திருச்சி நகரில் இருந்து ஒதுங்கி வாழ நினைத்த குணங்குடியார் திருப்பரங்குன்றம் அடைந்து அங்குள்ள மலைக் குகையில் நாற்பது நாட்கள் ”கல்வத்” எனும் யோக நிட்டையில் இருந்தார்கள்.
அங்கிருந்து அறந்தாங்கி என்ற பட்டணத்திலிருந்து கலகம் என்ற கிராமத்துக்குச் சென்று ஆறு மாதங்கள் தங்கியிருந்தார்கள். அதன் பின் தொண்டியிலுள்ள தங்களின் தாய் மாமன் கட்டை ஸாஹிபு அடங்கியுள்ள வாழைத் தோப்பில் நான்கு மாதங்கள் தங்கியிருந்து நிட்டை புரிந்தார்கள்.
அக்கால கட்டத்தில் குணங்குடியாரின் சொந்த பந்தங்கள் , உறவினர்கள் அங்கு வந்து அவர்களின் மன நிலையைக் குழப்பி அவர்களைத் திசை திருப்ப முயற்சி செய்தார்கள். தொல்லை தாங்க முடியாமற் போனதனால் எவரிடமும் சொல்லாமல் அங்கிருந்து நடு நிசியில் வெளியேறி சன நடமாற்றம் குறைந்த சதுரகிரி, புறாமலை , நாக மலை, யானை மலை ஆகிய மலைகளிலும், கொடிய மிருகங்கள் வாழும் அடர்ந்த காடுகளிலும், ஆற்றங் கரைகளிலும் அலைந்து சருகும் , கிழங்கும், தழையும், குழையும், கனியும், காயும் சாப்பிட்டு யோக நிட்டை புரிந்தார்கள்.
இவ்வாறு ஏழு ஆண்டுகள் அலைந்து திரிந்து அதன்பின் நாகூர் நாயகம், காரணக்கடல், எஜமான், பாதுஷh நாயகமவர்களின் வசிப்பிடமான நாகூர் நகர் வந்து அவர்களின் தர்பார் முன்னிலையில் மண்டியிட்டு பின்வரும் பாடலைப்பாடி அவர்களைப் புகழ்ந்தார்கள்.
திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து
தீன் கூறி நிற்பர் கோடி
சிங்கா சனாதிபர்க ணதரேந்தியேவந்து
ஜெய ஜெயா வென்பர் கோடி
ஹக்கனருள் பெற்ற பெரியோர்கள் வலீமார்கள்
அணியணியாய் நிற்பர் கோடி
அஞ்ஞான வேரறுத்திட்ட மெய்ஞ்ஞானிகள்
அணைந்தருகில் நிற்பர் கோடி
மக்கநகராளும் முஹம்மதிறஸூல் தந்த
மன்னரே என்பர் கோடி
வசனித்து நிற்கவே கொலுவீற்றிருக்குமுன்
மகிமை சொல வாயுமுண்டோ
தக்க பெரியோனருள் தங்கியே நிற்கின்ற
தவராஜ செம்மேருவே
தயவு வைத்தெனையாள் சற்குணங்குடி கொண்ட
ஷாஹுல் ஹமீதரசரே!
நாகூரில் சில நாட்கள் தங்கியிருந்து பாதுஷh அவர்களின் அருளைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து வெளியேறி பாதைகள், காடுகள், குப்பை மேடுகள், அசுத்தமான இடங்களில் அலை மோதித் திரிந்தார்கள்.
காரைக்கால் சென்ற குணங்குடியார் ”நஜீஸ்” அசுத்தமான இடங்களில் தங்கியிருந்ததைக் கண்ட முஸ்லிம்களிற் பலர் அவர்களைக் குற்றம் சாட்டினர். இவர் ”தஹாறத்” சுத்தம், “நஜாஸத்” அசுத்தம் தெரியாத குருட்டு மஸ்தான் என்று குறை கூறினார்கள். அவ்வாறு ஏளனம் செய்தவர்களிடம் தண்ணீர் கொண்டு வரச் செய்து “வுழூ” என்ற சுத்தம் மத்ஹப் அடிப்படையில் உரிய முறையில் செய்து தொழுகைக்காக “தக்பீர்” கட்டி நின்ற நிலையிலேயே மூன்று நாட்கள் மெய் மறந்து தொழுது கொண்டிருந்தார்கள். இது கண்டு வியந்த முஸ்லிம்கள் அவர்களைக் குறை கூறுவதை நிறத்திக் கொண்டார்கள். மனிதர்கள் முண்டியடித்துக் கொண்டு அவர்களின் காலடிக்கு வந்துகொண்டிருந்ததை விரும்பாத குணங்குடியார் இறுதியாக சென்னை நகருக்கு வந்து சேர்ந்தார்கள்.
சென்னையில் இராய புரத்தில் பாவா லெப்பை என்பவருக்குச் சொந்தமான முட்புதர்களும், மூங்கிற்காடும், சப்பாத்திக் கள்ளியும் நிறைந்த இடத்தில் தங்கியிருந்தார்கள். அவர்கள் அங்கு ஆழ்ந்த நிட்டை புரிய ஆரம்பித்ததும் அங்கிருந்த விஷ ஜந்துக்கள் யாவும் அகன்றுவிட்டன. அவர்களின் கடுத்தவம் அவர்களை வெளியேற்றிவிட்டது.
மூன்றாண்டுகள் நிஷ்யில் இருந்த பின் ஞானம் ஒளிர வெளியே வந்தார்கள். குணங்குடியாரின் மகிமை அறிந்த பாவா லெப்பை என்பவர் அவ்விடத்திலேயே அவர்களுக்காக “தைக்கா” ஆசிரமம் ஒன்றை அமைத்துக் கொடுத்தார்.
இங்கே வாழ்ந்து வந்த காலத்தில் குணங்குடியார் சில நாட்கள் வெளிவருவார்கள். சில நாட்கள் மறைந்து அடங்கி யோகம் புரிவார்கள்.
குணங்குடியார் இவ்விடத்தில் ஒன்றரை ஆண்டு காலம் நிட்டையில் – “முறாகபஹ்” – வில் இருந்தார்கள்.
“காதிரிய்யஹ் தரீகஹ்” முறைப்படி “பைஅத்” செய்திருந்த குணங்குடியார் மெய்ஞ்ஞானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ அவர்கள் பேரில் பாதிஹஹ், கந்தூரி நிகழ்வுகளையும் நடத்திவந்தார்கள். இக்கால கட்டங்களில் அவர்கள் இறை ஞானம் தொடர்பாக இயற்றிய பாடல்களையும் பாட ஏற்பாடு செய்தார்கள். மெய்ஞ்ஞானப் பேரின்பம் சொட்டும் அவர்களின் பாடல்களைக் கேட்டு மெய்ஞ்ஞான வெள்ளத்தில் நீந்தி விளையாடுவதற்காக அறிஞர்கள் , கவிஞர்கள் ஆயிரமாயிரமாய் ஒன்று கூடுவார்கள்.
குணங்குடியாரின் பாடல்களின் ஆழமான தத்துவங்களை விளங்கிக் கொள்ள முடியாத ஆலிம்கள் கூட அவர்களைப் பற்றி தவறான கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் பரப்பி மக்கள் மக்கள் அவர்களிடம் செல்லா வண்ணம் தடை செய்தார்கள். அவர்கள் மீது பொறாமை கொண்ட சிலர் அவர்களிடம் சில பிறமதப் பெண்களை அனுப்பி அவர்களின் தூய்மைக்கு பங்கம் விளைவிக்க முயன்றனர். ஆயினும் குணங்குடி மகானின் முகம் பார்த்த பெண்கள் அழுது சலித்து கடவுளே கடவுளே என்று கை கூப்பி நின்றனர்.
குணங்குடியார் எப்போதும் தொழுவதும், நோன்பு நோற்பதும், “முறாகபஹ்” – “முஷாஹதஹ்” என்ற ஆன்மிக தியானம் செய்தவர்களாகவுமே இருப்பார்கள்.
குணங்குடியார் தொழுவதுமில்லை, நோன்பு நோற்பதுமில்லை, “ஷரீஅஹ்”வைப் பேணி நடப்பதுமில்லை என்ற தவறான – தப்பான – கதைகளை கற்பனை செய்து கட்டிவிட்டவர்கள் பொறாமை நோயால் பாதிக்கப்பட்ட உலமாஉகளும், பொது மக்களுமேயாவர்.
சென்னையில் பன்னிரண்டு ஆண்டுகள் உள்ளம் சிதையாது பேரின்பப் பெரு வெள்ளப் பெருக்கில் மூழ்கித்திளைத்த குணங்குடியார் தங்களின் நாற்பத்து ஏழாவது வயது நிரம்பிய போது கி-பி- 1838ம் ஆண்டு ஹிஜ்ரீ 1254 ஜுமாதல் ஊலா மாதம் 14ம் திகதி திங்கட் கிழமை காலை இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டார்கள்.
குணங்குடியார் தவம் செய்த அந்த இடத்திலேயே அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
குணங்குடியார் “ஷரீஅஹ்” வைப் பேணி நடந்தவர்களாயிருந்தும் கூட அவர்களுக்கு உலமாஉகளின் எதிர்ப்பு ஏற்பட்டதற்கான காரணம் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” என்ற ஞானக் கருத்தைச் சரி கண்டு அந்த வழியில் வாழ்ந்ததும், அந்த ஞானத்தை வலியுறுத்திப் பாடல்கள் இயற்றியதுமேயாகும்.
அவர்களின் அதிகமான பாடல்கள் அத்வைதக் கொள்கையை வலியுறுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன. உதாரணத்திற்காக ஒரு பாடல்.
ஊனாகி யூனிலுயிராகி யெவ்வுலகுமா
யொன்றாயிரண்டுமாகி
உள்ளாகி வெளியாகி யொhளியாகி யிருளாகி
ஊருடன் பேருமாகி
கானாகி மலையாகி வளைகடலுமாகி மலை
கானக விலங்குமாகி
கங்குல் பகலாகி மதியாகி ரவியாகி வெளி
கண்ட பொருளெவையுமாகி
நானாகி நீயாகியவனாகி யவளாகி
நாதமொடு பூதமாகி
நாடு மொளி புரியவடி யேனுமுமை நம்பினேன்
நன்மை தந்தாளுதற்கே
வானோருமடி பணிதலுள்ள நீர் பின்றொடர
வள்ளலிறஸூல் வருகவே
வளருமருள் நிறை குடி வாழுமென்னிருகண்
மணியே முஹ்யித்தீனே!
மேற்கண்ட பாடலில் “எல்லாம் அவனே” என்ற தத்துவத்தை , ஸூபிஸ ஞானத்தை கிள்ளி வைக்காமல் அள்ளிக் கொட்டியுள்ளார்கள் குணங்குடியார் அவர்கள். இதுபோன்ற பாடல்கள் இன்னும் பல்லாயிரம் உள்ளன.
இதே தத்துவத்தை தற்கலை வாழும் அற்புத வலிய்யுல்லாஹ் பீர் முஹம்மத் அப்பா அவர்கள் தங்களின் வாழ்வில் பாடிய 65 ஆயிரம் பாடல்களிலும் சொல்லியுள்ளார்கள்.
குணங்குடியார் ஓதிப்படித்த ஓர் ஆலிமல்ல. அவர் கஞ்சா அடித்துக் கொண்டு மயக்கத்தில் உளறியவைதான் அவர் பாடிய பாடல்கள் என்று வஹ்ஹாபிகள் கூறினால் அவர்களின் கூற்றை நாம் கருத்திற் கொள்ள மாட்டோம். ஏனெனில் மலம் துர் நாற்றமுள்ளதே. அதிலிருந்து நறுமணத்தை எதிர் பார்க்க முடியாது. ஆயினும் “பைஅத்” கொடுக்கும் வள்ளல்கள் என்று தம்மைத் தாமே அறிமுகம் செய்து கொண்டு வாழும் போலிக் குருக்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை மறுப்பதுவே எம்மைப் படமெடுத்து ஆட வைக்கின்றது. “ஹதபு ஜஹன்னம்” நரகின் விறகு என்று சீல் குத்தப்பட்டவர்கள் நரகம் செல்லாமல் வேறெங்கு செல்வார்கள்?!
கி-பி- 1838ம் ஆண்டு ஹிஜ்ரீ 1254 ஜுமாதல் ஊலா மாதம் 14ம் திகதி திங்கட் கிழமை காலை இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டார்கள். இம்மாதம் ஜுமாதல் ஊலா வாக இருப்பதால் அவர்கள் பேரில் முடிந்தளவு தான தருமம், அன்னதானம், அல் குர்ஆன் பாராயணம் போன்ற நட்கிரிகைகளை செய்து அன்னாரினதும், எல்லாம் வல்ல இறைவனதும் அருளன்பை பெற்றுக்கொள்வோமாக!