்மத்துக்கு) வேறானவையாக ஆகமாட்டாது.
ஆயினும், உறுப்புக்களுக்கும், தன்மைகளுக்கும் இடையே வேற்றுமைகள் இருக்கவே செய்யும். தலை என்ற ஓர் உறுப்பு கால் என்ற மறு உறுப்புக்கு வேறானதுதான். கண், மூக்குக்கு வேறானதுதான். கோபம் இரக்கத்துக்கு வேறானதுதான். ஆனால் இவையாவும் அம்மொத்த அமைப்பான முஹம்மதுடைய பிரம்மத்துக்கு வேறானவையல்ல. எனவே, “முஹம்மத் ஒருவர்” என நம்புவது அவரது சகல உறுப்புக்களையும், தன்மைகளையும் கொண்ட அவரின் “தாத்” உச்சி முதல் உள்ளங்கால் வரையான அவரது சர்வங்கமும் ஒன்றென்று நம்புதலையே குறிக்கும்.