சங்கைக்குரிய ஷெய்குனா
மௌலவி அல்ஹாஜ் A. அப்துர்றஊப்(மிஸ்பாஹீ) அவர்கள்-
தொடர்- 01 …
இங்கு நான் குறிப்பிடும் முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவரைத்தான் “ஸுன்னத்வல் ஜமாஅத்” உலமாக்கள் வஹ்ஹாபிஸத்தின் தந்தை என்று சொல்கிறார்கள்.
இவரின் கொள்கை வழியிற் செல்பவர்களே வஹ்ஹாபிகள் என்று ஸுன்னத்வல் ஜமாஅத் உலமாக்களால் அழைக்கப்படுகிறார்கள். இவரின் கொள்கைக்கு “அல்வஹ்ஹாபிய்யஹ்” என்று சொல்வார்கள்.
உலக முஸ்லிம் நாடுகளில் இவரின் கொள்கையை அரசாங்க ரீதியில் செயல்படுத்தும் நாடு ஸஊதி ஒன்று மட்டுமேயாகும். இவதற்குக் காரணம் இவர் இந்நாட்டவராயிருப்பதாகும்.
இந்நாட்டு மார்க்க அறிஞர்கள் இவரின் கூற்றையும், இப்னுதைமிய்யாஹ்வின் கூற்றையுமே ஏற்றுக்கொள்வார்கள். இவ்விருவரின் கருத்துக்கும் மாறாக எந்த இமாம் கருத்துச் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
இவ்விருவர் மட்டுமே இஸ்லாத்தை ஐயரிந்திரிபற அறிந்தவர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
இந்நாட்டு மன்னர்கள், அமைச்சர்கள், அதிகாரிகளையோகுறை கூற முடியாது. ஏனெனில் அவர்கள் மார்க்க அறிஞர்களல்லர். அவர்கள் அறிஞர்களின் சொற்படி செயல்படுவர்களும், அதைச் செயல்படுத்துபவர்களுமேயாவர்.
அறிஞர்கள்தான் குழப்பவாதிகள். இந்நாட்டு அறிஞர்கள் அனைவரையும் குறை கூறவும் முடியாது.
ஏனெனில் வஹ்ஹாபிஸத்தை ஏற்றுக் கொள்ளாத ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கை வழியில் வாழ்கின்ற அறிஞர்கள் இந்நாட்டில் இலைமறை காய் போல் இருக்கிறார்கள். உண்மையைப் பகிரங்கமாகக் கூறினால் கழுத்துப் பறக்குமெனப் பயந்து மீனுக்கு தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டும் விலாங்கு போல் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மதீனஹ்விலுள்ள அல்ஜாமிஅதுல் இஸ்லாமிய்யஹ் பல்கலைக்கழகம் வஹ்ஹாபிஸத்தின் தளமாக இருந்தாலும் அங்குள்ள போதனாசிரியர் அனைவரும் வஹ்ஹாபிகள் என்று சொல்ல முடியாது. கொள்கையை மனதோடு வைத்துக் கொண்டு உயர் சம்பளத்துக்காக வேலை செய்பவர்களும் இருக்கின்றார்கள்.
ஒரு நாளிரவு இஷாத் தொழுகையின் பின் நபீ (ஸல்) அவர்களின் புனித “றவ்ழா”வின் பக்கமாக நின்றிருந்தேன்.
ஓர் அறபீ “றவ்ழா” வை முத்தமிட்டார். அதை முன்னோக்கி “துஆ” பிராத்தனையும் செய்தார். இந்நேரம் அவர் கள்வன் போல் நடந்து கெண்டார். அவரை நெருங்கிய போது அவர் மதீனா பல்கலைக்கழகத்தில் “தப்ஸீர்” திருக்குர்ஆன் விளக்கப்பாடம் எடுக்கும் மிஸ்ர் நாட்டைச் சேர்ந்த ஒரு கலாநிதி என்று அறிந்து கொண்டேன் எனது வகுப்புக்கும் குறித்த பாடம் எடுத்தவரும் அவர்தான்.
மறுநாள் வகுப்புக்குச் சென்று அவரிடம், நீங்கள் நேற்றிரவு நபீ (ஸல்) அவர்களின் “றவ்ழா” வை முத்தமிட்டீர்கள்: அதைமுன்னோக்கிப் பிராத்தனை செய்தீர்கள்.
இவ்விரு செயல்களும் “ஷிர்க்” இணை வைத்தலாகாதா? என்று கேட்டேன். அதற்கவர், நான் அவ்வாறு செய்யவில்லை, அவை “ஷிர்க்” ஆன காரியம்:நீங்கள் என்னைப் போல் வேறொருவரைப் கண்டிருக்கலாம் என்றார். இவரின் இக்கூற்று எனது கண்ணில் எனக்கு ஐயத்தை உண்டு பண்ணியது. ஒன்றும் பேசாமல் திரும்பி விட்டேன்.
இன்னொரு நாள் இஷாத் தொழுகையின் பின் இவர் மதீனஹ் பள்ளிவாயலில் நின்று கொண்டிருந்தார். எனக்கு இவரைத் தொடர வேண்டும் போல் இருந்தது இவருக்கு தெரியாமல் தொடர்ந்தேன். யாருக்கும் தெரியாமல் ஏதோ ஒன்றைச் செய்யப் போபவர் போல் தென்பட்டார்.
இறுதியில்நபீ(ஸல்) அவர்களின்“றவ்ழா”வை அணுகி அதை முத்தமிட்டர்கள். கையேந்தி ஏதோ கேட்பது போல் நின்றார். அவர் திரும்பி வரும் வழியில் அவரைக் காத்து நின்றேன். கண்டதும் சலாம் சொன்னேன். வியந்து வியர்த்து விட்டார். பழைய கதை நினைவுக்கு வந்தது போலும் நாணினார்.
இப்போது என்ன சொல்கிறீர்கள்? “றவ்ழா” வை முத்த முடுவதும், அதை முன்னோக்கிப் பிராத்திப்பதும் சரியா? பிழையா? என்று கேட்டேன்.
என் கரம் பற்றிய அவர் “றவ்ழஹ்” வை நோக்கி அழைத்துச் சென்றார். அதன் பக்கம் தனது விரலை சுட்டி இந்த நபி சாட்சியாக இருக்கட்டும். நான் சொல்வதை நீங்கள் இங்கு யாரிடமும் சொல்லக்கூடாது. சரியா?என்றார்.சரி என்றேன். சொல்லத்தொடங்கினார்.
நபி (ஸல்) அவர்களின் “றவ்ழஹ்” வை மட்டுமன்றி அவ்லியாக்கள் நல்லடியார்கள் கப்றுகளையும் முத்தமிடலாம். “கிப்லஹ்” வை முன்னோக்கி பிராத்தனை செய்வதை விட “றவ்ழஹ்” வை அல்லது கப்றை முன்னோக்கி பிராத்தனை செய்வதே சிறந்தது. என்று சொன்னதுடன் வஹ்ஹாபிஸம் என்பது ஒரு வழிகேடேதான் என்று கூறி முடித்தார்.
ஸுன்னத்வல் ஜமாஅத் கொள்கையுள்ள நீங்கள் வஹ்ஹாபிஸக் கோட்டைக்குள் ஏன் வந்தீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர், நான் “மிஸ்ர்” நாட்டைச் சேர்தவன்: அல்அஸ்ஹர் பல்கலைக்கழக பட்டதாரி கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளேன். நான் ஓர் ஏழை எனது நாட்டில் எனது படிப்புக்கேற்ற சம்பளம் பெற முடியவில்லை இங்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது இதனால் தான் நெருப்பின் மேல் கால் வைத்தவன் போல் இங்கு இருக்கிறேன் என்று சொன்னார். அவர் இது வஹ்ஹாபிஸக் கோட்டை என்பதை நீங்கள் அறிந்திருந்தும் எதற்காக இங்கு வந்தீர்கள் என்று கேட்டார். நான் படிக்க வரவில்லை. மதீனாஹ்வில் ஒரு வருடம் தங்கியிருந்து நபி (ஸல்) அவர்களைத் தினமும் தரிசித்து அவர்களின் அன்பைப் பெறுவதற்காகவே இங்கு வந்தேன். படிக்கும் போர்வையில் வந்தால் மட்டும்தான் ஒரு வருடமாவது இங்கு தங்க முடியும். அரசின் அனுமதியும் கிடைக்கும் என்றேன். இன்னுமொரு சம்பவத்தை இங்கு எழுதுகிறேன்.
ஒரு நாளிரவு சுமார் 9 மணியிருக்கும். அழகிய தோற்றமும், அடர்ந்த தாடியுமுள்ள,பெரிய தலைப்பாகை அணிந்த, ஒரு தரீகாவின் ஷெய்கு என்று எண்ணத்தக்க ஒருவர் நபி (ஸல்) அவர்களின் றவ்ழாவைச் சுற்றிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு சுற்றின் போதும் அதை முத்தமிட்டுக்கொண்டிருந்தார். அவரை அணுகி ஸலாமுரைத்து நீங்கள் எந்த நாட்டைச்சேர்ந்தவர்? நீங்கள் யார்? “றவ்ழஹ்” வை முத்தமிட்டீர்களே இது சரியா? என்று கேட்டேன். அதற்கவர் நீங்கள் யார்? என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டார். நான் இலங்கை நாட்டவன். மதீனஹ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றேன். அதற்கவர் நான் உங்களுடன் இப்போது பேசுவதற்கு விரும்பவில்லை. நான் இன்னஹோட்டலில் தங்கியிருக்கிறேன். நீங்கள் விரும்பினால் அங்கு வந்து என்னைச் சந்திக்கலாம் என்று கூறி ஹோட்டலின் பெயரையும், அறையின் இலக்கத்தையும் தந்தார். குறித்த நேரம் அங்கு சென்று வரவேற்பு மண்டபத்தில் அமர்ந்திருந்தேன். சற்று நேரந்தின் பின் மாடியிலிருந்து வந்தார். அவர் என்னிடம், நான் உங்களோடுபேசுவதாயின் நீங்கள் உண்மை பேச வேண்டும். நீங்கள் ஸஊதியின் உளவாளியா? என்று கேட்டார். இல்லை. நான் இலங்கை நாட்டவன். நபீ (ஸல்) அவர்கள் மீது எனக்குள்ள அன்பினால் படிக்கும் போர்வையில் இங்கு ஒரு வருடமாவது தங்கியிருக்க வேண்டுமென்று வந்தேன் என்றேன். அதற்கவர் நான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவன்; நக்ஷபந்திய்யஹ் தரீக்கஹ்வின் ஷெய்கு ஆக இருக்கிறேன். எனக்கு எனது நாட்டிலும், இந்த நாட்டிலும் பல “முரீத்” சிஷ்யர்கள் இருக்கிறார்கள். நானும், எனதுஉடன் பிறந்த சகோதரனும் நேற்று இங்கு வந்தோம். இரண்டு இரவுகள் மட்டும் இங்கு தங்கியிருந்து நாட்டுக்குப் போய் விடுவோம். இன்றிரவுதான் அன்னை ஆமினஹ்வின் கர்ப்பத்தில் நபீ (ஸல்) அவர்கள் கருவான இரவு. இன்றிரவு மிக விஷேடமான இரவாகும் என்று கூறினார்.
நபீ (ஸல்) அவர்களின் “றவ்ழஹ்”வை முத்தமிடுவது பற்றியும், நபிமார், வலீமார்களின் கப்றுகளை முத்மிடுவது பற்றியும் நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர் இமாம் அபூஸயீத் முஹம்மது அல்பூஸீரீ (றஹ்) அவர்களின் “புர்தஹ்”காப்பியத்தில் பின்வரும் பாடலைப் பாடிக்காட்டி விளக்கம் சொன்னார்.
لاطيب يعدل تربا ضم أعظه
طوبي لمنتشق منه وملتثم
நபீ (ஸல்) அவர்களின் புனித உடலைத் தாங்கி நிற்கும் மண்ணுக்கு நிகரான மணம் எதுவுமில்லை. அந்த மண்னை நுகர்ந்து முத்தமிட்டவனுக்கே சுபசோபனம் அல்லது சுவர்க்கம்.
அவர் தொடர்ந்து பேசுகையில் ஒருவன் தனது மனைவி மக்களை, தனக்கு விருப்பமானவர்களை முத்தமிடுவது ஆகுமான அல்லது “ஸுன்னத்” ஆன விடயமாயிருப்பது போல் கப்றை முத்தமிடுவது ஆகுமானதேயாகும்; இந்த அரசாங்கம் இப்னுதைமிய்யஹ், இப்னு அப்தில் வஹ்ஹாப் இருவரின் கருத்தை மட்டுமே இந்நாட்டில் அமுல்செய்து வருகிறது; இதற்கு காரணம் இங்குள்ள முப்திகளும், மார்க்க அறிஞர்களுமேயாவர்; மன்னர்களோ மக்களோ அல்லர்; வழிகாட்டிகள் காட்டும் வழியில்தான் அவர்கள் செல்வார்களோயன்றி அவ்வழியை வழிகேடென்று ஒருபோதும் கருதமாட்டார்கள்; ஆனால் ஒரு காலம் வரும். அந்நேரம் வஹ்ஹாபிஸம் அழிந்து சரியான ஸுன்னத்வல்ஜமாஅத் கொள்கை செயலில் இருக்கும்என்று கூறி முடித்தார்.
முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப்
இவர் ஹிஜ்ரீ (1111) ஆயிரத்து நூற்றுப் பதினொன்றில்பிறந்து ஹிஜ்ரீ (1206) ஆயிரத்து இருநூற்று ஆறில் இருந்தார். (95) தொண்ணூற்றைந்து வருடங்கள் வாழ்ந்துள்ளார்.
ஸஊதி அரேபியாவிலுள்ள“நஜ்து”என்ற ஊரில் பிறந்த இவர் “பனூதமீம்”என்ற குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.
இவரின் பெயர் முஹம்மத் தந்தையின் பெயர் அப்துல் வஹ்ஹாப் இவருக்குஸுலைமான் என்ற பெயரில் இன்னும் ஒரு மகன் இருந்தார்.
தந்தை அப்துல் வஹ்ஹாப் மாபெரும் மார்க்க மேதை. தலை சிறந்த ஆலிம். தனது மக்கள் இருவரும் தன்னைப் போல் வர வேண்டும் என்று விரும்பினார். அவர்கள் இருவரையும் மார்க்கக் கல்வி கற்பதற்காக கல்விக்கூட மொன்றில் சேர்த்து வைத்தார்.இருவரும் ஒதிப்படித்து ஆலிம்களாயினர்.
ஸுலைமான் என்பவர் தந்தை போல் ஸுன்னத்வல் ஜமாஅத் கொள்கை வழியிற் கால் சறுகாமல் செவ்வனே நடந்தார். ஆனால் அவரின் சகோதரன் முஹம்மத் கால் சறுகி வழிகேட்டில் விழுந்து விட்டார்.
எனவே தந்தை அப்துல் வஹ்ஹாப் அவர்களையும், நல் வழிபெற்ற மகன் ஸுலைமான் அவர்களையும் இங்கு விமர்சிக்காமல் வழிதவறிய முஹம்மத் என்பவர் பற்றியும், இவரின் கொள்கை பற்றியும் எழுதுகிறேன்.
இவர்தான் வஹ்ஹாபிஸத்தை ஈன்ரெடுத்தவர். இவர் முன்வைத்த கொள்கைதான் வஹ்ஹாபிஸம் என்றழைக்கப்படுகின்றது.
இவரால் ஏற்படுத்தப்பட்ட புதிய கொள்கை இவரின் பெயரோடு தொடர்பு படுத்தி “முஹம்மதிஸம்” என்று வழக்கப்படாமல் இவரின் தந்தையின் பெயரோடு தொடர்பு படுத்தி “வஹஹாபிஸம்”என்று வழங்கப்படலாயிற்று.
இதற்கு காரணம் முஹம்மதிஸம் என்று சொன்னால் அது நபீ (ஸல்) அவர்களுடன் சேர்க்கப்பட்டதா? அல்லது நஜ்து நாட்டு முஹம்மதுடன் சேர்க்கப்பட்டதா? என்ற சந்தேகத்தை தவிர்ப்தேயாகும்.
இவர் ஆரம்பத்தில் திருமதீனஹ் நகரில் கல்வி கற்றார். அக்காலை மக்கஹ்வுக்கும், மதீனஹ்வுக்குமிடையே போவதும் வருவதுமாக இருந்தார்.மதீனஹ்வில் அக்காலை வாழ்ந்த அநேக மார்க்க அறிஞர்களிடம் கல்வி கற்றார்.
அவர்களில் குர்தீ இமாம் என்றழைக்கப்படும் அஷ்ஷெய்கு முஹம்மது இப்னு ஸுலைமான் அல்குர்தி (றஹ்) அவரகளும், அஷ்ஷெய்கு முஹம்மதுஹயாத் அஸ்ஸிந்தீ அல்ஹனபீ (றஹ்) அவர்களும் பிரசித்தி பெற்றவர்களாவர்.
இவரின் மேற்கண்ட இரு ஆசிரியர்களும், இவர்களல்லாத ஏனைய ஆசிரியர்களும் இவர் சிறுவனாயிருந்த பொழுதே இவரின் முகக்குறிகொண்டும், இவரிடம் மனமுரண்டும் வழிகேடும் இருந்தது கண்டும் இவர் பிற்காலத்தில் வழிதவறி விடுவார் என்றும், இவரைக் கொண்டு பலர் வழகேட்டில் விழுவர் என்றும் கூறியுள்ளார்கள்.
ஆசிரியர்கள் முன்னறிவிப்பு செய்தவாறே பிற்காலத்தில் இவரின் நிலமை ஆகிவிட்டது. இவரில் அவர்கள் கண்ட முகக்குறு சரியாகி விட்டது.
மார்க்கப்பற்றுள்ள, தலைசிறந்த மார்க்க அறிஞரான இவரின் தந்தையே தனது மகன் பிற்காலத்தில் வழிதவறி விடுவான் என்று முன்கூட்டியே அறிவித்திருந்தார். மேலும் தனது மகன் முஹம்மதுடன் சேர வேண்டாமென்று மனிதர்களை எச்சரிக்கை செய்து கொண்டுமிருந்தார்.
அறிஞர் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் மற்ற மகன் ஸுலைமான் என்பவர் தனது தந்தை போல் மார்க்கப்பறுள்ள“ஸுன்னத்வல்ஜமாஅத்”கொள்கை வழி வாழும் தலை சிறந்தஅறிஞராகப் பிரகாசித்தார்.
இவர்கூட தனது சகோதரன் முஹம்மதைப் பலமுறை எச்சரித்து வழிகெட்ட கொள்கையை விட்டுவிடுமாறு கேட்டிருந்தார். எனினும், அவர் தந்தைக்கோ,சகோதரனுக்கோ, கட்டுப்படவில்லை.இவரிடம் பிடிவாதம் இருந்தது.இவரின் கொள்கை வழியில் வருபவர்களிடம் இதைக் காணலாம்.
இவர் தனது மனோயிச்சையின் படியும், தன்மனம் போன போக்கிலும் சென்றார்.
இதனால் இவரின் வழிகேட்டிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அறிஞர் ஸுலைமான் அவர்கள் தனது சகோதரன் முஹம்மதுக்கு மறுப்பாக அறபு மொழியில் ஒரு நூல் எழுதி வெளியிட்டார்.
மதீனஹ்வில் வாழ்ந்து கொண்டிருந்த முஹம்மதுக்கு தனது வழிகெட்ட கொள்கையை பரப்ப வாய்ப்பு இல்லாமற் போனது. இதனால் மதீனஹ்வை விட்டும் வெளியேறி வேறு ஊர்களுக்குப் பிரயாணம் செய்தார்.
ஹிஜ்ரி 1143ல் தான்இவரின் வழிகெட்ட கொள்கை ஆரம்பமானது. ஆயினும் ஐம்பது ஆண்டுகள் வரை இவரின் கொள்கை பிரசித்தி பெறவில்லை.
சொந்த ஊரான நஜ்து என்ற இடத்திலும், அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் இவரின் கொள்கை ஆமை வேகத்தில் பரவத் தொடங்கியது.
அப்பொழுது சஊதி அரேபியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த முஹம்மத் இப்னு ஸுஊத் என்பவர் இவரைக் கொண்டு தனது ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்த விரும்பி இவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து இவரின் வழிகேடு பரவுவதற்கு பக்கபலமாகவும் இருந்தார்.
முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவரைப் பின் பற்றுமாறு தனது ஆட்சிக்குட்பட்ட மக்களுக்கு இவர் கட்டளையிட்டார். இதனால் சஊதி அரேபியா எங்கும் இவரின் வழிகெட்ட கொள்கை பரவவும், மக்கள் வழிகேட்டில் விழவும் வழியேற்பட்டது.
நாட்செல்லச் செல்ல இவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெருகியது. அறபு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இவரைப்பின்பற்றத் தொடங்கினர். இதனால் இவருக்கு நல்ல பலம் ஏற்பட்டது.
எனினும் நாட்டுப் புறத்தில் வாழ்ந்த மக்கள் இவரைப் பின்பற்றப் பயந்தனர். இவர் ஒரு புதிய கொள்கையைப் பிரகடனம் செய்கிறார். எனக் கருதிய அவர்கள் இவரைப் பின் பற்றத் தயங்கினர்.
நாட்டுப் புற மக்கள் பின் வாங்குவதை அறிந்த இவர் அவர்களையணுகி “நான் உங்களை தவ்ஹீத் எனும் ஏகத்துவ மார்க்கத்தின் பக்கம் அழைப்பதற்கும், “ஷிர்க்”எனும் இணைவைத்தலை எச்சரிப்பதற்கும் வந்துள்ளேன்”. என்று அடிக்கடி சொல்வார்.
அவர்களோ கிராமவாசிகள், அவர்களுக்கு குறிப்பாக மார்க்க ஞானம் அறவே புரியாது. இதனால் இவர் அவர்களிடம் சொல்வதையெல்லாம் நம்பக்கூடியவர்களாகவும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாகவும்இருந்தார்கள்.
இவர் கிராமவாசிகளிடம் சென்று நான் உங்களை “தவ்ஹீத்” எனும் ஏகத்துவத்தின் பக்கம் அழைக்கிறேன்.இன்று பூமியில் வாழும் அனைவரும் “முஷ்ரிக்”இணைவைத்தவர்களாவே உள்ளனர். ஒரு “முஷ்ரிக்”
இணைத்தவனைக் கொன்றவனுக்கு சொர்க்கம் கிடைக்குமாதலால் எனது கொள்கைக்கு மாறானவர்களைக் கொன்றவனுக்கும் சொர்க்கம் கிடைக்கும்” என்று பிரச்சாரம் செய்து வந்தார். இவர் அந்த மக்களிடம் ஒரு நபீ போன்று மதிக்கப்பட்டு வந்தார்.இவர் சொல்வதில் ஒன்றைக்கூட அவர்கள்விடாதவர்களாகவும், இவரின் அனுமதியின்றிஒரு வேலையும் செய்யாதவர்களாகவும் இருந்தார்கள்.
இவரின் வஹ்ஹாபிஸக் கொள்கைக்கு மாறானவர்கள்“முஷ்ரிக்” என்றும், அவர்களைக் கொன்று விடுவது வணக்க மென்றும், அவர்களைக் கொல்பவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்றும் இவர் கூறி மக்களைக் கொலைக்குத் தூண்டியதன் விளைவாக அப்பாவி கிராமவாசிகள்இவரின் கொள்கைக்கு மாறானவர்களை யெல்லாம் கொலை செய்யத் தொடங்கினர்.
அக்கொலைஞர்கள் இவரின் கட்டளையச் சிரமேற் கொண்டு இவருக்கு மாறானவர்களைக் கொலை செய்து அவர்களின் உடைமைகளைச் சூறையாடி அதில் அரசன் முஹம்மத்இப்னு ஸுஊதுக்கு ஐந்தில் ஒரு பங்கைக் கொடுத்து விட்டு மீதியை தமக்கிடையில் பங்கிட்டுக் கொள்வார்கள்.
அவர்கள் தமது தலைவன் முஹம்மதுக்கு முழுமையாக கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள். அவருக்காக தமது உயிரைக் கொடுப்பதற்கும் தயாராக இருந்தார்கள்.
அரசன் முஹம்மத் இப்னு ஸுஊத் வழிகேட்டின் தந்தை முஹம்மதுக்காகவும், அவரின் ஆதரவாளர்களுக்காகவும், எதைச் செய்வதற்கும் தயாராக இருந்தார்.
மன்னனின் மரணத்தின் பின்னர் அவரின் பிள்ளைகள் ஆட்ச்சிக்கு வந்து தந்தை போலவே வழிகேட்டுக்கும், வழிகேடன் இப்னு அப்தில் வஹ்ஹாபுக்கும் ஆதரவு வழங்கினர். அவரின் வஹ்ஹாபிஸம் அறபு மண்ணில் விரிவடைய தந்தையை விட ஒருபடி இல்லை பலபடி மேலே நின்று பாடுபட்டார்கள்.
இவ்வாறே வழிகேடன் முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் மரணித்த பிறகு அவரின் பிள்ளைகள் தந்தை போன்று வழிகேட்டைப் பரப்பும் பணியைச் செய்தனர்.
இப்னு அப்தில் வஹ்ஹாபின் ஆதரவாளர்கள் தங்களின் கொள்கைக்கு மாறானவர்களிடன் யுத்தம் செய்து பலநூறு உண்மையான “ஸுன்னத்வல் ஜமாஅத்” உலமாக்கள் – அறிஞர்களையும் கொன்றொழித்தார்கள்.
இப்னு அப்தில் வஹ்ஹாப் தனது வழிகெட்ட கொள்கையைப் பரப்பிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அறுநூறு ஆண்டுகளாக உலக முஸ்லிம்கள் யாவரும் “முஷ்ரிக்” இனை வைத்தவர்களாக இருந்து வருகிறார்கள் என்று அடிக்கடி சொல்லி வந்தார்.அவர் தனது எந்த ஒரு பிரசங்கத்திலும் இந்தக் கருத்தைச் சொல்ல்த் தவறவில்லை.
“வஸீலஹ்” உதவி தேடுவது கொண்டும் “கப்று” மண்ணறைகளை “சியாறத்” தரிசிப்பது கொண்டும் உலக முஸ்லிம்கள் அனைவரும் இணைவைத்தவர்களாகி விட்டார்கள். என்றும், அவர்களை இஸ்லாதின்பால்அழைப்பது கடமை என்றும், அவர்கள் இஸ்லாத்தை ஏற்க மறுத்தால் அவர்களைக் கொலை செய்து விட வேண்டும் என்றும் பேசி வந்தார்.
சுய விருப்பத்தின் பேரில் அல்லது வற்புறுத்தலின் பேரில் எவனாவது அவர்களுடன் சேர்ந்து கொள்ள விரும்பினால்முதலில் அவனுக்கு“கலிமஹ்” சொல்லிக் கொடுத்த பிறகுதான் அவனை ஏற்றுக்கொள்வார்கள்.
அவனுக்கு “கலிமஹ்” சொல்லிக் கொடுப்பதோடு மட்டும் நின்று விடாமல், தான் இதுவரை காபிராக இருந்ததாகவும், தனது பெற்றோர்கள் காபிர்களாக இருந்து மரணித்த விட்டதாகவும்அவனைச் சொல்லுமாறு வலியுறுத்துவார்கள்.
மேலும் முன்னோர்களில் பிரசித்தி பெற்ற இமாம்கள், அவ்லியாக்கள், நல்லடியார்கள் ஆகியோரில் குறிப்பிட்ட சிலரின் பெயர்களைக் குறித்து இவர்கள் எல்லோரும் காபிர்கள் என்று ஏற்றுக்கொள்ளுமாறும் அவனை வற்புறுத்துவார்கள்.
இன்னும் இப்னு அப்தில் வஹ்ஹாபின் கொள்கைக்கு மாறாக நூல்கள் எழுதிய அறிஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களையும் காபிர்கள் என்று நம்புமாறும் வற்புறுத்துவார்கள்.
ஒருவன் இவ்வாறெல்லாம் செய்தால் மட்டுமே அவனை அவர்களுடன் சேர்த்துக் கொள்வார்கள். இல்லையானால் அவனைக் கொன்று குழியில் தள்ளி விடுவார்கள். இவர்களுடன் சேர்ந்து கொள்ள விரும்பும் ஒருவன் ஏற்கனவே ஹஜ் வணக்கம் செய்தவனாய் இருந்தால் காபிராக இருந்த காலத்தில் செய்த ஹஜ் வணக்கம் நிறைவேறாது என்று அவனிடம் கூறி மீண்டும் ஹஜ் செய்ய வேண்டுமென்று அவனைப் பணிப்பார்கள்.
இந்த வழிகேடர்கள் வெளியூரில் இருந்து வந்த தமது கொள்கையைப் பின்பற்றினவர்களை “முஹாஜிரீன்”என்றும் உள்ளூரில் இருந்து கொண்டு பின்பற்றினவர்களை “அன்ஸாரீன்” என்றும் அழைத்து வந்தார்கள்.
இப்னு அப்தில் வஹ்ஹாப் “வஸீலஹ்”தேடுதல், கப்றுகளை சியாறத் செய்தல் போன்ற விடயங்களை மறுத்து வந்ததுடன், தான் ஒரு நபி என்று கூடச் சொல்வதற்கும் நினைத்திருந்தார். ஆயினுமது அவரால் முடியாமற்போயிற்று.
இவரின் ஆரம்ப காலத்திலிருந்து நபித்துவத்தை வாதிட்ட முஸைலமதுல்கத்தாப், சுஜாஹ் அல் அஸ்வதுல் அன்ஸீ, துலைஹதுல் அஸதீ போன்றோரின் வரலாறுகளைப் படிப்பதில் இவருக்கும் கூடுதலான விருப்பம் இருந்துவந்தது. இதனால் நபித்துவத்தை வாதிடும் எண்ணம் இவருக்கு மறைமுகமாக இருந்து வந்தது. சரியான வாய்ப்புகிடைக்காதலால் வெளிப்படுத்தாமல் இருந்து விட்டார்.
ஆயினும் இவரின் சொல், செயல் யாவும் தான் ஒரு நபியென்று இவர் தன்னை நம்புயிருந்தார் என்று காட்டியது.
இவர்தனது ஆதரவாளர்களிடம், நான் உங்களுக்கு புதியதொரு “தீன்” மார்க்கத்தை கொண்டு வந்துள்ளேன் என்று கூறுவார்.இவருடைய கூற்றின் உண்மை இவரின் சொற் செயல்களில் தென்பட்டது.
இதனால்தான் நான்கு “மத்ஹப்” பற்றியும், மார்க்க அறிஞர்களின் சொற்கள் பற்றியும் இவர் குறை கூறிக்கொண்டிருந்தார்.
“தீனுல் இஸ்லாம்”என்பது ஒரே ஒரு மார்க்கம்தான். நாலாகப் பிரிந்திருப்பது வழிகேடென்று இவர் அடிக்கடி சொல்வார்.
“ஸுன்னத்வல் ஜமாஅத்”கொள்கைவாதிகள் இஸ்லாத்தின் மூலாதாரங்கள் நான்கென்று கூறுகிறார்கள். ஆனால் இவர் இஸ்லாத்தின் மூலாதாரம் குர் ஆன் மட்டும்தான் என்று ஒரு சந்தர்ப்பத்திலும், குர்ஆனும் ஹதீதும் என்று இன்னொரு சந்தர்ப்பத்திலும் கூறுகிறார்.
இஜ்மாஉ, கியாஸ் இவ்விரண்டையும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இமாம்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டிவரும் என்று பயந்து தனது சுயநலம் கருதி இவ்விரண்டையும் முற்றாக மறுத்து விட்டார்.
இவர் திருக்குர்ஆனையும், ஹதீதையும் ஏற்றுக்கொண்டாலும் கூட இவ்விரண்டிற்கும் தனது விருப்பத்தின் படியும், தனது மனோ இச்சைக்கேற்றவாறும் விளக்கம் கூறி வந்தார்.
திருமறைக்கும், திரு நபியின் நிறைமொழிக்கும் ஸஹாபாக்கள் தாபியீன்கள், இமாம்கள், அவ்லியாக்கள் போன்றவர்கள் கூறிய விளக்கத்தையும் இவர் மறுத்து வந்தார்.
இவர் வழிகேட்டிலிருந்தாலும்கூட புத்திமானாயிருந்ததால் தனது வழிகேட்டை மக்களிடம் காட்டிக்கொள்ளாமல் புத்திசாலித்தனமாக வாழ்ந்து வந்தார்.
இவர் நான்கு “மத்ஹப்” களை மறுத்தாலும்கூட மக்களின் பார்வையில் இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (றஹ்) அவர்களின் ஹம்பலீ மத்ஹபைபின்பற்றினவர் போல் நடித்து வந்தார்.
இவர் இவ்வாறு நடித்துக் கொண்டிருந்ததை அறிந்த அக்கால உலமாக்களில் ஹம்பலீ மத்ஹபைச் சேர்ந்த உலமாக்கள் இவரால் தங்களின் மத்ஹபுக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் என்பதையுணர்ந்து இவருக்கு மறுப்பு எழுத தொடங்கினர்கள்.
இவருக்கு மறுப்பு எழுதிய அறிஞர்களில் அநேகர் ஹம்பலீ மத்ஹபைச் சேர்ந்தவர்களாயிருந்தது இதனால்தான்.
இவர் செய்த மிகப் பெரிய வழிகேடு என்னவெனில் “முஷ்ரிகீன்” இணைவைத்தவர்கள் தொடர்பாக இறக்கப்பட்ட திருமறை வசனங்களை “முஃமினீன்” விசு வாசிகள் தொடர்பாக இறக்கப்பட்டவை என்று பிரச்சாரம் செய்ததேயாகும்.
இவர் செய்தது போல் இவருக்கு முன் வாழ்ந்த வழிகேடர்களும் செய்துள்ளார்கள்.
“கவாரிஜ்” என்ற வழிகெட்ட கூட்டத்தார் பற்றிக் கூறப்படுகையில் அவர்கள் “முஷ்ரிகீன்”இணைவைத்தவர்கள் தொடர்பாக இறங்கிய திருக்குர்ஆன் வசனங்களை “முஃமினீன்” விசு வாசிகள் தொடர்பாக இறங்கியவை என்று சொல்கிறார்கள்.
ஆதாரம் – புஹாரீ
அறிவிப்பு – அப்துல்லாஹ் இப்னுஉமர் (றழி)
நான் எனது உம்மத்துக்கள் மீது ஒருவனை பயப்படுகிறேன். அவன் திருக்குர்ஆனுக்கு மனம் போன போக்கில் வலிந்துரை கூறுவானென்று நப (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் – துர்முதீ,இப்னு மாஜஹ்
மேலே எழுதிய இரண்டு நபிமொழிகளும், இன்னும் இது தொடர்பாக வந்துள்ள ஏனைய நபிமொழிகளும் இப்னு அப்தில் வஹ்ஹாபுக்கும் இவரின் வழியில் நடப்பவர்களுக்குமே பொருத்தமானவையாகும்.
இவர் தான் விரும்பினவாறு திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொன்னதுடன் மட்டும் நின்றுவிட வில்லை.இவர் இதைவிட பெரிய வேலைகளும் செய்துள்ளார்.
அது என்னவெனில் புத்தக அறிவோ, பொது அறிவோ இல்லாத தனது வேலையாட்களுக்கும், தன்னுடன் இருந்தவர்களுக்கும் தாம் விரும்பின மாதிரி யெல்லாம் திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்லலாம் என்றும், தாம் விரும்பின மாதிரியெல்லாம் சட்டம் கூறலாம் என்றும், இமாம்கள் எனப்படுவோர் எழுதிய நூல்களில் சரியான விடயமும்பழையான விடயமும் இருப்பதால் அவற்றைப் பார்க்க வேண்டாமென்றும் கட்டளையிட்டு வந்தார்.
இவர் தனது கொள்கைக்கு மாறாக இருந்த உலமாக்கள், நல்லடியார்கள், பொது மக்கள் அனைவரையும் கொலை செய்தார்.
பணவசதி உள்ளவர்களிடமிருந்து “ஸகாத்” நிதியைப் பெற்று இஸ்லாம் கூறிய வழியின்றித் தாம் விரும்பியமாதிரிப் பங்கிட்டு வந்தார்.
இவரைப் பின்பற்றுவோரும் இவர் போலவேநான்கு மத்ஹப்களில் எந்தவொரு மத்ஹபையும் பின்பற்றாதவர்களாயும், திருக்குர்ஆனை ஆராய்ந்து புதுப்புது சட்டங்களைக் கண்டு பிடிப்பவர்களாயும் இருந்தார்கள்.