நோன்பு நிறைவேற இரண்டு நிபந்தனைகள் உள்ளன. இவ்விரு நிபந்தனைகள் இருந்தால் மட்டும்தான் நோன்பு நிறைவேறும். இரண்டும் இல்லையானாலும் அல்லது இரண்டில் ஒன்று மட்டும் இல்லையானாலும் நோன்பு நிறைவேறாது. இது “ஷாபிஈ மத்ஹப்” சட்ட நூல்களில் கூறப்பட்டுள்ள சட்டமாகும்.
ஒன்று تبييت النّيّة
இரவில் “நிய்யத்” வைக்க வேண்டும். இது “நிய்யத்” சரி வருவதற்கான நிபந்தனையாகும். ஒருவன் பகலில் ஆயிரம் தரம் “நிய்யத்” வைத்தாலும் அது நிறைவேறாது.
இரவில் எந்த நேரம் “நிய்யத்” வைக்க வேண்டும்?
இரவு என்பது “ஷரீஆ”வின் கண்ணோட்டத்தில் எந்த நேரத்திலிருந்து எந்த நேரம் வரை என்பதை தெரிந்து கொண்டால் அந்த நேரத்தில் “நிய்யத்” வைக்கலாம்.
“ஷரீஆ”வின் கண்ணோட்டத்தில் “மக்ரிப்” தொழுகைக்கான நேரம் முதல் “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரம் வரை இரவு என்று சொல்லப்படும். உதாரணமாக மாலை 06 – 30 மணி தொடக்கம் “மக்ரிப்” தொழுகைக்கான நேரம் என்றும், காலை 04 – 30 மணிக்கு “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரம் என்றும் வைத்துக் கொண்டால் இரண்டு நேரங்களுக்கும் இடைப்பட்ட எந்த நேரத்திலும் “நிய்யத்” வைக்கலாம். இப்போது விதியை விளங்கிக் கொண்டால் இரவில் எந்த நேரத்தில் வைக்கலாம், பத்து மணிக்கு வைக்கலாமா? எட்டு மணிக்கு வைக்கலாமா? என்ற கேள்விக்கு இடமில்லாமற் போய்விடும்.
இதை இன்னும் சற்று விளக்கமாகச் சொல்வதாயின் ஒருவன் மாலை 06 – 30 மணிக்கு நோன்ப திறக்கின்றான் என்றும், அதன் பின் சுமார் 06 – 40 மணிக்கு மறு நாளைக்கான நோன்பிற்குரிய “நிய்யத்” வைக்கின்றான் என்றும் வைத்துக் கொண்டால் அவனுடைய “நிய்யத்” நிறை வேறும். ஏனெனில் “நிய்யத்”திற்குரிய நிபந்தனையில் தவறவில்லை.
இவ்வாறு 06 – 30 மணிக்கு மறுநாள் நோன்பிற்கான “நிய்யத்” வைத்த ஒருவன் அன்றிரவு “ஸுப்ஹ்” நேரம் வரை நோன்பை முறிக்கும் காரியங்களில் எதைச் செய்தாலும் அந்த “நிய்யத்” திற்கு எந்த ஒரு பிழையும் வந்து விடாது.
இவ்வாறு 06 – 40 மணிக்கு “நிய்யத்” வைத்துக் கொண்ட ஒருவன் அன்றிரவு “ஸஹர்” நேரம் சாப்பிட்ட பின் மீண்டும் “நிய்யத்” வைக்க வேண்டிய அவசியமில்லை. மாலை 06 – 40 மணிக்கு அவன் வைத்த “நிய்யத்” செல்லுபடியாகும். “ஸஹர்” செய்த பிறகுதான் “நிய்யத்” வைக்க வேண்டுமென்பது விதியல்ல.
நோன்புக்கான “நிய்யத்” இரவின் எந்த நேரத்தில் வைத்துக் கொண்டாலும் இரவின் எந்த நேரத்திலும் “ஸஹர்” செய்ய முடியாது.
இரவில் ஸஹர் செய்வதற்கான நேரம்
இது தொடர்பாக சட்ட மேதைகளுக்கிடையில்
பெரிய கருத்து வேறுபாடு ஒன்றுமில்லை.
பெரிய கருத்து வேறுபாடு ஒன்றுமில்லை.
يدخل وقت السّحر بدخول النّصف الثّاني من الّليل
இரவு நேரத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்து – பங்கிட்டு – இரண்டாம் பகுதியின் தொடக்கத்தில் இருந்து “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரம் வரும் வரை “ஸஹர்” செய்யலாம். அதாவது குறித்த இந்த நேரத்தில் “ஸஹர்” செய்தால் மட்டும்தான் “ஸஹர்” செய்த நன்மை கிடைக்கும். “ஸுன்னத்” உண்டாகும். இரவின் இரண்டாம் பகுதிக்குரிய நேரம் வருவதற்கு முன் “ஸஹர்” செய்தால் அது “ஸஹர்” ஆகாது. அதற்குரிய நன்மை கிடைக்காது.
“ஸஹர்” நேர உணவு
மேலே குறிப்பிட்டது போல் குறித்த நேரத்தில் “ஸஹர்” செய்தாலும் அந்நேரம் இன்னதுதான் சாப்பிட வேண்டும், இன்னதுதான் குடிக்க வேண்டும் என்று ஒரு விதியில்லை. ஒருவன் தனக்கு விருப்பமானதை சாப்பிடலாம். குறைந்த அளவு ஒரு பேரீத்தம்பழம்
மட்டும் சாப்பிட்டாற் கூட “ஸஹர்” செய்த நன்மை கிடைத்து விடும்.
மட்டும் சாப்பிட்டாற் கூட “ஸஹர்” செய்த நன்மை கிடைத்து விடும்.
நோன்ப நோற்கும் ஒருவன் “ஸஹர்” உணவை முடியுமான அளவு குறைத்துக் கொள்ளுதல் விரும்பத்தக்கதாகும். “ஸஹர்” நேரம் வயிறு நிரம்ப உண்பதால் தவிர்க்க முடியாத நீண்ட தூக்கமும், சோர்வையும், மந்தநிலையும் நிச்சயமாக ஏற்படும். இது நோன்பின் இலட்சியத்துக்கே பிழையானதாகும்.
எனவே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியில் “ஸஹர்” உணவை அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ, ஸஹாபாக்களோ “ஸஹர்” நேரம் வயிறு புடைக்க உண்டதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
மாறாக மூன்று பேரீத்தம் பழங்கள், சிறிய சிறிய ரொட்டித் துண்டு, தண்ணீர் முதலானவற்றைக் கொண்டு அவர்கள் “ஸஹர்” செய்ததற்கு ஆதாரங்கள் உண்டு.
வயிறு புடைக்க உண்ணாமல் கட்டுப்பாட்டுடன் உண்ண வேண்டும் என்பது “ஸஹர்” செய்பவர்களுக்கு மட்டுமுள்ள ஆலோசனை அல்ல. பொதுவாக எக்காலத்திலும் உணவில் கட்டுப்பாடு அவசியம் என்பதை அனைவரும் அறிந்து செயல்பட வேண்டும்.
நோன்பின் இரண்டாவது “பர்ழ்” கடமை
நோன்பின் இரண்டாவது கடமை الإمساك عن المفطرات “ஸுப்ஹ்” நேரம் முதல் “மக்ரிப்” நேரம்வரை நோன்பை முறிப்பவை என்று “ஷரீஆ”வில் சொல்லப்பட்ட அனைத்தையும் தவிர்த்துக் கொள்வதாகும்.
(தொடரும்)