தொடர் – 02…
1. சகாத் பெறத் தகுதியானவர்கள் குறைவாகவும் சகாத் பொருள் அதிகமாகவும் இருந்தால் தகுதியுள்ள அனைவருக்கும் சகாத் வழங்க வேண்டும். சகாத் பொருள் குறைவாக இருந்தால் சகாத் பெறத் தகுதியான ஆறு பிரிவினரில் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தது மூன்று நபர்களுக்காவது கட்டாயமாக்க கொடுத்தாக வேண்டும். இவ்வாறு கொடுப்பதற்காக சகாத் பொருளை ஆறு சம பங்குகளாகப் பங்கீடு செய்வது அவசியமாகும். ஆனால் ஒவ்வொரு பிரிவிலும் வழங்கப்படும் மூன்று நபர்களுக்கிடையில் சம பங்கீடு அவசியமில்லை.
2. ஏதாவது ஒரு பிரிவினர் முற்றிலும் இல்லாதபோதும் அல்லது மூன்று நபர்களை விடக் குறைவாக இருக்கும்போது இப்பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட தொகையை வேறு பிரிவினர்களுக்கு அல்லது அவர்களிலேயே மீதமுள்ளவர்களுக்குக் கொடுக்கலாம்.
3. உடைமைகள் இருக்கும் ஊர்களிலேயே சகாத் வழங்கவேண்டும். அவ்வூரை விட்டு வேறு ஊருக்கு சகாத்தைக் கொண்டு செல்லக்கூடாது. அது சகாத் கொடுப்பவனின் சொந்த ஊராக இருப்பினும் சரியே.
4 வியாபாரப் பொருட்களின் சகாத்தை பணமாகவும், தங்கம், வெள்ளி, விவசாயப்பொருட்கள், கால் நடைகள் ஆகியவற்றில் அந்தந்தப் பொருட்களாகவும் மட்டுமே சகாத் வழங்க வேண்டும். இதற்கு மாற்றமாக வழங்கினால் சகாத் நிறைவேறாது.
மேற்கண்ட இந் நான்கு சட்டப்பிரிவுகளிலும் ஷாபிஈ மத்ஹபின் இமாமுக்கும், மற்ற மூன்று மத்ஹபின் இமாம்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதால் அவர்களின் சொற்களைத் தழுவி சகாத் கொடுப்பதில் தவறில்லை.
5. நபி ஸல் அவர்களின் குடும்பத்தவர்களான ஹாஷிம், முத்தலிப் ஆகியோரின் வழித்தோன்றல்களுக்கும், மற்றும் செல்வந்தர்களுக்கும், காபிர்களுக்கும், குடும்பத்தலைவனால் போதுமான அளவு ஜீவனாம்சம் பெறுபவர்களுக்கும் சகாத் கொடுப்பது கூடாது.கொடுத்தால் நிறைவேறாது.தன் ஆயுட்காலத்திற்குப் போதுமான பொருள் உள்ளவன் அல்லது அன்றாடம்தேவையான போதிய வருவாய் ஈட்டித்தரும் தொழில் உள்ளவன் செல்வந்தன் எனும் பெயர் பெறுவான்.
உறவினர்
மனைவி, மக்கள், மக்களின் வழித்தோன்றல்கள் ஆகியோர்களுக்காகக் குடும்பத்தலைவனும், தாய், தந்தை,தாய் தந்தையின் பெற்றோர் ஆகியோருக்காகப் பிள்ளைகளும் ஜீவனாம்சம் கொடுப்பது கடமையாகும். இவர்கள் தவிர உள்ள உறவினன் ஒருவன் மற்றவருக்காக ஜீவனாம்சம் கொடுப்பது மேலதிகமாகும்.கடமையான ஜீவனாம்சம் போதுமானதாக இல்லாவிட்டால் மட்டுமே ஜீவனாம்சம் கொடுப்பவர்கள் தம்மிடம் ஜீவனாம்சம் பெறுபவர்களுக்கு சகாத் கொடுக்கலாம். உதாரணமாக,
1) பெற்றோருக்கு அன்றாடச் செலவுக்கு ஐம்பது ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால் மகனால் நாற்பது ரூபாய் மட்டுமே கொடுக்க முடிகிறது. இப்போது மகனிடமிருந்து சகாத் பெறலாம்.
2) ஒருவன் தன் சகோதர சகோதரிகளுக்கு அன்றாடம் போதுமான ஜீவனாம்சம் கொடுத்தாலும் தனது சகாத் பணத்தை அவர்களுக்கு சகாத் ஆகவும் கொடுக்கலாம். ஏனெனில் சகோதர சகோதரிகளுக்கு வழங்கப்படுவது மேலதிக ஜீவனாம்சமாகும்.
3) கடமையான ஜீவனாம்சம் போதுமானதாக இருந்தாலும் பகீர் மிஸ்கீன் என்ற காரணம் தவிரவுள்ள வழிப்போக்கன், போராளி, கடனாளி போன்ற மற்றக் காரணங்கள் கொண்டு ஜீவனாம்சம் கொடுப்பவர்களிடமிருந்தேசகாத் பெறலாம்.
4) மனைவிக்கு கணவன் ஜீவனாமசம் கொடுப்பதோடு கணவன் ஏழையாகவும், மனைவி செல்வமுள்ளவளாகவும் இருநதால் மனைவி தன் சகாத் பொருளை கணவனுக்குக் கொடுக்கலாம். இவ்வாறு கொடுப்பது ஸுன்னத்துமாகும். பாவிகளுக்க சகாத் கொடுத்தால்கடமை நிறைவேறும். ஆயினும் சகாத் பொருளை அவர்கள் பாவத்துக்காகப் பயன்படுத்துவார்கள் என்று உறுதியாகத்தெரிந்தால் பாவிக்கு சகாத் கொடுப்பது ஹறாமாகும்.
உத்தேச மதிப்பீடு
சகாத் வழங்கும் விடயத்தில் உத்தேச மதிப்பீடு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஒருவன். தனது பொருளாதாரத்தை இஸ்லாம் கூறியுள்ள முறைப்படி கணக்கிட்டு சகாத் வழங்க வேண்டும். ஒருவன் சரியாகக் கணக்கிடாமல் தனது பொருளாதாரம் பத்து இலட்சம் இருக்கலாம் அல்லது இருபது இலட்சம் இருக்கலாமென்று உத்தேச மதிப்பீடு செய்து சகாத் வழங்கினால் அது சகாத் ஆகமாட்டாது. செல்வந்தர்களிற் பலர் இவ்வாறு செய்தாலும் இது பிழையானதே.
நிய்யத்
சகாத் கொடுக்கும்போது மனதில் நிய்யத் செய்வது கடமையாகும். வாயால் மொழிவது அவசியமில்லை. “இது என் சகாத் பொருளாகும்” என்றோ “என் மீது கடமையான தர்மம்” என்றோ, “என் பொருளின் மீது கடமையான தர்மம்” என்றோ நிய்யத் செய்து கொள்ளுதல் வேண்டும்.
சகாதுல் பித்ரி.
நோன்புப் பெருனாளன்று கொடுக்கப்படும் தானியக் கொடைக்குஇச் சொல் பயன்படுத்தப்படுகின்றது. நோன்பு கடமையாக்கப்பட்ட ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டிலேயே இதுவும் கடமையாக்கப்பட்டது.
ஒரு முஸ்லிம் தனக்காகவும், தான் ஜீவனாம்சம் கொடுக்கவேண்டியவர்களுக்காகவும், பெருநாள் பகல் மற்றும் இரவு உணவுக்கும் குடும்பச் செலவுக்கும்,செலுத்தவேண்டிய கடன் தொகைக்கும் ஏற்பாடுசெய்த பின் அவரிடம் பொருள் வசதி இருந்தால் தனக்காகவும் தான் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியவர்களுக்காகவும் “சகாதுல் பித்ரி”கொடுப்பதுஅவர் மீது கடமையாகும்.
நோன்பின் இறுதி வரை வறியவனாயிருந்து பெருநாள் இரவுதான் அவனுக்கு வசதிவாய்ப்பு ஏற்படுகின்றதென்றால் அவன் மீதும் “சகாதுல் பித்ரி” கடமையாகும்.
இதுபோன்றே பெருநாள் இரவு பிறந்த பிள்ளைக்கும் அன்றிரவு மணமுடித்த மனைவிக்கும் சகாதுல் பித்ரி கொடுப்பது கடமையாகும்.ஒரு நபருக்கு இரண்டேகால் கிலோ ,அல்லது ஒன்றரை பக்கா அல்லது மூன்று லீட்டர் அளவுள்ள புழக்கத்தில் புரதான உணவாகக் கொள்ளும் தானியத்தை வழங்கவேண்டும்.
ஒருவர் தனக்காக சகாதுல் பித்ரி வழங்கும் போது தான் இருக்கும் ஊரிலுள்ள ஏழைகளுக்கும், மனைவி மக்கள் மற்றும் பெற்றோர்களுக்காக வழங்கும் போது அவர்கள் இருக்கும் ஊரிலுள்ள ஏழைகளுக்கும் அந்த ஊரில் பிரதான உணவாகக்கொள்ளும் தானியத்திலிருந்து கொடுக்க வேண்டும். தானியங்களின் கிரயத்தையோ,கொடுக்கப்படும் ஊரிலுள்ள பிரதானமில்லாத தானியங்களையோ, வண்டு, புளு, அரித்த தானியங்களையோகொடுப்பது கூடாது. கடைசி நோன்பின் மக்ரிப் முதல் பெருநாள் தொழுகையை நிறைவேற்றும் வரை “சகாதுல் பித்ரி” கொடுப்பதற்கான காலமாகும்.
பெருநாள் தொழுகைக்குப் பின் காலம் தாழ்த்துவது “மகரூஹ்” ஆகும். ரமழான் மாத தொடக்கத்திலிருந்து கொடுப்பது கூடும். பெருநாளுக்குப்பின் பிற்படுத்துவது ஹறாம் ஆகும். அண்டை வீட்டுக்காரரோ, உறவினரோ சகாதுல் பித்ரி கொடுக்கும் சமயம் அங்கில்லாதிருந்தால் அன்றைய மாலை சூரியன் மறையும் வரை அவருக்காக அதனை ஒதுக்கிவைத்திருந்து கொடுப்பது சுன்னத்தாகும்.
கவனிக்கப்படவேண்டிய பங்காளர்கள்
பள்ளிவாயல்களின் பேஷ் இமாம்கள், முஅத்தின்கள், மௌலவிமார்கள், அறபுக்கல்லூரியின் ஹழ்ரத்மார்கள்,அரச ஊழியர்கள் ஆகியோர் சகாத் விடயத்தில் கவனிக்கப்பட வேண்டியவர்களாவர்.மேற்கண்ட இவர்களில் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் யாவரும் பகீர் அல்லது மிஸ்கீன் பிரிவைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றார்கள். ஆகவே சகாத் வழங்குவோர் இவர்களையும் கவனத்திற்கொள்வது அவசியம்.