Tuesday, October 8, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஸகாத் பற்றி ஓர் ஆய்வு

ஸகாத் பற்றி ஓர் ஆய்வு

ஆக்கம் : சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி அல்ஹாஜ் A.அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்-

தொடர்- 01

இஸ்லாம் மார்க்கத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மத்ஹப்கள் நான்கு உள்ளன. அவை ஷாபிஈ மத்ஹப்,ஹனபீமத்ஹப் ,ஹன்பலீமத்ஹப் மாலிக்மத்ஹப் என்ற பெயரால் அழைக்கப்படும்.

ஒரு முஸ்லிம் எந்த் நாட்டில் வாழ்ந்தாலும் எந்த மொழி பேசினாலும் மேற்கண்ட நான்கு மத்ஹப்களில் ஒன்றைத் தழுவியே அவனது வணக்க வழிபாடுகளைச் செய்தல்வேண்டும்.

வஹ்ஹாபிகள் மத்ஹப்கள் தேவையில்லை என்று வாதிடுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

முஸ்லிம்களில் அநேகர் சகாத் தொடர்பான விபரங்களைஅறிந்து கொள்ளாமல் தாம் விரும்பியவாறு சகாத் கொடுத்துவருகின்றார்கள். அத்தகையோர்விபரமறிந்து செயல்படவேண்டுமென்பதற்காக சகாத் பற்றி ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஷாபிஈ மத்ஹபைத் தழுவி அது தொடர்பான பிரதான சட்டங்களை மட்டும் இங்கு குறிப்பிட்டுள்ளேன். மேலதிக விபரம் தேவையானோர் சட்டக்லை நிபுணர்களை அணுகி அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். சட்ட மேதைகளில் யாராவது இதில் பிழை இருக்கக்கண்டால் எனக்குச்சுட்டிக்காட்டுமாறு அவர்களை அன்பாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

சகாத் என்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று. இதன் பொருள்

வளர்தல், தூய்மைப்படுத்துதல் என்பதாகும். ஏழைவரி என்று இதற்குப்பொருள் கூறுதல் பிழை.

ஒருவன் தன் உடமைகளிலிருந்து சகாத்துக்குரிய அளவை ஏழைகளுக்குகொடுப்பதன் மூலம் அவன் பாவத்திலிருந்தும், உலோபித்தனத்திலிருந்தும் தூய்மைபெறுகின்றான். சகாத்தை நிறவேற்றிய பறகத்தாலும் அதைப் பெற்றவர்களின் துஆ பிரார்த்தனையாலும் கொடுத்தவரின் பொருட்கள் மேலும் வளர்கின்றன. இதனால்தான் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது.

ஸகாத் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு கமையாக்கப்பட்டது.

நபியே அவர்களின் செல்வத்திலிருந்து தருமத்திற்கானதை எடுத்துக்கொண்டு அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக.

திருக்குர்ஆன் 9-103

தொழுகையை நிறைவேற்றுங்கள்.சகாத் கொடுங்கள் என்று அல்லாஹ் திரு மறையில் பல இடங்களில் தொழுகையுடன் இணைத்தே கூறியுள்ளான் இதிலிருந்து சகாத்தின் முக்கியத்துவம் தெளிவாகின்றது.

சகாத் கடமை என்பதைக் குறிக்கும் திருமறை வசனங்களும், நபீ மொழிகளும், இமாம்களின் இஜ்மாவும் இருப்பதோடு அனைவராலும்வெளிப்படையாக அறியப்பட்ட கடமையாகவும் சகாத் இருக்கின்றது. சந்தர்ப்பத்திற்கேற்றவாறு சட்டத்தை மாற்றியமைக்கும் வஹ்ஹாபிகள் கூட சகாத் கடமை என்பதை இதுவரை மறுக்க முன்வரவில்லை,அவர்களின் புதிய கொம்பியூட்டர் கண்டுபிடிப்பு இதன்பிறகு என்ன சொல்லுமோ தெரியவில்லை.

எனவே, சகாத் கடமையான ஒருவன் தன்மீது அது கடமையில்லை என்று மனமுரண்டாக மறுத்தால் அவன் “காபிர்” ஆகிவிடுவான்.

சகாத் எதில் கடமை?

தங்கம்,வெள்ளி சேமித்து வைத்து உண்ணப்படும் உணவுப்பொருட்கள், திராட்சை பேரீத்தம்பழம் ஆகிய இரு வகைப்பழங்கள், வியாபாரப்பொருட்கள்,ஆடு,மாடு,ஒட்டகம் ஆகிய மூவகைக் கால் நடைகள்

முதலியவை மீது மட்டுமே சகாத் கடமையாகும்.

யார் மீது கடமை?

ஒருவன் முஸ்லிமாகவும் புத்தி சுவாதீனமுள்ளவனாகவும் வயது வந்தவனாகவும், சுதந்திரமுள்ளவனாகவும், பொருட்களின் மீது அதிகாரம் உள்ளவனாகவும் இருப்பதோடு “சகாத்” கடமையாவதற்குரிய அளவுள்ள அவனின் பொருட்கள் அவனிடம் ஒரு வருடகாலம் இருந்தால் அவன் மீது சகாத் கடமையாகும். எனினும் மேற்கண்ட பொருட்களின் உரிமையாளனாக

சிறுவனோ புத்தி சுவாதீனமற்றவனோ இருந்தால் இவர்களைப் பராமரிப்பவர்கள் இவர்களின் பொருட்களிலிருந்து சகாத் கொடுக்க வேண்டும்.

யாருக்கு சகாத்?

சகாத் என்பது “பகீர்” களுக்கும், மிஸ்கீன்களுக்கும், சகாத் வசூலிப்பவர்களுக்கும், புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கும்,அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரித்தானதாக அல்லாஹ் ஏற்படுத்தியகடமையாகும்.அல்லாஹ் யாவையும் அறிந்தோனும், ஞானமுடையோனுமாயுள்ளான்.

திருக்குர்ஆன் 9-60

இந்த வசனத்தில் சகாத் பெறத்தகுதியான எட்டுப் பிரிவினரை அல்லாஹ் கூறியுள்ளான்.இவர்களில் அடிமைகள்,மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாளும் இமாம்களால் நியமிக்கப்படுகின்ற சகாத் வசூலகர்கள் ஆகிய இரு பிரிவினரும் தற்காலத்தில் இல்லாததால் இவர்கள் தவிரவுள்ள மற்ற ஆறு பிரிவினருக்கும் சகாத் வழங்குவது கடமையாகும். இந்த ஆறு வகையினர் அல்லாத வேறு நபர்களுக்கு வழங்கினால் சகாத் நிறைவேறாது.

பகீர்- மிஸ்கீன்

அறவேபொருள் இல்லாதவனும், தனக்கும், தான் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியவர்களுக்கும் வருவாய் தருகின்ற ஹலாலான சம்பாத்தியம் இல்லாதவனும் பகீர் ஆவார்கள், இதன்படி ஒருவனுக்கு ஹறாமான வருவாய் தேவைக்கதிகமாக இருந்தாலும் அவனும் பகீரேதான்.

ஹலாலான சம்பாத்தியம் இருந்தும் போதிய வருவாய் இல்லாத ஒருவன் “மிஸ்கீன்” ஆவான்,

ஒருவனுக்கும் விசாலமான வீடு, பணியாட்கள்,உயர்தர ஆடைகள்தேவையான நூல்கள் அல்லது பெண்களுக்குத்தேவையான நகைகள் ஆதியன இருப்பதோடு அவனின் அன்றாடச் செலவுக்குச் சிரமப்பட்டால்அவனும் பகீர் அல்லது மிஸ்கீன் என்ற பெயர்பெற்றுசகாத் பெறுவதற்குத் தகுதியுடையவனாகின்றான். இதுபோன்றே ஒருவன் வியாபாரத்தில் அல்லது விவசாயத்தில், கால் நடைவளர்ப்பில் ஈடுபட்டு சகாத் கொடுக்கும் அளவுக்கு அவனின் வருவாய் இருந்தாலும் அவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் அன்றாடச் செலவுக்குப்போதுமான வருவாய் இல்லாவிட்டால் அவனும் சகாத் பெறத் தகுதியானவனாகின்றான்.இந்த அடிப்படையில் ஆயிரம் பொற்காசுகொண்டு வியபாரம் செய்யும் ஒருவன் சகாத் பெறுவதற்கு தகுதியுள்ளவனாகவும், கோடாலியும் கயிறுமே உடமையுள்ள போதிய வருயாயுள்ள விறகுவெட்டி சகாத் பெற தகதியற்றவனாகவும் ஆகிவிடுகின்றான், என இமாம் கஸ்ஸாலி(றஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்

ஹலாலான தொழில் இருந்தும் அதில் ஈடுபடாமல் மார்க்கக் கல்வியை கற்பவர்களுக்கு சகாத் வழங்கலாம் மார்க்கக் கல்வி கற்கும் மாணவர்கள் இதில் அடங்குவர். ஆனால் தொழிலில் ஈடுபடாது மேலதிக வணக்கங்களில் ஈடுபடும் ஆபித் வணக்கசாலிகளுக்கு சகாத் வழங்குவது கூடாது. ஏனெனில் கல்வி கற்பது கடமையாகும். மேலதிக வணக்கங்களோ அவரவர் விருப்பத்திற்குரியவையாகும்.

கடன்

ஒருவன் தனக்காகவும், தன் குடும்பத்தின் ஹலாலான செலவினங்களுக்காகவும் கடன் வாங்கினான். அவனால் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத போது அவன் சகாத் பெறத் தகுதியுடையவனாகின்றான்.

பள்ளிவாயல்கள் மற்றும் கல்விக்கூடங்கள் கட்டுதல் போன்ற பொதுச்சேவைக்காகவும்,ஏழைகளின் திருமணம் நடத்தி வைத்தல், இருவருக்கிடையில் சமாதானம் செய்தல் போன்ற சமூகசேவைக்காகவும், கைதிகளை விடுவித்தல்,கடன்பெற்றவருக்காக பிணை நிற்குதல் போன்ற நற் சேவைக்காகவும் கடன்பட்டவர்கள், அவர்கள் செல்வந்தர்களாயிருந்தாலும் இக்கடன்களை திருப்பிச் செலுத்த சகாத் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் செல்வந்தன் தனது செல்வத்திலிருந்தே இவ்வாறு செலவு செய்திருந்தால்அதற்காக சகாத் பெறுவது கூடாது.

பள்ளிவாயல்கள் மற்றும் கல்விக்கூடங்கள்போன்ற பொது நலத்தொண்டுக்காக கடன் பெற்றிருந்தால் மட்டும் கடன் நிவாரணமாக சகாத் பெற முடியும். உதாரணமாக கட்டடப் பொருட்களை கடனாக வாங்குவதுபோலும் கட்டடத்தொழிலாளர்களுக்கு கடனாகப் பணம் வாங்கிக் கொடுப்பது போலும். இந்தக் கடன் நிவாரணமாக சகாத் பெறமுடியும். ஆனால் சகாத் பணம் திரட்டி இவைகளைக் கட்டுவது கூடாது.

கைதி விடுதலைக்காக மற்றும் கடன் பட்டவனுக்காக பொறுப்பேற்றல் போன்ற நற்பணிகளில் கைதியும் கடன் பெற்றவனும்பொறுப்பேற்ற தொகையை வழங்குவற்குரிய செல்வந்தர்களாயிருந்தால் இதற்காக சகாத் பெறுவது கூடாது. கடன் கொடுத்த செல்வந்தன் கடன் பெற்ற ஏழையிடம் கொடுத்த கடனைவாங்கி அதை அவனுக்கே திரும்பவும் சகாத் ஆகக் கொடுக்கலாம். திருப்பி வாங்காமல் “கடன் தொகையை சகாத் பணமாக வைத்துக்கொள்” என்று கூறினாலோ, “இப்போதுநான் தரும் சகாத் பணம் கொண்டு என் கடனைத் திருப்பித் தா” என்ற நிபந்தனையுடன் சகாத் வழங்கினாலோ சகாத் நிறைவேறாது.

போராளிகள்

போரில் பெறும் இலாப நஷ்டங்களைக் கருதாமலும்,போராளியாக அரசிடம் பதிவு செய்துகொள்ளாமலும் அல்லாஹ்வுக்காகபோர் புரியும்போராளிகள் பயணச்செலவுக்காகவும் அவர்களின் குடும்பச்செலவுக்காகவும், யுத்த தளவாடங்கள் வாங்குவதற்காகவும் சகாத் வழங்கவேண்டும்.

வழிப்போக்கர்கள்

சகாத் வழங்கும் ஊரைக்கடந்துசெல்லும் பயணிகள் அல்லது அந்த ஊரில் இருந்து பயணம் புறப்பட விரும்பும் பயணிகள் ஆகயோர் வழிப்போக்கர்கள் ஆவர். பயணியின் நோக்கம் சுற்றுலாவாக இருப்பினும் சகாத் வழங்கலாம். எனினும் பயணத்துக்கான பணம் இல்லாதிருத்தல், அந்த பயணம் பாவத்திற்கான பயணமாக இல்லாதிருத்தல் இரண்டும் அவசியம்.

புதிய முஸ்லிம்

இவர்கள் நம்மிடம் உதவியை எதிர்பார்த்தால் அல்லது இவர்களுக்கு சகாத் வழங்குவதால் இவர்களின் சமூகத்தை சேர்ந்த மற்றவர்களும் இஸ்லாமின் பால் ஈர்க்கப்படுவர்கள் என்றநோக்கம் இருந்தால் இவர்களுக்கும் சகாத் வழங்கலாம்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments